வீடியோவின் எழுத்தாக்கம்

சத்குரு:

அனைவருக்கும் நமஸ்காரம்! கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்திற்கு அமெரிக்காவில் இருந்தேன், அதோடு பல்வேறு நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். உலகில் ஈஷா ஆற்றப்போகும் பணி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளோம், இது தோராயமாக அடுத்த ஆறுமாத காலத்தில் செயல்படுத்தப்படும். அதன் தாக்கத்தை நீங்கள் விரைவில் காண்பீர்கள். அங்கிருந்து அபுதாபி சென்றேன், அங்கிருந்து துபாய் சென்றேன், அங்கு ஒருசில முக்கிய சந்திப்புகளுடன் ஒரு அற்புதமான கோல்ஃப் விளையாட்டு.

துபாய் அல்லது எமிரேட்ஸ் நாட்டு தலைவர்களிடத்தில் நான் காணும் மாற்றம் வியப்பூட்டுகிறது. அவர்கள் இப்போது மிகவும் விவேகமாக மாறிவிட்டார்கள், தங்கள் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் அதேசமயம், மற்ற தேசத்தவர்களின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் அடையாளத்தில் பேதம் பார்க்காமல், அனைவரையும் வரவேற்கும் ஒரு சர்வதேசக்கூடமாக அவர்களுடைய தேசத்தை கட்டமைக்க விழைகிறார்கள். இது மிகவும் முற்போக்கான சிந்தனை, அதோடு ஒரு தேசத்தை நடத்த மிக சாதுர்யமான வழியும்கூட.

…நீங்கள் இன்னும் அதிகமாக கையிலெடுத்து செய்ய விரும்பும்போதும், உங்கள் தனிப்பட்ட எல்லையை உங்கள் செயல் கடப்பதற்கு, உங்களுக்கு ஒருவித போதை தேவை.

இது எமிரேட்ஸ் தேசத்தில் மிகப்பெரிய விதத்தில் வெளிப்படுவதை நீங்கள் பார்க்கமுடியும். சில முக்கிய நபர்களுடனும், என்றும் கனிவுடன் உபசரிக்கும் ஷேக் நஹியான் அவர்களுடனும் சில சந்திப்புகள். அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பிட்ட சில விதங்களில் அவர்களின் தேசத்தை திறந்திருப்பது அற்புதமான விஷயம்.

எமிரேட்ஸ் தேசத்திலிருந்து மும்பை வந்தேன், அன்றிரவு அங்கு இருந்துவிட்டு சோம்நாத் சென்றேன். நான் இவ்விடத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். ஏனென்றால் சோம்நாத் கோயில் மிக முக்கியமான இடம். அரேபியாவில் நிகழ்ந்த சாத்தானிய வசனங்கள் நிகழ்ச்சிக்குப் பின்னர், அவர்கள் வணங்கிய இரண்டு தேவியரை சோம்நாத் கோயிலுக்கு இடம் பெயர்த்தார்கள் என்று ஒரு கதை உண்டு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதனால்தான் இக்கோயிலை அழிப்பதற்காக ஆஃப்கானிஸ்தானிலிருந்து கஜினி வெகுதூரம் கடந்து இங்கு வந்தார். அவர்கள் இக்கோயிலை மீண்டும் மீண்டும் தாக்கினார்கள் - கிட்டத்தட்ட 17 முறைக்கு மேல் தாக்கி அழித்தார்கள். எனினும் 1950ல் சர்தார் பட்டேல் அவர்களும், அப்போதைய பாரதப் பிரதமர் ராஜேந்திர பிரசாத் அவர்களும் கொண்ட உறுதியால் மீண்டும் கட்டினார்கள். சமுத்திரத்தின் எல்லையில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்டினார்கள். இது இங்கு நிலத்தின் ஆரம்பம் போல காட்சியளிக்கிறது. இது மிக அற்புதமான இடம்.

இதுதான் சோம்நாத். இது சிவனின் போதைநிலை அல்லது பரவசநிலை. நம் வாழ்வில் நாம் பலப்பல செயல்களில் ஈடுபடும்போதும், நீங்கள் இன்னும் அதிகமாக கையிலெடுத்து செய்ய விரும்பும்போதும், உங்கள் தனிப்பட்ட எல்லையை உங்கள் செயல் கடப்பதற்கு, உங்களுக்கு ஒருவித போதை தேவை. போதை என்றால் தினமும் மது அருந்துவதோ, ஒவ்வொரு சனி ஞாயிறும் நடக்கவே முடியாத அளவு குடிப்பதோ இல்லை. போதை என்றால் அதுவல்ல.

போதை என்றால் வெளியிலிருந்து ஏதோவொன்று எடுத்துக்கொள்வதால் வருவதல்ல, உங்கள் இரசாயன அமைப்பை நீங்கள் மாற்றியமைப்பதால் எப்போதுமே இருக்கும் போதைநிலை இது.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதும் ஒருவித போதை உணர்வு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தாண்டி துடிப்பாக செயல்படத் தேவையான வழுவழுப்பு உங்களிடம் இருக்காது. உலகில் நீங்கள் உண்மையாகவே திறம்பட செயல்பட வேண்டும் என்றால், உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தாண்டி, தனிப்பட்ட இலட்சியம் மற்றும் தேவை தாண்டி, உலகில் நீங்கள் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்றால், உங்களுக்கு ஒருவித போதை உணர்வு அவசியமாகிறது.

சோம்நாத் என்றால் அதுதான். எல்லைகளின்றி உலகில் ஈடுபடும் விதமான போதை நிலையில் அவர் இருக்கிறார். எனவே சோம்நாத் கோயில் அனைவரும் பார்க்கவேண்டிய இடம். கலாச்சார ரீதியாகவும் சரித்திர ரீதியாகவும் இது இந்தியாவிற்கு முக்கியமான இடம். அதோடு, எப்படி போதைநிலையை எட்டுவது என்றுரைக்கும் சோம சூத்திரம் என்றொரு யோக அறிவியலே இருக்கிறது. போதை என்றால் வெளியிலிருந்து ஏதோவொன்று எடுத்துக்கொள்வதால் வருவதல்ல, உங்கள் இரசாயன அமைப்பை நீங்கள் மாற்றியமைப்பதால் எப்போதுமே இருக்கும் போதைநிலை இது.

பிறகு அங்கிருந்து பெங்களூரு வந்தேன். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இடையிடையே நான் அவ்வப்போது குறுகிய தூரங்களுக்கு பைக் ஓட்டிச் சென்றதுபோக, முப்பது வருடங்களில் முதல் முறையாக நான் பெங்களூரில் இருந்து கோவையிலுள்ள யோகா மையத்திற்கு நெடுந்தூரம் பைக் ஒட்டி வந்தேன். என் மகளும் உடன்வந்தது மகிழ்ச்சி. ராதே என்னுடன் பைக்கில் இதற்குமுன் இப்படி வந்ததில்லை, இதுவே முதல் முறை. இந்த பயணம் முழுவதும் அவள் என்னுடன் இருந்தாள், நம் தியான அன்பர்களில் ஒருசில பைக் பிரியர்களும் உடன் பைக் ஓட்டி வந்தார்கள். தன்னார்வத் தொண்டர்களின் உதவியின்றி பயணம் இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் 62 வயதில், 450 கிமீ பைக் ஒட்டியிருப்பது மோசமில்லை, இல்லையா?

நான் திரும்பியதும் மாட்டுப் பொங்கல், அதாவது நம் வாழ்வின் அங்கம் வகிக்கும் விலங்குகளுக்கு சங்கராந்தி - நம் விவசாயத்தின் அங்கம் வகித்துள்ள விலங்குகள், நமக்காக வேலை செய்யும் காளைகள் மற்றும் பசுக்களுக்கு. இன்று நம்மிடம் எவ்வளவோ இயந்திரங்கள் இருந்தாலும், இந்த விலங்குகள்தான் நிலத்தில் வேலை செய்வதோடு உரமிடவும் செய்கின்றன. ஈஷாவில் 16 வகை நாட்டுமாடுகள் உள்ளன, ஈஷா குடும்பத்தின் அங்கம் வகிக்கும் இந்த மாடுகளை இந்த நாளில் காட்சிப்படுத்தினோம், அவற்றிற்கு இது அற்புதமான ஒரு நாள். அவற்றில் சிலவற்றின்மேல் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

இந்த விலங்குகளின் உடலின்மேல் நம் பிரம்மச்சாரிகள் அழகிய ஓவியம் வரைந்திருந்தனர். அதோடு காளைகளும் பசுக்களும் தங்களுக்கு கிடைத்த உபசரிப்பையும் கவனத்தையும் மிகவும் ரசிப்பதைக் காணமுடிந்தது. ருசியான உணவையும் கண்கள் விரிய மக்கள் பார்ப்பதையும் அவை ரசித்து மகிழ்ந்தன. ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களும் சமஸ்க்ருதி மாணவர்களும் கண்கவர் நடனமும், நகைச்சுவை நாடகமும், இசைநிகழ்ச்சியும் வழங்கினர். மொத்தத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தேறியது. இந்த அளவு உற்சாகமாக வேறெங்கும் மாட்டுப்பொங்கல் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. மிக அற்புதமாக நடந்தது.

வரும் ஆண்டுகளில் தேவியின் சக்தி மிகவும் வலுவடைவதை நீங்கள் காண்பீர்கள். 

அடுத்த வாரத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறோம், இடைவிடாமல் பல நிகழ்ச்சிகள் இருக்கப்போகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, விஜி மஹாசமாதி அடைந்து 22 வருடங்கள் ஆகிறது, அதோடு நான் பிறந்து 760 பௌர்ணமிகள் ஆகிறது. கோல்ஃப் விளையாட்டில் 72 ஸ்கோர் பார் என்றால், நான் அதற்கு மேல் 4 புள்ளிகள் எட்டிவிட்டேன், இல்லையா?

எனவே அந்நாள் முக்கியமான நாள். ஜனவரி 21ம் தேதி எங்களுடன் இருங்கள், நேரிலும் வாருங்கள்… அதோடு பெண்களுக்கான சிவாங்கா விரதத்தின் நிறைவும் இந்நாளில் நடக்கிறது. தேவி கோயிலில், இந்த காலம் ‘தேவி காந்த்த காலம்’ என்று அழைக்கப்படுகிறது, அதாவது இது தேவிக்கு ஒருவித புத்துயிரூட்டல், அல்லது மக்கள்மீது தேவியின் தாக்கத்தையும் சக்தியையும் கூட்டும் காலம் எனலாம். அவளுடைய சக்தி இப்போது பெருகும் காலம் என்பதால் கடந்த 11 நாட்களாக கோயில் மூடியிருந்தது. 21ம் தேதி கோயிலை மீண்டும் திறப்போம்.

தேவியின் சக்தி உங்களை வெள்ளமென அடித்துச்செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்நாளில் நீங்கள் அங்கு இருக்கவேண்டும், அல்லது அதற்குப்பிறகு எந்த நாளிலும் நீங்கள் வந்து தரிசிக்கலாம். வரும் ஆண்டுகளில் தேவியின் சக்தி மிகவும் வலுவடைவதை நீங்கள் காண்பீர்கள். எனவே இந்த 11 நாட்கள் கோயிலை மூடியிருந்தது, தேவியை மனதில் இருத்தியிருக்கும் மக்களுக்கு, தங்கள் இதயங்களை தேவியிடம் கொடுத்துவிட்டவர்களுக்கு, மிகுந்த நன்மையைத் தரும்.

நாம் இந்த அற்புதமான நேரத்தில் இருக்கிறோம். தாமதமாக நான் ஸ்பாட் பதிவிடுவதற்கு மன்னித்திடுங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல, நேற்று மாலைதான் பெங்களூரிலிருந்து திரும்பினேன். பிறகு இப்போதே இந்த ஸ்பாட் பதிவை தரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எனவே உங்களுக்கான இந்த பதிவு. உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகள்.

அன்பும் அருளும்,