கடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள் வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால் “பக்தியின் தன்மை என்ன?”,“யாரெல்லாம் பக்தி யோகா பயிற்சி செய்ய முடியும்?” என்ற கேள்விகள் எழும். இங்கே பக்தி குறித்து சத்குரு சொல்லியிருப்பதைப் படித்துத் தெரிந்துகொள்வோம்.

சத்குரு:

இப்போது உங்கள் அனுபவத்தில் இருக்கும் விஷயங்கள் என்றால், உங்கள் உடல், மனம், மற்றும் உணர்ச்சிகள் மட்டும்தான். அவற்றை உங்களுக்கு ஓரளவிற்குத் தெரியும். இம்மூன்றும் அவை இப்போது இயங்கும் விதத்தில் இயங்குவதற்கு, அவற்றை இயக்கும் சக்தி ஒன்று இருக்கும் என்று உங்களுக்கு அனுமானத்தால் தெரியும். சக்தியில்லாமல் இவை எதுவும் இயங்கமுடியாது. உதாரணத்திற்கு ஒரு மைக் சத்தத்தை மிகைப்படுத்த உதவுகிறது. மைக் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டாலும், அதற்கு சக்தி தரும் ஏதோவொன்று இருக்கும் என்று நீங்கள் அனுமானத்தால் சொல்லமுடியும்.

பக்தி என்பது உங்கள் உணர்ச்சியை எதிர்மறையான ஒன்றிலிருந்து இனிப்பான ஒன்றாக மாற்ற வழிவகுக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உணர்ந்துள்ளது இந்நான்கு மட்டுமே: உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி. உங்களைப் பற்றி நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும், அது இந்த நான்கு நிலைகளிலும் இருக்கவேண்டும். உச்சநிலையை அடைந்திட உங்கள் உணர்ச்சிகளை பயன்படுத்தினால், இதை பக்தியோகா எங்கிறோம், இது பக்தியின் பாதை. உச்சநிலையை அடைந்திட உங்கள் புத்தியைப் பயன்படுத்தினால், இதை ஞானயோகா என்கிறோம், இது ஞானத்தின் பாதை. உச்சநிலையை அடைந்திட உங்கள் உடலை, அல்லது உடல்செயலைப் பயன்படுத்தினால், இதை கர்மயோகா எங்கிறோம், இது செயலின் பாதை. உச்சநிலையை அடைந்திட உங்கள் சக்திகளை பரிணமிக்கச் செய்தால், இதை க்ரியாயோகா என்கிறோம், இது உள்நிலையில் செயலாற்றும் பாதை. ஒருவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள இந்த நான்கு வழிகள் மட்டுமே உள்ளன.

பக்தி யோகா என்றால் என்ன?

ஒருகாலத்தில் மனிதனின் மிகவும் ஆதிக்கமான அம்சம், அவனுடைய உணர்ச்சியாக இருந்தது. இன்று உணர்ச்சி உங்களின் ஆதிக்கமான அம்சமாக இல்லாவிட்டாலும், அதுதான் உங்களின் மிகத் தீவிரமான அங்கமாக இருந்துவருகிறது. பெரும்பாலான மனிதர்களால் தங்கள் உடலை உயர்ந்த நிலையிலான தீவிரத்திற்குக் கொண்டுசெல்ல முடிவதில்லை. உடலைத் தீவிரமாக வைத்துக்கொள்ள அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். மனிதர்களால் மனதை அவ்வப்போது தீவிரமாக வைத்துக்கொள்ள முடியும், ஆனால் மிகக் குறைவான மனிதர்களால் மட்டுமே தொடர்ந்து மனதைத் தீவிரமாக வைத்துக் கொள்ள முடியும். சக்தியளவில் பொதுவாக மனிதர்கள் தீவிரமாக இருப்பதேயில்லை. சில க்ஷணங்கள் மட்டுமே தீவிரத்தை உணர்ந்திருப்பார்கள், அது நிலையாக இருக்காது. ஆனால் உணர்ச்சி மிகவும் தீவிரமாக முடியும். அன்பில் இல்லாவிட்டால், கோபத்திலாவது தீவிரமாக இருக்கிறீர்கள். ஏதோவொரு உணர்ச்சியில் தீவிரமாக இருக்கும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது. அன்பிலோ ஆனந்தத்திலோ உங்களை என்னால் தீவிரமாக்க முடியவில்லை என்றால், நான் உங்களைத் திட்டினால் நீங்கள் கோபத்திலாவது தீவிரமாவீர்கள் - இரவு முழுதும் தூங்க முடியாத அளவு தீவிரமாகிவிடுவீர்கள். நான் உங்களிடம், "உட்கார்ந்திருந்து விழித்திருங்கள். நான் உங்களுக்கு யோகா கற்றுத் தருகிறேன்." என்று சொன்னால், நீங்கள் தூங்கி விழுந்துவிடுவீர்கள். ஆனால் உங்களைத் திட்டினால், இரவு முழுவதும் விழித்திருப்பீர்கள். கோபமான மனிதர்களால் தூங்க முடியாது, இல்லையா? அதனால் உணர்ச்சி என்பது மனிதர்களுக்கு எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருந்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பக்தி யோகா: உணர்ச்சியின் தீவிரத்தை உபயோகிப்பது

உணர்ச்சி பல வடிவங்களை எடுத்திட முடியும். அது மிக இனிப்பான, அற்புதமான வடிவம் எடுக்க முடியும், அல்லது மிக மோசமான, பயங்கரமான வடிவமும் எடுக்க முடியும். அது இனிப்பான, அழகான வடிவம் எடுத்திட அதற்கு பயிற்சியளிப்பது தான் தேவைப்படுகிறது. பக்தி என்பது உங்கள் உணர்ச்சியை எதிர்மறையான ஒன்றிலிருந்து இனிப்பான ஒன்றாக மாற்ற வழிவகுக்கிறது. காதலில் விழுந்தவர்கள் உலகிற்கு என்ன நிகழ்கிறது என்பது குறித்து கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் இருக்கும் விதத்தைப் பார்த்தால், அவர்கள் நிதர்சனத்தில் இல்லை என்று நினைப்பீர்கள். அவர்கள் உணர்ச்சியை மிகவும் இனிப்பாக மாற்றியுள்ளதால் அவர்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது. இதுதான் ஒரு பக்தனின் நிலையும். பக்தி என்பது காதலைவிட பன்மடங்கு பெரியது, மேம்பட்டது. ஒரு பக்தன் தோற்றுப் போகாத விதமான ஒரு காதல் உறவில் இருக்கிறான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ காதல்வயப்பட்டால், அது நீங்கள் எதிர்பார்க்கும் விதமாகப் போகாது, காலப்போக்கில் அது பிரச்சனைக்கு உள்ளாகிறது. அதனால்தான் மக்கள் கடவுளைத் தேர்ந்தெடுத்தார்கள். இது ஒரு காதல் உறவு, இதில் எவரும் உங்களுக்கு பதில் கொடுக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் வாழ்க்கை மிகவும் அழகாகிறது, உங்கள் உணர்ச்சி மிகவும் இனிப்பாகிறது. இந்த இனிமையான நிலையில் ஒருவர் வளர்கிறார். இதுதான் பக்தி.

பக்தி என்பது வேறொரு பரிமாணத்தைச் சேர்ந்த புத்திசாலித்தனம். புத்தி எப்போதுமே உண்மையை கையகப்படுத்த நினைக்கிறது. பக்தியோ உண்மையை அரவணைக்கிறது. பக்தியால் பகுத்தறிய முடியாது, ஆனால் பக்தியால் அனுபவத்தில் உணரமுடியும். புத்தியால் பகுத்தறிய முடியும், ஆனால் ஒருபோதும் அனுபவத்தில் உணரமுடியாது. இவ்விரண்டும் தாம் ஒருவருக்கு இருக்கும் இரண்டே வாய்ப்புக்கள்.

பக்தி: உங்கள் புரிதல் சார்ந்தது

Earth's_Location_in_the_Universe_SMALLER_ver

(பூமி இருக்கும் இடம், 8 படங்களின் தொகுப்பாக இடமிருந்து வலம் காட்டப்பட்டுள்ளது. முதலில் பூமி, பிறகு சூரிய மண்டலம், பிறகு சூரியன் சுற்றியுள்ள நட்சத்திர மண்டலம், பிறகு பால்வெளி மண்டலம், பிறகு சுற்றியுள்ள பால்வெளி மண்டலங்கள், பிறகு விர்கோ எனும் பால்வெளி மண்டலங்கள் கூட்டம், பிறகு சுற்றியுள்ள பால்வெளி மண்டலங்கள் கூட்டம், இறுதியில் நம்மால் காணக்கூடிய பிரபஞ்சத்தின் பகுதி காட்டப்பட்டுள்ளது.)

யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று உங்களைத் திகைக்கச் செய்யும்போது, இயல்பாகவே நீங்கள் பக்தியாக உணர்கிறீர்கள். ஆனால் பக்தியை நீங்கள் பயிற்சி செய்தால், அது பிரச்சனைகளை உருவாக்குகிறது, ஏனெனில் பக்திக்கும் ஏமாற்றத்துக்கும் இடையிலான கோடு மிகவும் மெல்லியது - இது பலவிதமாக உங்களை கற்பனையில் மிதக்க வைக்கக்கூடியது. அதனால் பக்தியை உங்களால் பயிற்சி செய்யமுடியாது, ஆனால் பக்திநிலைக்கு வருவதற்கு நீங்கள் சில விஷயங்களைச் செய்திட முடியும்.

உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் கவனத்துடன் அக்கறையுடன் கவனிக்கக் கற்றுக்கொண்டால், ஒரு அணுவைக் கூட உங்களால் முழுவதுமாக புரிந்துகொள்ள இயலாது என்பதை உணர்வீர்கள். அனைத்தும் உங்கள் புத்திக்கு அப்பாற்பட்டு இருக்கிறது, உங்களுக்கு மேலே இருக்கிறது. அதனால் நீங்கள் இயல்பாகவே பக்தியாய் இருப்பீர்கள்.

ஒரே ஒரு விஷயத்தை நீங்கள் உணர்ந்துவிட்டால், இயல்பாகவே நீங்கள் பக்தராகிவிடுவீர்கள்: "பிரபஞ்சம் மிகவும் பிரம்மாண்டமானது." அது எங்கு துவங்கி எங்கு முடிகிறது என்று உங்களுக்குத் தெரியாது. நூற்றுக்கணக்கான, கோடிக்கணக்கான பால்வெளிமண்டலங்கள் உள்ளன. இந்த அகண்ட பிரபஞ்சத்தில், சூரியமண்டலம் என்பது ஒரு சிறு தூசி போன்றது. சூரியமண்டலம் நாளை காணாமல் போனால், இந்த பிரபஞ்சத்தில் அது ஒரு பொருட்டாகக் கூட இருக்காது. சூரியமண்டலமெனும் இந்த சிறிய புள்ளியில், பூமி என்பது இன்னும் நுண்ணிய புள்ளி. இந்த பூமியெனும் நுண்புள்ளியில் நீங்கள் வாழும் நகரம் அதைவிட நுண்ணிய புள்ளி. அதில் நீங்கள் மிகப் பெரிய மனிதர்! இது, பிரபஞ்சத்தில் உங்கள் இடைத்தைப் புரிந்து கொள்ளாத மிக அடிப்படையான பிரச்சனையைக் குறிக்கிறது. இதனால் தான் உங்களிடம் பக்தி இல்லாமல் இருக்கிறது.

பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லை எனில், ஹபிள் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வலம் வருகின்றன. இப்புகைப்படங்களில் பிரபஞ்சம் எந்த அளவு முடிவில்லாமல் விரிகிறது என்று பாருங்கள். அல்லது ராத்திரியில் வெளியே சென்று மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஆகாயத்தைப் பாருங்கள். அது எங்கு துவங்குகிறது எங்கு முடிகிறது என்பது புலப்படாது. நீங்கள் மிக நுண்ணிய ஒரு புள்ளியை விடச் சிறிய தூசியாக இங்கே பூமியோடு சுழன்றுகொண்டு, எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே செல்வீர்கள் என்று விளங்காது இருக்கிறீர்கள். இதை உணரும்போது பக்தியாக இருப்பது உங்களுக்கு இயல்பாக நிகழும். நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றிற்கும் அப்போது தலைவணங்குவீர்கள். உங்களை நீங்கள் பிரபஞ்சத்தின் மீதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் வேறெப்படியும் இருக்க முடியாது. மனிதர்கள் அவர்கள் யாரென்ற புரிதலைத் தொலைத்து, இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் தங்கள் இடம் என்னவென்பதை மறந்துவிட்டதால் தான் அகங்காரமான முட்டாள்களாக மாறியிருக்கிறார்கள்.

நம் அறிவியல் முன்னேற்றங்களை வைத்து நாம் ஒரு அணுவைக் கூட முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம், என்று நமக்குத் துண்டு துண்டாகத் தான் தெரியும், அதுவும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியுமே தவிர, அது என்னவென்று தெரியாது. நீங்கள் அனைத்தையும் உற்று கவனித்தால், ஒரு இலை, மலர், அணு, பறவை, விலங்கு, எறும்பு, என்று எதையும் உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்போது அனைத்திற்கும் தலைவணங்குவீர்கள். ஒரு அணு கூட உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. இதுதான் படைப்பின் இயல்பு. படைப்பின் தன்மையை நீங்கள் கவனித்துப் பார்த்தால், பக்தராக இல்லாமல் வேறெப்படி இருக்கமுடியும்?

நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான விஷயம், பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் உங்களை விட உயர்வாகப் பாருங்கள். நட்சத்திரங்கள் நிச்சயமாக உயரத்தில்தான் உள்ளன, ஆனால் தெருவில் கிடக்கும் அந்த சிறிய கல்லைக் கூட உங்களைவிட உயர்வானதாகப் பார்க்க முயற்சி செய்யுங்கள். எப்படியும் அது உங்களைவிட நிரந்தரமானதாக, சமநிலையானதாக இருக்கிறது. அதனால் அசைவின்றி நிரந்தரமாக உட்கார்ந்திட முடியும்! உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் கவனத்துடன் அக்கறையுடன் கவனிக்கக் கற்றுக்கொண்டால், ஒரு அணுவைக் கூட உங்களால் முழுவதுமாக புரிந்துகொள்ள இயலாது என்பதை உணர்வீர்கள். அனைத்தும் உங்கள் புத்திக்கு அப்பாற்பட்டு இருக்கிறது, உங்களுக்கு மேலே இருக்கிறது. அதனால் நீங்கள் இயல்பாகவே பக்தியாய் இருப்பீர்கள்.

நீங்கள் கற்பனை கூட செய்துபார்க்க முடியாத விஷயங்கள், ஒரு பக்தனுக்குத் தெரியும். நீங்கள் புரிந்துகொள்ளப் போராடும் பல விஷயங்களை அவன் முயற்சியின்றி கிரகித்துக் கொள்வான், ஏனென்றால் அவனுக்குள் அவனுடைய தன்மை அதிகமாக இல்லை. உங்களுக்குள் நீங்கள் மட்டுமே நிரம்பியிருக்கும்போது, உங்களை விட உயர்வான ஒன்று உங்களுக்கு நிகழ்வதற்கு இடமில்லை.

பக்தியாக இருப்பதென்றால், நீங்கள் கோயிலுக்குச் சென்று, பூஜை செய்து, தேங்காய் உடைப்பது கிடையாது. ஒரு பக்தர் பிரபஞ்சத்தில் தன் இடம் என்னவென்பதை புரிந்துகொண்டுவிட்டார். இதை நீங்கள் புரிந்துகொண்டு உங்கள் கருத்தில் கொண்டால், பக்தராக வாழ்வீர்கள், வேறெப்படியும் இருக்க வழியில்லை. இது உயிர்த்திருப்பதற்கு மிகவும் புத்திசாலித்தனமான வழி.​​