சத்குரு: இன்றைய தொழில் தலைமைக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளது: ஒன்று நிர்வாகம், மற்றொன்று வழிநடத்தும் திறன். நிர்வாகம் என்பது சாயம்பூசப்பட்ட "குடும்பம் நடத்தும் திறன்". எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் சிறிதோ பெரிதோ, அதை சமாளித்து தடம்புரளாமல் பார்த்துக் கொள்வது. வழிநடத்தும் திறன் என்றால், மற்றவர்கள் தாமாக பார்க்க முடியாத, உருவாக்க முடியாதவற்றை, நீங்கள் பார்ப்பது மட்டுமல்ல அதை உருவாக்கவும் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தலைமைப் பொறுப்பு இலகுவாக நிகழவேண்டும் என்றால், அவர்கள் வாழ்விற்கு அவர்களைவிட நீங்கள் பெரும் சாத்தியமாய் இருக்கிறீர்கள் என்பதை மக்கள் பார்க்கவேண்டும்

தங்கள் உயிரை உங்கள் கையில் ஒப்படைக்க அவர்கள் தயாராக இருப்பார்கள், ஏனெனில் அவர்களாகவே சாதிக்க முடியாதவற்றை, நீங்கள் அவர்களை சாதிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்கள்மீது இருக்கும். சுயமுயற்சியில் அவர்களால் திறக்கமுடியாத பரிமாணங்களை நீங்கள் அவர்களுக்குத் திறப்பீர்கள். அப்போதுதான் மக்கள் ஒரு தலைவனுக்குப் பின்னால் கூடிநிற்பார்கள். தேர்வு செய்யப்படும், தேர்தல் மூலம் அறிவிக்கப்படும் தலைவர்களுக்கு வேறு மாதிரி இருக்கலாம்.

தலைமைப் பொறுப்பு இலகுவாக நிகழவேண்டும் என்றால், அவர்கள் வாழ்விற்கு அவர்களைவிட நீங்கள் பெரும் சாத்தியமாய் இருக்கிறீர்கள் என்பதை மக்கள் பார்க்கவேண்டும். தாமாக தனித்து இயங்குவதைவிட உங்களுடன் சேர்ந்து இயங்கினால், மாபெரும் விஷயங்கள் தங்களுக்கு நிகழமுடியும் என்பதை அவர்கள் பார்க்கவேண்டும். இந்த சாத்தியத்தை நீங்கள் திறந்தால், வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு மிக இயல்பான, இலகுவான செயல்முறையாய் இருக்கும். இல்லையெனில் நீங்கள் தலைவனாக ஆக முயற்சிதான் செய்து கொண்டிருக்கீறீர்கள். அதனால்தான் தலைவர் என்பவர் முட்டாள் என்று பொருள்படும் இக்கவிதையை எழுதினேன்.

தலைமைப் பொறுப்பு

அற்புதமான அணிவகுப்பில்
மைனாக்கள் பறக்கும்போது
அவற்றின் தலைவன்
யாரென்றுஅறியமுடியுமோ

இதயம் துடிக்கிறது, சுரப்பிகள் சுரக்கின்றன
சிறுநீரகம் சுத்திகரிக்கின்றன, ஒவ்வோரு உயிரணுவும்
எள்ளவும் பிறழாத வண்ணம் செயல்படுகின்றன
இதை மூளை பிரதிபலிக்கிறது

கோடானுகோடி நட்சத்திர மண்டலங்கள்
அதில் வியாபிக்கும் நட்சத்திரங்கள்
சாத்தியங்களடங்கிய விண்வெளி
கருப்புத் துளைகள், பால்வெளிகள்
இவற்றை வழிநடத்தும்
மையத்தை யாரும் காணமுடியுமோ

தலைவன் ஒரு முட்டாள்

poem divider

 

மனிதர்கள் வருவதற்கு முன்பிலிருந்தே இப்பூமியில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. அவற்றை வழிநடத்தும் தலைமை என்று ஏதேனும் இருந்ததா? இல்லை. எல்லாவற்றையும் செயல்படுத்தும் சக்திதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு ஒரு அபாரமான சான்று "நதிகளை மீட்போம்" பேரணி. முற்பதே நாட்களில் 16.2 கோடி மக்களின் ஆதரவைப் பெற்றோம். என் மனதில் 15 ஆண்டுகளாக இருந்த எண்ணம் இது, ஆனால் அதை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தேன். பேரணியைத் துவங்குவதற்கு 59 நாட்களுக்கு முன்புதான் என்னுடன் செயல்படும் மிக நெருங்கிய வட்டத்திற்கு இதை நாம் செய்யவேண்டும் என்று கூறினேன். "நாடு முழுவதுமா? அது எப்படி சாத்தியப்படும் சத்குரு?" என்று கேட்டார்கள். நான் சொன்னேன், "தண்ணீர் பருகும் ஒவ்வொருவரும் நதிகளை மீட்க குரல்கொடுக்க வேண்டும்" என்று. இது நடப்பதற்கு அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்கு விளக்கினேன்.

இதுதான் மனித விழிப்புணர்வின் சக்தி. விழிப்புணர்வு என்றால்: "நினைவுகளைத் தாண்டிய புத்திசாலித்தனம்". அதாவது உங்களுக்கு என்ன தெரியுமோ அதன் அடிப்படையில் செயல்படாமல், பலவற்றையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவது. ஏதோவொன்றை உங்கள் விழிப்புணர்வில் விதைத்துவிட்டால், அதன்பிறகு யாருக்கும் குறிப்புகளோ, ஆணைகளோ நீங்கள் பிறப்பிக்க வேண்டாம். அனைவரும் - உங்களுக்குத் தெரிந்தவர்களும், உங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களும் கூட - உங்களுக்கு என்ன வேண்டுமோ அதன்படி செய்வார்கள். தன்னலமிக்க எண்ணம் நிச்சயமாய் விழிப்புணர்வில் உதிக்க முடியாது. அது அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

ஆனால் பலரின் விழிப்புணர்வும் ஞாபகங்களால் கறைபடிந்துள்ளது. போதுமான சுத்திகரிப்பு நடைபெறவில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் பற்பல ஞாபகங்களை சேகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். பார்த்து, கேட்டு, முகர்ந்து, சுவைத்து, தொட்டு; அனுபவங்களாகவும், வார்த்தைகளாகவும் பல ஞாபகங்களை தினந்தோறும் சேகரிக்கிறீர்கள். வாழ்வின் தன்மையே இப்படித்தான் இருக்கிறது. ஆனால் சுத்தம்செய்வது என்றால் ஞாபகங்களை விலக்கி வைப்பது. இதை செய்வதற்கு பல வழிகளை கற்றுக்கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன்னலமிக்க எண்ணம் நிச்சயமாய் விழிப்புணர்வில் உதிக்க முடியாது. அது அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

இங்கு அமர்ந்திருக்கும் போது நீங்கள் ஒரு ஆண் என்ற ஞாபகத்துடனோ பெண் என்ற ஞாபகத்துடனோ இல்லாமலிருக்கக் கற்றுக் கொண்டால், ஒரு இந்தியராகவோ அமெரிக்கராகவோ இல்லாமலிருக்கக் கற்றுக் கொண்டால், எந்தவொரு அடையாளமும் இல்லாமல், வெறும் துடிக்கும் ஒரு உயிராக இங்கிருந்தால், வாழ்க்கை என்பது மிகமிக எளிதான விஷயமாக நடைபெறும். அப்போது நீங்கள் வாழ்வை நடத்திக் கொள்ளத் தேவையிருக்காது ஏனெனில் அந்த வாழ்வே நீங்கள்தான். இன்று வாழ்க்கையை வாழ்வதுதான் மக்களுக்கு இருக்கும் மாபெரும் பிரச்சினை. அதற்குக் காரணம் உங்கள் புத்திசாலித்தனத்தைக்கூட உங்களால் கையாள முடியவில்லை.

இதை ஆதியோகி மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்: "மனிதனாய் இருப்பதன் மிக முக்கியமான அம்சம், உங்கள் பரிணாம வளர்ச்சி உங்கள் கையில் இருக்கிறது" என்று. உங்களுக்குள் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து இப்போதே நீங்கள் கடவுள் போல் ஆகவேண்டும் என்றால், அதுவும் சாத்தியம். இல்லை, ஒரு மிருகமாக மாறவேண்டுமா அதுவும்கூட சாத்தியம். ஒவ்வொரு நாளும் மக்கள் இவ்விரண்டு நிலைகளையுமே வெளிப்படுத்துகிறார்கள். உங்கள் பரிணாம வளர்ச்சி உங்கள் கையில் இருக்கிறது என்றால், அது மாபெரும் பாக்கியம், மாபெரும் பொறுப்பும் கூட.

தொழில் தலைமை என்றால் ஏதோ ஒருவகையில் மற்றவர்களின் மனதை நிர்வகித்து அதை வழிநடத்த விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அதற்குமுன் இருக்கும் கேள்வி, "முதலில் உங்கள் மனம் உங்களிடமிருந்து கட்டளைகள் ஏற்கிறதா?" என்பது. உங்கள் மனம் உங்களிடமிருந்து கட்டளைகள் ஏற்றால், உங்கள் எண்ணமும், உணர்வுகளும் உங்களுக்கு வேண்டியவாறு செயல்பட்டால், நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்களா, துயரத்தில் ஆழ்வீர்களா?

அதை மனஅழுத்தம் என்று சொல்லுங்கள், டென்ஷன், கவலை, துக்கம், பைத்தியக்காரத்தனம் என எப்படி வேண்டுமானாலும் அதற்குப் பெயர் கொடுங்கள், ஆனால் அடிப்படையில் நடப்பதென்னவோ, உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்பதுதான். இப்போது பிரச்சினை என்னவென்றால், நாம் இவ்வுலகை நம் ஆளுமையில் கொண்டுவர செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எப்போது உங்கள் செயல்பாட்டுக் கருவிகளே (எண்ணம், உணர்வு) உங்களிடமிருந்து கட்டளைகளை ஏற்கவில்லையோ, இப்போது நீங்கள் எதைக் கைபற்றினாலும் அதை சரியான முறையில் நடத்திக் கொள்ளமுடியாது. இப்பூமியில் எதிலெல்லாம் நம் கை வைத்தோமோ, அவற்றையெல்லாம் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்பூமியின் எதிர்காலத்தை தொழில்தான் நிர்ணயிக்கும்.

நம் கல்வி முறையைப் பார்த்தால், அதை வடிவமைத்தவர்கள் இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் - மனிதனைத் தவிர்த்து என்றே தோன்றுகிறது. பள்ளிக்கூடத்தில், தவளை, கரப்பான் எல்லாவற்றையும் வகுந்து அவற்றுள் என்ன இருக்கிறது என்று பார்க்கிறீர்கள். ஆனால் உள்நோக்கிப் பார்த்து உங்களுக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கான கருவிகளை நம் கல்விமுறை வழங்கினால், இவ்வுலகில் இருக்கும் சூழ்நிலையே மாறிப்போகும்.

உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை வைத்துத்தான் இப்பிரபஞ்சத்தை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி யோசிக்கிறீர்களோ, அப்படி இப்பிரபஞ்சம் இல்லை என்பதை விஞ்ஞானம் பற்பல வழிகளில் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது. இவ்வுலகம் தட்டையாக இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால் அது உருண்டையாக உள்ளது என்பது புரிவதற்கு நமக்குப் பலகாலம் ஆனது. உங்கள் கண்கள் காணும் விதத்தில் இவ்வுலகம் இல்லை.

உள்நோக்கிப் பார்க்கும் கருவிகளை மழலைப் பள்ளியில் வழங்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் தொழில் கல்லூரிகளிலாவது அதில் நாம் முதலீடு செய்யவேண்டும். இன்று தொழில்துறையின் தலைவர்கள் மற்றும் தொழில் கல்லூரிகளில் நாம் கவனம் செலுத்தி வருவதற்குக் காரணம் இதுதான்: இன்று இவ்வுலுகிலேயே அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர்களும், அதிக சக்தி கொண்டவர்களும் தொழில்துறை தலைவர்கள்தான்.

…வருங்காலத்தில் தலைவர்களாக ஆகப்போகும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருமாதமாவது உங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்ள செலவிட வேண்டும்.

அரசியல் பின்னணியே இல்லாத ஒரு தொழிலதிபர் இன்று அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருக்கிறார். இவ்வுலகம் அத்திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 15-25 ஆண்டுகளுக்குள் தொழில்துறையின் தலைவர்கள்தான் அனைத்தையும் தீர்மானிப்பார்கள். இப்பூமியின் எதிர்காலத்தை தொழில்தான் நிர்ணயிக்கும். அதனால் தொழில் என்பது பகுத்தறிவோடு, நலனை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும், அழிவு ஏற்படுத்தும் விதத்தில் அல்ல.

சுய-லாபம் தவிர்த்து வேறெதுவும் சிந்திக்க முடியாததுபோல் இனைய தொழில்துறை தலைவர்களின் மீது ஒரு பளு இறங்கியுள்ளது. மனித நல்வாழ்வைப் பற்றி அவர்களுக்கு எள்ளளவும் கவனமில்லை. இந்தப் பளுவை நாம் அகற்ற வேண்டும். தொழில்துறையின் தலைவர்கள் என்றால், இப்பூமியின் நலனிலும் மக்களின் நலனிலும் அக்கறை கொண்ட தொலைநோக்குடையவர்கள் என்று நாம் காட்டவேண்டும். அது நடக்கவேண்டும் என்றால் நம் கல்விமுறையில் இந்தப் பரிமாணம் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும்.

அடுத்தவரின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு கொண்டிருப்பவன்தான் தலைவன். அடுத்தவரின் வாழ்வை வடிவமைக்கும் பொறுப்பை, அவர்களின் எதிர்காலத்தையும் விதியையும் நிர்மாணிக்கும் பாக்கியத்தை மக்கள் உங்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லையா? நீங்கள் செய்வது அவசியமானது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செய்யவேண்டிய மிகமிக முக்கியமான செயல், உங்கள்மீது முதலில் வேலை பார்ப்பதுதான்.

இன்றைய தொழில்துறை மாணவர்கள்தான் நாளை இப்பூமியின் வருங்காலத்தையும் மனிதர்களின் வருங்காலத்தையும் நிர்மாணிக்கும் தலைவர்கள். அதனால் வருங்காலத்தில் தலைவர்களாக ஆகப்போகும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருமாதமாவது உங்களை சரியான முறையில் மாற்றியமைத்துக் கொள்ள செலவிட வேண்டும். இல்லையென்றால் நம் திறன் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வுலகில் நாம் தொடும் ஒவ்வொன்றையும் பெருமளவில் அழிவிற்கு உள்ளாக்குவோம்.

தனிப்பட்ட முறையில் ஒரு மனிதன் என்ன செய்யமுடியும்? என்பதன் விஸ்தாரம் இன்று மிகமிக அதிகமாக விரிந்துவருகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தாக்கம் மட்டுமல்ல இவ்வுலகில் ஒரு மனிதன் விட்டுச்செல்லும் கால்தடம் மிகப் பெரிதாகிவிட்டது. நாம் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிது என்றால், நாம் எப்படி இருக்கிறோம் என்பதும் முக்கியமாகிறது. அதாவது, ஒரு உயிராய் இருக்கும் உங்கள் அடிப்படைத் தன்மையோடு உங்கள் மனவோட்டம் ஒன்றி இயங்கவேண்டும். ஒரு உயிராய் இயங்கும்போது, நீங்கள் படைப்பில் இருக்கும் அனைத்தோடும் ஒன்றியுள்ளீர்கள். உங்களருகில் இருக்கும் ஒருவரை நீங்கள் வெறுத்தாலும், அவர் வெளிவிடும் காற்றை உள்ளிழுப்பதில் உங்கள் உடலுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

ஒரு உயிரென்ற நிலையில் பார்த்தால், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் எதனோடும் உங்களுக்கு பிரச்சினை இல்லை. மனதளவில்தான் இதனோடும், அதனோடும் உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. ஒரு உயிராய் இயங்கும் உங்கள் அடிப்படைத் தன்மையோடு உங்கள் மனம் ஒன்றி இயங்கினால், இயல்பாகவே எதனோடும் உங்களுக்கு உராய்வு ஏற்படாது. அனைத்தோடும் ஒன்றி இயங்கும் நிலையில்தான் இருப்பீர்கள். நீங்கள் உருவாக்கும் எதுவும், வடிவமைக்கும் எதுவும்கூட அனைத்துடனும் ஒன்றி இயங்கும் விதத்தில்தான் இருக்கும். மனிதர்களிடம் இருக்கும் பிரச்சினையே, ஒவ்வொருவரும் அவரவர் மனக்கோட்டைகளையும் அதன் வரையறைகளையும் மற்றவர்களின் மீது தினிக்க முயல்வதுதான். இது சரியான வழியல்ல. பிரச்சினையும், வரையறைகளும் நம் மனத்தில் மட்டும்தான் இருக்கிறது.

இது இவ்வுலகை பாதுகாப்பது பற்றி மட்டுமல்ல. இது ஒரு மனிதரின் தரத்தை உயர்த்துவது பற்றி. மனதின் வரையறைகளில் சிக்கி அவதியுறுபவராக இல்லாமல், நீங்கள் ஒரு முழு மனிதனாக மலர்ந்தால் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் எல்லாவற்றுடனும் ஒத்திசைவில் இயங்கும். நாம் இங்கு மிகப் பிரமாதமாக வாழமுடியும். இது எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிப்பு பற்றிய பயமில்லாமல் இருந்தால் மட்டுமே மனித மேதைமை மலரும். அப்போது உங்கள் இயல்பிலேயே மிக ஆனந்தமான மனிதராக இருப்பீர்கள்.

தலைமைப் பொறுப்பின் முக்கியமான தன்மை, உங்கள் புத்திசாலித்தனத்தில் இருக்கும் ஓட்டைகளை கண்டறியும் அளவிற்கு நீங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

முட்டாள்த்தனமான ஊகங்களாலும், அவர்கள் ஏற்கும் தவறான மனநிலைகளாலும் மனிதர்களின் புத்திசாலித்தனம் ஊனமாகிவிட்டது. இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், நாட்டின் பெயராலும் அளவற்ற இரத்தம் இம்மண்ணில் ஓடியாகிவிட்டது. மதம், இனம், நாடு அனைத்தும் வரையறைகள் கொண்டவை. ஆனால் தொழில் என்பது ஒரு சாத்தியமாக உருவாகக் காரணம், அதற்கு வரையறைகள் இல்லை. மிக அடிப்படையான நிலையில் பார்த்தால், நல்ல வியாபாரம் என்று தோன்றிவிட்டால் ஒரு தொழிலதிபர் அரக்கனுடன் தொழில் செய்யக்கூடத் தயாராக இருப்பார். எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் செல்ல தொழில் தயாராக இருக்கிறது.

லாபத்தை நோக்கியே தொழில் செயல்படுகிறது என்றாலும், எல்லா எல்லைகளையும் உடைத்துக்கொண்டு இவ்வுலகம் முற்றிலும் வேறு நிலையிலான விழிப்புணர்வை எட்டுவதற்கு அது வழிசெய்ய முடியும். அதற்கு முக்கியமான ஒன்று, வருங்கால தொழில்துறை தலைவர்கள் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கவேண்டும். இதற்கு ஒரு எளிய வழி, யோகா. "யோகா" என்று சொன்னாலே பலரும் உடலை வளைப்பதும், திரிப்பதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் "யோகா" என்ற வார்த்தைக்கு அர்த்தம் "சங்கமம்". சங்கமம் என்றால் "நான்" எனும் உங்கள் தனித்துவத்தின் எல்லைகளை விழிப்புணர்வோடு தகர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று கல்வி என்பது உங்கள் அறிவின் (அ) தகவல் பெட்டகத்தின் அளவை அதிகரிப்பதாக இருக்கிறது. அறிவு என்றால் ஞாபகசக்தி. ஆனால் யோக முறைகள் ஒரு உயிராய் நீங்கள் செயல்படும் அளவை அதிகரிப்பது எப்படி என்றே பார்க்கிறது. "ஒரு உயிராய் இருக்கும் அளவு" என்றால்… இது என் உடல். அது உன் உடல். இது என் மனம். அது உன் மனம். இப்படி நாம் வாழும்போது, ஆங்காங்கே எப்போதாவது நம் மனநிலையில் ஒற்றுமை இருக்கலாம். அது ஏதோ நம் மனங்கள் ஒன்றிவிட்டது போல் தோன்றும். அவ்வப்போது உடலுறவு வைப்பதால் இரு உடல் ஒன்றாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். என்றாலும், இரண்டு உடல்கள், இரண்டு மனங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் எப்போதுமே ஒன்றாக ஆகாது.

ஆனால் "என் உயிர்" "உன் உயிர்" என்று இங்கு எதுவுமில்லை. இது ஒரு வாழும் பிரபஞ்சம். இதில் சிறிதளவை நீங்கள் கைபற்றினீர்கள்; சிறிதளவை நான் கைபற்றிக் கொண்டேன். நீங்கள் எவ்வளவு கைப்பற்றினீர்கள் என்பதுதான் நீங்கள் எப்பேர்பட்ட உயிராய் வாழ்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. அதீத ஞாபக சக்தி இருந்தால் இன்றைய உலகில் நீங்கள்தான் மேதாவி என்பதுபோல் இருக்கலாம். ஆனால் உங்களைவிட மிகமிக அதிகமான ஞாபகசக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் வந்துவிட்டால், உங்கள் ஞாபகசக்திக்கு மதிப்பு இருக்காது. இந்த எந்திரங்கள் வந்துவிட்டால், தங்கள் வேலை பரிபோகுமே என்று பலரும் இன்று கவலையில் இருக்கிறார்கள்.

"அப்பாடா! நல்லவேளை வெள்ளிக்கிழமை வந்துவிட்டது" என்று வாராந்திர விடுமுறையை எதிர்நோக்கி இருந்தவர்கள்தான் இன்று, "ஐயோ! வேலை போய்விடுமே" என்ற கவலையில் இருக்கிறார்கள். எல்லா வேலையையும் செய்யும் திறன் கொண்ட எந்திரங்கள் வரும்போதுதான் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்கு மதிப்பு அதிகமாகும். அதனால் நல்லநேரம்தான் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வுள்ள அற்புதமான மனிதர் என்பதற்குத்தான் இனி அதிக மதிப்பு இருக்கும்.

தலைமைப் பொறுப்பின் முக்கியமான தன்மை, உங்கள் புத்திசாலித்தனத்தில் இருக்கும் ஓட்டைகளை கண்டறியும் அளவிற்கு நீங்கள் விழிப்பாக இருக்கவேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தில் இருக்கும் ஓட்டைகளை நீங்களே கண்டறிந்துவிட்டால், மக்கள் உங்களை புத்திசாலியாகப் பார்ப்பார்கள். ஆனால் நீங்களே உங்களை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டால், முட்டாள்த்தனமாகத்தான் நடந்து கொள்வீர்கள். இதுதான் ஒரு புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையே இருக்கும் அடிப்படையான வித்தியாசம். ஒரு புத்திசாலிக்கு தன் புத்திசாலித்தனம் வரையறைக்கு உட்பட்டிருப்பது தெரியும். அவர் ஒரு முட்டாள் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு முட்டாளுக்கோ, அவன் ஒரு முட்டாள் என்பது தெரியாது.

முன்முடிவுகள் இல்லாமல் கவனித்து நோக்கினால், இவ்வுலகில் செயல்படும் ஒவ்வொரு அணுவும்கூட உங்களைவிட அதிக புத்திசாலித்தனம் கொண்டது என்பதை நீங்களே பார்க்க முடியும். இதை நீங்கள் உணர்ந்திருந்தால், உங்கள் புத்திசாலித்தனத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிக் கொண்டே இருப்பீர்கள். இந்த ஓட்டைகளை அடைக்கஅடைக்க நீங்கள் இவ்வுலகில் இன்னும் திறம்பட செயல்படுவீர்கள்.

அன்பும் அருளும்,