”ஒரு விவசாயி 365 நாள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற லாபத்தை ஒரு இடைதரகர் ஒரே நாள்ல சம்பாதிச்சிட்டு போயிடுறான். இதை நினைக்கும்போது எனக்கு பெரிய ஏமாற்றமா இருந்துச்சு. அதனால நானே என்னோட விளைப்பொருட்கள துணிஞ்சு நேரடியா விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இப்போ தினமும் வெறும் ரெண்டே மணி நேரத்துல 10 ஆயிரத்துக்கு காய்கறி வியாபாரம் பண்றேன்” என்று மிகவும் உற்சாகமாக பேசினார் பெருந்துறை இயற்கை விவசாயி ராஜசேகரன்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வெள்ளாளர் மேல்நிலைப் பள்ளி முன்பு காய்கறி வியாபாரம் செய்து வரும் இயற்கை விவசாயி ராஜசேகரனை சந்திப்பதற்காக சென்றிருந்தேன். சரியாக மாலை 3.45 மணிக்கு காய்கறிகளுடன் கூடிய டிராக்டர் வாகனத்துடன் அவர் அங்கு வந்து சேர்ந்தார்.

டிராக்டரில் இருந்த காய்கறிகளை தனித்தனியாக பிரித்து அடுக்கும் முன்பாகவே அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. பள்ளி முடித்து குழந்தைகளை அழைத்து செல்வதற்கு வந்திருந்த தாய்மார்கள் கீரை கட்டுகளையும், காய்கறிகளையும் ட்ரேக்களில் எடுத்து எடை போட கொடுத்தனர். யாரும் எந்த பேரமும் பேசாமல் வாங்கி சென்றது ஆச்சரியமாக இருந்தது.

“இவங்க எல்லாரும் என்னோட ரெகுலர் கஸ்டமர்ஸ். சிலர் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்குவாங்க. சிலர் 500 ரூபாய்க்கு காய்கறி வாங்குவாங்க. பெரும்பாலும் எல்லாரும் பேரம் பேசாம வாங்கிட்டு போயிடுவாங்க. அதுக்கு 2 முக்கிய காரணம் இருக்கு. ஒண்ணு நான் விக்கிற காய்கறிகள் எல்லாமே எந்த ரசாயனமும் போடாம நானே விளைவிச்சது. இரண்டாவது இயற்கை காய்கறியா இருந்தாலும் மார்க்கெட்-ல அன்னைக்கி என்ன விலையில விக்கிறாங்களோ அதே விலையிலதான் நானும் விக்கிறேன். அதனால, எந்த சந்தேகமும் இல்லாம வாங்கிட்டு போறாங்க” என்றார் ராஜசேகரன்.

மாலை 6 மணிக்குள்ளாகவே கொண்டு வந்த அனைத்து காய்கறிகளும் பெரும்பாலும் விற்று தீர்ந்தன. அதன்பிறகு அவருடன் சற்று விரிவாக பேசினேன்.

”எங்க குடும்பம் பரம்பரை விவசாய குடும்பம். அதுனால விவசாயத்த பத்தி எனக்கு நல்லா தெரியும். ஆனா, இடையில கோழிப் பண்ணை, கோழி மருந்து கடையும் நடத்திக்கிட்டு இருந்தேன். அப்போ ஈஷா யோகா கிளாஸ் பண்ணேன். அப்புறம் சத்குருவோட வீடியோவை நிறைய பார்க்க ஆரம்பிச்சேன். அதுல ஒரு வீடியோ-ல “நாம எந்த தொழில் செஞ்சாலும் அது மக்களுக்கு நேரடியா எந்தளவுக்கு பயன் தரும்னு யோசிச்சு பண்ணனும் அப்டின்னு சொல்லியிருந்தாரு.” அதை கேட்டதுக்கு பிறகு கோழிப் பண்ணை தொழில விட்டுட்டு விவசாயத்துல முழுநேரமா கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

ஈஷா விவசாய இயக்கத்தோட பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டு இயற்கை விவசாயம் சம்பந்தமா நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன். கடந்த ஒன்றரை வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பெருந்துறை சீலம்பட்டியில வீட்டுக்கு பக்கத்துலயே 8 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்றேன். அந்த 8 ஏக்கர்லயும் தென்னையும் அதுக்கு இடையில மணத்தக்காளி, வல்லாரை, முருங்கை, கொத்தமல்லி, தூதுவளை, பிரண்டைனு மொத்தம் 15 வகையான கீரைகள சாகுபடி பண்றேன்.

அதேமாதிரி அங்க இருந்து 5 கி.மீ தூரத்துல இன்னொரு இடத்துல 6 ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்றேன். அதுல 3 ஏக்கர்ல கதளி வாழை போட்டுருக்கேன். ஒரு ஏக்கர்-ல ரெட்லேடி பப்பாளி போட்டுருக்கேன். மீதி 2 ஏக்கர்ல தென்னையும் அதுக்கு இடையில பப்பாளியும் போட்டுருக்கேன். ஊடுபயிரா வெங்காயம், தக்காளி, கத்திரி, அவரை போன்ற காய்கறிகள சாகுபடி பண்றேன்” என்று, தான் பயிரிட்டுள்ள விளைப்பொருட்கள் குறித்து விரிவாக பேசினார்.

இதை தொடர்ந்து காய்கறி நேரடி விற்பனை குறித்தும் விரிவாக பேசினார்.

“நான் இயற்கை விவசாயம் செய்றத தெரிஞ்சுகிட்டு என்னோட தங்கச்சி அவங்க ஸ்கூல்-ல வேலை பாக்குற டீச்சர்ஸ்க்கு இயற்கையில விளையுற காய்கறிகள சப்ளை பண்ண சொல்லி கேட்டுக்கிட்டாங்க. நானும் ஓகேனு சொல்லிட்டு அவங்க ஸ்கூலுக்கு பைக்-ல காய்கறிகள் கொண்டுபோய் விக்க ஆரம்பிச்சேன்.

டீச்சர்ஸ் காய்கறிகள் வாங்குறத பாத்துட்டு அங்க படிக்குற குழந்தைகளோட பெற்றோர்களும் எங்களுக்கும் இயற்கை காய்கறிகள் வேணும்னு கேட்டாங்க. அப்படிதான் காய்கறி நேரடி விற்பனை தொடங்குச்சு. மொதல்ல பைக்-ல, அடுத்து கார்-ல கொண்டு வந்தேன். இப்போ டிராக்டர்ல கொண்டு வந்து விக்கிறேன்” என கூறியவரிடம், நேரடி விற்பனையில் எப்படி வெற்றிகரமாக செய்வது என்று கேட்டேன்.

“நேரடி விற்பனையில நீங்க வெற்றி பெறணும்னா மொதல்ல கஸ்டமர்ஸ்-கிட்ட நல்ல நம்பிக்கைய சம்பாதிக்கணும். எப்பவுமே உங்களோட விளைப்பொருட்களோட தரத்துல கவனமா இருக்கணும். மார்க்கெட்-ல என்ன விலை இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி சரியான விலையை சொல்லணும். என்னோட கஸ்டமர்ஸ நான் பேசி கன்வீன்ஸ் பண்ணறது இல்ல. என்னோட காய்கறிகள சாப்பிட்டு பாத்துட்டு அது தரமா இருக்குறது உணர்ந்து அவங்களே கன்வீன்ஸ் ஆயிருவாங்க.

இதுக்கு முன்னாடி இடைத்தரகர் மூலமா விற்கும்போது, ஒரு கீரை கட்டு ரூ.3 அல்லது ரூ.4 விலை போகும். அதே கீரை கட்டு நான் இப்போ ரூ.8 ல இருந்து ரூ.10 வரைக்கும் விக்கிறேன். கதளி வாழையை இடைத்தரகர் மூலமா வித்தா கிலோ ரூ.35 போச்சு. ஆனா நேரடியா விக்கும்போது ரூ.45-க்கு போகுது. தோராயமா கணக்கு போட்டாலும் நேரடி விற்பனையில குறைஞ்சபட்சம் 20 சதவீதம் கூடுதல் லாபம் கிடைக்கும். இன்னும் அதிகமா லாபம் பாக்கணும்னா பொருட்கள மதிப்பு கூட்டி விக்கணும்.

இன்னொரு முக்கியமான விஷயம் நீங்க கடை போடுற இடமும் உங்களோட லாபத்த தீர்மானிக்கும். உதாரணத்துக்கு, ஸ்கூல் முன்னாடி நான் கடை போட்டுருக்கேன். இங்க வெறும் காய்கறி மட்டும் விக்காம, இளநியும் விக்கிறேன். குழந்தைகளுக்கு இளநீ ரொம்பவும் பிடிக்கும். அதுனால வியாபாரமும் சிறப்பா இருக்கு. இப்படி எந்த இடத்துல எதை வித்தா நல்லா லாபம் பாக்கலாம்னு யோசிச்சு முடிவு எடுக்கணும்” என்று ஏராளமான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார் ராஜசேகரன்.

மின்சார செலவை குறைப்பதற்கு 25 கே.வி சோலார் பேனல்களை பயன்படுத்தும் ராஜசேகரன் அடுத்தடுத்து ஏராளமான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார். அவருடைய திட்டங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

விதை விதைப்போம்...

 

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினத்தந்தி

(குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது)