சத்குரு: என் தாய் மிக நன்றாகப் பாடுவார். வீணையும் கூட வாசிப்பார். எப்போதும் ஏதேனும் பாடிக்கொண்டு இருப்பார். மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்ல, அவர் பொதுவாகவே அப்படித் தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர் அல்ல. ஆனால், 'எனக்காக ஒரு பாடல் பாடுகிறாயா?' என்று யாரேனும் கேட்டால், அப்போது அவர்களுக்காகப் பாடுவார். இந்தியாவில் முன்பெல்லாம் டேப்-ரிகார்டரோ, சிடி ப்ளேயரோ இல்லாத காலகட்டத்தில், பாடத் தெரிந்தவர்கள் அருகில் இருப்பது பெரும் பாக்கியம். அப்போது யாரேனும் வேண்டிக்கேட்டால், அவர்களுக்காக இவர் பாடுவார். சுற்றி யாருமில்லை என்றாலோ... தன் மனம்போல் எப்போதும் பாடிக் கொண்டிருப்பார்.