பங்குச்சந்தையில் உள்ள அந்த சில கோடுகள் ஏற்றமும் இறக்கும் காண்பிக்க, நம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பும் ஏறி இறங்கும். ஏன் பங்குச் சந்தை நிலவரத்தால் பதற்றம் ஏற்படுகிறது? இதன் காரணிகள், தீர்வுகள் இக்கட்டுரையில்...

சத்குரு:

பங்குச்சந்தை... பலரின் வாழ்வை உருவாக்கியதும் அதுதான், நிர்மூலமாக்கியதும் அதுதான். அதிலும் சமீபகாலத்தில் பங்குச்சந்தை நிலவரம் பற்பல சோதனைகளை சந்தித்து வருகிறது. பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழும்தான், ஆனால் அதற்காக மனஅழுத்தத்திலா உழல்வது? இந்தப் பங்குச்சந்தை சரிவுகளால் ஏற்படும் 'டிப்ரஷன்' இல் (மனஅழுத்தம் / மனச்சோர்வு) இருந்து மீள்வது எப்படியென்று என்னிடம் பலரும் கேட்பதுண்டு.

உங்கள் கட்டுப்பாட்டுக்குள் 100% இல்லாத ஒன்றை சார்ந்து உங்கள் நல்வாழ்வு இருக்கும்படியாக நீங்கள் செய்திருக்கிறீர்கள். அது பங்குச்சந்தையோ, உறவுகளோ, இல்லை வெளியிலுள்ள ஏதோ ஒன்றாகவோ இருக்கும்வரை, உங்கள் நல்வாழ்வு முழுமையாய் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.

மனச்சோர்வு என்பது உங்கள் மனநிலை சார்ந்த விஷயமே தவிர, மனம் சார்ந்த விஷயமல்ல. மனதின் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டால் அது அற்புதமாக இருக்கும். ஆனால், இங்கே சோர்வு மனநிலையில் மட்டுமே உருவாகியிருக்கிறது, மனதின் செயல்பாடுகளோ கட்டுப்பாட்டைத் தாண்டிப் போகிறது. உங்கள் மனநிலையில் சோர்வு பலவழிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மிகவும் விலை மதிப்பற்றது என எண்ணக்கூடிய ஒன்றை உங்களிடமிருந்து வேறொருவர் எடுத்துக்கொண்டால் உங்கள் மனநிலையில் சோர்வு ஏற்படும். அது பெரும் செல்வமாக இருக்கலாம் அல்லது வெறும் ஒரு கூழாங்கல்லாக இருக்கலாம், ஏன் 'என்னுடையவர்' என்று நீங்கள் எண்ணும் ஒருவராகக் கூட இருக்கலாம்!

இந்த மனசோர்விற்குக் காரணம், உங்கள் கட்டுப்பாட்டுக்குள் 100% இல்லாத ஒன்றுடன் உங்கள் நல்வாழ்வை நீங்கள் தொடர்புப்படுத்தி இருக்கிறீர்கள். இப்போது பாருங்கள் பங்குச் சந்தையில் இறங்குமுகம் ஏற்பட்டால் அது நம் தேசம் முழுவதிலுமே மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இதில் பலர் அப்பணத்தை தொட்டிருக்கக் கூடமாட்டார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கை எவ்வகையிலும் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், சந்தை நிலவர வரைகோடு மேலே போனால் அவர்களது உற்சாகமும் ஏறுமுகமாக இருக்கிறது. அது கீழே இறங்கினால் இவர்களின் மனநிலையும் சோர்வடைகிறது. அவர்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை... அதுதான். அவ்வளவுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கழுதையை விற்ற கதை!

இதுபோன்ற நிகழ்வுகள் காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிதிச்சந்தையின் நுண்ணிய அம்சங்கள் புரியாதவர்களுக்கு புரியும் வகையில் சொல்லவேண்டுமானால்... (அப்படிப்பார்த்தால், இங்கு யாருக்குமே நிதிச்சந்தை பற்றித் தெளிவாகத் தெரியாது... வானிலையை கணிப்பது போல்தான் இதையும் அவர்கள் கணிக்கிறார்கள்!). இது எப்படி என்றால்: கழுதை ஒன்றை ஒருவர் 100 ரூபாய்க்கு வாங்கினார். அக்கழுதையை, வாங்கியவரின் வீட்டிலே கொணர்ந்து விடுவதாக விற்றவர் ஒப்புக்கொண்டார். ஆனால் வரும் வழியில் அக்கழுதை இறந்துவிட்டது. விற்றவர் தர்மசங்கடத்துடன் விஷயத்தைச் சொன்னார்.

வாங்கியவர், 'சரி பரவாயில்லை. என் பணத்தைத் திருப்பிக் கொடு' என்றார். ஆனால் அவரோ அப்பணத்தை செலவழித்து விட்டார். அதனால் இவர், "அப்படியானால் இறந்த அக்கழுதையை என்னிடம் கொடுங்கள்," என்றார். "செத்த கழுதையை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்," என்றபோது "லாட்டரி குலுக்கல் முறையில் விற்பேன்," என்றார். கழுதையை விற்றவருக்கோ ஒன்றும் புரியவில்லை. இறந்த கழுதையை வாங்குவதற்குப்போய் குலுக்கல் லாட்டரி சீட்டை யார் வாங்குவார் என்று! ஆனாலும் கழுதையின் சடலத்தை இவர் வீட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

சில நாட்கள் கழித்துப் பார்த்தால், இறந்த கழுதையை வாங்கியவர் ஏராளமான பணத்தை கையில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக செலவு செய்து கொண்டிருந்தார். விபரம் கேட்டபோது சொன்னார். "குலுக்கலில் கழுதை வாங்க, ஒருவருக்கு இரண்டு ரூபாய் என அறிவித்தேன். 500 பேர்கள் வாங்கினார்கள். எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது" என்று. விற்றவர் அதிசயமாய்க் கேட்டார், "என்ன! யாரும் சண்டைக்கு வரவில்லையா?". "குலுக்கலில் ஜெயித்தவர் மட்டும் சண்டைக்கு வந்தார். அவரின் இரண்டு ரூபாயை அவருக்குத் திருப்பிக் கொடுத்ததும் அவர் சமாதானமாகிவிட்டார். அதனால் உங்களுக்குக் கொடுத்த 100 ரூபாய் போக எனக்கு 898 ரூபாய் லாபம்" என்றார்.

இப்படித்தான் காலம்காலமாக பலரும் இறந்த கழுதையை பிறருக்கு விற்றுவருகிறார்கள்... என்னவொன்று, இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துவிருகிறது!

60 மில்லியன் டாலர் இழப்பு!

உங்கள் வாழ்வின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், உங்கள் உள்நலனுக்காக சிறிது நேரத்தை முதலீடு செய்ய நீங்கள் தயாராய் இருக்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஸ்விட்சர்லாந்திலுள்ள தாவோஸில் இருந்தபோது, ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அப்போதுதான் பங்குச் சந்தை 8 - 12% இறங்குமுகம் கண்டிருந்தது. அவர் முகம் தொங்கிப் போயிருந்தது. என்னை சந்தித்து உரையாடும் போதும் அவர் தன் பிளாக் பெர்ரி ஃபோனை நோண்டிக் கொண்டே இருந்தார்.

விபரம் கேட்டபோது, "60 மில்லியன் டாலர்களை பங்குச் சந்தையில் தொலைத்து விட்டேன்," என்று சொன்னார். நான் சொன்னேன், "அது உங்கள் பணத்தில் 2% கூட இல்லை. இதனால் உங்கள் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உங்கள் சாப்பாட்டிற்கு எவ்வித கஷ்டமும் இல்லை. ஏன் உங்கள் காரையோ வீட்டையோ விற்கவேண்டிய நிலை கூட ஏற்படவில்லை. எல்லாம் முன்போலவேதான் இருக்கிறது... சில எண்கள்தான் மாறியிருக்கிறதே தவிர, உங்கள் வாழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. பிறகெதற்கு இத்தனை சங்கடம்" என்று.

அந்த மனிதர் சுற்றுச்சூழல் பிரியரும் கூட. அதனால் நான் சொன்னேன், "இன்றைய பொருளாதார அமைப்பின் அடிப்படையைப் பார்த்தால், பொருளாதாரம் கீழே போனால்தான் சுற்றுச்சூழல் மேம்பட வாய்ப்பிருக்கிறது போலும்! இப்படி பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று முட்டிமோதும் வகையில் நாம் எல்லாவற்றையும் வடிவமைத்துக் கொண்டுவிட்டோம். நீங்கள் எப்படியும் சுற்றுச்சூழல் பிரியராக இருக்கிறீர்கள்... இதோ உங்களுக்கான நற்செய்தி! கொண்டாட்டத்தை ஆரம்பியுங்கள்! 60 மில்லியன் டாலர் குறைவென்றால், குறைவான புகை, குறைவான புவிசூடாக்கும் வாயுக்கள், எல்லாமே குறைவு!".

உள்நிலையை சீர் செய்ய..!

உங்கள் இழப்பை நான் தத்துவமயமாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் இதில் கவனிக்கப் படவேண்டிய ஒன்று... உங்கள் கட்டுப்பாட்டுக்குள் 100% இல்லாத ஒன்றை சார்ந்து உங்கள் நல்வாழ்வு இருக்கும்படியாக நீங்கள் செய்திருக்கிறீர்கள். அது பங்குச்சந்தையோ, உறவுகளோ, இல்லை வெளியிலுள்ள ஏதோ ஒன்றாகவோ இருக்கும்வரை, உங்கள் நல்வாழ்வு முழுமையாய் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் கையில் எவ்வளவு அதிகாரம் இருந்தாலும், வெளிசூழ்நிலை 100% உங்கள் கையில் இல்லை. இந்நிலையில் உங்கள் மகிழ்ச்சி, அன்பு, அமைதி எல்லாமே தற்செயலான நிகழ்வாகத்தான் இருக்கும்.

அதனால் முதலில் உள்நிலையை சீராக வைக்கவேண்டும். உள்நிலை சீராக இருந்து, அதன்பின் வெளிச்சூழல்களை கையாண்டால் இவ்வுலகமே அழகாகத் தோன்றும். உள்தன்மையில் குழப்பங்கள் இல்லாதபோது புறவாழ்வை சிறப்பாகக் கையாள முடியும்.

ஆன்மீக செயல்முறை என்பது இதுதான். நீங்கள் யாரெனும் உள்நிலை நிதர்சனத்தை உணர்வது; வெறும் வெளிசூழ்நிலைகளை மட்டும் திறமையாய்க் கையாள்வதல்ல. உங்கள் உள்நிலையை சுமுகமாய் வைக்காவிட்டால்... உங்கள் உள்நிலையை திறம்படக் கையாளாவிட்டால்... உங்களிடம் எல்லாம் இருந்தும், ஒன்றும் இருக்காது.

உங்கள் வாழ்வின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், உங்கள் உள்நலனுக்காக சிறிது நேரத்தை முதலீடு செய்ய நீங்கள் தயாராய் இருக்கவேண்டும். இப்படியை நீங்கள் எடுத்தால், உங்கள் செயல்திறனில் அபரிமிதமான மாற்றத்தை உணர்வீர்கள். இப்போது பங்குச்சந்தை எப்படியும் பலவீனமாக இருக்கிறது... இந்நேரத்தில் உங்கள் உள்தன்மையில் கவனம் செலுத்துங்கள்!

பணம் இருந்தபோது அது உங்கள் நேரம், வாழ்க்கை எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டது. இப்போது அக்குழாய் மூடியிருக்கிறது... உங்களிடம் நேரம் இருக்கும், நிறையவே இருக்கும்... இதுதான் சரியான நேரம்!