சத்குரு: மாந்திரீகம் என்பதை எளிமையாக சொன்னால் அது ஒருவகையான திறன், ஆனால் சிலர் இந்த திறனை பொறுப்பில்லாமல் மற்றும் எதிர்மறையான வழியில் பயன்படுத்தியதால், மாந்திரீகம் என்ற சொல் ஏதோ எதிர்மறையானது என்று அர்த்தம் ஆகிவிட்டது.

மாந்திரீகம் ஒரு தொழில்நுட்பமே! இன்றைய காலத்தில் நீங்கள் உங்கள் கைபேசி மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள ஒருவருடன் பேசமுடியும். மாந்திரீகம் இதேபோலதான் - அமெரிக்காவில் உள்ள ஒருவருடன் நீங்கள் கைபேசி இல்லாமல் பேச முடியும். அது சற்று முன்னோடியான தொழில்நுட்பம். இது சில காலத்திற்குப் பிறகு இன்றைய புதிய தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி அடையும்போது, காலத்திற்குப் பிறகு நிகழும். என்னிடம் ஏற்கனவே ப்ளூடூத் தொழில்நுட்பம் உள்ளது. நான் ஒருவரின் பெயரை சொன்னாலே இந்த கைபேசி அவரை அழைக்கும். இது கூட தேவையில்லாத ஒரு நாள் வரும். உடலில் ஒரு சிறிய செருகல் மட்டுமே போதும்.

எது என்னவென்று புரிந்துகொள்ளும் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்படும்போது, நவீன விஞ்ஞானமும் மாந்திரீகமும் ஏதோ ஓர் இடத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.

மாந்திரீகம் ப்ளூடூத் உதவி இல்லாமல் பேசுவதாகும். அது வேறு நிலையில் உள்ள ஓர் தொழில்நுட்பம், ஆனால் அது உடல் சார்ந்தது. இதை செய்வதற்கு நீங்கள் உங்கள் உடல் மனம் மற்றும் சக்திநிலையை உபயோகப்படுத்துகிறீர்கள். இறுதியில் எந்த தொழில்நுட்பமாக இருப்பினும் நீங்கள் உபயோகப்படுத்துவது உங்களின் உடல் மனம் மற்றும் சக்தி நிலைகளைதான். பொதுவாக நீங்கள் வேறு பொருட்களை உங்கள் உபயோகத்திற்கு பயன்படுத்துவீர்கள், ஆனால் கைப்பேசியோ அல்லது வேறு ஒரு தொழில்நுட்பம் தயாரிக்கவோ, அடிப்படையான பொருள் உங்களது உடல், மனம் மற்றும் சக்திநிலை ஆகும்.

ஆரம்ப காலத்தில் ஒரு கைபேசி தயாரிக்க அதிகமான பொருட்கள் தேவையாக இருந்தது. இப்போது அதை கணிசமாக குறைக்க முயற்சி நடக்கிறது. ஒரு நாள் வரும், அப்போது எந்தப் பொருளும் தேவைப்படாது - அதுதான் மாந்திரீகம். எது என்னவென்று புரிந்துகொள்ளும் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்படும்போது, நவீன விஞ்ஞானமும் மாந்திரீகமும் ஏதோ ஓர் இடத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.

உடலை பல வழிகளில் பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு நீங்கள் தகவல் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், ஒரு கல் போன்ற கைக்கணினி (வரைபட்டிகை) நுண் கணினி சில்லாக உருவாகியிருப்பது போல. ஒரு முழு மலையை குடைந்து எழுத வேண்டியவை இப்போது ஒரு சிறிய (கணினி) சில்லில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. உடல் சக்தி நுட்பமானதாகிவிட்டது. நீங்கள் உடலின் நுட்பமான பரிமாணத்தை பயன்படுத்தும்போது அதை மாந்திரீகம் என்று சொல்வதுண்டு.

மாந்திரீகமும் ஆன்மீகமும்

sadhguru-wisdom-article-what-is-occult-adiyogi-alayam-consecration

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலகில் பல இடங்களில் மாந்திரீகம் என்பது ஆன்மீக செயல்முறை போல ஆகிவிட்டது, இது நல்லதல்ல. நாம் ஆன்மீகம் என்று சொல்லும்போது, உடல் தன்மையை கடந்து உணர்வதைப் பற்றி பேசுகிறோம். உங்களுக்குள் ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவது அது உடலால் ஏற்படுவது அல்ல என்பதை உணரச் செய்வதற்காக. மாந்திரீகம் என்பது உடல்தன்மையின் நுட்பமான பரிமாணத்தை உபயோகிப்பதாகும், இருப்பினும் அது உடல் சார்ந்தே உள்ளது.

சிவன் ஓர் மாந்திரீகவாதி.

நவீன தொழில்நுட்பம் மிக சூட்சுமமானதாக மாறிவரும் போது, மாந்திரீகத்தின் தேவை குறைந்து போகும். ஓர் ஆயிரம் வருடங்களுக்கு முன், நான் கோயம்புத்தூரிலும் நீங்கள் புது தில்லியிலும் இருக்கிறோம் என்றால், நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் கோயம்புத்தூருக்கு நடந்து வருவதோ அல்லது நான் புது தில்லிக்கு நடந்து வருவதோ நடைமுறைக்கு சாத்தியமில்லாதது, அதனால் அதை உங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எனது மாந்திரீகத்தின் மீது நேரம் செலுத்தி அதை ஆளுமைப் படுத்தினேன். ஆனால் இப்போது கைப்பேசி இருக்கிறது, அதனால் நான் இதை செய்யத் தேவையில்லை. என்னால் அதை இப்போதும் செய்ய முடியும், ஆனால் அதை வாங்கிக்கொள்ள உங்களை தயார்ப்படுத்தி - அதை வாங்கிக்கொள்ள தேவையான தெளிவுடன் இருப்பது, மற்றும் அது குறித்து சந்தேகப்படாமல் இருப்பது - தேவையில்லாமல் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்கு பதில் நான் உங்களை எளிதாக கூப்பிடமுடியும். மாந்திரீகம் இப்போதைய சூழலுக்கு பொருத்தமற்றதாக மாறிவிட்டது, ஏனெனில் நவீன தொழில்நுட்பம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

மாந்திரீகத்தில் அசிங்கமான முறையில் ஈடுபட்ட ஒருவர், மற்றொரு மனிதனின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தது அல்லது அவருக்கு ஏதோ வியாதி அல்லது இறப்பு வரசெய்தது பற்றி மக்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இதனால் அவர்கள் மாந்திரீகம் எப்போதுமே எதிர்மறையானது என்று நினைத்தார்கள். சமூகத்தில் இதுபோன்ற மனிதர்களுடன்தான் உங்களுக்கு தொடர்பு இருந்திருக்கும், ஆனால் மாந்திரீகம் உயர்ந்த நிலையிலும் இருந்திருக்கிறது. சிவன் ஓர் மாந்திரீகவாதி. எல்லா மாந்திரீகம்மும் எதிர்மறையானதாகவே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாந்திரீகம் நேர்மறையான சக்தியாகவும் இருக்கலாம். அதை உபயோகிக்கும் நபரையும், எதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தும் உள்ளது.

மாந்திரீகம் ஒரு தொழில்நுட்பமே, எதிர்பாராதவிதமாக அது எதிர்மறையான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ அசிங்கமானது அல்ல. ஆனால் நாம் தொழில்நுட்பத்தை மக்களை கொல்வதற்கும், துன்புறுத்துவதற்கும் பயன்படுத்தத் தொடங்கினால், சிறிது காலத்திற்கு பிறகு தொழில்நுட்பம் அசிங்கமானது போல தோன்றும். இதுதான் மாந்திரீகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நிறைய பேர் அதை தவறாக தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர். இதனால் பொதுவாக மாந்திரீகம் ஆன்மீக பாதையில் முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளது.

மாந்திரீகமும் மெய்ஞானமும்

மாந்திரீகமும் மெய்ஞானமும் கூட ஒன்றானது என்று எப்போதும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. மறைஞானம் என்பது சில மந்திர வேலைகள் செய்வது என்று பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிரஹத்தின் மெய்ஞானியான ஆதியோகியை எடுத்துக்கொண்டால் அவர் ஒருமுறை கூட இந்த மந்திர தந்திர வேலைகளை செய்ததில்லை. அவர் செய்ததெல்லாம் அவருடன் நெருக்கமாக இருந்த சிலருடன் தொடர்பில் இருந்தது மட்டுமே. அவர் இந்த கிரஹத்தில் மற்றவர்களைப் போலவே நடந்துகொண்டார்.

மாந்திரீகம் மூர்க்கப் பாதையில் சென்ற மெய்ஞானத்தின் இளைய சகோதரர் என்றும் நீங்கள் சொல்லலாம்.

மாந்திரீகம் மெய்ஞானத்தின் இளைய சகோதரன், அவர் எப்போதும் முன்னணியில் இருந்து அதிவேகத்தில் செயல் செய்பவர். இது எப்படியென்றால், நீங்கள் புத்தகங்களை வைத்துக்கொண்டு பட்டப்படிப்பில் போராடிக்கொண்டிருக்கும் போது, தன் 18வது வயதில் தன்னை உள்ளூர் அடிதடி கும்பலுடன் இணைத்துக்கொண்ட உங்கள் இளைய சகோதரர், கை நிறைய காசுடன் சுகமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கெல்லாம் சென்றுவருகிறார் - ஒருநாள் அவர் நீங்கள் இருக்க விரும்பாத இடத்திற்கும் - சிறைச்சாலை அல்லது மரணம் - போகலாம். மாந்திரீகம் மூர்க்கப் பாதையில் சென்ற மெய்ஞானத்தின் இளைய சகோதரர் என்றும் நீங்கள் சொல்லலாம். நீங்கள் மெய்ஞானத்தின் பாதையில் இருந்து இதை நோக்கினால் மாந்திரீகம் உங்கள் அருகாமையில் உள்ளது, ஆனால் நீங்கள் செல்லும் பாதை வேறு என்பதால் நீங்கள் அதை நாடி செல்லவில்லை.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

நீங்கள் எதையாவது மேற்கோள் காட்ட வேண்டும் என்றால் - மாந்திரீகம் தொழில்நுட்பம் போன்றது, மறைஞானம் விஞ்ஞானம் போன்றது. விஞ்ஞானத்தின் சாரம் இந்த இருப்புத் தன்மையை அறிவதாகும். ஆனால் பெரும்பாலான மக்களின் புரிதலில் விஞ்ஞானம் ஓர் தொழில்நுட்பம். தொழில்நுட்பம் கட்டாயமாக நல்வாழ்வுக்குதான் உபயோகப்படும் என்று சொல்லமுடியாது. தொழில்நுட்பம் உங்களை நேராக சாக்கடையை நோக்கி கொண்டுபோக முடியும், ஆனால் நீங்கள் இதை உணர முடியாது. ஏனெனில் நீங்கள் உயர்-தொழில்நுட்பத்தில் செல்கிறீர்கள், அதுவும் (ஸ்டைலாக) ஒரு பாணியில், அதனால் நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள் என்று எண்ணலாம். விஞ்ஞானம் என்றால் எது எப்படி உள்ளதோ அதை அப்படியே தெரிந்துகொள்வது. நீங்கள் வாழ்க்கையை அது எப்படி உள்ளதோ அப்படியே உணர்ந்து, புரிந்துகொள்ள விரும்புவது. தொழில்நுட்பம் நம் இருப்பை பெரும்பாலான சமயங்களில் தவறாக பயன்படுத்துவதாகும்.

“நான் என்றும் பிரபஞ்சம் என்றும் எதுவும் இல்லை. ஒன்று நான் இருக்கிறேன் அல்லது பிரபஞ்சத்தின் அதிர்வுகள் இருக்கின்றன” என்பதை அறிந்து உணர்ந்துகொள்வதற்கான வழி - மறைஞானம்

நான் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் இல்லை. தொழில்நுட்பம் ஒரு அற்புதமான விஷயம். அது நம்மை உடல் ரீதியாக பல வழிகளில் விடுவித்துள்ளது, ஆனால் இப்போது தொழில்நுட்பம் பற்றிய நம் யோசனை, எதையும், எல்லாவற்றையும் - இந்த முழு இருப்பையும் - நம் நல்வாழ்விற்கென்று உபயோகப்படுத்திக் கொள்வதிலேயே உள்ளது. நுண்ணுயிர்களை எப்படி பயன்படுத்துவது என்று நமக்கு தெரியும். இந்த பூலோகத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது என்று நமக்கு தெரியும். எல்லாவற்றையும் எப்படி உபயோகிப்பது என்று கற்றுக்கொண்டோம் - ஆனால் நலமாக இருப்பது எப்படி என்று நமக்கு தெரியாது.

மறைஞானமும் விஞ்ஞானம் போன்றதுதான். மறைஞானம் அடிப்படையில் நம் இருப்பை அறிவதற்கான வழி, நம் இயற்கையான நிலை மற்றும் நாம் எதை 'நான்' என்று சொல்கிறோமோ அதற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவு. “நான் என்றும் பிரபஞ்சம் என்றும் எதுவும் இல்லை. ஒன்று நான் இருக்கிறேன் அல்லது பிரபஞ்சத்தின் அதிர்வுகள் இருக்கின்றன” என்பதை அறிந்து உணர்ந்துகொள்வதற்கான வழி - மறைஞானம். இதை தெரிந்துகொள்ள, அறிவு சார்ந்த முறையில் இல்லாமலும், அனுமானமாகவும், தத்துவமாகவும் இல்லாமல், உண்மையான நிலையில் வாழ்வது - இதுதான் மெய்ஞானம்.

இதில் (எடுத்துச்செல்ல) எனக்கு என்ன கிடைக்கும்?

மெய்ஞானத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? இதை வைத்து வாழ்க்கை நடத்த முடியுமா? முடியாமல் போகலாம். அப்படியென்றால் எதற்கு இந்த குப்பை? உங்களிடம் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், அப்படி ஒரு விஷயமும் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான விஷயமாக இல்லை, இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையேதான். வாழ்க்கையை அறிவதற்கு மேலாக வேறு ஒன்றும் இங்கு இல்லை. எத்தனை ஆழமாகவும் தெளிவாகவும் நீங்கள் உணர்ந்தீர்கள் என்பதில்தான் அனைத்தும் உள்ளது. இதில் எடுத்துச்செல்ல வேறு ஒன்றும் இல்லை.

பார்த்தது, பார்க்காதது என எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்க துடிப்பது உயிரின் ஏக்கம். இந்த ஏக்கத்தை பூர்த்தியாக்குவதுதான் மெய்ஞானம்.

துரதிருஷ்டவசமாக இன்றைய நவீன உலகம், "இதில் எனக்கு என்ன கிடைக்கும்" என்பதை சுற்றியே இருக்கிறது. நீங்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் இறந்து போகும்போது எனக்கு என்ன கிடைக்கும் என்பதே அங்கு இல்லை. இந்த வாழ்க்கையில் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது பற்றிய ஒரு தெளிவான அறிவிப்பு - இறப்பு. எதையும் கொண்டு செல்ல முடியாது, எனவே அதில் சிறந்ததை இப்போதே செய்வோம் என்று உணர்வதுதான் மெய்ஞானம். சிறப்பாக பயன்படுத்துவதென்றால் எதை எல்லாம் உண்ண முடியுமோ அதை உண்பதோ அல்லது எதை எல்லாம் குடிக்க முடியுமோ அதை குடிப்பதோ அல்ல. நம் வாழ்வை வளமாகவும் நிறைவாகவும் ஆக்குவது, வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்கள் அல்ல - நம் ஆழமான அனுபவம்தான் அதை தீர்மானிக்கும். எத்தனை துடிப்பாக, எவ்வளவு சாத்தியமான உயிராக நீங்கள் ஆகிறீர்கள் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது.

ஒரு மனிதன் தனக்கு எதையும் எடுத்து செல்லத் தேவையில்லை என்ற நிலைக்கு வரும்போது மட்டும்தான் மெய்ஞானத்திற்கான வாய்ப்பு இருக்கும். இதிலிருந்து என்ன செய்யமுடியும் அல்லது அதை எப்படி அடுத்தவரிடம் காண்பிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கானது அல்ல இது. யாரொருவர் “உடல் இல்லை, மனம் இல்லை மற்றும் வெளித்தூண்டுதல் இல்லை - தூய்மையான வாழ்வு மட்டுமே” என்ற பரிமாணத்தை தொடுகிறாரோ அவருக்கானது இது! பார்த்தது, பார்க்காதது என எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்க துடிப்பது உயிரின் ஏக்கம். இந்த ஏக்கத்தை பூர்த்தியாக்குவதுதான் மெய்ஞானம்.