நதிகளின் நீரளவு ஏன் குறைகிறது

நதிகளின் நீரளவு குறைவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இதில் விவசாயத்திற்கு பயன்படும் நீரே முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர்களுக்கு பயன்படும் நீருடன், நீர் பாய்ச்சும்போது நீராவியாக மாறி காற்றில் கலக்கும் நீரும் இதில் அடக்கம்.

அடுத்த முக்கிய காரணம், கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நிலத்தடி நீர் அளவு. இந்தியாவின் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டில் இந்திய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30% மாவட்டங்களில், நிலத்தடி நீர், ஓரளவு நெருக்கடி/ நெருக்கடி/ மிதமிஞ்சிய அளவில் பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது.

1995ஆம் ஆண்டில் இது வெறும் 8% ஆகத்தான் இருந்தது. இதே போக்கு தொடர்ந்தால் இன்னும் 20 வருடங்களில் இந்தியாவின் 60% நீர்த்தேக்கங்கள் மிக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. நிலத்தடி நீர் அளவுக்கு மீறி பயன்படுத்தப்படும்போது, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். இது தொடர்ந்தால், நிலத்தடி நீர் நதிகளுக்கு நீர்மூலமாக இருப்பதற்குப் பதிலாக, நதிநீர் நிலத்திற்குள் ஊடுறுவதால், நதிகளில் நீர் இல்லாமல் போய்விடும்.

அதுமட்டுமல்ல, காடுகள் விளை நிலங்களாகவோ தரிசு நிலங்களாகவோ மாறும்போது, அந்த மண், மழைநீரை அந்தளவிற்கு உள்வாங்குவதில்லை. இதனால், பெய்த மழைநீர், நிலத்தின் மேற்பரப்பில் இருந்தவாறே நீராவியாகிவிடும் சூழ்நிலை ஏற்படும். 2012ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வராஹி நதியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காட்டுப்பரப்பில் ஏற்படும் சிறு மாறுதலும்கூட – அதாவது 27 வருடங்களில் 9% குறைவும்கூட – நதியோட்டத்தை வெகுவாக பாதிக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தபின் அந்த ஆறு ஓடிய நாட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, அந்நதி வறண்டிருந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

அதோடு, இதுபோன்ற சூழலில் நிலத்தின் மீது ஓடிவந்து நதியுடன் கலக்கும் நீரின் அளவு, நிலத்தடியிலிருந்து அதற்கு பக்கபலமாய் இருக்கும் நீரின் அளவைவிட அதிகமாக இருப்பதால், இது நதியின் "வற்றாத தன்மையை" குறைப்பதோடு, வெள்ள அபாயத்தையும் அதிகரிக்கிறது.

வீட்டுத் தேவைகளுக்காகவும் தொழில்துறை பயன்பாட்டிற்கும் நதியில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு (பெரும் நதிகளாக இருப்பின்) 1% என்று கொள்ளலாம். இந்தப் பட்டியலில் கடைசியாக இருக்கும் காரணம், மாறுபட்டு வரும் மழை வீழ்ச்சி… இது இடத்திற்கு இடம் வித்தியாசப்படுகிறது.\

உதாரணம்: கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

1955-1965,1990- 2000 என இருவேறு காலகட்டங்களில், 10 ஆண்டு காலத்திற்கு கிருஷ்ணா நதி மீது நடத்தப்பட்ட ஆய்வின் புள்ளிவிவரம்:

1955-1965ல் கடலை அடைந்த நீரின் அளவு, சராசரியாக 67.3 கன.கி.மீ. 1990-2000 ல் இதுவே 19 கன.கி.மீ என குறைந்துள்ளது.

அதாவது, 48.3 கன.கி.மீ அளவு நீர் குறைந்துள்ளது.

இதில் வீட்டுத்தேவைகள், 1.2 கன.கி.மீ அளவிற்கு அதிகரித்துள்ளது. மழை அளவு 15.6 கன.கி.மீ குறைந்துள்ளது. நதிக்குக் கிடைத்த நிலத்தடி நீர் 10.5 கன.கி.மீ குறைந்துள்ளது (இதற்கு முக்கிய காரணம், நிலத்தடி நீர் 8.8 கன.கி.மீ அளவிற்கு உறியப்பட்டுள்ளது). 27.3 கன.கி.மீ அளவிற்கு பாசன நீர்த்தேவை அதிகரித்துள்ளது.

பொதுவாக, மழையால் வளரும் மானாவரிப்பயிர் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு, பாசனப் பயிருக்குத் தேவையான நீர் அளவைவிட அதிகம் என்றாலும், இந்த இரு காலகட்டத்தில் மானாவரிப்பயிர் அதிகரிக்கவில்லை என்பதால், அதை கணக்கில் எடுக்கத் தேவையில்லை. அதேபோல், இயற்கையில் தாமாகவே வளரும் தாவரங்களும் தோராயமாக அதேயளவில்தான் இருந்தன என்பதால் அதையும் கணக்கில் எடுக்க அவசியமில்லை.

கிருஷ்ணா வடிநிலத்தில் நிகர பாசனப்பரப்பு 5.2 லட்சம் ஹெக்டரில் இருந்து 13 லட்சம் ஹெக்டர் நிலமாக உயர்ந்துள்ளது. அதோடு, சராசரி பயிர்ச்செறிவும் (cropping intensity) 108% ல் இருந்து 120% ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, முன்பு இப்பகுதியில் குறைவான நீரையே பயன்படுத்திய சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்டன. இப்போது, அதிகளவு நீர் குடிக்கும் நெல் மற்றும் பணப்பயிர்கள் (கரும்பு, பருத்தி போன்றவை) பயிரிடப்பட்டுள்ளன.

பாசன நிலங்களில் பெரும்பாலும் நெல்தான் பயிரிடப்பட்டது. இதில் 84% நெல் நீர்ப்பாசன முறையிலும், கரும்பு, 100% நீர்ப்பாசன முறையிலும் விளைவிக்கப்பட்டது. விவசாய நிலங்களில் 2% மட்டும் பழவகை மரங்கள் வளர்க்கப்பட்டன. அதில் 25% நீர்ப்பாசன முறையில் வளர்க்கப்பட்டது.