சமீபகாலமாக அரிசியின் மீது இயற்கை வழி மருத்துவர்கள் மட்டுமல்லாது ஊடகங்களும் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருவதைப் பார்க்கமுடிகிறது. அப்படியென்றால், அரிசி உணவு ஆரோக்கியமானது இல்லையா? ஏன் இல்லை, தொடர்ந்து படித்து, அரிசியிலுள்ள ஆரோக்கியங்களை அறிந்துகொள்ளுங்கள்!

டாக்டர்.சாட்சி சுரேந்தர்:

சுமார் 15000 வருடங்களுக்கு முன் துவங்கிய முறையான உழவுப்பணியே (settled farming) நம் தமிழ்க்குடியின் கலாச்சாரம் பண்படத் துவங்கியதின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் மூத்த குடியினர் விரும்பி உண்ட மண்சட்டி சோறும், கிழங்குமே, பல்லாயிரம் ஆண்டு கடந்த பின்னும், நாம் இன்னும் பசியாற உண்ணும் இட்லியாகவும், மசால் தோசையாகவும் மாறி இருக்கிறது.

பளபளா பாலிஷ் அரிசியைத் தவிர்த்து, ஊட்டச்சத்து செறிந்த பழுப்பு அரிசியையும், கைக்குத்தல் அரிசியையும் விற்பனை செய்யும் இடங்களைத் தேடி உபயோகித்தால், வீட்டிலுள்ளோர் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நாட்டிலும் நோய்களின் சுமையைக் குறைக்கலாம்.

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” என பயிர்களின் சாகுபடி மட்டுமல்லாது, அவற்றின் மரபணு அறிவியல் (Genetics/Taxonomy) வரை விசாலமான விவரங்களை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தொல்காப்பியம் பேசுகிறது.

சில ஆயிரம் வகைகளுக்கு மேல் இருந்த மரபுவழி அரிசி ரகங்களை, நிறம் (கருங்குருவை, நீலசம்பா); வடிவம் (எலிவால் சம்பா, காடை கழுத்தான்); அளவு (சிறு மிளகு, பெரு மிளகு); நறுமணம் (மகிழம்பூ வாசன், மாம்பூ வாசன்) என பல வகைகளாய் அறிவியல் ரீதியில் பகுத்தறிந்த ஞானம் இருந்தது.

சில ரகங்களுக்கு உரிய மருத்துவ குணங்களையும் நம் முன்னோர் அறிந்து வைத்திருந்தனர்.

“நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைப் போக்கும்” (நீரிழிவு, சர்க்கரை நோய்)

“குன்றி மணிச்சம்பா கொண்டால் அனிலமறும்” (அனிலமறும் சூடு தணியும்). அதேபோல் சீரக சம்பா, வாதத்திற்கும், கார்போக அரிசி, தோல் நோய்க்கும் ஏற்றது என்றும் அறிகிறோம்.

தலைசிறந்த நீர் மேலாண்மை யுக்திகள், உடலையும், உலகையும் மாசுபடுத்தாத இயற்கை உரங்கள், விதை ரகங்களில் பாரம்பரியமாய் இருந்து வந்த ஆழ்ந்த அறிவு, இவற்றால் வளமாய், வண்ணமயமாய் இருந்தது உழவுப் பணியும், சாகுபடியும் மட்டுமல்ல, அன்றைய பொதுஜனத்தின் ஆரோக்கியமும்தான்! ஆம், உண்ணும் உணவினால் இன்று போல் நான்கில் ஒருவர் சர்க்கரை நோயாளியாகவோ, மூன்றில் ஒருவர் BP நோயாளியாகவோ அன்று வாழவில்லை!

அரிசியும், ஆரோக்கியமும் சில அடிப்படைகள்

நமது உடலுக்கு அன்றாடம் தேவையான கலோரிகளில் 50% கலோரி, நம் தென்னிந்திய உணவில், ஏறத்தாழ அரிசி உணவின் மூலமே கிடைக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதை நாம் உண்கிறோமோ அதுதான் உடலாக மாறுகிறது என்பது நமக்குத் தெரியும். அப்படியென்றால், எந்த மாதிரி அரிசியை நாம் உணவாகக் கொள்கிறோமோ அந்த மாதிரிதான் நம் உடலும் அமையும், அப்படித்தான் நம் ஆரோக்கியமும் அமையும், இல்லையா? எனவே நாம் எடுத்துக் கொள்ளும் அரிசியைப் பொறுத்து தான் நமது 50% ஆரோக்கியமும் அமைகிறது.

நெல்லின் உமி, அரிசியின் வெளிப்புற பழுப்புத்தோல் (Bran) மற்றும் முளையில் (germ) தான் தேவையான வைட்டமின்களான B1, B5, B6, E மற்றும் பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், அமினோ அமிலங்கள், ஆண்டி ஆக்ஸிடென்டுகள் என ஓர் ஊட்டச்சத்து காலனியே உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புழுங்கல் அரிசி:

நெல்லை குறிப்பிட்ட நேரம் நீரில் ஊற வைத்து (soaking), பின்பு நீராவியின் (steam) மூலம் அவித்து, பின் உலர்த்தி, உமி நீக்கப்பட்டால், கிடைப்பது புழுங்கல் அரிசி. இந்த முறையின் மூலம், வெளிப்புற உமி, தவிட்டின் வைட்டமின்கள், உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசி மணிக்குள் திணிக்கப்படுவதால், ஊட்டச்சத்தில் புழுங்கல் அரிசிக்கு முதலிடம்! இந்த அதிசய செய்முறையை நம்மவர்கள் அந்தக் காலத்திலேயே பயன்படுத்தியது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

பச்சரிசி:

நெல்லை மேற்கூறிய முறையில் அவிக்காமல் நேரடியாக அரைத்து உமி நீக்கியதால், பச்சரிசிக்கு ஊட்டச்சத்து அளவில் இரண்டாமிடம்.

கைக்குத்தல் அரிசி:

மேற்கூறிய இரு வகைகளின் உமி, தவிடு நீக்க, அன்று கைக்குத்தல் மட்டும் செய்ததால், பழுப்புத்தோல் மற்றும் முளையை பாதுகாத்து அரிசியின் ஊட்டச்சத்தை தக்க வைத்தோம். பழுப்பு நிறம் கொண்ட இவை, இரத்தத்தில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றும் தன்மை உடையவை. (low glycaemic)

பாலிஷ் அரிசி:

வெள்ளைக்காரனே நம் நாட்டை விட்டு ஓடிப்போய் விட்டாலும் நம் மக்களுக்கு இன்னமும் வெள்ளை நிறத்தின் மீதுள்ள கவர்ச்சி போகவில்லை. தான் வெள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக தோலைக்கூட ப்ளீச் செய்து கொள்ளத் தயங்காத நமது மக்களின் மன ஓட்டத்தின் விளைவுதான் இந்த வெள்ளை அல்லது பாலிஷ் அரிசி.

பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை தற்போது நவீன இயந்திரங்களில் இட்டு, தேய்த்து, தேய்த்து “வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா” என்று கேட்கும்படி, ஊட்டச்சத்து அனைத்தையும் பறிகொடுத்து, வெறும் சர்க்கரை சத்தை மட்டும் கோவணமாக கட்டித் திரியும் மேனா மினுக்கி அரிசிதான் பாலிஷ் அரிசி. இந்த மலட்டு அரிசிதான் இன்று சந்தையின் கிங்!! அரிசி எவ்வளவு வெள்ளையாய், பளபளப்பாய் இருக்கிறது என்று மட்டும் சோதித்து வாங்குவது, உங்கள் போலி அந்தஸ்திற்கு தோதாக அமையலாமே தவிர, குடும்ப ஆரோக்கியத்திற்கு அல்ல.

நாணயத்தின் மறுபக்கம்:

சர்க்கரை சக்கையாக மாறிப்போன பாலிஷ் அரிசி நம் ஆரோக்கியத்திற்கான முதல் கோணல் என்றால், பயிரைக் காக்க கட்டுப்பாடின்றி தெளிக்கப்படும் இரசாயனங்கள் நெல்மணியின் கருவறை வரை உட்கிரகிக்கப்படுவது நம் ஆரோக்கியத்திற்கு முற்றும் கோணலே.

கடந்த 50 ஆண்டுகளில், கட்டுப்பாடின்றி பெருகிவிட்ட பின்வரும் பொதுஜன வியாதிகளுக்கு, ஒரு முக்கிய காரணியாக உரமிடப்பட்ட பாலிஷ் அரிசிகளின் மீது மருத்துவர்கள் விரல் நீட்டத்துவங்கி விட்டனர்.

  • சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் (Metabolic syndrome)
  • எலும்பு மெலிவு, எலும்பு தேய்மானம்
  • ஹார்மோன் சமநிலை குறைபாடு
  • மலட்டுத் தன்மை/முறையற்ற மாதவிடாய் சுழற்சி
  • நரம்புத்தளர்ச்சி

நோயின்றி வாழத்தான் எல்லோர்க்கும் ஆசை என்றாலும், அதை நோக்கிய முயற்சியை முடுக்கி விடுவோர், நம்மில் வெகு சிலரே!” கிடைக்கிறத தானங்க அவிச்சி கொட்ட முடியும்?” என்பதுதான் உங்கள் மனோபாவம் என்றால், சுகர் மாத்திரைக்கும், இன்சுலின் ஊசிக்கும் உங்கள் மாத பட்ஜெட்டை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

என்னங்க செய்யலாம்?

ஆட்சியரும், அறிவாளரும் இணைந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியமான நடவடிக்கைகள்:

  • மரபுவழி அரிசி ரகங்களை மீட்டு அறிமுகப்படுத்துதல்
  • ‘அபாயம்' என அரசால் முத்திரையிடப்பட்டு தடை செய்யப்பட்டும், கள்ளத்தனமாக பயன்பாட்டில் இருக்கும் எண்டோசல்பான் முதலிய இரசாயனங்களை தடுக்க வழிவகை செய்தல்
  • இயற்கை விவசாயம், விவசாயிகளை ஊக்குவித்து அவை பற்றிய விழிப்புணர்வை நுகர்வோரிடையே பரவலாக்குதல்.

சரி, ஒரு நுகர்வோராய், தனிமனிதனாய் நாம் செய்ய வேண்டியது என்ன?

பச்சிளம் குழந்தைகள் திட உணவுக்கு மாறும் வேளையில் குருணை அரிசியாகவும், வளர் பருவத்தினருக்கு பச்சரிசியாகவும், நடுவயதினர்க்கு புழுங்கல் அரிசியாகவும், வயோதிகர்களுக்கு அவலாகவும் அவரவர் உடலின் செரிமானத் திறனுக்கு ஏற்றதென தமிழ் மருத்துவம் பரிந்துரைக்கிறது. இதனை அனுசரித்து நம் அரிசி உபயோகம் இருப்பது நலம் பயக்கும்.

பளபளா பாலிஷ் அரிசியைத் தவிர்த்து, ஊட்டச்சத்து செறிந்த பழுப்பு அரிசியையும், கைக்குத்தல் அரிசியையும் விற்பனை செய்யும் இடங்களைத் தேடி உபயோகித்தால், வீட்டிலுள்ளோர் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நாட்டிலும் நோய்களின் சுமையைக் குறைக்கலாம்.

சிகப்பரிசி ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. நோய் தடுப்பாற்றலுக்கும், புற்றுநோயை தடுப்பதற்கும் வல்லவை. குறைந்தபட்சம் அவ்வப்போதாவது உபயோகிக்கலாம்.

நல்ல மணிசம்பா முதலிய சில பாரம்பரிய அரிசி ரகங்கள், குறைந்த அளவே உண்டாலும் வயிற்றை நிரப்பும் தன்மையும், குறைவான வேகத்தில் சர்க்கரை வெளியிடும் (low glycaemic index) தன்மையும் உள்ளதால் உடற்பருமன், சர்க்கரை நோயாளர்கள் உண்ண ஏற்றது.

ஞவரை (தமிழகத்தில் நவரை என்று அழைக்கிறோம்) என்று ஒரு கேரள அரிசி ரகம். ஆயுர்வேதத்தில் மிகமிக சிறப்பாக பேசப்படும் இந்த அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுவது மூட்டுவலி, வாத நோய்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் விலை சற்று அதிகம். இதனை முடிந்தவரை உபயோகிக்கலாம்.

இரவில் உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாய் உடலில் மாறும் என்பதால், இரவு உணவில் பெரும்பாலும் அரிசியைத் தவிர்ப்பது நலம்.

நமக்கு வரும் நவீன நோய்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு அரிசியை காரணம் காட்டாமல் உடலுழைப்பு, உடற்பயிற்சி என சிறிது நேரம் ஒதுக்குவது மிகவும் நல்லது.

முடியும்போதெல்லாம் ராகி, கம்பு, தினை என சிறு தானியங்களின் பயன்பாட்டைக் கூட்டுவது நல்லது.

5 முதல் 10 ரூபாய் அதிகம் கொடுத்தாலும் பரவாயில்லை, இயற்கை முறையில் விளைந்தவை என உறுதி செய்த விளைபொருட்களை உபயோகித்து, இவ்வகை விவசாயிகளையும் வணிகர்களையும் நாம் ஊக்குவிக்கலாம்.

இம்மண்ணின் உயிருடன் கலந்துவிட்ட அரிசி உணவுகளின் பண்டைய தரத்தை நாம் ஒன்றிணைந்து மீட்டெடுத்தால், சரிந்துவரும் ஆரோக்கிய சூழ்நிலையை மீட்டெடுக்க முடியும்.

குறிப்பு: பழுப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்களில் கிடைக்கும்.