சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் இருந்து 24 கி.மீ சென்றால் காஞ்சேரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அவரது ’வேளாண் காடு’. 70 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக நம்மை வரவேற்றார் துரைசாமி.

“எங்க அப்பா, அம்மாவுக்கு சொத்துனு பெரிசா எதுவும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்ன படிக்க வச்சாங்க. நானும் குடும்ப கஷ்டத்த புரிஞ்சுக்கிட்டு நல்லா படிச்சு டாக்டர் ஆனேன். இங்க பக்கத்துல இருக்குற பச்சை மலையில கவர்மெண்ட் டாக்டரா வேல கிடைச்சுச்சு. சம்பளத்துல ஒரு பகுதிய தனியா சேத்து வைச்சேன். அந்த காச வைச்சு மலை அடிவாரத்துல இங்க 5 ஏக்கர், 10 ஏக்கர்னு கொஞ்சம் கொஞ்சமா நிலம் வாங்குனேன். 1980-கள்ல இந்த எடம்மெல்லாம் முள்ளு காடா இருந்துச்சு. அதுனால விலையும் கம்மியா இருந்துச்சு. இப்படியே படிப்படியா அடுத்த 20 வருசத்துக்கு நிலம் வாங்குனேன்.

இடையில மகளோட கல்யாணத்துக்கு பத்திரிக்கை வக்கிறதுக்காக சொந்தகாரர் ஒருத்தரோட வீட்டுக்கு போனேன். அப்போ அவரோட தோட்டத்துல மதிய சாப்பாடு சாப்பிட்டோம். சுத்தி மரங்களா இருந்துச்சு. அதுல ஒரு மரத்துக்கு கீழ கயித்து கட்டில போட்டு உக்காந்தோம். சிலுசிலுனு காத்து அடிச்சுச்சு. அந்த இயற்கை சூழல் என்ன ரொம்பவும் கவர்ந்துச்சு. அந்த அனுபவம் தான் இந்த காடு உருவாக காரணம்” என்று சந்தோஷத்துடன் வேளாண் காடு உருவான கதையை பகிர்ந்து கொண்டார்.

”சரி ஜீப்ல ஏறுங்க தோட்டத்த சுத்தி காமிக்குறேன்” என சொன்னவரிடம் இடைமறித்து “சார், நடந்துபோனா கொஞ்சம் முழுசா பாக்கலாம்” என சொன்னேன். “தம்பி நடந்து போனா முழுசா சுத்தி பாக்க ஒரு வாரம் ஆகும். பரவாயில்லயா?” என கேட்டார்.

பதில் எதுவும் சொல்லாமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தோம். மரங்களுக்கு இடையே மலை பாதையில் சென்றோம்.

“செம்மரம், தேக்கு, சந்தனம், ரோஸ் உட், ஈட்டி, வேங்கை, நீர் மருது, மஞ்சள் கடம்பை, மலை வேம்புனு என் தோட்டத்துல இல்லாத மரமே இல்ல. கிட்டத்தட்ட எல்லா வகையான டிம்பர் மரங்களையும் வச்சுருக்கேன். 2000-த்துல இருந்து தான் பெரியளவுல மரம் வைக்க ஆரம்பிச்சேன். 2012-ல தான் ஈஷா கூட தொடர்பு ஏற்பட்டுச்சு. ஈஷா நர்சரில ரொம்பவும் குறைஞ்ச விலைக்கு மரக் கண்ணு கொடுக்குறாங்க. அந்த கண்ணுங்க நல்லாவும் வளருது. அதுனால அவங்கட்ட தான் ரெகுலரா கண்ணு வாங்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 60 ஆயிரம் மரக் கண்ணுக்கு மேல வாங்கிருக்கேன்.

மரக் கண்ணு அதிகளவு வாங்குறதுனால ஈஷா வேளாண் காடு குழுவுல இருக்குற வல்லுனர்கள் இங்க நேரடியா வந்து பாத்தாங்க. முன்னாடி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு ஏதோ ஒண்ணு செஞ்சுகிட்டு இருந்தேன். அவங்க தான் காட்ட எப்படி முறையா பராமரிக்குறதுனு சொல்லி கொடுத்தாங்க.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிறைய பயிற்சி வகுப்புகளுக்கும் தோட்டங்களுக்கும் என்னை கூட்டிட்டு போயி காமிச்சாங்க. எந்தெந்த மரங்கள் எங்கெங்க எப்படி வைக்கணும்னு தெளிவா ஆலோசனை கொடுத்தாங்க. அதை எப்படி பராமரிக்குறதுனும் சொல்லி கொடுத்தாங்க. இந்த காட்ட பாத்துக்குற மேனேஜர்ட்ட சொல்லி ஈஷாவுல சொல்லிக் கொடுக்குற மாதிரி செய்ய சொன்னேன். அதுனால எந்த பிரச்சினையும் இல்லாம நல்லா போயிட்டு இருக்கு” என சொல்லி கொண்டு இருக்கும் போது ஆட்டு கொட்டகை ஒன்றை பார்த்ததும் வண்டியை விட்டு கீழ் இறங்கினோம்.

“300 செம்மறி ஆடும், 400 நாட்டு கோழியும் வளர்க்குறோம். அதுகப்பாட்டுக்கு காட்டுல கிடைக்குறத திண்ணுட்டு மேஞ்சுக்கிட்டு இருக்கும். தீவனத்துக்குனு தனியா எந்த செலவும் கிடையாது. இன்னும் ஒரு 400 நாட்டு கோழிங்கள வாங்கி விடலாம்னு இருக்கேன்.

டிம்பர் மரங்கள் மட்டுமில்லாம தென்னை, பாக்கு, கொக்கோ மரங்களும் ஏராளமா இருக்கு. அப்புறம் மா, பலா, வாழை, சாத்துக்குடி, மாதுளை, சப்போட்டா, நெல்லி, கொய்யானு ஏகப்பட்ட பழ மரங்களும் வைச்சுருக்கேன்.

ஆடு, கோழி, பழ மரங்கள்ல இருந்து மாசா மாசம் நல்ல வருமானம் வருது. அந்த பணத்துல இருந்து வேலை ஆளுங்களுக்கு சம்பளம் கொடுத்துருவேன். இதுதவிர குறுகிய கால டிம்பர் மரங்களான குமிழ், மலைவேம்வு, பெருமரம் இந்த மூணையும் வெட்டி வித்ததுல மொத்தமா ஒரு நல்ல வருமானம் வந்துச்சு. வெட்டுன மரங்கள்ல மருதாம்பு வந்து திரும்பவும் வளர்ந்துக்கிட்டு வருது. நீண்டகால டிம்பர் மரங்கள பிள்ளைங்களுக்காக வைச்சுருக்கேன். தேவை அதிகமா இருக்குறனால டிம்பர் மரங்களோட விலையும் அதிகமாயிட்டு வருது” என கூறியவரிடம் டாக்டரா இருந்துட்டு இவ்வளவு பெரிய காட்ட எப்படி பாத்துக்குறீங்கனு கேட்டேன்.

”அதெல்லாம் பெரிய பிரச்சினை இல்ல. எல்லாத்துக்கும் ஆள் வைச்சுருக்கேன். என்னென்ன பண்ணும்னு மேனேஜர்ட்ட சொல்லிருவேன். அவர் எல்லாத்தையும் பாத்துக்குருவாரு. நான் அப்பப்போ வந்து பாத்துட்டு போவேன்.

காட்டுல நிறைய விலை உயர்ந்த மரங்கள் இருக்குருனால காவலுக்கு 18 நாய்ங்கள வளர்க்குறோம். ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு இடத்துல சுத்திகிட்டு இருக்கும். அதுனால வெளி ஆட்கள் யாரும் அவ்வளவு சீக்கிரமா உள்ள வர முடியாது” என்றார்.

காட்டை சுற்றி பார்த்துவிட்டு கீழிறங்கும் போது மேனேஜர் தயாளன் பைக்கில் அங்கு வந்தார். “ஐயா, கிளீனிக்ல பேஷண்ட்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்காக வெயிட் பண்றாங்க” என்று சொன்னார்.

”தம்பிகளா, நான் கிளம்புறேன். நீங்க வர்றேனு சொல்லி இருந்தனால தான் இன்னைக்கி இங்க வந்தேன். நீங்க இருந்து சாப்பிட்டு போங்க” என கூறி விடைப் பெற்றார் டாக்டர் துரைசாமி.

விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நல்ல வருமானம் தரும் டிம்பர் மரங்கள் வளர்ப்பதற்கு ஈஷா வேளாண் காடுகள் குழு இலவச ஆலோசனை வழங்கி வருகிறது. உங்கள் மண்ணில் என்ன வகையான மரங்கள் நடலாம் என்பதை எங்கள் குழுவினர் உங்கள் இடத்துக்கே வந்து நேரில் பார்த்து ஆலோசனை வழங்குவார்கள். மேலும், அனைத்து வகையான மரக் கன்றுகளையும் ஈஷா நர்சரிகளில் மிக குறைந்த விலையில் பெற்று கொள்ளலாம்.

விதை விதைப்போம்...

நன்றி: தினத்தந்தி

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது)

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!