சிறு தானிய ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியத்துவம் அதன் தயாரிப்பு, சமையல் குறித்தும் தரப்பட வேண்டும் என்பதன் நீட்சியே இந்தப் பதிவு!

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

ஈஷா ஆரோக்யா மையத்தில் ஒரு பகல் பொழுது...

“அந்த குதிர... குதிர... தானியம் இருக்கா?” என ஒரு அன்பர் சிறுதானியம் குறித்த ஆர்வத்துடனும், அதேசமயம், அதன் பெயர் மறந்து விட்டதால், “வட போச்சே!” எனும் ரியாக்ஷனுடனும் கேட்கிறார். மையத்தின் தன்னார்வத் தொண்டரோ சுதாரித்துக் கொண்டு, “ஓ! குதிரவாலி அரிசியா.. இருக்குங்கண்ணா.. சாமை, வரகு, தினை கூட இருக்கு!” என அவர் கேட்டதைக் கொடுத்து அனுப்புகிறார்.

“உணவிலிருந்து தொடங்குவதுதான் ஆரோக்கியம். உணவே மருந்து; மருந்தே உணவு” எனும் சித்தர் தத்துவங்கள், மக்கள் மனதில் மீண்டும் புத்துயிர் பெறுகின்றன என்பதற்கு இதுபோன்ற காட்சிகள், சாட்சிகளாக உள்ளன. இதன் விளைவாய், பழங்கள், நாட்டுக் காய்கறிகள், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு சமீபமாய் அதிகரித்து வரும் பாங்கு நம்பிக்கைக்குரிய விஷயம்.

அதே சமயம், நாணயத்தின் மறுபக்கத்தையும் அலசினால்தான் சில யதார்த்தங்கள் புரியும்! ஆர்வமிகுதியால், எல்லா சிறுதானியங்ளையும், வீட்டுக்கு வாங்கிப்போடும் கணவன்மார்களில், அந்த சிறு தானியங்களின் பெயரைக்கூட கால மாற்றத்தால் மறந்துவிட்ட குடும்பத்தால், அவற்றை வாய்க்கு ருசியாய் எப்படி சமைக்க முடியும் என்பதை யோசிப்பவர்கள் மிகக் குறைவு. இதனால், வாங்கி வைத்த வரகும், சாமையும் அடுப்படி ஷெல்ஃபில் இன்னும் சில வீடுகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

சிறு தானிய ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே முக்கியத்துவம் அதன் தயாரிப்பு, சமையல் குறித்தும் தரப்பட வேண்டும் என்பதன் நீட்சியே இந்தப் பதிவு!

சிறுதானிய சமையல் முத்துக்கள்:

சிறுதானிய சமையல் குறித்து நமக்கு பொதுவாக ஏற்படும் சில கேள்விகள், சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் விதமாக இந்த தொகுப்பு:

எப்படிச் சமைப்பது?

சாமை, வரகு, குதிரவாலி, தினை (Husked Grains) ஆகியவை நெல் அரிசியைப் போன்ற தன்மை உடையது. அரிசியை சமைத்து உபயோகப்படுத்தும் அதேமுறையில் பயன்படுத்த முடியும். இவற்றை சமைப்பதற்கு முன், 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்க வேண்டும். சமயத்தில் கல், மண் இருந்தால் நீக்கிக் கொள்ளவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எலுமிச்சை, புதினா, புளியோதரை, தேங்காய், தக்காளி என அனைத்து “கலந்த சாதங்களையும்“ இவற்றில் செய்ய முடியும். தோசை, சப்பாத்தி, அடை செய்வதற்கு ராகி, கம்பு, சோளம் (De- Husked Grains) ஏற்றவை.

நாம் சாதாரணமாக அரைக்கும் (நெல் அரிசியிலான) இட்லி தோசை மாவுடனும், பிசையும் (கோதுமையிலான) சப்பாத்தி மாவுடனும், எந்த சிறுதானிய மாவையும் வேண்டிய அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

குழந்தைகளை உண்ணச் செய்வது எப்படி?

டேஸ்டாக செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். நீங்கள் தொடர்ந்து சாப்பிடும்போது அவர்கள் தாங்களாகவே சாப்பிட முன்வருவார்கள். எனவே இது உங்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளை படிப்படியாய் தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. விதவித வகையிலும், சுவையிலும் அவர்களுக்கு நாம் இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். முதலில் வறுத்த தானியங்களை இனிப்பு வடிவில் (லட்டு) கொடுத்து, பின்பு மெல்ல கஞ்சியாகவும், உப்புமாவாகவும், இட்லி தோசை மாவுடன் கலந்தும் புகட்டலாம். இன்னும் எளிமையாய் தருவதானால், சோளப் பொரியை வழக்கமான நொறுக்குத் தீனிக்குப் பதில் கொடுக்க முடியும். இதன் அதிக நார்சத்தும், புரதமும் குழந்தையின் உடலுக்கு நன்மையே!

செரிமான தொந்தரவு, மந்தம் ஏற்படுமா?

அறிவியல் ரீதியாய் இதுவொரு தவறான நம்பிக்கை. பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் நார்சத்து இல்லாததால் அளவில் அதிகமாக உட்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, வயிறுமுட்ட உண்டால் மட்டுமே போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிறு தானியங்களின் நன்மை பயக்கும் அதிக நார்ச்சத்து, அளவில் குறைவாக உண்டாலே முழுமையை ஏற்படுத்தும். நீண்ட நேரம் பசியைத் தாங்கக் கூடிய தன்மையையும் அளிக்கும். இதைச் செரிமான மந்தம் என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

அதேவேளையில், உடலுக்குத் தேவையான சக்தியை கொடுப்பதிலும், வைட்டமின், மினரல் போன்ற நுண் ஊட்டச்சத்தை வாரி வழங்குவதிலும் இவை அரிசியை விட 100% மேல். இதனால், வயிறுமுட்ட உண்டால் தான் நல்ல செரிமானம், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும் எனும் எண்ணத்தை முதலில் நாம் மாற்றிக்கொள்வது அவசியம்.

இவற்றில் அமிலத்தன்மை (Acidity) குறைவு, காரத்தன்மை (Alkaline Foods) அதிகம் என்பதால், உள்ளபடி மற்ற உணவுகளை விட இவை எளிமையாய் செரிமானமாகக் கூடியவை என்பதே உண்மை. மேலும், உடல் உழைப்பு என்றால் என்ன என்பது கூட அறியாத தலைமுறையாய் மாறிவரும் நமக்கு, உட்கொள்ளும் அளவைக் குறைத்தும், சத்திலும் சக்தியிலும் மிகுந்து காணப்படும் சிறு தானியங்கள், சந்தேகமே இல்லாமல் ஒரு வரப்பிரசாதமே!

சிறு தானியங்கள் காஸ்ட்லி இல்லையா?

பார்க்கப்போனால், ஏழைகளின் உணவு, சீப்பானது என ஸ்டேட்டஸ் கருதி காலப்போக்கில் (1960-70 களில்) ஒதுக்கப்பட்டவைதான் இவை. What a paradox! 2014இல் இவற்றின் விலை குறித்த கவலை நமக்கு எழுகிறது!!

இவற்றில் கம்பு, ராகி, சோளம் ஆகியவை நெல் அரிசியை விட விலை குறைவுதான் என்றாலும் பிற தானியங்களை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கும் நிலைமை உள்ளதற்குக் காரணம்:

  • உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நெல் அரிசிக்கு, அரசால் அளிக்கப்படும், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள், சந்தையில் ஊக்கம் (Large Demand - Large Production - Low Cost)
  • நுகர்வோர் சந்தையில் அரிசியை விட இவற்றிற்கான தேவை குறைவாக இருப்பதால் உற்பத்தியும் குறைவாகவே உள்ளது. (Low Demand - Low Production - Higher Costs)
    முன்னர் கூறியதுபோல, உட்கொள்ளும் அளவு குறைவதால் weight to weight அடிப்படையில் அரிசியுடன் ஒப்பிட்டால், சிறு தானியங்கள் மூலம் சேமிப்புதான். மேலும், இவற்றின் பயன்பாட்டால் மறைமுகமான மருத்துவச் செலவுகள் குறைந்து வாழ்க்கைத் தரம் உயர்வதும் சிந்திக்கப்பட வேண்டியது.

சிறு தானியங்களை வேக வைக்கவும், சமைக்கவும் அதிக நேரம் தேவைப்படுமா?

இல்லை!

சிறு தானியங்களில் டேஸ்ட் கிடைக்குமா?

நிச்சயமாக. இது சிறுதானியங்களை தங்கள் வாழ்வில் வழக்கமாக்கியவர்கள் அனைவரும் கூறுவது. இந்த கேள்வியை கோவையைச் சேர்ந்த சிறுதானிய பிரியை சுந்தராம்பாள் அம்மாவிடம் கேட்டால், “வாரத்துல 7 நாளும் அரிசி சாப்பிட்ட நாங்க, எப்போ தினையில பாயாசமும், தயிர் சாதமும், வரகுல நாட்டு காய்கறி போட்டு பிரியாணியும், பணியாரமும், குதிரவாலில சாம்பார் சாதமும், சூப்பும், சாமைல கிச்சடியும் செஞ்சு சாப்பிட்டு ருசிக்க ஆரம்பிச்சமோ, அதுக்குப் பெறகு, இதையெல்லாம் அரிசில செஞ்சு சாப்டா சப்பையா இருக்குதுங்கோ!” என்கிறார். ஆகையால், தேவை கொஞ்சம் ஆர்வம்.. கொஞ்சம் கற்பனைத் திறன் மட்டுமே!!

தினை சர்க்கரைப் பொங்கல்

தினை பொதுவாகவே, புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவு. இவை வளரும் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியம். ஆதலால், தினையை குழந்தைகள் விரும்பும் வண்ணம், இனிப்புக் கஞ்சியாக குழைத்து நாட்டு சர்க்கரை கலந்து ஊட்டலாம். சர்க்கரைப் பொங்கல் செய்முறை.

தேவையானவை:

தினை - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் - முக்கால் கப்
நெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
முந்திரி - 7
உலர் திராட்சை - 7
ஏலம் பொடி - கால் டீஸ்பூன்

தயார் செய்தல்:

குக்கரில் தினை/பாசிப்பருப்பு கலவையை 2 கப் தண்ணீர் இட்டு 4 விசில் வரும் வரை சமைக்கவும். நாட்டு சர்க்கரைக் கரைசலை மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு சிம்மில் கொதிக்க வைக்கவும். சமைத்த கலவையை, இந்த கரைசலோடு சேர்த்துக் கிண்டவும். மேலும், இதனுடன் ஏலப்பொடியை சேர்த்து கலக்கவும். நெய்யை தனியாக கொதிக்க விட்டு, அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுக்கவும்.

இவை அனைத்தையும் தினைப் பொங்கலோடு சேர்த்துப் பரிமாறவும்.

சிறு தானிய சாதம்

ஒரு கப் சாமை (அ) வரகு (அ) தினை (அ) குதிரைவாலி தானியத்தை தண்ணீரால் சுத்தம் செய்து கல், மண்ணை நீக்கி விடவும். இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சுத்தம் செய்த தானியங்களை சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். நன்றாக குழைந்த சாதம் வேண்டும் எனில், ப்ரெஷர் குக்கரிலும் இரண்டு விசில் வரை வைத்து சமைக்கலாம். சாதாரண அரிசி சாதம் போலவே, இதனை சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் என அனைத்துமே சேர்த்து உண்ணலாம்.