வளைகூரைக்குள் நுழைந்ததும், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது பாதரசத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரோட்டமான லிங்கங்களில் உலகிலேயே மிகப்பெரியது. தியானலிங்கம், ஆசியாவிலேயே மிக அடர்த்தியான கருப்பு கிரானைட் கல்லால், ஒரே கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் தியானலிங்கம் உருவாக்குவதற்காக நடந்துள்ள முயற்சிகள் குறித்து சத்குரு கூறுகையில், "போபால் அருகிலுள்ள போஜ்புர் எனும் இடத்தில் இன்னுமொரு தியானலிங்கம் நிறைவடையும் தருவாயில் இருந்தது. ஆனால் பிரதிஷ்டையின்போது அதன் சக்திகளைப் பூட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் லிங்கம் பிளவுற்றது." அப்படி ஒரு சம்பவம் இங்கே நிகழ்வதைத் தவிர்க்க விரும்பிய சத்குரு, சக்திமிக்க ஒரே கைத்தட்டலில் செங்குத்தாக ஓடும் மயிரிழை போன்ற ஒரு பிளவை தியானலிங்கத்தில் ஏற்படுத்தினார்.

ஏழு சுற்றுக்களைக் கொண்ட ஒரு பாம்பின் வடிவில் இருக்கும் ஆவுடையாரிலிருந்து தியானலிங்கம் எழுந்து நிற்கிறது. லிங்கத்தின் உயரமான அதே 13 அடி 9 அங்குலம் இதன் நீளமாக இருக்கும் விதத்தில் ஆவுடையார் உருவாக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்திற்கு நேர் மேலே இருக்கும் தங்கமூலாம் பூசிய செப்புக் கலசத்திலிருந்து தியானலிங்கத்தின் மீது தொடர்ந்து தண்ணீர் சொட்டுகிறது. இது தியானலிங்கத்தை எப்போதும் ஈரமாக வைத்து, அதிலிருந்து வெளிப்படும் சக்தியைச் சுலபமாக ஒருவர் உள்வாங்கிட வழிசெய்கிறது. தொடர்ந்து லிங்கத்தின் மீது விழும் நீரின் சப்தம் கர்ப்பக்கிரகத்தில் எதிரொலித்து, ஒருவரை மென்மையாக தியானநிலைக்கு இட்டுச்செல்கிறது. லிங்கத்தைச் சுற்றி இருக்கும் ஜலசீமா எனும் தாமரைகள் மிதக்கும் நீர்நிலை, சந்நிதியை குளுமையாக்குவதோடு, தியானலிங்கம் நீரில் மிதப்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது.