கொல்லைப்புற இரகசியம் - பகுதி 29

வெளியூரிலிருந்து வந்திருக்கும் பேரன்-பேத்திமார்களை பார்த்த சந்தோஷத்தில் உமையாள் பாட்டி தனது வைத்திய செயல்முறைகளுக்கு ஒருவார காலம் விடுப்பு தந்திருந்தாள். யாரேனும் அவசரம் என்று வந்தால் மட்டும் ஆலோசனை வழங்கி, மருந்து கொடுத்துவிட்டு, பேரன்-பேத்திகளோடு அளவளாவிக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்தாள்.

தனது இரண்டு வயது பேரனை தொட்டிலிலே போட்டு தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த பாட்டியின் முகத்தின் ஆனந்தக் களிப்பும், அந்த தாலாட்டுப் பாட்டின் வரியில் ஒரு ஆரோக்கிய குறிப்பும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது.

“ஆவாரை பூவிருக்கு தேகத்த குளிராக்க
தாழ்வார தொட்டிலிலே தங்கமே கண்ணுறங்கு
அடிவானம் தூங்கிருச்சு அன்னமே கண்ணுறங்கு!
ஆராரோ ஆரிரரோ!”

கிராமத்து தாலாட்டு பாட்டினை இப்போதெல்லாம் எங்கு பார்க்க முடிகிறது?! குழந்தைகளுக்கு செல்ஃபோனை கையில் கொடுத்து தூங்க வைக்கும் காலமாக மாறிவருவது பெருத்த வேதனைதான்!

சமூலம்’னா ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றோட கலவை! தினமும் 30 - 60 மிலி சமூலக் குடிநீர குடிச்சு வந்தா நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும்.

“என்ன பாட்டி, பேரன்-பேத்திகளையெல்லாம் பாத்ததில வைத்தியசாலைய மறந்துட்டீங்க போல...?”

“எனக்கு வைத்தியம் வேற வாழ்க்கை வேற இல்லப்பா! வாழ்க்கையை சரியா புரிஞ்சு வாழ்ந்தா வைத்தியம் பார்க்கவே தேவையில்லப்பா!” பாட்டி தொட்டிலை ஆட்டிய படியே சன்னமான குரலில் பதில் தந்தாள்.

“பாட்டி நீங்க பேசுறதே ஒரு கவிதை மாதிரி இருக்கு, அதோட ஆவாரை பத்தி நீங்க பாடின அந்த தாலாட்டுப் பாட்டு ரொம்ப அருமை” பாட்டியை பாராட்டிய நான் அதோடு விடவில்லை! ஆவாரை பற்றி நான் அறியாத தகவல்களை கேட்டறிய சித்தமானேன். பாட்டியும் பேரனை தன் தாலாட்டினால் தூங்க வைத்துவிட்டு, முற்றத்திற்கு வந்தமர்ந்து எனக்கு ஆவாரை பற்றி சொல்லலானாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“அந்த காலத்துல உங்க தாத்தா பங்குனி-சித்திரை வெயில் காலத்தில ஆவாரை இலைகள தலையில பரப்பி வச்சு, அதுமேல தலைப்பாகை கட்டிகிட்டு இங்கிருந்து மதுரைக்கு நடந்தே போவாருப்பா!”

“தலைப்பாகைக்குள்ள ஆவாரை இலையா... இது புது Fashion மாதிரி இருக்கே பாட்டி?!”

“இது மாதிரி தலைப்பாகை கட்டினா எவ்வளவு தூரம் வெயில்ல நடந்தாலும் வெயில் தாக்கம் தெரியாது. அந்த அளவுக்கு ஆவாரை இலை குளிர்ச்சி தன்மையுடையுது!

ஆவாரை பூ, இலை, பட்டை, வேர்... இப்படி எல்லா பாகமுமே மருத்துவ குணம்கொண்டதுதான். ஆவாரம்பூவ குடிநீரிட்டு பால்கலந்து சாப்பிட்டு வந்தா உடற்சூடு தணியும். அதுமட்டுமில்லாம, பூவ மணப்பாகு செஞ்சு சாப்பிட்டா, பெண்களுக்கு வெள்ளைப்படுதலும், ஆண்களுக்கு ஆண்குறி எரிச்சலும் தீரும். பூவ பொடி செஞ்சு தேய்த்து குளிச்சு வந்தா, உடல் வியர்வையினால ஏற்படும் உப்பு, கற்றாழை நாற்றம், உடல் வறட்சி நீங்கும். அதோட உடலுக்கு நல்ல நிறத்தையும் குடுக்கும்.

வாய்ப்புண் இருக்குறவங்க ஆவாரை பட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். கண்சிவப்பு (Conjunctivitis) இருக்குறவங்க ஆவாரை விதையை பொடி செஞ்சு நீரில் குழப்பி கண் இமை மேல பத்துபோட்டா குணமாகும். ஆவாரை பிசின் 4-10 கிராம் எடுத்து தண்ணியில கலந்து குடிச்சு வந்தா நீரிழிவு, வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

ஆவாரை வேர்ப்பட்டை குடிநீர் செஞ்சு அதுகூட பசும்பால், எள்நெய் கலந்து முறைப்படி தைலம் செஞ்சு, குளிக்கும் முன்னால தலையில் தேய்த்து தலைமூழ்கினா உடல்வெப்பம் தணியும், கண்ணும் குளிச்சியாகும்.

அப்புறம் சமூலம் கேள்விப்பட்டிருக்கியா...?”

“அப்படின்னா என்ன பாட்டி... ஏதாவது வியாதியா?”

“சமூலம்’னா ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றோட கலவை! தினமும் 30 - 60 மிலி சமூலக் குடிநீர குடிச்சு வந்தா நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும். ஆண்குறி எரிச்சலும் தீரும். இந்த குடிநீர்ல பனங்கற்கண்டு, ஏலம், வால்மிளகு, சேத்து மணப்பாகு செஞ்சு, அதுல 4கிராம் எடுத்து, பால் இல்லேன்னா தண்ணி கலந்து குடிச்சு வந்தா உடல் வலிமையாகும்.”

“அப்போ நான் இனிமே சமூல boyஆ மாறிடலாம்னு இருக்கேன்”

“என்னப்பா அது”

“ஆமா பாட்டி, டெய்லி complan குடிச்சா complan boy, டெய்லி சமூலம் குடிச்சா சமூல boy!”

பாட்டி அந்த கடி ஜோக்கினால் கடுப்பாகி, அடுக்கறைக்குள் நுழைந்தாள் தன் பேரக்குழந்தைகளுக்கு பலகாரம் சமைப்பதற்காக! பாட்டியின் பலகார ருசியை ருசித்துவிட எனக்கும் ஆவல்தான், ஆனால், அதற்கிடைப்பட்ட நேரத்தில் ஈஷா ஆரோக்யா சென்று ஆவாரம் பொடியை வாங்கி வந்துவிட கிளம்பினேன்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்