சமீபத்திய பேரழிவுகள்
வற்றாத ஜீவநதியாக திகழ்ந்த தாமிரபரணி, இந்த வருடம் ஜுன் மாதத்தில், அனேகமாக வற்றி, பாபனாச அணைக்கட்டு மூடப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பல பெரிய தொழிலகங்களுக்கும், தூத்துக்குடியிலுள்ள நீர் மின்சக்தி நிலையத்திற்கும் நீர் எடுக்கத் தடைவிதித்து மூடப்பட்டது. 1970களில் காணப்பட்ட கடும் வறட்சியில்கூட ஏதோ ஒரு பயிர் நட்டு அறுவடை செய்ய முடிந்தது. ஆனால், இவ்வருடமோ ஒரு பயிர்கூட நட முடியவில்லை. ஆற்றுநீர் வற்றியதால், ஆறுகடலில் கலக்குமிடமான புன்னக்கயல் அருகில் உப்புநீர் உட்புகுந்துள்ளது.
நீர் வற்றியதோடு அல்லாமல், கழிவு நீர்கலப்பு, தொழிலகங்களின் மாசு மற்றும் தேவையற்ற ப்ளாஸ்டிக் பொருள்களை வீசுதல் போன்றவை பெரும் அளவுக்கு நீர்நிலைகளை பாதித்துள்ளது.
ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
நதிமூலம் ரிஷிமூலம் என்ற கூற்றிற்கேற்ப, இந்த ஆற்றின் மூலம், அகத்திய முனியுடன் தொடர்புடையது. தாமிரபரணி மகாத்மியம் சொல்வதன்படி, பொதிகைமலையில் அகத்தியர் போட்ட தாமரை மலர்களால் ஆன ஒரு சரம், சிவனின் பார்வை பட்டதால் ஒரு அழகிய பெண்ணாக உருவெடுத்து, அதுவே ஒரு நதியாக ஓடியதால், இந்த தெய்வீக பெயர் பெற்றது.
மற்ற பல மரபுவழிக் கதைகளும் இந்த ஆற்றை அகத்தியருடன் தொடர்புபடுத்தி கூறுகின்றன. ஒருமுறை அகத்தியர் ஒன்பது பூக்களை ஆற்றில் மிதக்கவிட்டு, அந்த பூக்கள் எங்கெல்லாம் கரையை தொடுகிறதோ, அங்கெல்லாம் ஒரு சிவலிங்கத்தை நிர்மாணிக்க தமது சீடர்களில் ஒருவரிடம் சொன்னதாகவும், அந்த ஒன்பது கோவில்களும் நவ-கைலாயம் என்று அழைக்கப்பட்டதாகவும் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. இவை நவகிரகங்களுடனும் தொடர்புடையதாகும். இந்த ஆறும் கடலும் கூடும் இடத்தில் அச்சீடரை மூழ்கி எழச்சொன்னதால், அவர் முக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
பொதிகை மலையில்தான் அகத்தியர் முதன்முதலில் தமிழ் இலக்கணத்தை நமக்கு அளித்ததாக கூறப்படுகிறது. பழந்தமிழ் மற்றும் சங்க இலக்கியங்களில் தாமிரபரணி ஆற்றின் பெருமைகள் இடம்பெற்றுள்ளன.
தாமிரபரணி ஆற்றை பொதிகை என்றும் தாமிரபரணி என்றும் அழைத்தனர். இந்த ஆற்றில் தாமிரம் என்ற உலோகம் இருப்பதற்கான தடங்கள் இருக்கிறதாம். தாமிரத்தின் தடம்தான் இதன் நீருக்கு தனிதன்மையான ஒரு மெல்லிய சிவப்புநிறத்தை அளிப்பதாக சொல்கிறார்கள். இந்நதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியின் வழியாக கிழக்கு நோக்கி ஓடி, மன்னார் வளைகுடாவில் கடலில் கலக்கிறது.