‘‘ஏற்கெனவே என் நண்பர் ஒருவர் சிவாங்கா விரதம் இருந்து தென்கைலாயமாம் வெள்ளியங்கிரி மலை ஏறி வந்திருந்தார். அவரும் நானும் இணை பிரியா நண்பர்கள். அவர் விரதம் இருந்த காலத்தில் நான் கூடவே இருந்து கவனித்ததில் அவரிடம் பல விஷயங்களில் மிகுந்த மாற்றத்தை உணர்ந்தேன். அவருடைய அணுகுமுறைகளே மாறியிருந்தது. அப்போதே முடிவெடுத்தேன், அடுத்த பௌர்ணமியில் சிவாங்கா விரதத்திற்கான தீட்சை பெற வேண்டும் என்று. அதேபோல் தீட்சை பெற்று விரதமிருந்து மலையேறி வந்தேன். அந்த அனுபவத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டுகிறது. கை கால்கள் நடுங்குகின்றன.

தீட்சை பெற்று விரதமிருந்து மலையேறி வந்தேன். அந்த அனுபவத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டுகிறது. கை கால்கள் நடுங்குகின்றன.

சிவாங்கா என்பது சிவனின் அங்கமாவது என்று சொன்னார்கள். உண்மையில் அப்படித்தான் இந்த சாதனா முறைகளும் இருந்தன.

இந்த சாதனாவில் 42 நாட்கள் இருவேளை குளித்து, இருவேளை மட்டும் உணவருந்தி, தினமும் சிவ நமஸ்காரப் பயிற்சி 21 முறை செய்து, மந்திர உச்சாடனம் செய்து… முதலில் இதையெல்லாம் அறிந்தபோது, கடுமையான கட்டுப்பாடுகள் போலத் தோன்றியது. என் அன்றாட அலுவல்கள் அனைத்தும் கெட்டுவிடும்போலத் தோன்றியது. ஆனால் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு இந்த பக்தி நெறிகளிலும், பயிற்சியிலும் என்னுடைய ஈடுபாடு கூடிக் கொண்டேதான் போனது. தவறாமல் பக்தி நெறிகளையும், பயிற்சியையும் கடைப்பிடித்தேன். உண்மையில் என் சுபாவம் அப்படிக் கிடையாது. ஓரிடத்தில், ஒரு விஷயத்தில் நிலைத்து இருக்க மாட்டேன்.

என் உணவுப் பழக்கமும் மிகவும் தாறுமாறாக, ஓர் ஒழுங்கின்றி இருக்கும். ஆனால் இந்த சாதனா காலத்தில் நானே வியக்கும்படி, தினம் இருவேளை மட்டும் கட்டுப்பாட்டுடன் உணவருந்தினேன். அதன் காரணமாகவேகூட என் உடல், நாளுக்கு நாள் நெகிழ்வுத்தன்மையுடன் மாறியதை உணர முடிந்தது.

இந்த முழு சாதனா செயல்முறையும், வாழ்க்கையை நான் அணுகும் முறையையே மாற்றிவிட்டது. இந்த விரத காலம் முழுவதிலுமே, குறிப்பாக சாதனா செய்யும் நேரங்களில் என்னுள் மிகுந்த தீவிரமான சக்தியை உணர்ந்தேன். வீட்டின் சூழ்நிலையே தெய்வீகமாக மாறிவிட்டதாக வீட்டில் அனைவரும் அடிக்கடி பகிர்ந்தனர். வீட்டிலேயே என்னை மிகவும் மதிப்பாகப் பார்த்தனர்!

இந்த சாதனாவில் ஒரு முக்கிய அம்சம், 21 பேரிடமிருந்து பிச்சை பெறும் செயல்முறை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதில் பிச்சைப் பாத்திரம் ஒன்று தரப்பட்டது; 21 நபர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும். ஒருநாள் காலை பிச்சை எடுக்க முடிவு செய்து தயாரானேன். பாத்திரத்தை எடுக்கும் முன் சத்குருவின் படத்தைப் பார்த்தேன்… எங்கிருந்துதான் என் கண்களில் கண்ணீர் வந்ததோ?! அவ்வளவு கண்ணீர்! இனம் தெரியாமல் என்னையறியாமல் அழுதேன். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பைக்கில் சென்று சில கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஒரு கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்தினேன்.

சட்டையைக் கழற்றிவிட்டு கோயிலில் சாமியை வணங்கிவிட்டு, பிச்சைப் பாத்திரத்துடன் திரும்பி ஒரு அடி எடுத்து வைத்தேன்.

அப்போதுதான் என் சொத்துக்கள், சொந்தங்கள், நண்பர்கள், மனைவி, மகள்கள் என எல்லாம் ஒடிந்து விழுந்தன. என் அகங்காரமெல்லாம் சின்னா பின்னமானது. நான் யாரென்று பெருமிதத்தோடு கண்ணாடியின் முன் நின்று தலை வாரும்போதும், உடை அணியும்போதும், மற்றதெல்லாம் நான் போட்ட வேஷமாகவே தோன்றியது. அப்போது என் வேஷம் கலைந்துவிட்டது! என் அடையாளமெல்லாம் அழிந்துவிட்ட ஓர் உணர்வு. அப்போது என்னை ஒரு மனிதனாகக்கூட நினைக்க முடியவில்லை. இந்த உலகில் ஓர் உயிராகத்தான் உணர முடிந்தது.

மேல் சட்டை அணியாமல் பிச்சைப் பாத்திரத்தை மட்டும் ஏந்தியபடி தலையைக் குனிந்தவாறு கைகளை நீட்டியபடி இருக்க, ஒரு பரபரப்பு எனக்குள் தொற்றிக் கொண்டது. ஒரு வழியாக 30 நிமிடங்கள் கழித்து முதல் பிச்சையை நடுங்கிய கைகளுடன் ஏற்றேன். பிறகு ஊருக்குள்ளும் ஆஉம் நமஷிவாய உச்சரிப்போடு பல வீடுகளுக்குச் சென்று 21 பிச்சைகள் எடுத்து முடித்தேன். இந்தப் பிச்சை செயல்முறையில் மட்டுமே எனக்கு நிறைய அனுபவங்கள். ‘நான்’ என்பது நிச்சயமாக ஆட்டம் கண்டது. சிலர் என்னைப் பற்றி அறிய ஆர்வம் காண்பித்தார்கள், சிலர் என் காலில் விழுந்து வணங்கினார்கள். சிலரை சத்குருவாகவே பார்த்து, அவர்கள் கால்களில் நான் விழுந்து வணங்கினேன். கண்களில் தொடர்ந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. இந்தச் செயல்முறை என்னை மிகவுமே கரைத்தது.

நல்லபடியாக தொடர்ந்து சாதனாக்களைச் செய்து 42 நாட்கள் கழித்து, சிவராத்திரி அன்று தியானலிங்கத்தில் இருந்து விட்டு, இறுதிக்கட்டமாக அடுத்த நாள் அதிகாலை தியானலிங்கத்திலிருந்து புறப்பட்டு வெள்ளியங்கிரி மலை ஏறி சாதனாவை நிறைவு செய்தோம். நான் இதற்கு முன்பு இதுபோன்று பெரிய மலை ஏறியது கிடையாது. ஆனால் தொடர்ந்து சிவ நமஸ்காரம் செய்து வந்ததன் காரணமாக பெரிய கஷ்டங்கள் இன்றி மலையேறினேன்.

எப்படியோ என் மனதைத் தயார் செய்து பிச்சைக்குச் சென்றேன். அதில் கிடைத்த அனுபவங்கள், உணர்ந்தவைகள் நம்புவதற்குக் கடினமானது. இந்தப் புனிதமிக்க கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருந்த பார்வையை இந்த அனுபவம் தகர்த்துவிட்டது.

என்னுடன் வந்த சிலர் பெருத்த உடலைக் கொண்டிருந்தனர், ஆனாலும் எனக்கு இணையாக அவர்களும் மலையேறினர். இந்த விரத காலத்தில் செய்த பயிற்சிகளால்தான் தாங்கள் இப்படி மலையேற முடிவதாக அவர்கள் அப்போது பகிர்ந்தனர். அது மட்டுமல்ல, நீண்ட நாட்களாக இருந்த மூட்டு வலி போன்ற பல உடல் தொந்தரவுகளிலிருந்தும்கூட நிவாரணம் பெற்றதாக அப்போது அவர்கள் கூறினர்.

வெள்ளியங்கிரி மலையில் ஏறும்போது, தொடர்ந்து மந்திர உச்சாடனத்துடன் மலையேறினோம். மேலே ஏறியபோது, உடல் முழுதும் அதிர்ந்தது. உடன் வந்தவர்கள் யாரும் என் கவனத்தில் இல்லை. தீவிர மந்திர உச்சாடனத்துடன் நான் சென்று கொண்டே இருந்தேன். சிவனே என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாகத்தான் நினைத்தேன். அந்த மலையின் அதிர்வு எனக்குள் மிக ஆழமாகவே ஊடுருவியது. இதுபோன்று இதற்கு முன்பு நான் எப்போதும் உணர்ந்ததில்லை.

சத்குரு சொன்னதையே நான் மீண்டும் சொல்கிறேன், தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது வெள்ளியங்கிரி மலை ஏறி வர வேண்டும்.

சத்குருவே சரணம்!

ஆசிரியர் குறிப்பு:இந்த மஹாசிவராத்திரியில், பக்தி எனும் தீ உங்கள் இதயத்தில் பற்றிக்கொள்ள அனுமதித்து, சிவனின் ஓர் அங்கமாக மாறுங்கள்!

ஆண்களுக்கான சிவாங்கா சாதனா, இருப்பின் அடிப்படை மூலமான ஷிவா அல்லது ஒன்றுமில்லாத தன்மையுடனான ஒருவரின் விழிப்புணர்வு தொடர்பை அதிகரிக்கும் ஒரு சக்திவாய்ந்த 42-நாள் சாதனாவாகும்.

2020 ஜனவரி 10 அன்று உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தீட்சை வழங்கப்பட உள்ளது. 2020 பிப்ரவரி 21, மஹாசிவராத்திரியன்று ஈஷா யோக மையத்தில் சாதனா நிறைவுறுகிறது.

மேலும் தகவல்களுக்கு, தொடர்புகொள்ளவும் +91 8300083111 or email info@shivanga.org or visit www.shivanga.org.

பதிவுசெய்ய