திருமண முறிவு ஏற்பட்டு, நிராதரவாய் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் தான் மறுமணம் செய்து கொள்ளலாமா என்று சத்குருவிடம் கேட்க, தான் மனதளவில் படும் சிரமங்களை அவரிடம் உணர்த்த விடையாய் அமைந்திருக்கிறது இந்த வார சத்குரு ஸ்பாட்...

Question: அன்பிற்குரிய சத்குரு, நான் விவாகரத்து பெற்றவள், எனக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சில சமயங்களில் எனக்குள் ஒரு வெறுமை இருப்பதை உணர்கிறேன். போதிய அன்பு கிடைக்காதது போலவும், மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன். என் மகனும் ஏன் வீட்டில் தந்தை இல்லை என்று கேட்கிறான். நான் மிகவும் குழம்பியுள்ளேன். எனக்கு உதவி செய்யுங்கள்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

"குழந்தைக்கு இரத்த சம்பந்தமான தந்தை உறவு சரியாக அமையவில்லை, நான் மற்றொரு ஆணை கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்," என்ற எண்ணமே ஆபத்தானதுதான்.

முதலில் நாம் பொதுவாக குழந்தைகளைப் பற்றி பேசுவோம். இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தை என்பது திருமணத்திற்குப் பின் ஏற்படும் தற்செயலான நிகழ்வில்லை. ஆனால் ஒரு காலகட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு குழந்தை என்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது போன்ற சூழ்நிலையே நிலவி வந்தது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் நிகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.

ஆனால் இன்றைய உலகத்தில், குழந்தை என்பது தற்செயலாக நிகழ்ந்துவிடவில்லை, பெரும்பாலும் திட்டமிடுதலின்படியே நடக்கிறது. நீங்கள் குழந்தை பெற்றால் அது 20 வருட திட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை அதிகப்படியான திறன் வாய்ந்தவராய் இருந்தால் அதுவே 15-16 வருட திட்டமாக இருக்கும். அதனால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்தால் குறைந்தபட்சம் 15 ஆண்டு கால திட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு போதிய உறுதி இல்லாவிட்டால் இதனுள் நீங்கள் நுழையக்கூடாது. அதற்கு அவசியமும் இல்லை. எந்தவொரு குழந்தையும் உங்கள் கருவில் உதைத்து "எனக்கு பிறப்பு கொடு," என்று சொல்லவில்லை. உங்களால் தேவையான ஆதரவு கொடுக்க இயலுமா இயலாதா எனத் தெரியாமல் குழந்தைப் பெறுதல் எனும் இந்த விபரீத விளையாட்டில் இறங்க வேண்டாம்.

இன்னொரு திருமணம் குழந்தையை சமாதானப்படுத்திவிடும் என்று நினைப்பது ஒரு தவறான கருத்து. அது சமாதானப்படுத்தாது என்று நான் சொல்லவில்லை, ஒருவேளை சமாதானப்படுத்தலாம். "இரத்த சம்பந்தமான தந்தையின் உறவுதான் வாய்க்கவில்லை, ஒரு வேளை நான் மற்றொரு தந்தையை கொண்டு வந்தால் அத்தனையும் சரியாகிவிடும்," என்று நினைப்பது மிக ஆபத்தான கருத்து.

இதுபோன்ற விஷயங்கள், வேண்டுமானால் 10 சதவிகித நேரத்தில் வேலை செய்யும் என்று சொல்லலாம். 90 சதவிகித சூழ்நிலையில், இது தீர்வைவிட அதிகப்படியான பிரச்சனைகளையே உருவாக்குகிறது. உங்கள் மணவாழ்க்கையை ஏன் முறித்தீர்கள் என்று நான் கேட்கவில்லை, அது உங்களைப் பொருத்தது. ஆனால் மணவாழ்க்கையை முறிக்க முடிவு செய்துவிட்டால், ஒரு குழந்தை நன்கு வாழ, பரிபூரணமான பெற்றோராக இருக்க உங்களை நீங்கள் தகுதி வாய்ந்தவராக ஆக்கிக் கொள்ளுதல் அவசியம். ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றிற்காக ஏக்கம் கொள்கையில் அந்தக் குழந்தையும் உங்களுடன் சேர்ந்து ஏக்கம் கொள்ளும். இல்லாத யாரோ ஒருவருக்காக ஏக்கம் கொண்டு வாழும் நிராதரவான நிலையில் உங்கள் குழந்தையை வளர்க்காதீர்கள்.

உங்களுக்கு 8 வயதில் மகன் இருக்கலாம். உங்கள் 8 வயது மகன் உங்களுடன் எத்தனை நேரம் செலவழிக்க விரும்புவான் என்று நினைக்கிறீர்கள்? கிட்டதட்ட ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவனை உங்களுடனேயே ஒட்டிக் கொண்டிருக்கும் நிராதரவான உயிராக நீங்கள் மாற்றி இருந்தாலே ஒழிய, அவன் அவனுடைய நடவடிக்கைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பான். அவனுக்கென்று செய்வதற்கு சில விஷயங்கள் உண்டு. இதுவே இயற்கையின் நியதி. குழந்தைகள் அவர்களுக்கு தோன்றுவதைச் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தனக்கு ஏதோ கேடு விளைவித்துக் கொள்ளாதவாறு நீங்கள் கவனித்துக் கொள்வது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. அவர்கள் செய்வது அத்தனையையும் உங்களுடன் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்களுக்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தால், அது உங்களுடைய விருப்பம். அது உங்கள் தேர்வு. அதனை உங்கள் மகன் மீது போடாதீர்கள். நீங்களும் தேவையில்லை, தந்தையும் தேவையில்லை என்ற விதத்தில் பிள்ளையை ஆக்குங்கள். அவன் அவனாக நன்றாகத்தான் இருக்கிறான். அவனுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய ஆதரவும் அக்கறையும்தான், வேறொன்றும் இல்லை.

நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கொரு பின்விளைவு உண்டு. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அதற்கொரு பின்விளைவுண்டு. நீங்கள் திருமணம் செய்து கொண்டாலும் அதற்கு வேறுவிதமான பின்விளைவுண்டு. ஒன்றில் நீங்கள் ஏற்கனவே அனுபவப்பட்டு விட்டீர்கள், அதனால் அதனை நீங்கள் சுலபமாக கையாண்டிட முடியும் - நமக்கு தெரியாது. ஆனால் இரண்டிற்குமே பின்விளைவுகள் உண்டு. பின்விளைவுகள் என்று நான் சொல்லும்போது ஒன்று சுகமாக இருக்கலாம் அல்லது சிரமமாக இருக்கலாம், அதனை நீங்கள் கையாளும் விதத்தை பொருத்துத்தான் எதுவும் அமையும். பின்விளைவுகளை நீங்கள் சந்தோஷமாக எடுத்துக் கொண்டால், அது அன்பினால் ஆன உழைப்பாக இருக்கும். இல்லையென்றால் அது வெறும் உழைப்பாக மட்டுமே இருக்கும்.

Love & Grace