கடைசி ஓவர்ல 30 ரன் தேவைப்பட்டாலும் நம்ம ‘கேப்டன் கூல்' தோனி அசாதாரணமா எந்தவித பதட்டமும் இல்லாம அடிக்கும் சிக்ஸர்கள பாக்கும்போது, இந்த கோடையிலும் மனிதர் இவ்வளவு கூலா இருக்காரே அப்படினு நினைக்கத் தோனுது.

நம்ம அன்றாட வாழ்க்கையில நாம சிக்ஸர் அடிக்கிறோமோ இல்லையோ, கோடை வெயில்னால அவுட் ஆகிடாம இருக்கறதுக்கு நம்ம உடல் சூட்டை தணிக்குறது ரொம்ப முக்கியம். கோடைக்கு இதமாக உடல் சூட்டை தணிக்குறதுக்கு இயற்கை அளித்துள்ள ஒரு விஷயம்தான் இந்த நுங்கு.

umayal-paatiஉமையாள் பாட்டிக்கு சொந்தமான நிலத்தில் வரப்பு ஓர பனைமரங்களில் நுங்கு இறக்க வேண்டுமென சொல்ல, இலவசமாக நுங்கு சாப்பிட்டு எஞ்சாய் செய்யலாமென நானும் கிளம்பினேன்.

காலையிலேயே எங்களுக்கு முன்னாடியே பாட்டி அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தாள்.

“என்ன பாட்டி… பனை மரத்துக்கு கீழ நின்னு பால் சாப்பிட வந்தீங்களா?!” பாட்டியிடம் வழக்கம்போல வாயைப் பிடுங்கினேன்.

கொளுத்தும் வெயிலில் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் வற்றிப்போவதைத் தடுப்பதற்கு கோடைக் காலத்தில் கிடைக்கும் நுங்கினை அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் வெயிலில் செல்லும்போது மயக்கம் வருவது போன்ற பாதிப்புகள் குறைகிறது

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாட்டி மென்மையாக புன்னகைத்துவிட்டு நுங்கு இறக்குவதிலும், அங்கு வந்திருந்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதிலும் மும்முரமாக இருந்தாள்.

கடைசியில் ஒரு குலை நுங்கினை அப்படியே அங்கிருந்த அனைவருக்கும் பங்கிட்டு வழங்கினாள் பாட்டி!

கட்டியாக உள்ள கல் நுங்கினை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை வரும் என்பதைக் கூறி, இளம் நுங்கினை சாப்பிடுமாறு அறிவுறுத்தினாள் பாட்டி. அங்கிருந்த நாங்கள் அனைவரும் வயிறாற நுங்கினை சாப்பிட்டுவிட்டு, வயல்வெளியில் அப்படியே நடக்க ஆரம்பித்தோம். நுங்கு சாப்பிட்டு முடித்ததும் ஒரு வித குளுமை உடலில் தெரிவதைக் கண்ட நான், பாட்டியிடம் நுங்கு சாப்பிடுவதில் ஏதேனும் ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா என்பதை நடந்துகொண்டே கேட்கலானேன்.

நுங்கில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க் போன்ற பலவித தாது சத்துக்கள் இருப்பதால் நுங்கு சாப்பிடுவதால் கோடை காலத்தில் உடலுக்கு நல்ல தெம்பு கிடைப்பதோடு, நுங்கில் உள்ள நீர்ச்சத்தினால் உடல் குளுமையாகவும் செய்கிறது.

நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் தீர்கிறது. கொளுத்தும் வெயிலில் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் வற்றிப்போவதைத் தடுப்பதற்கு கோடைக் காலத்தில் கிடைக்கும் நுங்கினை அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் வெயிலில் செல்லும்போது மயக்கம் வருவது போன்ற பாதிப்புகள் குறைகிறது.

வெயில் காலத்தில் உஷ்ணத்தால் ஏற்படும் சின்னம்மை போன்ற நோய்கள், நுங்கு சாப்பிடுவதால் வராமல் தடுக்கப்படுகிறது. நுங்கில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளதால் கல்லீரலிலுள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதோடு, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள்வரை அனைத்து தரப்பினரும் நுங்கினை தாராளமாக சாப்பிடலாம்

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைகளுக்கு நுங்கினை நசுக்கி வியர்க்குரு இருக்குமிடத்தில் நன்றாகத் தேய்த்துவர வியர்க்குரு பிரச்சனை தீரும். மேலும், வெயில் கொப்புளங்கள் உருவாகும் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டு வருவதால், உடல் குளுமையடைந்து வெயில் கொப்புளங்கள் வராமல் தடுக்கப்படும்.

இரைப்பை புண் என்று சொல்லப்படும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இளம் நுங்கினை அரைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து 10 நாட்கள் வரை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

இத்தனை ஹெல்த் டிப்ஸ்களையும் போகிறபோக்கில் சொல்லிச் சென்ற பாட்டி, நுங்கினை அதன் மேல் தோலுடன் சாப்பிட்டால்தான் நார்ச்சத்துக்கள் அப்படியே கிடைக்கும் என்பதையும், குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள்வரை அனைத்து தரப்பினரும் நுங்கினை தாராளமாக சாப்பிடலாம் என்பதையும் குறிப்பிட்டாள்.

பாட்டியிடம் பேசிக்கொண்டே வயல்வெளிகளைத் தாண்டியபோது, ஊர் வந்துவிட, பாட்டியிடம் சொல்லிவிட்டு விடை பெற்றேன்.

“என்னப்பா நுங்கு சாப்பிட்டு bill pay பண்ணாம போறியே?!” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்ட பாட்டி, ஒரு பனை ஓலையில் GSTயுடன் சேர்த்து ஹெவியாக ஒரு amountஐ எழுதிக்காட்ட,

“நுங்கு தின்னவன் ஓடிப் போயிட்டான்
அதை நோண்டித் தின்னவன் மாட்டிக்கிட்டான்” என்ற கிராமத்து பழமொழி என் நினைவுக்கு வந்தது.