தியானலிங்கத்தில் நடைபெற்ற பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள், பசுமைப் பள்ளி இயக்கம்... ஆகியவற்றைப் பற்றி இந்த வாரம் காண்போம்...

தியானலிங்கத்தில் 16வது பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள்

தியானலிங்கத்தின் 16வது ஆண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் ஜூன் 24ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். நாள் முழுவதும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் தியானலிங்கக் கருவறையில் தங்கள் சமய உச்சாடனங்களை செய்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தியானலிங்கக் கருவறையில் சரியாக காலை 6 மணிக்கு மஹா மந்திர உச்சாடனை ஈஷா பிரம்மச்சாரிகளால் துவங்கப்பட்டது. நமசிவாய மந்திரத்தைத் தொடர்ந்து, சீக்கியர்கள் குர்பானி உச்சாடனங்களையும், கிருஸ்துவர்கள் கிறித்துவ உச்சாடனங்களையும், லெபனானைச் சேர்ந்த பாடகர்கள் இஸ்லாம் மற்றும் சூஃபி உச்சாடனங்களையும், ஹிந்து பண்டிதர்கள் மஹா மந்திரத்தோடு வேத மந்திர உச்சாடனங்களையும் செய்தனர்.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் குரு பாதுகா ஸ்தோத்திரமும் பாடப்பட்டது. தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனை என்னும் இசை அர்ப்பணிப்பை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இசைக் கலைஞர்கள் வழங்கினர்.

காலை 6 மணிக்குத் துவங்கிய இந்தக் கொண்டாட்டங்கள், மாலை 5.30 மணிக்கு குருபூஜையுடன் நிறைவு பெற்றது.

விழுப்புரத்தில் பசுமை பள்ளி இயக்கம்

விழுப்புரத்தில் பசுமை பள்ளி இயக்கம், green school movement in villupuram

ஈஷா பசுமைக் கரங்களும், ஆரோவில்லின் "பிச்சாண்டிகுளம் வன உயிர் ஆராய்ச்சி மையம்" மற்றும் விழுப்புரம் பள்ளி கல்வித் துறையும் இணைந்து, விழுப்புரத்தில் பசுமைப் பள்ளித் திட்டத்தை ஜூன் 24ம் தேதியன்று தொடங்கினர். தமிழக அரசு தேர்வு இயக்குனர் திரு. தேவராஜன், விழுப்புரம் தலைமை கல்வி அலுவலர் திரு. மார்ஸ், விழுப்புரம் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிசாமி ஆகியோர் இத்திட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் பெண்கள் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், திரு. தேவராஜன் அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். 900 சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களும், 450 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் விழுப்புரத்தில் 3.5 லட்சம் மரக்கன்றுகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஈஷா வித்யாவில் டெல் (DELL) பணியாளர்கள்!

பிரபல கணிணி நிறுவனமான டெல் நிறுவனத்தின் 120 பணியாளர்கள் ஒன்றிணைந்து கோவை ஈஷா வித்யா பள்ளிக்கு ஜூன் 20ம் தேதியன்று விஜயம் செய்தனர். பள்ளி குழந்தைகளுக்குத் தேவையான கல்வி பொருட்களை (Learning Material (LM) kits) உருவாக்கிக் கொடுத்தனர். இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு இருக்கும் கல்வியைப் பற்றிய பயம் விலகி, பாடங்களை நன்கு புரிந்துகொள்ள முடியும். இவர்கள் அனைவருக்கும் எளிமையான உப-யோகா பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.