Question: இமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறது?

சத்குரு:

அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோ? (சிரிக்கிறார்). ஒரு விஷயம் கவனித்தீர்களா? அவர்கள் உடல் முழுதும் விபூதி (திருநீறு) பூசி இருந்தார்கள். அது அவர்களுக்கு உதவுகிறது. மேலும் சில வகையான ஆன்மீக பயிற்சிகளும் உதவுகின்றன. அவர்கள், தங்களுக்கு உடல் முக்கியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் உங்கள் உடலை, முக்கியமானதாக ஆக்கவில்லை என்றால், அதை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இழுக்க முடியும். உடல் ரொம்பவும் முக்கியம் என்று ஆகிவிட்டால், ஒவ்வொரு படியும் போராட்டம் தான். அந்த நிலையில், உடல் வசதி மட்டும் தான் உங்கள் வாழ்வில் முக்கிய விஷயம் என்றாகி விடும்.

சாதுக்களும் சந்நியாசிகளும் தங்கள் ஸ்தூலத்தை, தங்கள் உடலை, மிகக் குறைந்த பட்ச முக்கியத்துவம் உடையதாக ஆக்குவதற்கு, விழிப்புணர்வுடன் பல பயிற்சிகளை செய்திருக்கிறார்கள்.

எனவே, சாதுக்களும் சந்நியாசிகளும் தங்கள் ஸ்தூலத்தை, தங்கள் உடலை, மிகக் குறைந்த பட்ச முக்கியத்துவம் உடையதாக ஆக்குவதற்கு, விழிப்புணர்வுடன் பல பயிற்சிகளை செய்திருக்கிறார்கள். உடலுக்கு அவர் எந்த மதிப்பும் தருவதில்லை. உடலை ஒரு கருவியாக அவர் நினைக்கவில்லை, தான் அகப்பட்டுள்ள ஒரு பொறியாகத்தான் உடலை பார்க்கிறார். எப்படியாவது அதிலிருந்து விடுபடவே முனைகிறார். எனவே நீங்கள் உங்கள் உடலை எப்படிக் கையாள்கிறீர்கள், என்பது தான் அடிப்படை விஷயம். உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் என்ன மாதிரி உறவு இருக்கிறது? அப்படி ஒரு உறவு உண்மையிலேயே இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்க வேண்டும். உறவே இல்லை என்றால், அது இரு விதமாக இருக்க முடியும். ஒன்று நீங்கள் அதனின்றும் முற்றிலும் தனியாக இருக்கிறீர்கள்; இன்னொன்று நீங்கள் அதாகவே ஆகிவிட்டீர்கள்.

நீங்கள் உடலாகவே ஆகிவிட்டால், பிறகு அந்த உடலுக்கு சிறிய இடையூறோ துன்பமா வந்தால் கூட அது உங்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். உங்கள் உடலிலிருந்து விலகி நிற்பது போன்ற உறவில் இருந்தால், சில விஷயங்கள் மட்டும் ஒரு பொருட்டாக தோன்றலாம். ஆனால் மற்றவர்களுக்கு பெரிதாக இருக்கும் பற்பல விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. நீங்கள் கூட ஓரளவு அப்படித்தான் மாறிக்கொண்டு வருகிறீர்கள். ஒரு வருடத்துக்கு முன் உங்களால், மூட்டுவலியைப் பொறுத்துக் கொண்டு, சம்மணம் போட்டு 2 மணி நேரம் தொடர்ந்து உட்கார முடியாது, இல்லையா? இப்போது பாருங்கள், மெதுவாக, உங்கள் உடலை ஒரு இடைவெளியுடன் கையாளத் தெரிந்து கொண்டீர்கள். உடல் வலியால் புலம்புகிறது; முழங்கால்களோ, “போதும் போதும் சத்சங்கம்... போய் விடலாம் இங்கிருந்து” என்று கதறுகின்றன. (சிரிக்கிறார்). ஆனால் நீங்கள்... பரவாயில்லை, இருக்கட்டும் என்று தொடர்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். இப்படி மெதுவாக உங்கள் உடலின் முக்கியத்துவம் உங்களுக்கு குறைந்து கொண்டே போகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்படி உங்கள் உடல் முக்கியத்துவத்தை இழந்துகொண்டே போகும் போது, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் உங்களை எதுவுமே செய்யாது. இந்த ஏற்ற இறக்கங்கள், எப்போதுமே, உங்கள் உடலைத் தான் பாதிக்கின்றன. நான் உடல் என்று சொல்லும் போது, அதில் உங்கள் மனதையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஸ்தூல உடலும், மனதும் தான் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளால் பாதிப்படைகின்றன, இல்லையா?

நீங்கள் உடல் தன்மையிலிருந்து விலகிப் போகப் போக, உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீங்கள் முன்னேற்றப் பாதையில் தான் இருப்பீர்கள். உங்களுக்கு எப்படி போக வேண்டுமோ அப்படி ஒரே பாதையில்தான் போவீர்கள். இந்தப் பாதை அல்லது அந்தப் பாதை, என்று ஏதோ ஒரு பாதையில் போக வாய்ப்பே இல்லை. உங்கள் உடலுக்கு முக்கியத்துவம் குறையக் குறைய நீங்கள் உங்கள் வாழ்விற்கு முழு பொறுப்பு ஏற்கிறீர்கள். ஆனால் உடல் உங்களை ஆளும் போது, எதுவும் உங்கள் கட்டிப்பாட்டில் இருக்க முடியாது.

ஸ்தூலத் தன்மை என்பது, பல சக்திகளால் ஆளப்படுகிறது. யாராலும் அதை முழுமையாக புரிந்து கொள்ளவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. நீங்கள் எவ்வளவு தான் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், உங்களால் ஸ்தூலத் தன்மையின் மேல் 100% கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. நாம் இப்போது இங்கே அமர்ந்து இருக்கிறோம். இப்படி அமர்ந்திருக்கும் பொழுது, நம் மீது எத்தனை விதமான சக்திகள் தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன, தெரியுமா?

நீங்கள் உடல் தன்மையிலிருந்து விலகிப் போகப் போக, உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

நம் பூமி உருண்டையாக இருக்கிறது. அப்படியானால் அதன் மேல் வாழும், நாமெல்லாம் விழுந்திருக்கவேண்டும். ஆனால் நாம் விழவில்லை. அது உருண்டையாக மட்டும் இல்லாமல் வேகமாக சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அந்த வேகத்தால் இந்நேரம் நாம் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. நம் சூரிய மண்டலமே மிகுந்த வேகத்துடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கு ஏதும் ஆகவில்லை. ஏனென்றால் இப்படி இருப்பதற்கு, பொருள் தன்மையின்போது, பற்பல சக்திகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஒரு சிறிய அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் இருக்கும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் இவற்றை விலகாமல் சேர்த்து வைக்க எத்தனை கோடி சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன தெரியுமா? அதை கணக்கிட்டு கூறவே முடியாது, அவை அனைத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியாது.

எனவே உங்கள் உடலிலிருந்து நீங்கள் விலகி இருப்பது தான் உங்கள் வாழ்வை உங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள ஒரே வழி. அப்படி விலகி இருந்தால் வாழ்க்கை 100% உங்கள் பொறுப்பில் இருக்கும்.

Question: சத்குரு, அப்படியென்றால், உடலிலிருந்து விலகி இருப்பது எப்படி?

சத்குரு:

ஏன், அதற்கு ஒரு சிறிய கத்தி போதாதா!! (சிரிப்பலை) அந்தத் தன்மையை அடையத்தான் நீங்கள் யோகப் பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பகுதி-நேர யோகியாக (part-time yogi) இருக்கிறீர்கள். (சிரிக்கிறார்). பகுதி நேர பணி என்றால் சில மணி நேரங்களாவது செய்யவேண்டும், அல்லவா? பகுதி நேர யோகிகள் என்றால் சில மணி நேரமாவது யோகா செய்யவேண்டும். ஆனால் நீங்கள் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் செய்கிறீர்கள்? (சிரிக்கிறார்). ஓ! அப்படியானால் உங்களை பகுதி நேர யோகிகள் என்று கூட சொல்ல முடியாதே! மிகுந்த கவனத்துடன், சில மணி நேரங்கள், யோகப் பயிற்சிகளில் நீங்கள் ஈடுபட்டால், உடலிலிருந்து விலகி இருக்கும் தன்மை மிக வேகமாக நிகழும்.

ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் யோகா செய்தால்..? அப்போதும் நடக்கும், ஆனால் அப்போது அதிக காலம் ஆகும். பயிற்சி நேரத்தை அதிகப்படுத்தினால், அது விரைவில் வேலை செய்யும். எனவே உங்களில் யாரெல்லாம் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் வாழப்போகிறோம் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் எல்லாம் மெதுவாக வரலாம். என் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் தான் என்று நினைப்பவர்கள், ஏற்கனவே முடி நரைக்க ஆரம்பித்திருப்பவர்கள் எல்லாம், உங்களை வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் தான். எனவே அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்!