பிரபஞ்சம் எப்படியோ, அப்படியே மனிதனும்
உள்நிலைப் பரிமாணங்களை அறிந்துணர்வதில் இரண்டு அடிப்படையான அம்சங்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் விடுதலையாக விரும்புகிறீர்கள். இந்த அணுகுமுறை, வாழ்க்கையின் சுழற்சியான தன்மை வீணானது என்பதைப் புரிந்து கொண்டதால், அல்லது அனுபவத்தில் உணர்ந்ததால் எழுகிறது. அதனால் முக்தி அல்லது விடுதலை ஒரே நோக்கமாக மாறுகிறது. ஒருவரின் உள்நோக்கிய பயணத்தின் இன்னொரு பரிமாணம், பிரபஞ்சத்தின் தன்மையை அறிந்துணர விரும்புவது. பிரபஞ்சத்தின் பொருள்சார்ந்த தன்மையையும், பொருளை அதிகம் சாராத தன்மைகளையும் கடக்கவேண்டும் என்ற ஏக்கம் இயற்கையாகவே இருக்கிறது. அப்படியானால், பொருள்தன்மைக்கு மதிப்பில்லை என்று அர்த்தமில்லை, வாழ்க்கையின் பொருள்சார்ந்த அம்சங்களையும் மற்ற பரிமாணங்களையும் மிக உயர்ந்த விதத்தில் கையாள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் இல்லை.

உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் உங்களால் இங்கு ஒரேவொரு கணப்பொழுது அமர்ந்திருக்க முடியுமென்றால், இந்த உடல், இந்த மனித உயிரினம் அதன் உச்சத்தை எட்டிவிட்டது என்று அர்த்தமாகிறது.
இந்த பூமியில் உயிரின் தன்மையைப் பார்த்தால் மற்ற இடங்களில் எப்படி இருக்கிறது என்பது வேறு விஷயம் - இந்த பூமியில் மனித உயிர்தான் உயிரினங்களின் குவியலில் உச்சத்தில் இருக்கிறது. இந்த பூமியில் என்ன நடக்க முடியும் என்கிற சாத்தியம் மனிதர்களிடத்தில் ஏதோவொரு விதத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதை ஒருவிதமாக கவனித்துப் பார்த்தால், மனித இனப்பெருக்கச் செயலும், இந்தக் கோளின் செயல்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது. இதில் ஒருவித இசைவும் இணக்கமும் ஏற்பட்டுள்ளது. அதாவது மனித இனப்பெருக்கத்திற்கான 28-நாள் சுழற்சிக் காலமும், சந்திரனின் 28-நாள் சுழற்சிக் காலமும் ஒத்திசைவாக இருக்கின்றன. இவ்விரு சுழற்சிகளும் முழுமையான ஒத்திசைவை அடைந்து விட்டதால், மனிதர்கள் இதற்குமேல் பரிணமிப்பதற்கு உடலியக்க அளவில் இடமில்லை.

அந்த விதத்தில், இந்த பூமியிலுள்ள உயிரின் தன்மையை, அல்லது பொருள்சார்ந்த எந்தவொரு தன்மையை நாம் அறிந்துகொள்ள விரும்பினாலும், அது உயிராக இருந்தாலும், ஜடப்பொருளாக இருந்தாலும், நமது உடலமைப்பை கவனித்துப் பார்ப்பதே சிறந்தது. ஏனென்றால், எல்லாம் இதன் உருவாக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. இந்த விதத்தில், மனித உடலமைப்பு, 114 சக்தி மையங்கள் அல்லது சக்கரங்கள் இருக்கும் நிலையை எட்டியுள்ளது. இவை அனைத்தும் முழுமையை அடைந்து இருந்தால், ஒரு மனிதர் உடலற்றதொரு நிலையை உணர்வார்.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி உடலியலளவில் முடிவுற்றுவிட்டது என்பதற்கு இது இன்னுமொரு சாட்சி. பரிணாம வளர்ச்சி இன்னும் நிறைவுராத ஒரு உயிரினத்திற்கு இது சாத்தியமாக இருக்கமுடியாது. உடலைப் பற்றிய உணர்வே இல்லாமல் உங்களால் இங்கு ஒரேவொரு கணப்பொழுது அமர்ந்திருக்க முடியுமென்றால், இந்த உடல், இந்த மனித உயிரினம் அதன் உச்சத்தை எட்டிவிட்டது என்று அர்த்தமாகிறது. ஒரு தனிமனிதராக, அந்நிலையில் உங்களை தக்கவைத்துக்கொள்ளும் திறமை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே கேள்வி. அந்நிலையில் தொடர்ந்து நீடிக்கும் அளவு ஒருமுனைப்புடன் நீங்கள் இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

பொதுவாக யோகமுறை, 114கில் இருந்து, உடலமைப்பிற்கு வெளியிலுள்ள இரண்டு சக்கரங்கள் தவிர, நூற்றுப்பன்னிரண்டு சக்கரங்கள் கொண்டதாக உடலை அணுகுகிறது. நாம் இந்த 112 சக்கரங்களுடன் செயலாற்ற முடியும். இந்த 112டில் 108 சக்கரங்களைப் போதுமான அளவு நீங்கள் தயார் செய்தால், மீதி நான்கும் அதைத் தொடர்ந்து தன்னால் தயாராகும். இந்த 112 சக்தி மையங்களை, 16 அம்சங்கள் கொண்ட 7 பரிமாணங்களாக வகுக்க முடியும். இந்த 7 பரிமாணங்களைப் பொதுவாக 7 சக்கரங்கள், அல்லது யோகத்தின் 7 பள்ளிகள் என்று கூறுவர்.

ஏழு ரிஷிகள், ஏழு பள்ளிகள்

ஏழு ரிஷிகள், ஏழு பள்ளிகள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதியோகி தன் ஞானத்தை முதன்முதல் பரிமாறியபோது அவருடன் அமர்ந்த சப்தரிஷிகள் அல்லது ஏழு முனிவர்களே, ஏழு பள்ளிகள் அல்லது முறைகளை உருவாக்கியவர்களாக கருதப்படுகின்றனர். எந்தவொரு தனிநபருக்கும் அதை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லையென்பதை ஆதியோகி கவனித்ததால், ஒவ்வொருவருக்கும் பதினாறு அம்சங்களைக் கொடுத்தார். அதற்குப்பிறகு, அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்ப முடிவுசெய்தார். இது நாம் நடத்தும் 7- நாள் ஈஷா யோகா வகுப்பு போன்றது. இந்த வகுப்பின் ஏழு அம்சங்களுக்கு ஏழு ஆசிரியர்களுக்கு நாம் பயிற்சி கொடுத்திருந்தால், அவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒன்றாக பயணிக்க வேண்டியிருக்கும். அதோடு இந்த ஏழு பேரை ஒன்றாக வைத்திருப்பது பெரும்பாடாக இருக்கும்.

தாங்கள் பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் அவர்களை மீண்டும் அவர் சரணத்தில் சமர்ப்பிக்கச் செய்தார் ஆதியோகி. அதன்மூலம் 112 வழிகளும் ஏழ்வருக்கும் எட்டும் விதமாகச் செய்தார். முதல் ஆறு பரிமாணங்கள் - மூலாதாரா, சுவாதிஷ்டானா, மணிபூரகா, அனஹதா, விஷுத்தி மற்றும் ஆக்ஞா - இவற்றில் ஒவ்வொன்றுக்கும் அதன் அடிப்படை குணத்தை மையமாகக் கொண்டு, யோகப் பள்ளிகள் உருவாகி வளர்ந்தன. ஏழாவது பரிமாணமான சஹஸ்ரார் சக்கரத்திற்கு எந்தவொரு யோகப் பள்ளியும் இல்லை. ஏனென்றால் அது அணுகக்கூடியதாக இருந்தாலும், அதை குறிப்பிட்டவொரு முறைப்படி அணுகமுடியாது.

மூலாதாராவுடன் தொடர்புடைய ஒரு பரிமாணத்தை காயகல்பா என்பார்கள்

மூலாதாரா மற்றும் காயகல்பா
மூல-ஆதாரா என்றால் அடித்தளம் அல்லது ஆதாரம் என்று அர்த்தம். உடல் கட்டமைப்பிற்கு மூலாதாரா என்பது அடித்தளம். இந்த அடித்தளம் உறுதியாக நிலைபெறாவிட்டால், ஒருவர் ஆரோக்கியம், நல்வாழ்வு, சமநிலை மற்றும் முழுமை நிலையை உணரமுடியாது. இந்தத் தன்மைகள் அனைத்தும், ஒரு மனிதர் உயரமாக ஏறமுயற்சிப்பதற்கு அத்தியாவசியமாக இருக்கின்றன. கால்கள் நடுங்கிக்கொண்டு இருக்கும் ஒருவரை ஒரு ஏணிமேல் ஏறச்செய்ய முடியாது, அவர் ஏற விருப்பப்படவும் மாட்டார். வாழ்க்கையினூடே திறமைகரமாகவும் ஆற்றலுடனும் நடந்துசெல்ல, ஒருவரின் உடலிலும் மனதிலும் ஒருவித உத்தரவாதம் தேவைப்படுகிறது.

உடலை வைத்து செய்யக்கூடிய விஷயங்கள் முதல் ஒருவர் தன் உச்சநிலையை எட்டுவது வரை, மூலாதாராவை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனி யோகப் பள்ளியே உருவானது. மூலாதாராவுடன் தொடர்புடைய ஒரு பரிமாணத்தை காயகல்பா என்பார்கள். காயா என்றால் உடல், கல்பா என்றால் நீண்டகாலம் - அதை “யுகம்” என்று நாம் மொழிபெயர்க்கலாம். காயகல்பா என்பது, உடலை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவதைக் குறிக்க முடியும், அல்லது அதன் வாழ்நாளை நீட்டிப்பதைக் குறிக்க முடியும். காயகல்பப் பயிற்சி செய்தோர் பலர், உடலின் மிக அடிப்படையான மூலப் பொருளான பூமித் தத்துவத்தை ஆளுமைக்குள் எடுத்துக் கொண்டமையால், பலநூறு வருடங்கள் உயிர் வாழ்ந்தனர். உடலின் பூமித் தத்துவம்தான் நமக்கு ஆதாரம் தருகிறது.

காயகல்பா மற்றும் பூமித் தத்துவம்
பூமித் தத்துவத்தை ஆளுமைக்குள் எடுப்பது, பூதசுத்தியின் ஒரு அம்சமாகும். அது உங்களுக்கு வேறு சில ஆற்றல்களையும் தருகிறது - பூமியும் மண்ணும் தரக்கூடிய விஷயங்களை எடுத்துக்கொள்ளும் திறமை படைத்தவராய் மாறுகிறீர்கள். பூமியின் சாரத்தை மனித உடலமைப்பிற்குள் எடுத்துக்கொள்ள ஒருவழி, திடப்படுத்தப்பட்ட பாதரசம். பாதரசத்தை, இந்த பூமியின் ‘ரசம்’ என்று சொல்கிறோம். இயற்கையில், சாதாரண வெப்பநிலைகளில் திரவமாக இருக்கும் பாதரசத்தை திடப்படுத்தும் வழிமுறை, காயகல்பத்தின் அத்தியாவசியமான அங்கமாகும்.

காயகல்பா என்பது, காலப்போக்கில் இயற்கையாகவே தேய்ந்து சீர்குலையக் கூடிய உடலின் அம்சங்களை உறுதிப்படுத்துவதன் மூலம், இந்த தேய்மானத்தின் வேகத்தை மிகவும் குறைத்து, உங்களை காலம் கடந்தவரைப் போலத் தோன்றச் செய்கிறது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு யுகத்திற்கு இருக்கக்கூடிய அளவு உங்கள் உடல் உறுதியாகும். இதை செய்தவர்கள் ஏராளம், ஆனால் அதற்கு அதிகப்படியாக உழைக்க வேண்டும். காயகல்பா என்பது, ஒரு பாறை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதன் புரிதலைப் பயன்படுத்தி, நீண்டகாலம் நீடிப்பதற்கு அத்தகையதொரு உறுதியைத் தருவது என்னவென்று புரிந்து, மனித உடலை அதேபோன்று உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் காயகல்பா செய்தால், பாறை போல ஆகிவிடுவீர்கள். ஆனால், அதனால் என்ன பிரயோஜனம்? சமுதாய அளவில், நீங்கள் பாறைபோல இருந்தால், நீங்கள் பிழைப்பை சம்பாதிக்கலாம், சூப்பர்மேன் போல சாகசம் செய்யலாம், உங்கள் திறமைகளை வைத்து மக்களை வியப்படையச் செய்யலாம். ஆனால், ஒரு பாறை ஒரு தடையாகவும் இருக்கமுடியும். 

நீங்கள் பாறைபோல இருந்தால், நீங்கள் பிழைப்பை சம்பாதிக்கலாம், சூப்பர்மேன் போல சாகசம் செய்யலாம், உங்கள் திறமைகளை வைத்து மக்களை வியப்படையச் செய்யலாம். ஆனால், ஒரு பாறை ஒரு தடையாகவும் இருக்கமுடியும்.

அமிர்தமும் பீனியல் சுரப்பியும்
இத்திறமைகள் பல்வேறு விதங்களில் வருகின்றன. சிவன் தென்திசை நோக்கித் திரும்பும் கதை, அவனுடைய மூன்றாவது கண் ‘தெற்கு’ நோக்கித் திரும்புவதையும் குறிக்கிறது. அவனுடைய மூன்றாவது கண் இரு கண்களுக்குக் கீழே நோக்கிய மறுகணம், வேறு எவரும் பார்க்காத விஷயங்களை சிவன் பார்த்தார். இது காயகல்பத்தில் ஒரு அம்சம். நான் சொல்லப்போவது ஒருவிதத்தில் சரியாக இருக்காது என்றபோதும், இன்றைய காரண அறிவு சார்ந்த மனங்களுக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்கிறேன். பீனியல் சுரப்பியை, சற்று கீழே, அல்லது ‘தெற்கு’ என்று குறிப்பிடுவது நோக்கி நகர்த்த, பல்வேறு விதமான ஆன்மீக சாதனங்கள் உள்ளன.

இது ஒரு குறிப்பிட்ட விதத்தில் நிகழ்ந்தால், யோகமரபில் அமிர்தம் என்று குறிப்பிடப்படும் பீனியல் சுரப்பியின் சுரப்புகளை, உடலமைப்பை பலப்படுத்த, அல்லது ஆயுள்காலத்தை நீட்டிக்க, அல்லது பரவச உணர்வை உருவாக்க, பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு போதை மருந்தைப் போல, அது உங்களை விண்ணில் மிதப்பதுபோல் செய்யவல்லது. அல்லது இந்த அமிர்தத்தை, உங்கள் கிரகிப்புத் தன்மையை மேம்படுத்தவோ, அல்லது எல்லாம் உங்களை ஊடுருவிச் செல்லும் வகையில் காற்றைப் போல லேசாக ஆகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது காற்று உங்கள் நாசிகள் வழியாக மட்டுமே செல்கிறது. அது செல்லாவிட்டால், நீங்கள் சென்றுவிடுவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் ஆனந்தமாக இருக்கும் ஒரு கணப்பொழுதில் இதை அனுபவித்திருக்க முடியும். தென்றல் வீசுகையில் இப்படி நின்றிருந்தால், காற்று உங்கள் வழியாக ஊடுருவிச் செல்வது போல இருந்திருக்கும். உங்கள் உடலமைப்புக்கு நுண்ணுணர்வு கொண்டு வருவதற்கு இந்த அமிர்தத்தை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் நூறு சதவிகிதம் காற்றைப் போல லேசாக ஆகிவிட முடியும்.

அமிர்தம் ஒன்றே, தாக்கங்கள் பல
பீனியல் சுரப்பியின் சுரப்புகளை மூன்று அடிப்படையான விதங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒன்று, உடலை வலுப்படுத்தி பாறையைப் போல செய்துகொள்ள முடியும், பெரும்பாலான மனிதர்கள் அமானுஷ்யம் என்று எண்ணும் அளவு அவர்கள் நீண்டகாலம் வாழமுடியும். இன்னொரு வழி, மிகவும் போதையாகவும் பரவசமாகவும் இருக்கும் நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம், அவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்பது ஒரு பொருட்டாகவே இல்லாதபடி செய்திட முடியும். இன்னொன்று, உங்களை காற்றைப் போல செய்துகொள்வதன் மூலம், உங்கள் கிரகிப்புத்திறன் உச்சத்தைத் தொடமுடியும். ஏனெனில் அப்போது உங்களுக்குள் எவ்வித தடையும் இருக்காது. பொதுவாக காயகல்பம், உடலை பலப்படுத்தி அதன் ஆயுளை நீட்டிக்கவே இந்த அமிர்தத்தை பயன்படுத்துகிறது. சிலர் நீங்கள் இறக்காமலே இருக்கிறீர்களே என்று அதிசயப்படலாம். சிலர் நீங்கள் இறக்காமல் இருக்கிறீர்களே என்று எரிச்சலடையலாம்.

அமிர்தம், அல்லது பீனியல் சுரப்பியின் சுரப்புகள், உங்கள் கிரகிப்புத்திறனையும் மேம்படுத்த முடியும். உங்கள் கிரகிப்புத் திறனை நீங்கள் மேம்படுத்தாவிடில், உங்கள் வாழ்க்கை எவ்விதத்திலும் மேம்படாது. உங்கள் உடலை பாறைபோல செய்துகொண்டால், மற்றவர்கள் உங்களை அற்புதம் என்று நினைத்துக் கொள்ளலாம், அல்லது உங்களை ஒரு சிற்பமாக்கலாம். ஆனால் ஒரு மனிதர் பாறைபோல ஆவதை நாம் விரும்புவதில்லை. இதுகுறித்து ஒரு அழகான கதை இருக்கிறது.

பாறைபோல மாறுவதா, அல்லது காற்றைப்போல மாறுவதா?
12ம் நூற்றாண்டில், கர்நாடகத்தில் அல்லம மஹாபிரபு என்று ஒரு மாமுனிவர் இருந்தார். பல அற்புதமான ஞானிகளுக்கு வழிகாட்டும் சக்தியாக அவர் இருந்ததால், அவரை அல்லம மஹாபிரபு என்று அழைத்தார்கள். அவர் “அனுபவ மண்டபா” எனும் அமைப்பை உருவாக்கினார், அதாவது ஏதோவொன்றை அனுபவத்தில் உணர்வதற்கான இடம் அது. ஒருநாள், கோரக்ஷா என்ற இன்னொரு யோகி, அல்லம மஹாபிரபு மக்களால் கடவுளாக கருதப்பட்டு வணங்கப்பட்டதால், அவருக்கு ஒரு சவால் விடுத்தார். கோரக்ஷா கூறினார், “உங்களிடம் அப்படி உயர்வாக என்ன இருக்கிறது? என்னைப் பாருங்கள்.” அந்த காலத்தில் கோரக்ஷா 280 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். “நான் நெடுங்காலம் உயிர்வாழ்ந்திருக்கிறேன், நான் பாறையைப் போல இருக்கிறேன். உங்களால் என்ன செய்யமுடியும்?” என்று கோரக்ஷா கேட்டார். அல்லமர் புன்னகையுடன், “அப்படியா? நீங்கள் உண்மையில் பாறையைப் போல இருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு கோரக்ஷா, “வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்,” என்று கூறியபடி, வைரத்தால் ஆன முனையைக் கொண்ட தனது வாளை உருவி அல்லமரிடம் நீட்டி, “இதை எடுத்து உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி என் தலைமீது வீசுங்கள், என்ன நடக்கிறதென்று பார்ப்பீர்கள்,” என்றார். அல்லமர் இருகைகளாலும் வாளை எடுத்து அவர் தலைமீது வீசினார், அது பாறையில் பட்டதுபோல அவர் தலையில் பட்டுத் தெரித்தது.

அதற்கு அல்லமர், “இது வியப்பூட்டும் விஷயமாக இருப்பது உண்மைதான். ஆனால் இதனால் என்ன பயன்? ஒரு வாள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே உங்கள் மீது வீண் போனது. வாள் என்றால் வெட்ட வேண்டும், ஆனால் அதனால் உங்களை வெட்ட முடியவில்லை,” என்றார். உடனே கோரக்ஷா, “வாளை என் மீது நீங்கள் இப்போது வீசி விட்டதால், எனக்கும் உங்கள் மீது வாள்வீச உரிமையுண்டு,” என்றார். அல்லமா “சரி” என்றார். கோரக்ஷா வாளை எடுத்து அல்லமர் மீது வீசினார். எந்தத் தடையும் தராத காற்றின்மேல் வாள் வீசினால் எப்படி ஊடுருவிச் செல்லுமோ, அப்படியே அல்லமர் உடலினூடே வாள் சென்றது. மீண்டும் மீண்டும் வீசிப்பார்த்தார், மீண்டும் மீண்டும் அப்படியே நடந்தது. அதன்பிறகு கோரக்ஷர் அல்லமரைப் பணிந்து வணங்கி, “ஆம், நான் என்னை பாறையைப் போல செய்துவிட்டேன், ஆனால் நீங்கள் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டீர்கள். வாளால் உங்களால் என்னைத் தொட முடிந்தது, என்னால் வாளைக் கொண்டு உங்களைத் தொடக்கூட முடியவில்லை,” என்றார்.

மூலாதாரா மீது ஆளுமை எடுத்து வந்தால்...
நீங்கள் பாறையைப் போல ஆகிவிட்டால், உங்கள் உடலுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டால், நீங்கள் எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். யார் அல்லது எது பெரியது எது சிறியது, எது உயர்ந்தது எது தாழ்ந்தது, எது மேலானது எது மோசமானது என்றே எல்லாவற்றையும் உங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள். ஏனெனில் பொருள்தன்மையின் இயல்பே அதுதான். பொருள்தன்மையை நீங்கள் கடந்துவிட்டால், இப்படி ஒப்பிடுவதிலிருந்து நீங்கள் விடுதலையாவீர்கள். நீங்கள் உயிர்வாழ்வதற்கு மூலாதாராவும் அதன்மீது செய்யும் சாதனாவும் முக்கியமானது. ஒரு மனிதரால் மட்டும்தான் வெறுமனே உயிர்வாழ்வது போதுமானது அல்ல என்பதை உணரமுடியும். அமீபா முதல் யானை வரை மற்ற உயிரினம் எதுவும் இதை உணரமுடியாது. ஏனெனில், அது அவற்றின் இயல்பிலேயே இல்லை. உயிர்வாழ்வது மட்டும் போதுமானது என்பதே அவற்றின் உணர்வு. ஒரு மனிதரால் மட்டுமே இதை உணரமுடியும். எல்லோரும் இதை உணர்கிறார்கள் என்று இல்லை. உயிர்வாழ்வது மட்டும் போதாது, வேறு ஏதாவது நடக்கவேண்டும் என்பதை ஒரு மனிதரால் மட்டுமே உணரமுடியும்.
ஒருவர் மூலாதாரா மீது ஆளுமை எடுத்துவந்தால், அதனால் மிக உறுதியான உடல் கிடைக்கலாம், அல்லது ஒருவித போதை உணர்வை எட்டலாம், அல்லது உயர்ந்த கிரகிப்பு நிலைகளை அடையலாம்.