சமீபத்திய பேரழிவுகள்
ஆந்திரப்பிரதேசம்: 2009 அக்டோபரில், இந்த நூற்றாண்டிலேயே அதிக அளவான வெள்ளப்பெருக்கை கிருஷ்ணா நதி கண்டபோது வறட்சியில் இருந்த ஆந்திர மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. 350 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்ததால் அடையமுடியா தீவாக மாறியது. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். 2001 முதல் 2003 வரை தொடர்ச்சியாக ஏற்பட்ட வறட்சியினால் ஒரு சிற்றோடையாக மாறி இருந்த கிருஷ்ணா நதி, ஆறே வருடங்களில் இத்தகைய வெள்ளச் சூழ்நிலையை எதிர்கொண்டது. அந்த மூன்று வருட வறட்சி காலத்தில் கிருஷ்ணா கடலினை சேரவில்லை.
ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீசைலத்தில் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்று அமைந்துள்ளது. அமராவதி கரையில் அமைந்துள்ள அமரேஸ்வர ஸ்வாமி கோவில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில் ஆகியவை மற்ற முக்கியமான வழிபாட்டு தலங்கள் ஆகும்.
கிருஷ்ணாவின் கிளைநதி பீமாவிற்கு, பீமசங்கர் ஜோதிர்லிங்கம் மூலஸ்தானம் ஆகும்.
துறவிக்கவிஞர் பசவாவின் சமாதி கூடலசங்கமா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு மலபிரபா நதி கிருஷ்ணாவுடன் கலக்கிறது. பசவா தன் பாடல்களில் சிவனை “கூடலசங்கம தேவா” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணாவின் கிளைநதியான துங்கபத்திராவின் கரையில்தான் விஜயநகரம் என்னும் மாபெரும் பேரரசு உருவானது. அதன் உச்ச காலகட்டத்தில், தலைநகர் ஹம்பியில் 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மிகப்பெரிய நகரமாக திகழ்ந்தது.