சிறப்புத்திட்ட துவக்கத்திற்கு 2018ல் உலக தண்ணீர் தினத்தன்று ஐ.நா.வில் சத்குரு

நதிகள் மீட்பு இயக்கம் ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கிறது

உலக வரலாற்றில் பெருமளவில் குடிமக்கள் ஆதரவுபெற்ற மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கம் எனும் பெயரைப் பெற்ற நதிகள் மீட்பு இயக்கத்தை முன்னெடுத்து துவக்கிவைத்த பிறகு, சத்குரு ஐ.நா.வின் அழைப்பை ஏற்று மார்ச் 2018ல் நிகழ்ந்த “செயலுக்கான சர்வதேச பத்தாண்டுத் திட்டம்: நிலையான முன்னேற்றத்திற்கு தண்ணீர் 2018-2028” துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். “தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான முன்னேற்ற இலக்குகளை செயல்படுத்த தண்ணீருக்கான பத்தாண்டின் பங்கு: சவால்களை எதிர்கொண்டு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் மூலம் வாய்ப்புகளை கைப்பற்றுவது” எனும் தலைப்பினை கலந்தாராய்ந்து குழு உறுப்பினராக கலந்துகொள்வதற்கான அழைப்பினை சத்குரு பெற்றார்.

நதிகள் மீட்பு இயக்கம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது, இந்தியாவில் பெற்ற வரலாறு காணாத ஆதரவால் மட்டுமல்ல, உலக அளவில் நதிகள் வற்றிவருவதும் விவசாயம் செய்யத் தகுதியான நிலம் சுருங்கி வருவதுமான உலகளாவிய சவால்களாலும்தான். சுற்றுச்சூழல் நடவடிக்கையை பொருளாதாரத்திற்கு எதிரானதாக முன்வைக்காமல், இச்சவால்களுக்கு விரிவான தீர்வுகளைத் தரும் ஒரு அமல்படுத்தக்கூடிய செயல்திட்டத்தை இவ்வியக்கம் உருவாக்கியது.

குழுவின் கலந்தாய்வில் கலந்துகொள்கையில், “நதிகள் மீட்பு இயக்கத்திற்கு இந்தியாவில் கிடைத்த இந்த வரவேற்பிற்குக் காரணம், இது ஒரு பொருளாதாரத் திட்டம். சுற்றுச்சூழல் நடவடிக்கையை அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெருமளவிலான மக்களுக்கு பொருளாதாரரீதியில் இலாபகரமானதாக மாற்றவில்லை என்றால், இதை நிகழ்த்துவதில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்” என்று சத்குரு கூறினார்.

ஐ.நா.வின் உயர்மட்டக் குழு, செயலுக்கான பத்தாண்டு திட்டத்தை துவக்கியபோது வெளியிட்ட காணொலி ஒன்று, உலகின் ஜனத்தொகையில் 40 சதவிகிதத்தினர் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள் என்றும், பூமியிலுள்ள தண்ணீரில் 0.5 சதம் மட்டுமே மக்களுக்கு சுலபமாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது என்றும் கூறுகிறது. குறிப்பாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, மண்வளத்தைக் கூட்டுவது, மழைநீரை நிலத்தடியில் சேமிப்பது ஆகியவற்றில் நதிகளுக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றக்கூடியவை. “மண்ணில் போதுமான உயிர்மப் பொருட்களும் மரங்களும் இருந்தால்தான் தண்ணீரை நிலத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியும்” என்று சத்குரு கூறினார். இந்தியாவில் தண்ணீர் வீணாவதற்கு, மழைநீர் வடிந்தோடுவது முக்கிய காரணமாகும்.

ஹைட்ராலஜி, ஹைட்ரோஜியாலஜி, வனத்துறை, வேளாண்காடுகள், தோட்டக்கலை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், நீர்ப்பாசனம், விவசாய வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல், இயற்கை வள மேலாண்மை, அரசு அதிகாரிகள், உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் ஆணையம், செயல்திட்ட நிதியளிப்பு, சமுதாய நடத்தை மாற்றம், விவசாயி சங்கங்கள், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட அறிவியல் வல்லுநர்கள் மற்றும் சட்டம் இயற்றுவோருடன் கலந்தாலோசித்த பிறகு, நதிகள் மீட்புக்கான வரைவுத்திட்ட பரிந்துரைகள் தயார்செய்யப்பட்டது.

x