கிரிக்கெட்டில் தோனி; ஓட்டத்தில் உசேன் போல்ட்; செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த் என புகழ்பெற்ற விளையாட்டுகளையும் வீரர்களையும் மட்டுமே எப்போதும் கவனிக்கிறோம். அகத்தியரிடமிருந்து தோன்றிய களரிப்பயட்டு எனும் வீர விளையாட்டை மறந்தே போய்விட்டோம். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் இந்த வெற்றியின் மூலம் நமக்கு அதனை நினைவூட்டியுள்ளனர்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில், ஜுன் 30 முதல் ஜுலை 2 வரை, 2013-14ஆம் ஆண்டிற்கான தேசியக் களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் ஸ்போர்ட்ஸ் & சர்வதேச களரிப்பயட்டு கூட்டமைப்புடன் இணைந்து இந்தியக் களரிப்பயட்டு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் 'ஈஷா சம்ஸ்கிருதி' மாணவர்களும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களும் தமிழ்நாட்டின் சார்பாகக் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் தேசிய அளவில், கேரளத்தை அடுத்து, பதக்கப் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டி
களில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் மட்டும் "ஈஷா சம்ஸ்கிருதி" மாணவர்கள் கலந்துகொண்டனர். உயரம் தாவி எத்துதல் (ஹை-கிக்), மெய்பயட்டு (உடலை வளைத்து பயிற்சி செய்தல்), கைப்போர் (ரெஸ்ட்லிங்), வாளும் கேடயமும் (ஸ்வார்ட் & ஷீல்ட்), உருமி (சுருள்) போன்ற போட்டிகள் நடைபெற்றன.

14 மாநிலங்களிலிருந்து சுமார் 400 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றனர். 2 வெள்ளி 5 வெண்கலம் என ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் 7 பதக்கங்களைப் பெற்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடில் அமைந்துள்ள ஜி.சி.சாமி குருக்கள் மெமோரியல் கைரளி களரி சங்கத்திலிருந்து திரு.ஆனந்தன் குருக்கள் அவர்கள், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். ஈஷா சம்ஸ்கிருதியின் களரிப் பயிற்சி ஆசிரியர் திரு.பிஜீஷ் அவர்கள், சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு பயிற்சியளிப்பது மனதிற்கு நிறைவாக உள்ளதாகச் சொன்னார்.

சி.டி தாசன் (2013-2014 ஆம் வருடத்திற்கான ஆர்கைனைசிங் கமிட்டி கன்வீனர்), திரு. பூந்துற சோமன் (செக்ரட்டரி ஜெனரல் ஆப் இந்தியன் களரி பெடரேஷன்), முரளிதரன் குருக்கள் ஆகியோர் ஈஷா சம்ஸகிருதி மாணவர்கள் செய்யும் களரி பயிற்சிகளைப் பார்த்து, இந்த வகையான நளினமான, மென்மையான களரி செய்வதைக் கண்டு வெகு நாட்களாகி விட்டன. இவர்களுடைய களரியைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இதமாகவும் உள்ளது என்றனர்.

ஜுனியர் சிறுவர்கள் பிரிவில் கைப்போர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வாமி பிரஷாந்த், போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன், தனது காலில் அடிபட்டு வலி இருந்ததாகவும் போட்டியில் மிகத் தீவிரத்துடன் ஈடுபட்டதால் வலி தெரியவில்லை என்றும் கூறினார். ஜூனியர் சிறுமிகள் பிரிவில் ஹை-கிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மா ஆலேக்கியா, மற்ற குழுக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, தாங்கள் தீவிரத்துடனும் அதே சமயம் மென்மையுடனும் விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

ஸ்வாமி ஆதர்ஷ், சிலர் தங்களிடம் அறிமுகமாகும்போது மேற்கத்திய பாணியில் கைகுலுக்க முற்பட்டதாகவும் ஆனால் தாங்கள் நமஸ்காரம் மட்டுமே செய்வதைப் பார்த்து, அங்கிருந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் குருக்களும் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார். மேலும் அவர், களரியை தாங்கள் வெறும் உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல் யோகாவோடு சேர்த்து கற்றதால் போட்டியில் விழிப்புணர்வுடன் விளையாட முடிந்ததாகக் கூறினார்.

களரியில் கேரள மாநிலமே கோலோச்சி வரும் தற்போதைய சூழலில், தமிழ்நாடும் "ஈஷா சம்ஸ்கிருதி" மாணவர்கள் மூலம் தனது சாதனைப் பயணத்தைத் துவக்கியுள்ளது. குழந்தைகளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.