மரங்கள் மண்ணரிப்பை தடுக்கும் விதம்

உலகின் சுமார் 30% விவசாய நிலங்களில் மண்ணரிக்கப்பட்டு ஆறுகளிலும் ஏரிகளிலும் ஓடைகளிலும் கலந்து விடுவதால் 60% அளவிற்கு தரிசுநிலமாக மாறியுள்ளன. இதனால் நீர்நிலைகள் கிடைமட்டமாக பெருக்கெடுத்து ஓடி வெள்ளத்தை ஏற்படுத்துவதோடு, மண்ணிலுள்ள தூசுகளால் மாசடைகின்றன. மண்வளம் அழிக்கப்பட்டு விட்டதென்றால் அந்தப் பகுதி பாலைவனமாக மாறிவிடும். இந்த மண்வளத்தை மீட்டெடுப்பதற்கு கவனமாக செயல்பட்டாலும் பல நூற்றாண்டுகள் ஆகும்.

இதற்கு பல உதாரணங்கள் உலகம் முழுக்க பார்க்கலாம். உதாரணத்திற்கு, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வடக்கு ஆப்ரிக்காவில் மெடிட்டெரனியன் பகுதியைச் சேர்ந்த “கிரேனரி ஆஃப் ரோமன் எம்ப்பயர்” என அழைக்கப்பட்ட பகுதியைச் சொல்லலாம். ரோமானியர்களின் காலத்தில் அவர்களின் தவறான வேளாண் நுட்பங்களாலும் செயல்பாட்டாலும் இந்த நிலப்பகுதி மோசமான வறட்சியை சந்தித்தது.

அமெரிக்க மற்றும் கனட சதுப்பு நிலப்பகுதிகள் 1930களில் தவறான வேளாண் முறைகளால் மண் வளத்தை இழந்தது. முந்தைய 10 வருடங்களில் மாபெரும் அமெரிக்க சமவெளிகளில் இருந்த வளமான மேல்மண் காணாமல் போனதால் நாட்டு பயிர்கள் மற்றும் நாட்டு மரங்கள் அழிந்தன. இந்த காரணத்தாலேயே 1930ன் கடும் வறட்சியில் சூறைக்காற்றுகளால் மேல்மண் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் போன்ற அமெரிக்க நகரங்களில் பெரும் தூசிப் புயல் வீசின. டெக்ஸாஸ், ஒக்லஹோமா, நியூ மெக்ஸிகோ, கன்ஸஸ் மற்றும் கொலொரடோ போன்ற பகுதிகளில் சுமார் 4 லட்சம் ச.கி.மீ விவசாய நிலங்கள் சீரழிந்தன.

இன்று வடமேற்கு சீனா மற்றும் மங்கோல்யாவில் ஒரு மிகப்பெரிய மண்வளமற்ற தரிசு நிலப்பகுதி உருவாகி வருகிறது. பீஜிங் நகரைச் சுற்றிலும் மற்றும் சீனாவின் பிற நகரங்களைச் சுற்றிலும் இலையுதிர் காலங்களில் ஆண்டுதோறும் தூசுப் புயல்கள் ஏற்படுகின்றன. செடி கொடிகளற்ற தரிசாகிப்போன மண்வளமற்ற மணல் திட்டுப் பகுதிகளால் இவை உருவாகின்றன. இந்த பகுதிகளின் தூசுகள் ஒவ்வொரு வருடமும் தென் கொரியாவிற்குள்ளும் நுழைகின்றன. சில சமயங்களில் இவை பசுபிக், மேற்கு அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளிலும் நுழைகின்றன.

மேல்மட்ட நிலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடுதல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் ஏற்படும் மண்ணரிப்பை மரங்கள் வெகுவாக குறைக்கின்றன. இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு நீர்நிலைகளில் மண் மாசுகள் படிவது தடுக்கப்படுகிறது. ஆய்வுகளின் படி, ஒரு வேளாண் செயல்முறை என்பது காடுகளில் உள்ள கிளை பரப்பும் வடிவமைப்போடு ஒத்துப்போனால், அதனால் மண் அரிப்பிற்கான வாய்ப்பு குறைகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5,30,00,000 டன் அல்லது ஹெக்டேருக்கு 16.4 டன் அளவிற்கு மண்ணரிப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் 33 லட்சம் ச.கி.மீட்டரில் சுமார் 25% அல்லது 8,20,000 ச.கி,மீ நிலப்பரப்பு பாலைவனமாகும் நிலையை சந்தித்து வருகிறது. மற்ற 40% அல்லது 12,60,000 ச.கி.மீ பரப்பானது நீர் அரிப்பை சந்திக்கிறது. இதில் 20% மண்ணரிப்பு ஒரு வருடத்தில், ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40 டன்கள் அளவிற்கு ஏற்படுகிறது. இந்த நிலத்தில் ஒவ்வொரு வருடமும், 10% மிகக் கடுமையான மண்ணரிப்பு ஏற்பட்டு 80 டன் அளவிற்கு மண் வளம் இழக்கப்படுகிறது. . 80 டன் அளவு மண் என்றால் ஒரு வருடத்திற்கு 5 மி.மி மேல் மண் என்றாகும்.

குறிப்பாக இமயமலைப் பகுதிகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மண்ணரிப்பு கடுமையாக உள்ளது. இமயமலை பகுதி முழுவதும் மண்வளத்தை இழந்துள்ளது. உதாரணத்திற்கு, இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்குள் மட்டும் சுமார் 28 கோடி டன்கள் அளவிற்கு ஒவ்வொரு வருடமும் மண்ணரிப்பு ஏற்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், ஒவ்வொரு வருடமும் ஒரு ஹெக்டேருக்கு 40-50 டன்கள் மண்வளம் இழக்கப்படுகிறது. இது வருடத்திற்கு 3 மி.மீ மேல்மண்ணை குறிக்கிறது. ஒரு மில்லி மீட்டர் மேல்மண் உருவாவதற்கு 30-40 வருடங்கள் ஆகிறது. நல்ல ஒரு பயிர் வளர்வதற்கு 150 மி.மீ மேல் மண் தேவைப்படுகிறது. இந்தியாவில் சராசரியாக 180 மி.மீ மேல் மண் மட்டுமே உள்ளது. ஒரு வருடத்திற்கு மண்ணரிப்பானது 5 மி.மீ அளவிற்கு இருக்கும்போது இன்னும் 35 வருடத்தில் ஒட்டுமொத்த மேல்மண்ணும் காணாமல் போய்விடும்.

மேலும், மண்ணரிப்பு என்பது இந்தியாவில் புதிய நிகழ்வொன்றும் இல்லை; கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும். இதன் காரணமாக இந்தியாவில் சுமார் 1,70,000 ச.கி.மீ நிலப்பரப்பின் மேல்மண் ஏற்கனவே கடும் மண்ணரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. 2010ல் நாடு சுமார் 28,500 கோடி இழப்பினை, பாதிக்கப்பட்ட நிலத்தில் அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்த நிலங்களின் மொத்த உற்பத்தியில் 12% இழப்பாகும்.

வனப்பகுதி நிலங்களைக் காட்டிலும் விவசாய நிலங்களில் மண்ணரிப்பு ஒரு ஹெக்டேருக்கு 5-10 டன் அதிகமாக ஏற்படுகிறது. தொடர்ச்சியான கனமழை பொழியும் போது, விவசாய நிலங்களில் வனப் பகுதியை காட்டிலும் 26 மடங்கு அதிகமான மண்ணரிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், மாறிவரும் பருவநிலையால், இந்திய துணைக்கண்டத்தில், பரவலாக கனமழை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மரங்களின் பரப்பு மண்ணரிப்பை தடுப்பதிலும் மலைப்பிரதேசங்களில் மண்சரிவை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. உத்திரகாண்ட் இமாலயப் பகுதியின் அலக்நந்தா பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில், அப்பகுதியில் நிலச்சரிவு நிகழும்போது நல்ல வளமான பைன் மரக் காடுகள் உள்ள பகுதிகளைக் காட்டிலும் மரங்களற்ற பகுதியில் மற்றும் வறண்டுபோன பைன் காடுகளின் பகுதிகளில் சுமார் 2-3 மடங்கு பாதிப்பு அதிகமாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பைன் காடுகளின் அடர்த்தி, நிலத்தின் உறுதித்தன்மையை நிர்ணயிக்கும் காரணியாக அறியப்படுகிறது.

மரங்களின் கழிவுகளான இலை தழைகள் மண்ணில் விழுவதால் மரங்களின் அடியிலுள்ள மண் வளம் மண்ணரிப்பிலிருந்து தடுக்கப்படுகிறது. இலை தழைகள் இல்லாமல் வெட்டவெளியாக இருந்தால் நீரோட்டம் மண் வளத்தை எடுத்துச் செல்கிறது. எனவே மரங்களை நடுவதோடு, கூடவே நிலமானது இலைக் கழிவுகளால் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பின் படி, காடுகள் மற்றும் மரப்பயிர் வளர்ப்பில் அடிநிலமானது கழிவுகளின்றி சுத்தமாக இருக்கும்போது, கழிவுகள் அகற்றப்படாத நிலத்தில் நிகழும் மண்ணரிப்பை விட அதிகமாக உள்ளது.

மரங்கள் நடுவதினால் மண்ணை மீட்கலாம்

சீனாவில் வீ மற்றும் மஞ்சள் ஆற்றுக்கு இடைப்பட்ட லியோஸ் சமவெளி பகுதியானது 1994 முதல் 2005 வரையிலான காலங்களில் பத்து லட்சம் ஹெக்டேர் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலமாக ஆக்கப்பட்டன. 1980 மற்றும் 1990 ஆகிய காலங்களில், அந்த பகுதியின் வறண்ட மண்வளமும் பசுமையும் உணவு உற்பத்தியை வெகுவாக குறைத்தன. மேலும் நீர்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அருகிலிருந்த நகரங்கள் மட்டுமல்லாது தொலைதூர நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகரித்தது. சீனாவின் பெரிய நதிகளில் ஒன்றான மஞ்சள் ஆற்றில் மண்ணரிப்பினால் உண்டாகும் தூசு படிமம் 90% அளவிற்கு வந்து சேர்கிறது.

உலக வங்கியுடன் இணைந்து, 6 வன வளர்ச்சி திட்டங்களில் சீனா முதலீடு செய்தது. இதில் இந்த சமவெளிப் பகுதியிலுள்ள 1100 சிறு நதிகள் மற்றும் ஓடைகள் மையப்படுத்தப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த திட்டத்தால், குறிப்பிடத்தக்க அளவில், உணவுப் பாதுகாப்பும் தானிய உற்பத்தி பெருக்கமும் நிகழ்ந்தது. சுமார் 89,000 ஹெக்டேர்கள் அளவிற்கு புதிய வேளாண் நிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு ஆற்றில் கலக்கும் மண் மாசுகள் 99% அளவிற்கு குறைந்துள்ளது.

இதுபோன்ற செயல்பாடுகள் உலகெங்கிலும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. உதாரணத்திற்கு, கூன் பள்ளத்தாக்கு ஆற்றுப் படுகையை மீட்டுருவாக்கம் செய்யும் விதமாக 1935ல் அமெரிக்க அரசாங்கம் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டது. மரம் நடுதல் மற்றும் பிற செயல்திட்டங்களின் விளைவாக 1939ல் 37% ஆக இருந்த பசுமைப் பரப்பு 1993ல் 50% ஆக உயர்ந்தது. மேலும், வறட்சி காலத்திலும் ஆற்றின் தண்ணீர் அளவு அதிகமாக இருந்தது, வெள்ள அபாயம் குறைந்தது மற்றும் மண் வளமும் மேம்பட்டது.