சத்குரு:

என் வாழ்க்கை முழுக்க என்னை வியப்பில் ஆழ்த்திய கேள்விகள் என்னுள் நிரம்பியிருந்தன.

பல வருடங்களுக்கு முன், நான் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, ஒரு ஆசிரியரிடம், அவர் வகுப்பில் பார்த்து வாசிக்கும் பாடக்குறிப்புகளை நகல் எடுப்பதற்காக கேட்டேன். நாங்கள் எழுதிக்கொள்ள அவர் வாசிக்கும் சிரமமும் இருக்காது, நாங்களும் வகுப்பிற்கு போகவேண்டிய அவசியமிருக்காது. நான் இப்படி கேட்டவுடன் அவர் என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார், நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன்!

நான் செய்தது உகந்த செயலல்ல, நான் நிச்சயம் அப்படிச்செய்வதை பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் வகுப்பில் பாடம் வாசிப்பதும் எழுதுவதுமாக மட்டுமே இருந்ததால், எனக்கு 'ஸ்டெனோ' ஆகும் திட்டம் எதுவும் இல்லையே!

வகுப்பிலிருந்து வெளியேற்றப்படுவது எனக்கு புதிய அனுபவமில்லை. எனக்கு பள்ளிக்கூடத்திலும் நேரம் போகவில்லை, ஏனென்றால் அவர்கள் பேசிய எதுவும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு மதிப்பானதாக இருக்கவில்லை. ஒரு குழந்தையாக, தினமும் என் நாட்களின் பெரும்பகுதி, பள்ளிக்கு வெளியே ஒரு பள்ளத்தில் வசித்த வகைவகையான நீர்வாழ் உயிரிகளை கூர்ந்து கவனிப்பதில் கழிந்தன. சிலகாலம் கழித்து எனது பெற்றோர் கண்டுபிடித்தபோது, நான் செய்த உயிரியல் ஆய்வுகளை, 'மழைநீர் தேங்கிய குட்டையில் செய்த அட்டகாசம்' என தடைசெய்து, திட்டவட்டமாக பள்ளிக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

sgquote-on-teachersday-tamilblog-subimg

கேள்விகளுக்கு குறைவில்லை

எனக்கு வகுப்பறை சுவாரசியமில்லாததாக இருந்தது, ஆனால் மற்ற எல்லாவற்றிலும் பேரார்வத்துடன் ஈடுபட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதை நான் பரிந்துரைக்கிறேனா? நிச்சயமாக இல்லை. ஆனால் இளைஞர்களிடம் இருக்கும் பலப்பல கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில்கள் கிடைப்பதில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். கற்பனைத்திறன் குன்றிய மூத்தவர்களின் உலகம், இளைஞரிடம் மதிப்பெண், வேலை மற்றும் பணம் பற்றியே மும்முரமாக கற்றுக்கொடுக்கிறது, ஆனால் தனக்குள் சௌகரியமாக இருப்பதை கற்றுக்கொடுப்பதில்லை. நான் என் மனதில் கோடிக்கணக்கான கேள்விகளை சுமந்திருந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.

என் தந்தை பலசமயங்களில் விரக்தியில் கையை விரித்து, "இந்தப் பையன் வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறானோ!" என்பார். ஆனால் வாழ்க்கையில் செய்வதற்கான செயல்களில் எப்போதும் எனக்கு குறை இருந்ததில்லை. எனக்கு வகுப்பறை சுவாரசியமில்லாததாக இருந்தது, ஆனால் மற்ற எல்லாவற்றிலும் பேரார்வத்துடன் ஈடுபட்டேன். உலகம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், பருவகாலங்கள், நிலப்பரப்புகள், நிலத்தை உழுதால் பூமி மாறும் விதமும் விதைகள் முளைவிடுவதும், மக்கள் வாழும் விதம் ஆகியவை எப்போதுமே என் கவனத்தை ஈர்த்தன. என் வாழ்க்கை முழுக்க என்னை வியப்பில் ஆழ்த்திய கேள்விகள் என்னுள் நிரம்பியிருந்தன.

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார்! இது அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரம், நாம் செய்வதை நிறுத்தி "என்ன தவறு செய்கிறோம்?" என்று நம்மை நாமே கேட்கும் அவசரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிது.

இளைஞர்களிடம் கேள்விகளுக்கு என்றும் குறைவில்லை. இந்திய மக்கள்தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் 25 வயதுக்குக் குறைவானவர்கள். அப்படியானால் கேள்விகள் பல இருக்கின்றன என்று அர்த்தம். இந்த 65 கோடி இளைஞர்களின் இலட்சியங்களும் திறமைகளும் நம் தேசத்தின் எதிர்காலத்தையும் நம் பூமியின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கவல்லது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள், தாங்கள் உருவாக்காத ஒரு சமுதாயம் தங்கள்மீது திணிக்கும் எதிர்பார்ப்புகளுடனும் அதனால் ஏற்படும் அழுத்தத்துடனும் போராடுகின்றனர். வெட்கித்தலை குனியும் விதமாக, நம் தேசத்தில் 15 முதல் 29 வயதுக்குள் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கைகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார்! இது அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரம், நாம் செய்வதை நிறுத்தி "என்ன தவறு செய்கிறோம்?" என்று நம்மை நாமே கேட்கும் அவசரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிது.

sgtweetonsuicide

வரும் மாதங்களில், இளைஞர்களுடன் நான் நேரம் செலவிட விரும்புகிறேன். அவர்களுக்கு அறிவுரை வழங்குவதோ நெறிமுறைகள் கற்றுத்தருவதோ நோக்கமல்ல. நான் இளமையாக இருந்தபோது அத்தகைய பிரச்சாரங்கள் எனக்கு உதவவில்லை. நான் வழங்கக்கூடியதெல்லாம் தெளிவு மட்டுமே - எனக்குள் அந்த தெளிவு 25 வயதில் உதித்தது, ஏனென்றால் எனக்குள் பல கேள்விகள் இருந்தன, நான் அஞ்சாமல் அந்தக் கேள்விகளுடன் வாழ்ந்தேன். முடிவுகளுக்கு வராமல் கேள்விகளுடன் வாழ்வதுதான் வாழ்க்கையெனும் அபாரமான சாகசம்.

"எனக்குத் தெரியாது" என்பது வழங்கும் சாத்தியம்

அறிந்துகொள்வதற்கு, "எனக்குத் தெரியாது" என்பதுதான் ஒரே வாயிற்கதவு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

"எனக்குத் தெரியாது" என்ற நிலை வழங்கும் சாத்தியத்தை உலகம் உணராதிருப்பது பரிதாபத்திற்குரியது. அறிவின் மாறுவேடத்தில் நடமாடும் போலிகளான நம்பிக்கை, யூகம், மற்றும் முடிவுகளால், எதைக்கண்டாலும் வியந்து கேள்விகேட்கும் திறமை வாழ்வின் முற்பகுதியிலேயே அழிக்கப்படுகிறது. அறிந்துகொள்வதற்கு, "எனக்குத் தெரியாது" என்பதுதான் ஒரே வாயிற்கதவு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

கேள்விகள் கேட்கும் துணிவோடு நில்லாமல், அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் தங்கள் வாழ்க்கையை முதலீடு செய்ய விருப்பத்துடன் இருக்கும் இளைஞர்கள் நமக்குத் தேவை.

இளைஞர்கள்முன் இன்று திறந்திருக்கும் வாயிற்கதவு இதுதான். மழுங்கிப்போன மூத்தவர்கள் பலர் இன்று மறந்துவிட்ட வாயிற்கதவு இது, இது ஆழமான, சாகசமான வாழ்க்கை அனுபவத்திற்கு வழிகோலும். கேள்விகள் கேட்கும் துணிவோடு நில்லாமல், அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் தங்கள் வாழ்க்கையை முதலீடு செய்ய விருப்பத்துடன் இருக்கும் இளைஞர்கள் நமக்குத் தேவை. நம் தனிப்பட்ட நல்வாழ்வும் உலகளாவிய நல்வாழ்வும் இதைச் சார்ந்ததாகவே இருக்கிறது.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120

டைம்ஸ் நாளிதழின் Speaking Tree பகுதியில் வெளியிடப்பட்ட பதிப்பிலிருந்து...