ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. பலதரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்ற இவர்களின் இசைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்...

ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் Fizzy Sole இசைக் குழுவினர் செப்டம்பர் 6ஆம் தேதியன்று, கோவை TV சாமி சாலையில் நடைபெற்ற Happy Streets நிகழ்ச்சியில் ஒரு மணிநேர இசைவிருந்தினை வழங்கினர்.

நகரின் பிரதான சாலையை மறித்து, மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் Happy Streets எனும் இந்நிகழ்ச்சி, பல்வேறு இடங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இயந்திர வாழ்க்கையில் சிக்கித்தவிக்கும் நகர்வாழ் மக்களுக்கு, தாங்கள் பரப்பாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்த சாலை இப்படி உற்சாகமாகக் காட்சியளிப்பது புதுவித அனுபவத்தை தருகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் Fizzy Sole இசைக்குழு வழங்கிய இசை நிகழ்ச்சி, அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. இவர்களின் இசையில் கூட்டத்தினர் மெய்மறந்தனர். அழகான ஆங்கில கவிதை வரிகளால் அமைந்த பாடல் வரிகள் இளைஞர்களை கவரக்கூடிய உற்சாக நடையில் அமைந்திருந்தன. இவர்கள் இசைக்கும் பாடல்கள் அனைத்தும் Fizzy Sole இசைக் குழுவினராலேயே சொந்தமாக இசையமைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களாலேயே எழுதவும்பட்டுள்ளது. ஈஷா ஹோம் ஸ்கூலின் இசை ஆசிரியர்களின் துணையுடன் 2014ல் நான்கு மாணவர்கள் இணைந்து Fizzy Sole இசைக் குழுவைத் துவங்கினர். இக்குழு இன்றுவரை சென்னை, மும்பை, கோவை, பெங்களூரூ என பல்வேறு இடங்களில் தங்கள் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளது.

இசைக்குழுவின் கிட்டாரிஸ்ட் நரேன் கூறுகையில், “எனது பள்ளி எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி எங்களின் பக்கபலமாக உள்ளது,” என்றார். “நாங்கள் துவக்கத்தில் எங்கள் அறையிலேயே பயிற்சி செய்து வந்தோம். அதனால் பிறருக்கு இடையூறாக இருந்தது. உடனே பள்ளி எங்களுக்கென ஒரு தனி அறையை வழங்கியது. இப்போது நாங்கள் எங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்க முடிகிறது,” என இசைக்குழுவின் ட்ரம்மர் (drummer) சித்தார்த் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இசைத்தொகுப்பு வெளியீடு குறித்துக் கேட்டபோது, இசைக்குழுவின் பேஸிஸ்ட் (bassist) கார்கி கூறியபோது, “இப்போது 18 பாடல்களை எங்கள் Fizzy Sole இசைக்குழுவில் நாங்களாகவே படைத்துள்ளோம். இன்னும் நிறைய உருவாக்கத்தில் உள்ளது,” எனத் தெரிவித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.