‘அப்துல் கலாம்’ என்ற பெயரைக் கேட்டவுடன், மாணவர்கள் மத்தியில் எழுச்சி என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. அவரது பெயரால் விருது வாங்கினால் கேட்கவும் வேண்டுமா?! ஈஷா வித்யா பள்ளி மாணவன், அப்துல் கலாமின் பெயரில் மாநில அளவில் பெற்ற விருது பற்றி இங்கே சில தகவல்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான மறைந்த திரு. APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிப் போட்டி நடத்தப்பட்டது. 285 பள்ளிகளிலிருந்து 750 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், கடலூர் ஈஷா வித்யா பள்ளி மாவட்ட அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரி பள்ளியில் அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நிகழ்ந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குகொண்டது. கடலூர் ஈஷா வித்யா பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவன் R.பரத், தனது கண்டுபிடிப்பான பள்ளி வாகன எச்சரிப்பானை (School bus indicator) கண்காட்சியில் முன்வைத்தான்.

சாலை விபத்துகளால் இளம் பிஞ்சுகள் மரணிப்பதை தவிர்க்கும் வகையில் அவன் உருவாக்கியிருந்த அந்தக் கருவி, நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு, முதற்பரிசையும் பெற்றது.

சாலை விபத்துகளால் இளம் பிஞ்சுகள் மரணிப்பதை தவிர்க்கும் வகையில் அவன் உருவாக்கியிருந்த அந்தக் கருவி, நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு, முதற்பரிசையும் பெற்றது.

கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட வருகைதந்த மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரிடம், தனது கண்டுபிடிப்பைப் பற்றி மாணவன் பரத் விளக்கியபோது, “இப்போது அதிகமாக சாலை விபத்துகளில் பள்ளி மாணவர்கள் இறக்கிறார்கள்” எனத் துவங்க, அமைச்சர் இடைமறித்து “நீ என் துறையையும் என்னையும் சங்கடத்திற்கு உள்ளாக்குகிறாய்!” என்று வேடிக்கையாகச் சொன்னார். பின்னர், தனது படைப்பினைப் பற்றி விளக்கமளித்த மாணவன் பரத், அந்தக் கருவியை அனைத்து பள்ளி வாகனங்களிலும் பொருத்துவது "கட்டாயம்" எனும் ஆணையினை பிறப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டான். அமைச்சர் அவர்களும் அவனது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மாணவன் பரத்தின் விளக்கத்தால் வெகுவாகக் கவரப்பட்ட அமைச்சர் அவர்கள், அங்கிருந்த ஈஷா வித்யா பள்ளி பேனரைப் பார்த்து, எந்தப் பள்ளியிலிருந்து இந்த மாணவன் வந்துள்ளான் என்பதைத் தெரிந்துகொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. பழனியப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.சுந்தரராஜ் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரும் மற்றும் கல்வித்துறையைச் சார்ந்த பல உயர் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இளைஞர்களின்பால் தான்கொண்ட ஈடுபாட்டினாலும் அர்ப்பணிப்பினாலும் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை தமிழக அரசு இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறது. அவரது நினைவாக மாணவன் பரத்திற்கு பரிசும் நினைவுச் சான்றிதழும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவன் பரத்திற்கு உறுதுணையாக இருந்து, அவனுக்கு வழிகாட்டியதில் பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் எத்திராஜ் மற்றும் நிலோஃபர் அவர்களின் பங்கு பாராட்டத்தக்கது.