ஈஷா யோகா மையத்தில் நிகழும் தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான யக்‌ஷா  கொண்டாட்டத்தில், இரண்டாம் நாள் இரவான நேற்று, சகோதரிகள் ரஞ்சனி மற்றும் காயத்ரி ஆகிய இருபெரும் இசைக் கலைஞர்களின் கர்நாடக இசை வாய்ப்பாட்டு நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

மாலை 6.30 மணியளவில் சூரிய குண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை சத்குருவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நேற்றைய நிகழ்ச்சியில், முத்துசுவாமி தீட்சிதர், சத்குரு தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளை பல்வேறு இனிய ராகங்களில் ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள் வழங்கியதோடு, தங்களது தேர்ச்சிமிக்க கர்நாடக இசை திறத்தால் பல நுட்பமான ஆராதனைகளை செய்து கரகோஷங்களை பெற்றனர்.

இசைச் சகோதரிகள் பற்றி...

திருமதி.ரஞ்சனி மற்றும் திருமதி.காயத்ரி – சங்கீத சகோதரிகளான இவர்கள் உலகப் புகழ் அடைந்த பாடகிகள். டெலிவிஷன், ரேடியோ, மேடைக் கச்சேரி போன்ற பல்வேறு விதமான மேடைகளிலும் விழாக்களிலும் சங்கீதக் கச்சேரி செய்பவர்கள். தனித் தனியே மட்டுமல்லாமல், வயலின் இரட்டையர்கள், பக்கவாத்தியமாக, வாய்ப்பாட்டில் இரட்டையர்கள், ஏன் இவர்கள் இந்திய கர்நாடக சங்கீதத்தின் ப்ரதிநிதியாகவே திகழ்கிறார்கள்.

பாரம்பரிய சங்கீதத்தின் தனித்துவத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதை புதிதாக்கி நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆலாபனைகள், ஸ்வர சஞ்சாரங்கள், ராகம்-தாளம்-பல்லவிகள், பஜன்கள் மற்றும் மராட்டிய பஜன்களான அபங்கம் என்ற பாணியிலான பாடல்களுக்கு இவர்களின் சங்கீதத்தில் ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கும். திரு.டி.எஸ்.க்ருஷ்ணசுவாமி ஐயரிடம் வயலினும், திரு.பி.எஸ்.நாராயணசுவாமியிடம் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டுள்ள இவர்கள், தந்தை திரு. என்.பாலசுப்ரமணியன் மற்றும் தாய் மீனாக்ஷி அவர்களின் வழிகாட்டுதலில் சங்கீத பாதையில் வெற்றிகரமாக பயணிக்கின்றனர்.

யக்‌ஷாவைப் பற்றி:

'யக்‌ஷா', இந்தியாவின் புராண இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தேவலோக கலைஞர்களை குறிக்கும் விதத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. காண்பவரின் உள்ளம் கவரும் வண்ணமயமான இசை மற்றும் நடனத் திருவிழா, இந்த யக்‌ஷா. புனிதமான தியானலிங்க வளாகத்தில், பசுமையான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், ஈஷா அறக்கட்டளை இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.

இவ்வருடம் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும் யக்‌ஷா திருவிழாவில், தொடர்ந்து 3 நாட்களின் மாலைப் பொழுதுகளிலும் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ஆர்வமிக்க பார்வையாளர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பது மற்றுமொரு சிறப்பு அம்சம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலைப் பெற்றிருக்கும் இந்தியக் கலை வடிவங்களை, நம் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாய் படைக்கிறது யக்‌ஷா. இவை நம் கலாச்சாரத்தின் மாறுபட்ட கலை வகைகளை பிரதிபலிப்பதுடன், ஆன்மீகத் தூண்டுதலுக்கு ஆழமான அடித்தளமாகவும் அமைகிறது.