வயசாகாம இருக்குறது, அரசியல்ல ஊழல் நடக்காம இருக்குறது, எல்லாரும் பெர்ஃபெக்ட்டா இருக்கறது சாத்தியமா? இதோ சத்குருவிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டபோது, பிரச்சனைக்குள் புகுந்து கொண்டு பிறர் மேல் விரல் நீட்டும் நம் அணுகுமுறையையே மாற்றி, மிகுந்த தெளிவுடன் விடை தருகிறார். படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு இது...

Question: வயது ஏறாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், முடியுமா?

சத்குரு:

உங்கள் உடலை எங்கே பெற்றீர்கள்? தினம் தினம் நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உட்கொள்ளும் உணவு இவற்றின் சேகரிப்புதான் உங்கள் உடல். தேவையில்லை என்று ஒருநாள் நீங்கள் உட்கொண்ட உணவை உங்கள் உடலிலிருந்து உரித்து எறிய உங்களால் முடியுமா என்ன? அதனால் நாள் ஒன்று போனால், வயதொன்று கூடித்தான் போகும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாமே தவிர, அதன் வயதில் ஒருநாளைக்கூட உதற முடியாது.

மனதை எங்கே பெற்றீர்கள்? பிறந்ததில் இருந்து உங்கள் சுற்றுப்புறம் உங்கள் மீது வீசி எறிந்த கருத்துக்கள், நீங்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள், சமூகத்தால் சுமத்தப்பட்ட எண்ணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்ட குப்பைத் தொட்டியாகத்தான் மனம் இருக்கிறது.

எல்லாவற்றையும் வைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உங்களுக்குக் கிடையாது. எதையெல்லாம் நீக்கலாம் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. சேகரித்தது எல்லாவற்றையும்கூட நீங்கள் நினைத்தால், ஒரே கணத்தில் உதறிவிட முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையற்றதை நீக்கி, மனதை தினம் தினம் புதிதாகப் பிறப்பிக்கும் சுதந்திரமும், அதன் வயது ஏறாமல் என்றென்றும் இளமையாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முறையான யோகாவால் இது சாத்தியம். தவறவிடாதீர்கள்!

Question: அரசியல்வாதி என்றாலே ஊழல் என்றாகி விட்டதே?

politics, corruption, Sadhguru Tamil Video, Sadhguru, isha, yoga, meditation, kriya

சத்குரு:

முதலில் ஓர் உண்மையைச் சொல்லுங்கள். போலீஸ்காரர் தென்படாத நேரங்களில் சிக்னலை நீங்கள் மீறியது இல்லையா? தெருவில் எச்சில் துப்புவது இல்லையா? யாரும் கவனிக்காதபோது, அடுத்த காம்பவுண்டுக்குள் குப்பைகளை வீசுவதில்லையா? ஓட்டை விழுந்த ரூபாய் நோட்டை மடித்துக் கொடுப்பது இல்லையா?

உண்மையிலேயே ஊழலற்ற சமூகம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், மாற்றத்தை உங்களிலிருந்து ஆரம்பியுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியுள்ளவர்களைச் சுத்தமாக்குங்கள். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மாற்றட்டும்.

இது ராத்திரியோடு ராத்திரியாக நடந்துவிடாது. நீங்கள் இந்தக் கணத்திலிருந்து கவனத்துடன் உறுதியாகச் செயல்பட்டால், ஊழலற்ற சமூகம் மெல்ல மெல்ல உருவாகும்!

Question: கச்சிதமாக (perfect) இருப்பது எப்படி?

perfection, Sadhguru Tamil Video, Sadhguru, isha, yoga, meditation, kriya

சத்குரு:

ஒவ்வொன்றிலும் மிக்க ராணுவ ஒழுங்குடன், "ஓ... அவரா! அவரைப் பார்த்து கடிகாரத்தில் முட்களைத் திருத்தி அமைத்துக் கொள்ளலாமே!" என்று மற்றவர்கள் பேசும்படி நடந்து கொள்ளும் ஒருவரை நீங்கள் பார்த்திருக்கலாம். மிகக் கச்சிதமானவர் என்று அவரை நீங்கள் மதிப்பிட்டிருக்கலாம்.

உண்மையில், அவர் கச்சிதமானவர் மட்டுமல்ல... கல்லானவர். பாறையானவர். மாறுதல்களுக்குத் தயாராக இல்லாத அளவுக்கு உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் அடிமைப்படுத்தப் பார்த்து, அவற்றின் கழுத்தை நெரிப்பவர். சுதந்திரமான புதிய கருத்துக்களுக்கு இடம் கொடுக்க முடியாமல், தன்னையே விருப்பத்துடன் விலங்கிட்டுக் கொண்டு மூச்சுத் திணருபவர்.

இயல்பாகக் கிடைக்கக்கூடிய ஆனந்தத்தை அனுபவிப்பதுகூடக் கச்சிதமானவர்களுக்குப் பெரும் பிரயத்தனமாக இருக்கும். ஏன்?

சதுரமான பனிக்கட்டியை வட்டமான பாத்திரத்தில் அடைக்கப் பார்த்தால், அது நொறுக்கும். வடிவிழக்கும். அதுவே உருகி தண்ணீரானதும் ஊற்றிப் பாருங்கள். எந்தப் பாத்திரத்திலும் அதன் வடிவுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். அதற்காகத் தண்ணீரின் அடிப்படையான குணம் மாறிவிடப் போவதில்லை.

எதற்காகக் கச்சிதமாக இருக்க வேண்டும்? எந்தச் சூழ்நிலையிலும் உங்களை எதிர்ப்பின்றிப் பொருந்திக் கொண்டு, அடிப்படை இயல்பை விட்டுக் கொடுக்காமல் செயலாற்றுவது அல்லவா பெரும் சக்தி?