சத்குரு: கற்பது என்பது அடிப்படையில் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வது. குறுகிய எல்லைக்குட்பட்ட நிலையில் இருந்து, நீங்கள் விரிவடைய விரும்புகிறீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய கல்விமுறை, மக்களின் கேள்வி ஞானத்தை விரிவடையச் செய்தாலும், அவர்களின் கவனித்து உணரும் திறனையும், மற்ற உயிர்களை தன்னுள் சேர்த்தணைக்கும் குணத்தையும் சுருக்கிவிட்டது.

சில தலைமுறைகளுக்கு முன்னால், எல்லா இடங்களிலும், அதிலும் குறிப்பாக நம் இந்தியக் கலாச்சாரத்தில், மக்கள் கூட்டுக்குடும்பங்களாக சேர்ந்து வாழ்ந்தனர். இன்றும்கூட சில குடும்பங்களில் 200-300 நபர்கள் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். இப்படி ஒரே வீட்டில் 200-300 பேர் சேர்ந்து வாழும்போது, ஒவ்வொரு நொடியும் பலருக்கு அருகாமையில் நீங்கள் இருக்கும்போது, 'உங்களில் ஒன்றாக' அவர்களையும் அரவணைப்பது உங்களின் அடிப்படையான குணமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் இத்தனை பேரோடு சந்தோஷமாக இயைந்து வாழமுடியாது.

மெதுவாக மேற்கத்திய கல்விமுறையை பின்பற்றத் துவங்கியதும், தனித்துவத்தை வளர்த்துக் கொண்டு, மக்கள் பிறரை விலக்கி வைக்க ஆரம்பித்தார்கள். பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என அனைவரையும் விலக்கி வைத்து, "குடும்பம் என்பது நான், என் மனைவி, என் குழந்தைகள் மட்டும். வேண்டுமானால் என் பெற்றோர்களை இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் என் மனைவியின் பெற்றோர்களை இதில் சேர்க்கமுடியாது." என்றோம். பின்னர், பெற்றோர்களுக்கு வயதாகிவிட்டது... ஒன்றையும் புரிந்துகொள்ளாமல் எல்லாவற்றிற்கும் தடையாக இருக்கிறார்கள் என்றெண்ணி, முடிவில் குடும்பம் என்பது நான், என் மனைவி குழந்தைகள் மட்டும் என்று முடித்துவிட்டோம்.”

மக்களின் வாழ்வில் இந்தக் கல்விமுறை பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்ததும், மேலைநாடுகளில், ஏன் நம் நாட்டின் பெருநகரங்களிலும், கணவன்-மனைவி என இருவர்கூட சேர்ந்து வாழமுடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. அவர்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். வார விடுமுறைகளில் மட்டும் சந்திக்கிறார்கள். அதற்குமேல் சேர்ந்து வசிக்கும் நிலை ஏற்பட்டால், அவ்வளவுதான். அங்கு ஒரு பெரும் யுத்தமே அரங்கேறும். 'நான்... நான்' எனும் நம் 'தனித்துவமாய் இருக்கும் முயற்சி', மற்றவர்களை நம்மில் ஒரு பாகமாய் அரவணைக்காது அவர்களை விலக்கிவைக்கும் எண்ணம், இன்று யாருமில்லா 'தனிமை'யில் நம்மை ஆழ்த்தி வருகிறது. இதுவே இன்றைய உலகின் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

துரதிஷ்டவசமாக, ஒரு சமுதாயத்தில் நன்கு படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவர்களின் தேவைகளும் நம்பமுடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது

எந்தளவிற்கு ஒவ்வொருவரின் தேவைகளும் அதிகரித்திருக்கிறது என்றால், அவரவரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென்றே ஒவ்வொருவருக்கும் தனித்தனி கிரகமே தேவைப்படும்! நாம் அனைவரும் ஒரே பூமியில் வாழமுடியாது. இதுதான் நம் கல்வியறிவின் விளைவு. அதற்காக இக்கல்விமுறையின் சாரத்தில் பிழை என்றில்லை... ஆனால் அது வழங்கப்படும் முறையில் ஏதோ பெரும் தவறு உள்ளது.

இக்கல்வியால் கிட்டும் அறிவு மனிதர்களுக்கு பாதிப்பை உருவாக்கவில்லை... ஆனால் அந்த அறிவு வழங்கப்படும் விதம், அதன் நோக்கம்தான் இப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

இன்றைய கல்விமுறையின் ஒரே நோக்கம் பிழைப்பிற்கு மனிதர்களை தயார் செய்வதாக மட்டுமே இருக்கிறது. கல்வியின் நோக்கம் பிழைப்பல்ல. அது உங்கள் சிந்திக்கும் திறனையும், உள்வாங்கும் திறனையும் அதிகரித்து, உங்களைக் கட்டுப்படுத்தும் எல்லைகளைத் தகர்த்தெறிய வழிசெய்ய வேண்டும். தங்கள் பொருளாதார அந்தஸ்துதான் வாழ்க்கை என்று மக்கள் முட்டாள்த்தனமாக எண்ணும் நிலையில் இருப்பதால்தான், இவ்வுலகில் இருந்து எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்று கற்கும் வழியாக கல்விமுறையைத் திரித்துவிட்டோம். இந்த நிலை மாற வேண்டும். எவ்வித இடையூறுமின்றி ஒருவரின் புத்திசாலித்தனம் சீராகச் செயல்பட்டால், அவரை எங்கு விட்டாலும் அவர் பிழைத்துக் கொள்வார். அன்பான அற்புதமான மனிதர்களை மட்டும் அல்லாமல், எதையும் எதிர்கொள்ளக்கூடிய, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய திறனுடைய மனிதர்களை நாம் உருவாக்க வேண்டும். அவர்களை நரகத்தில், போட்டாலும் கூட, அதையும் மெதுவாக சொர்க்கமாக மாற்றிவிடும் வல்லமை படைத்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.