இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தற்போது நிலவும் சனி ஷிங்னாபூர் கோவில் குறித்த சர்ச்சையைப் பற்றி சத்குரு பேசுகிறார்.

Question: சத்குரு, பெண்கள் ஏன் சில கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை? உதாரணத்திற்கு மஹாராஷ்டிரத்தில் உள்ள சனி பகவான் கோவிலில் ஏன் இந்த பாகுபாடு?

சத்குரு:

லிங்கபைரவியில் கர்ப்பக் கிரகத்திற்குள் ஆண்கள் நுழைய அனுமதியில்லை, ஆனால் அவர்கள் ஒருபோதும் இதற்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. அவர்கள் திருமணமாகி பண்படுத்தப்பட்டுள்ளார்கள் - எதையும் மறுத்துப் பேசாமல் இருக்க அவர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள் (சிரிப்பலை).

இந்தத் தலங்கள் வழிபாட்டிற்கான இடமில்லை என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அவை வெவ்வேறு விதமான சக்தி மையங்கள். சூரிய மண்டலத்தின் கிரகங்கள், நம்முடைய உடல் இயக்கம், மனதின் கட்டமைப்பு, நம் வாழ்வின் தற்போதைய நிலை ஆகியவற்றின்மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் அறிந்துள்ளதால், நாம் வெவ்வேறு கிரகங்களுக்காக கோவில்கள் அமைத்துள்ளோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் பிறப்பின் நேரம் மற்றும் தேதியைப் பொறுத்து, நீங்கள் பிறந்த இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையைப் பொறுத்து, இந்திய ஜோதிடர்கள், எந்தெந்த கிரகங்கள் உங்கள் வாழ்க்கையின்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நுட்பமான கணக்குகள் போடுவார்கள். இவை ஓரளவிற்கு உங்களுக்குப் பொருத்தமாகவே இருக்கும். எனினும், உள்நிலை தொழில்நுட்பம் ஒன்று உங்கள் கைகளில் இருந்தால், இந்தக் கிரகங்களின் தாக்கங்களை அது சமன்படுத்தும்.

சனி என்பது தூரமாய் உள்ள ஒரு கிரகம், அது சூரியனை ஒருமுறை சுற்றிவர 30 ஆண்டுகள் எடுக்கும். சனியின் சுழற்சியையும், பூமியின் சுழற்சியையும், உங்கள் பிறப்பு பற்றிய குறிப்புகளையும் வைத்து, உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் சனி உங்கள்மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கணக்கிடமுடியும்.

சூரியனின் மைந்தர்களில் ஒருவர்தான் சனி, அவருடைய இன்னொரு மைந்தர் யமன். சனி, ஆதிக்கம், துயரம், ஆழ்ந்த மனக்கவலை, நோய், மற்றும் பேரிழப்பிற்கான கடவுள். யமனோ மரணத்திற்கான கடவுள். இந்த சகோதரர்கள் இருவரும், எப்போதும் கைகோர்த்துக்கொண்டு சேர்ந்தே செயல்படுவார்கள். அவர்களுடைய தாய், சூரியனின் மனைவி சாயா. சாயா என்றால் "நிழல்". அறிவியலை இப்படி கதையாக வெளிப்படுத்தினார்கள். நமக்கு சூரியன் தான் வெளிச்சத்திற்கான மூலம். அவரின் மனைவி தான் சாயா, அதாவது நிழல். சூரிய ஒளி இருப்பதால்தான் நிழல் இருக்கிறது.

ஏழாவது நாளான சனிக்கிழமை, சனியின் நாள். ஹிந்தியில் ஏழு என்பதை 'சாத்' என்பார்கள், அது ஆங்கிலத்தில் 'சாட்டர்டே' (Saturday) ஆனது. இந்திய ஜோதிடத்தில் சனி என்பது ஏழாவது கிரகம். "கிரகம்" என்ற வார்த்தைக்கு "கிரகிப்பு" அல்லது "தாக்கம்" என்பது பொருள். நவீன வானவியலின்படி சனி ஆறாவது கிரகம்தான். ஆனால், இந்திய வானவியலில், பூமியிலுள்ள உயிர்களின்மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விண்வெளிப் பொருட்களைப் பார்த்தார்கள். அந்த விதத்தில், சூரியனையும் சந்திரனையும்கூட கிரகங்களாகப் பார்த்தார்கள், இவற்றைக் கோள்களாகப் பார்க்காததால் சனி ஏழாவது கிரகமானது.

பூமியின் உயிர்களின்மீது அதிக தாக்கம் ஏற்படுத்தும் கிரகங்களின் வரிசை - முதலில் சூரியன், பிறகு சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி. இதில் சனி ஏழாவதாய் இருப்பினும், மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாய் இருக்கிறான். ஏனென்றால் ஆரோக்கியமும் சந்தோஷமும் உங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், நோயும் தீராத்துயரமும் தான் உங்கள் வாழ்க்கையின்மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும். இப்போது கேள்வியெல்லாம், வெளி சக்திகளான வானின் கோள்கள் உங்கள்மீது தாக்கம் ஏற்படுத்த அனுமதிக்கிறீர்களா? அல்லது உங்கள் உள்தன்மை மட்டுமே உங்களை வழிநடத்துகிறதா? அதனால்தான் நம் கலாச்சாரத்தில், தேர்ந்த ஜோதிடர்கள், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் குறித்தும், குருவின் வழிகாட்டுதலில் இருப்பவர்கள் குறித்தும் கணிப்புகள் செய்ய மறுத்தார்கள்.

சனியுடைய சுழற்சி 30 வருடம் என்பதால், 30 வருடங்களுக்கு ஒருமுறை சனியின் சக்தி உங்களை அதிகம் பாதிக்கும் நிலைக்கு உள்ளாகிறீர்கள். குறிப்பிட்ட இந்த ஏழரை வருடக் காலகட்டத்தை ஹிந்தியில் 'சாடே சாத்' எனவும், தமிழில் 'ஏழரை சனி' எனவும் குறிப்பிட்டார்கள். உங்களை நோய், மனக்கவலை, பேரிழப்புகள், மரணம் மற்றும் பிற விஷயங்கள் பாதிக்கும் வாய்ப்புக்கள் அப்போது அதிகரிக்கின்றன. இந்த ஏழரை சனியின்போது ஒருவர் விழக்கூடிய குழிகளிலிருந்து பாதுகாத்திட, சனி கோயில்களில் செய்யக்கூடிய பல்வேறு செயல்முறைகளும் சடங்குகளும் உள்ளன.

சனி தேவனுக்கான கோயில்களில், சனி கடவுளாக உருவகிக்கப்பட்டுள்ளான். தற்போது மஹாராஷ்டிரத்தில் உள்ள சனி ஷிங்னாபூர் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து பெரும் சர்ச்சை நிலவுகிறது. மிகவும் சக்திவாய்ந்த சடங்குகள் இங்கே செய்யப்படுகின்றன. சனி கோயில்கள், குறிப்பாக செய்வினை செயல்களுக்கும் ஆவிகளை விரட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. செய்வினைகளின் தாக்கத்திலிருந்து விடுபடவும், ஆவி புகுந்துவிட்டதுபோல் உணர்ந்தால் விரட்டுவதற்கும் இக்கோயில்களுக்கு மக்கள் வருகிறார்கள். இங்கு பில்லி சூனியம் போன்ற செயல்முறைகள் செய்யப்படுவதால், இவ்விடங்களின் சக்தி பெண்களுக்கு உறுதுணையாக இருக்காது. அடுத்த தலைமுறையை உருவாக்கிடும் முக்கியமான பொறுப்பு ஒரு பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட சில சக்திகளை அவளுடைய உடல் சுலபமாக கிரகித்துக்கொள்ளும், அந்த சக்தி அவளை எளிதாக பாதிக்கமுடியும். குறிப்பாக கர்ப்பகாலத்திலும் மாதவிலக்கு காலத்திலும் ஒரு பெண் இந்த சக்திகளுக்குத் ஏற்புடையவளாய் இருப்பாள்.

அப்படியானால் பெண் கர்ப்பக்கிரகத்திற்குள் நுழையவே கூடாதா? அதற்குத் தேவையான விதத்தில் பயிற்சி பெற்றிருந்தால் நுழையலாம், ஆனால் அந்தவிதத்தில் ஆண்களுக்குப் பயிற்சியளிப்பதை விட பெண்களுக்கு பயிற்சியளிப்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் வாழ்க்கையின் இந்த பரிமாணங்களுக்கு ஆண்களின் உடலில் ஒருசில விஷயங்கள் சாதகமாய் உள்ளன. பெண்ணின் உடலமைப்பே, செய்வினை சக்திகள் அவளை ஆழமாய் பாதிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

செய்வினை சக்திகளை அகற்றி ஆவிகளை விரட்டிட, குறிப்பிட்ட சில சக்திகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை ஒரு பெண்ணிற்கு நல்லதே கிடையாது. சனி நல்லவரில்லை. ஆனால் அவர் நம் வாழ்க்கையின் அங்கமாக இருக்கிறார், அதனால் அவரையும் கையாள வேண்டிய நிலை நமக்கு. இந்த செய்வினை சக்திகளால், இப்படிப்பட்ட விஷயங்கள் செய்யப்படும் இடங்களுக்கு பெண்கள் நுழையக்கூடாது என்றார்கள். அவர்களுடைய நல்வாழ்விற்கு அது கேடு விளைவிப்பதாய் இருக்கும்.

வாழ்க்கையில் சில விஷயங்கள் தவறாகும்போது, அவற்றை வேறுவிதத்தில் கையாளத் தேவையிருக்கும், அந்த சூழ்நிலை இனிதாக இருக்காது. இக்கோயில்கள் அந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இன்று பெண்கள் இங்கு அனுமதிக்கப்படாததை சிலர் பெண்களுக்கு எதிரான உரிமை மறுப்பாகப் பார்க்கிறார்கள். இது உரிமை மறுப்பு கிடையாது, இது அவர்களின் உரிமை.

இது செயல்படுத்தப்படும் விதம் வேண்டுமானால் முரட்டுத்தனமாகவும் உரிமை மறுப்பு போலவும் தோன்றலாம், அதனால்தான் இப்பெண்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒருநாள் லிங்கபைரவியின் முன்னால் ஆண்கள் கூட்டம்சேர்ந்து 'நாங்களும் கர்ப்பக்கிரகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்' என்று போராடினால், நான் கர்ப்பக்கிரகத்தை பூட்டிவிடுவேன். நான் அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டேன், ஏனென்றால் அது ஆண்களுக்காக வடிவமைக்கப்படவில்லை. தகுந்த பயிற்சியளிக்கப்படாமல் அவர்கள் நுழையமுடியாது. இது பாகுபாடு கிடையாது, புரிந்துகொள்ளவேண்டிய வேறுபாடு. சந்திர சுழற்சியின் ஒருபாதி காலம் தியானலிங்கத்தை ஆண்கள் பராமரிப்பார்கள், மறுபாதி காலம் பெண்கள் பராமரிப்பார்கள். இரண்டு தண்மையையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தின் தன்மை அது.

வேறுசில கோயில்களில், உதாரணமாக வெள்ளியங்கிரி மலைமீது உள்ள கோயிலைப் பொறுத்தவரை, மலையேறிச் செல்லும் பாதை, வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டின் ஊடே செல்வதால், பழங்காலத்தில் பெண்கள் பயணிப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் தடுத்தார்கள். ஆனால் இப்போது இந்த தடைகளை சற்று தளர்த்திக்கொள்ளலாம்.

சனி கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ள இத்தருவாயில், கோயில்களின் பின்னணியில் உள்ள விஞ்ஞானத்தை நாம் மக்களுக்கு புரியவைக்க வேண்டும். அவை எதற்காக உருவாக்கப்பட்டன என்று கற்றுக்கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை நாம் போற்றிக் கொண்டாடும் இன்றைய காலகட்டத்தில், நாம் அனைத்திலும் சம உரிமையை நிலைநாட்டவே விரும்புகிறோம்,, ஆனால் சில சூழ்நிலைகளில் இது பெண்களுக்குப் பாதகமாய் மாறிவிடும். மற்றபடி நாம் ஓரு இனமாய், இரண்டு பாலினமாய் இருக்கிறோம். இதுபோன்ற ஒருசில இடங்களைத் தவிர, பாலினம் ஒரு பொருட்டாய் இருக்கவேண்டிய வேறு இடங்கள் கழிப்பறையும் படுக்கையறையும் மட்டும்தான்.

Love & Grace

Why Rama and Jesus Are an Inspiration

This video was recorded at the recent “In the Lap of the Master” Satsang with Sadhguru on the weekend of 16 and 17 January 2016 at the iii, Tennessee, USA.