“மை நேம் இஸ் முருகன் சார்”
“விச் ஸ்டாண்டர்டு ஆர் யு ஸ்டடியிங்?’’
“சிக்ஸ்த் ஸ்டேண்டர்டு சார்”
“வாட்’ஸ் யுவர் ஃபாதர்?’’
“ஹி இஸ் ஒர்க்கிங் ஏஸ் எ டெய்லர் சார்!”

அத்தனை கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் பதில் சொன்னது ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? முருகனும், அவன் நண்பர்களும் வசிப்பது நகரத்தில் அல்ல, படிப்பது கான்வென்ட்டில் அல்ல. காலங்காலமாய் படிப்பறிவில்லாமல் வாழ்ந்த மலைவாழ் பரம்பரையினர் இவர்கள். இப்போது ஆங்கிலமும், கம்ப்யூட்டர் அறிவும், விளையாட்டுத் திறமையும், பொது அறிவும் கைவரப் பெற்றிருக்கிறார்கள்.

தானிக்கண்டி... மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கொலுசு கட்டியதுபோல் அழகிய கிராமம். 72 குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன. வாழ்வது வனாந்தரம் என்பதால், போக்குவரத்து வசதிகூட இல்லாத கிராமமாக இருந்தது. காட்டில் கான்ட்ராக்டர்களுக்கு கூலிக்கு விறகு வெட்டித் தருவதுதான் ஜீவனத்துக்கான வழி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோகா மையம் வெள்ளியங்கிரி மலைச்சாரலில் ஏற்படுத்தப்பட்ட 1993 ஆம் ஆண்டில் இருந்து இந்த தானிக்கண்டி கிராமம், ஈஷாவின் தத்துப்பிள்ளை.

ஈஷாவின் கட்டமைப்புப் பணிகளில் இந்தக் கிராமத்து இளைஞர்களே ஆர்வமாய் ஈடுபட்டனர். திறமைக்கேற்ற வேலையும் வேலைக்கேற்ற சம்பளமும் வழங்கப்பட்டதோடு, நுணுக்கமான சில வேலைக்களுக்கென சிறப்புப் பயிற்சிகளும் ஈஷாவால் அளிக்கப்பட்டன. அனைவருக்கும் எளிய முறை யோகப் பயிற்சிகளும் தியானமும் கற்றுத் தரப்பட்டன.

மையத்தின் பராமரிப்புப் பணிகள் அனைத்திலும் இன்றும் அவர்கள் உயிராய் உழைக்கிறார்கள். பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு இவர்களில் பெரும்பாலானோர் சத்குருவுக்கு நெருக்கம்.

ஈஷாவில் சத்குருவால் நடத்தப்படும் இன்னர் என்ஜினியரிங் இன்டென்ஸிவ் வகுப்பில், அரை நாள் நிகழ்ச்சி, தானிக்கண்டி மலை கிராமத்தில்தான் நடக்கிறது. இப்படி வகுப்பு அங்கே நிகழ்கையில் பங்கேற்பாளர்களை வரவேற்கும் விதமாய் மலைவாழ் மக்களின் தனிப்பட்ட பாணியில் நடனமும் இசையும் நடைபெறும், இது ஈஷாவில் மிக பிரசித்தம். இவர்களின் கள்ளங்கபடமற்ற வாழ்க்கைமுறையை சர்வதேசப் பங்கேற்பாளர்கள் உணர்ந்திட சத்குரு ஏற்படுத்தும் எழுச்சியூட்டும் அனுபவம் இது. தானிக்கண்டி கிராமத்து ஆண்களும் பெண்களும், டைலரிங், கூடை முடைதல், பாய் பின்னுதல் என ஈஷாவின் கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பிரிவில் மும்முரமாகப் பணியாற்றுகிறார்கள்.

பள்ளிக்கூடமே போகாமல் இருந்த தானிக்கண்டி குழந்தைகளை உற்சாகப்படுத்தி படிக்கவைப்பதில் ஈஷாவின் பங்கு மிக அதிகம். அரசாங்கம் கட்டித் தந்த பள்ளிக்கு செல்ல, ஆசிரியர்கள் பஸ் ஸ்டாப்பிலிருந்து இரண்டு கி.மீ தூரம் வனப்பகுதியில் நடக்கவேண்டி இருந்ததாலும், யானை பயத்தாலும் சரியாகப் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர். ஆசிரியர்களே வராவிட்டால் மாணவர்கள் கதி?
இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து வசதியும் அமைக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டிலும் ஆப்சென்ட் இல்லை.

மாலை நேரங்களில் ஈஷாவில் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு டியூஷன் எடுக்கப்படுகிறது. டியூசன் என்றால் வெறும் கணக்கு, ஆங்கிலம் எனக் கற்பிப்பது மட்டுமல்ல. பள்ளிப்பாடங்களுடன் ஆடல், பாடல், இசை, தனித்திறன் வளர்ப்புப் பயிற்சிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. பொது அறிவை வளர்க்க இவர்களுக்கு சில புத்தகங்களை படிப்பதற்கான வசதியையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

மாதம் ஒருமுறை நேரடி விளக்கம் பெறவும் பொழுதுபோக்குக்காகவும் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள், விமான நிலையம், பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு இந்த கிராமக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தானிக்கண்டி குழந்தைகள் கோ-கோ விளையாட்டின் தகுதிச் சுற்றில் தேர்வாகி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மலைவாழ் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்றனர்.

ஈஷாவின் அருகில் வாழும் இந்த மக்களின் மலர்ச்சிக்கென திட்டங்கள் வகுத்துச் செயல்பட ஈஷாவில் ஒரு தனிக் குழுவே இயங்குகிறது. கிராமத்தினருக்கான எல்லா மருத்துவத் தேவைகளையும் ஈஷாவே பூர்த்தி செய்கிறது.

வனமும் மலையும் மட்டுமே வாழ்விடமாய் இருந்தாலும், அந்த மலைவாழ் கிராமத்தின் இன்றைய தலைமுறை தலை நிமிரத் தொடங்கிவிட்டது. என்றென்றும் ஈஷாவின் துணையோடு!