மரணத்திற்குப் பிறகு இறந்த உடலுக்கு செய்ய வேண்டியவை என்னென்ன? தெரிந்துகொள்வோம் இங்கே...

சத்குரு:

ஒரு வெட்டுக்கிளி செத்துப் போகிறதென்றால், அதன் அடிப்படை பரிணாம நிலை என்பது அழியாமல்தான் இருக்கும்.

மரணம் நிகழ்ந்த பிறகு கூட, அந்த பிராணசக்தி ஸ்தூல உடலைவிட்டு முழுவதும் அகன்றுபோய் விடுவதில்லை.

அது பெரும்பாலும் பூமியிலேயே தங்கிவிடுகிறது. இரவு நேரங்களில் புல் வெளிகளில் நடக்காதீர்கள் என்று இந்தியாவில் சொல்வார்கள். ஒரு காரணம் சில பூச்சிகளை, பாம்புகளை நீங்கள் மிதித்து அது உங்களை கடித்துவிடக்கூடாது என்பதற்காக.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்னொரு காரணம் என்னவென்றால் அப்போதுதான் செத்துப்போன பூச்சிகள், உயிரினங்கள் எல்லாம் வேறு பரிணாமத்திற்கு இடம்பெயரும் நிலையில் அங்கே பூமியை பற்றிக்கொண்டே இருக்கும்.

பெரும்பாலும் விலங்குகளும், பூச்சிகளும் இரவில்தான் சாகின்றன. குறிப்பாக அடிப்படை நிலையில் இருக்கிற சிறிய உயிரினங்கள் சிலவற்றைப் பறவைகளோ, விலங்குகளோ சாப்பிட்டுச் சாகலாம். அது வேறு விஷயம். ஆனால் தானாக இறந்தால் அது பெரும்பாலும் இரவில்தான் சாகின்றன.

அவை மிகக்குறுகிய காலம்தான் இருக்கும். முழுக்க முழுக்க உந்துசக்தியின் அடிப்படையில் அவை போவதால் அடுத்த நிலைக்கு மிக வேகமாகப் போகும்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பின்புலம் கொண்ட இந்து வாழ்க்கை முறை ஒருவிதத்தில் பார்த்தால் மிகவும் தந்திரமானது. எல்லாவற்றிலிருந்தும் எதையாவது பெற வேண்டும் என்று நம் முன்னோர்கள் கருதியிருக்கிறார்கள்.

மரணம் நிகழ்கிறது என்றாலும் கூட அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்த்திருக்கிறார்கள். எனவே இறந்து கொண்டிருப்போர்களுக்கும், இறந்தவர்களுக்கும் பல சடங்குகளை அவர்கள் எற்படுத்தியிருக்கிறார்கள்.

வடக்குப்புறம் வைக்கப்படும் தலை

மரணம் நெருங்குகிற வினாடியில் அது குறித்து தெரிந்தவர்கள் பொதுவாகவே இறந்து கொண்டிருக்கிற மனிதரை வீட்டிற்கு வெளியே கொண்டு போய் வடக்கு தெற்காக உடம்பை கிடத்துகிறார்கள். தலை வடக்குப்புறமாக வைக்கப்படுகிறது. ஒருவித சுலபத்தோடு மரணம் நிகழ வேண்டுமேயானால் மரணம் உறுதியென்றாகிவிட்ட பிறகு அந்த உடலை வெளியே கொண்டு போகிறார்கள்.

ஏனென்றால் ஒரு கட்டிடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. எனவே ஒரு கட்டிடத்திற்கு வெளியில் வடக்கு தெற்காக அந்த மரணமடையப் போகிறவனுடைய உடல் கிடத்தப்படுகிறபோது, எளிதாக அந்த உயிர் உடம்பிலிருந்து பிரிகிறது.

மரணம் நிகழ்ந்த பிறகு கூட, அந்த பிராணசக்தி ஸ்தூல உடலைவிட்டு முழுவதும் அகன்றுபோய் விடுவதில்லை. எனவே அந்த உயிர் உடலை சுற்றிக்கொண்டே இருக்கிறது. அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பீர்களேயானால் காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடம்பை விட்டு விலகிப் போய்விடுகிறது. அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே அந்த உடலைச் சுற்றிக் கொண்டிருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிகிறது. உடலை வடக்கு, தெற்காக வைத்துவிட்டால் மறுபடியும் உடலுக்குள் நுழைய முடியாது என்று உயிர் தெரிந்து கொள்கிறது.

கட்டப்படும் கால் கட்டை விரல்கள்

இந்தியாவில் அடுத்து நடைபெறுகிற ஒன்று. ஒரு மனிதன் இறந்தவுடன் அவர்களுடைய இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுகின்றன. ஏன் தெரியுமா? அப்படிக் கட்டப்படாவிட்டால் மீதமிருக்கிற பிராணசக்தி மூலாதாரம் வழியே வெளியேற முயலும். உடலினுடைய பின்புறத் துவாரம் திறந்திருக்குமேயானால் அதன் வழியாக அந்த உயிர் மீண்டும் நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் நல்லதில்லை. அந்த சூழலுக்கும் நல்லதில்லை. மிகவும் எதிர்மறையான சூழலை ஏற்படுத்தும். எனவே கால்கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. நீங்கள் உங்கள் கால்கட்டை விரல்களை மூடினால் உங்கள் பின்புறத் துவாரம் இறுக்கமாக மூடிப்பட்டிருக்கிறது.

பிணம் ஏன் எரிக்கப்படுகிறது?

நான்கு மணி நேரத்திற்குள் உடலை எரிக்க வேண்டும். ஏனென்றால் அந்த உடலை நீங்கள் சிதைக்கிற வரையில் எரிக்கிற வரையில் அந்த உயிர் அதைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும், மேல்நோக்கிப் போகாது. அந்த உயிருக்கு என்ன நிகழ வேண்டுமோ அது நிகழாது. ஏனென்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அந்த உயிருக்கு இன்னும் தெரியவில்லை. எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த உடலை எரித்துவிட வேண்டும். பழைய காலங்களில் மரணம் நிகழ்ந்து ஒன்றரை மணி நேரத்தில் எரித்துவிட வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. இன்று அந்த உடலை வீட்டிலேயே இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கிறீர்கள். அது இறந்தவருக்கும் நல்லதில்லை, உயிரோடு இருப்பவர்களுக்கும் நல்லதில்லை.