செப்டம்பர் 2017ல், சத்குரு வரலாறு காணாத ஒரு மகத்தான நோக்கத்தை கையிலெடுத்தார். ஒரு மாதம் முழுவதும் நிகழ்ந்த நதிகள் மீட்பு இயக்கத்திற்கான இப்பயணம், கோவையில் துவங்கி தில்லியில் நிறைவடைந்தது. இதில் சத்குரு தாமே வாகனத்தை செலுத்தியபடி, 16 மாநிலங்களினூடே, 23 நகரங்களில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபடி பயணித்தார். பொதுமக்கள், அரசியல் சார்புகள் கடந்து மாநில முதல்வர்கள், ஊடகங்கள், பிரபலங்கள் என்று பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளைச் சேர்ந்த 16.2 கோடி மக்களின் ஆதரவுடன் இப்பயணம் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
100: சத்குருவின் அழைப்பு
செப்டம்பர் 2017ல் நதிகள் மீட்பு இயக்கத்திற்கான விழிப்புணர்வுப் பயணத்தினூடே நிகழ்ந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் அவர்களுடன் சத்குரு.
இந்திய மக்களுக்கு ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஒரு அழைப்பு விடுத்தார்: “உண்மையான உறுதி கொண்ட 100 இளைஞர்களை எனக்குக் கொடுங்கள், நான் இந்த தேசத்தின் முகத்தையே மாற்றுகிறேன்.” விவேகானந்தர் போன்ற ஒரு மகத்தான மனிதருக்கு, அவர் வாழ்ந்த காலத்தில் உறுதியான 100 இளைஞர்கள் கூட கிடைக்கவில்லையே என்று சத்குரு அடிக்கடி குறைப்பட்டுக்கொள்வதுண்டு. எனவே அவருக்கு அஞ்சலியாக இந்த 100 இளைஞர்களை நாம் உருவாக்கவேண்டும் என்று சத்குரு முடிவுசெய்தார்.
இதற்கு நதிகள் மீட்பு இயக்கம் ஒரு சரியான அடித்தளமாக அமைந்தது. இவ்வியக்கத்தின் விழிப்புணர்வு பயணத்தின்போது சத்குரு, “நான் இந்த தேசத்து இளைஞர்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறேன். நாம் கடக்கும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எனக்கு 100 இளைஞர்கள் 3 ஆண்டுகளுக்கு வேண்டும். நாம் மாநில அரசுகளுடன் வேலை செய்யப்போகிறோம், களப்பணியும் அதிகம் நடக்கவிருக்கிறது. எனவே இதற்கு உறுதியான மக்கள் வேண்டும். இதற்கு ஒரே தகுதி, 3 ஆண்டுகளுக்கு ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற எண்ணத்தை ஓரமாக வைத்துவிட வேண்டும். இந்த ஒரு எண்ணத்தை ஓரமாக வைக்கும் 3 ஆண்டுகளில், பெரும்பாலான மனிதர்கள் 3 ஜென்மங்களில் காணாத வளர்ச்சியை நீங்கள் காண்பீர்கள். ஒரு தனிமனிதராக இருப்பதிலிருந்து பிரபஞ்சமயமான ஒருவராக நீங்கள் வளர்வீர்கள். இதுதான் வாய்ப்பு, இந்திய இளைஞர்களுக்கு இது என் அழைப்பு. நதிகளின் நிலையை நாம் மாற்றுவோம்” என்று அறிவித்தார்.
தேசம் முழுவதும் சத்குருவின் இந்த சக்திவாய்ந்த அழைப்பைக் கேட்டது. ஆனால், ஒரு சில இளைஞர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தனர், எனவே, சத்குரு அவர் தேடிய 100 இளைஞர்களைக் கண்டுகொண்டார். அவர்களை சத்குரு நதி வீரர்கள் என்று அழைக்கலானார். சுவாமி விவேகானந்தர் வந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மண்ணை மீட்கவும் நதிகளுக்கு புத்துயிரூட்டவும் உறுதிபூண்டுள்ள இந்த இளைஞர்களால் அவர் கனவு புத்துயிர் பெற்றுள்ளது.
நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான சத்குருவின் அழைப்பை ஏற்று “எனக்கு என்ன கிடைக்கும்?” எனும் எண்ணத்தை ஓரமாக வைத்த நதிவீரர்கள்
இப்போது எதற்காக?
‘நதி வீரர்கள்’ செயல்படுவதற்கு இதற்குமேல் அவசரமான தேவை இருக்கமுடியாது. நமக்கு எவ்வளவு குறைவான நேரமிருக்கிறது என்பதை குறித்து சத்குரு கூறியபோது, “இதை நாம் இப்போது செய்யாவிட்டால், இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தால், நம் நதிகளின் நிலையை மாற்ற நமக்கு 100 முதல் 150 ஆண்டுகள் எடுக்கும். அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதை நாம் 25 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால், இப்போது எடுக்கும் முயற்சியில் பத்தில் ஒரு பங்கு முயற்சியிலேயே இதை நாம் செய்திருக்க முடியும். ஆனால், நாம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு காத்திருந்தால், நம்மால் நம் நதிகளின் நிலையை மாற்றமுடியுமா என்பது கேள்விக்குறிதான்,” என்றார்.
நாம் இப்போது செய்வது வருங்காலத்தை ஆக்கவோ அழிக்கவோ வல்லது. சத்குரு கூறியது போல, “நாம் இப்போது சரியான செயல்களைச் செய்யவில்லை என்றால், நம் குழந்தைகள் மேல் நமக்கு எந்த அக்கறையும் இல்லை என்று தெளிவாகப் பதிந்துவிடுவோம். பூமியில் வாழும் கடைசி தலைமுறையைப் போல நாம் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி ஓடி விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகள்மேல் நமக்கு உள்ள பொறுப்பையும் கவனத்தையும் அக்கறையையும் காட்டுவதற்கான நேரமிது.” வருங்காலத்திற்காக சிந்திப்பது என்றால், இந்நாட்டின் குடிமக்களாக நாம் முதிர்ச்சி காட்டவேண்டும். இலவசங்கள் மற்றும் ஐந்தாண்டு தேர்தல் சுழற்சிக்காலங்களைத் தாண்டி நாம் பார்க்க விரும்புகிறோம் என்பதை நாம் காட்டவேண்டும். நமக்கு உடனடியாக பலன்கள் தராவிட்டாலும், தேசத்தின் நல்வாழ்விற்கு நீண்ட காலத்தில் பலன்கள் தரும் திட்டங்களுக்கு நாம் ஆதரவளிக்கிறோம் என்பதை நாம் காட்டவேண்டும்.
நதிவீரர்கள் – இவ்வியக்கத்தின் உந்துசக்தி
மிக உயர்ந்த தகுதி இதுதான்: தேவையானதைச் செய்வதற்கான அவர்களின் விருப்பம், அவர்களைத் தாண்டி சிந்திக்கும் அவர்களின் ஆற்றல்
பல்வேறு பின்னணிகளிலிருந்து 17 மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இந்த உற்சாகமான நதிவீரர்கள், இந்தியாவெனும் வண்ணமயமான கதம்பத்திற்கு சான்று. இதில் ஒருசிலர் வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ளனர்.
இவர்கள் நன்கு படித்த வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மென்பொருள் வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்களாக இருந்தாலும், இவர்களின் மிக உயர்ந்த தகுதி இதுதான்: தேவையானதைச் செய்வதற்கான அவர்களின் விருப்பம், அவர்களைத் தாண்டி சிந்திக்கும் அவர்களின் ஆற்றல்.
இவ்வியக்கத்தின் உந்துசக்தியாக விளங்குவதற்கு தயார்செய்யும் விதமாக, முதல் 100 நதிவீரர்கள், ஈஷா யோக மையத்தில் நடத்தப்பட்ட தீவிர வலுப்படுத்தும் தொழில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். நுழையும்போது என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமல் இருந்தவர்கள், வெளியே வரும்போது நதிகளுக்குப் புத்துயிரூட்டும் மாபெரும் முயற்சியில் வெற்றிபெறத் தேவையான திறமைகளின் வல்லமையோடும், தங்கள் முழு ஆற்றலை உணர்வதற்குத் தேவையான விலைமதிப்பில்லா கருவிகளோடும் வந்தனர்.
தேசம் முழுவதிலிருந்தும் பங்காற்றிய 15 விஞ்ஞானிகள், முன்னேற்றவியல் நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிகளில், வேளாண் தோட்டக்கலை, பருவநிலை மாற்றங்களைத் தாங்கும் விவசாய முறைகள், காடுவளர்ப்பு, கூட்டு நுண்ணீர் பாசனம், கூட்டு காடுகள் உரிமம், மண் மற்றும் நீர் சேமிப்பு, தொலை உணர்வு மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளையும் கற்றுக்கொண்டனர். நீண்ட கால நோக்கத்தில் செயல்படும் உறுதியான ஒரு நிறுவனத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தனித்துவமான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்தது. சமீபத்தில் இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் களப்பணியில் ஈடுபடும் குழுக்கள், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்துறைகளில் ஈடுபடும் குழுக்கள், என நம் நதிகளைக் காப்பாற்றத் தயாராக இருக்கும் ஒரு உயிரோட்டமான அமைப்பை இது உருவாக்கியுள்ளது.
கால்நடைகளுக்கான பாரம்பரிய மருந்துகள் (Ethno-Veterinary Medicine) குறித்து புகழ்பெற்ற நிபுணர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களிடமிருந்து பயிற்சி பெறும் நதி வீரர்கள்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் குறித்து கற்றுக்கொள்ளும் நதி வீரர்கள்
நதிகள் மீட்புத் திட்டத்தின் வரைவுத்திட்ட பரிந்துரைகளுக்கு இணங்க ஒரு மாதிரித் தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நதி வீரர்கள்
ஈஷா யோக மையம் அருகிலுள்ள தோட்டத்தில் வெந்தயக்கீரை அறுவடை செய்யும் நதி வீரர்கள்
நதி வீரர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
“முதல்முறையாக, ஒரு சுற்றுச்சூழல் இயக்கம், மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது, உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குமுன் இப்படி நடந்ததில்லை” – நதி வீரர்களை சந்தித்தபோது சத்குரு கூறியது
களப்பணியில் நதி வீரர்கள்
தங்களுக்கு உண்மையாகவே எது மதிப்பானதோ அதற்கு வேலை செய்வதாலும், நம் தேசத்தின் மக்கள் அனைவரின் வாழ்வாதாரம் பற்றிய ஆர்வத்தால் வேலை செய்வதாலும், “ஒரு தேசத்தின் வரலாற்றில் ஒருமுறையே” காணக்கூடிய இந்த மகத்தான இயக்கம் தொடர்ந்து முன்னேறிச் செல்லும். தீவிர பயிற்சிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, நதி வீரர்கள் அடுத்த படியாக, பல்வேறு நிலைகளில் தேசம் முழுவதும் இதனை முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்கள் 7 மாநிலங்களில் செயல்படுத்த 15 விரிவான திட்ட வரைவறிக்கைகளை தயார்செய்து வருகின்றனர். இந்த செயல்முறையில், மரங்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் இலாபம் ஈட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட மாதிரியை உருவாக்கவும், அரசாங்கத்தின் காடு நிலங்களுக்கு ஒரு மாதிரியை உருவாக்கவும், அவர்கள் அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டு, தகவல்கள் சேகரித்து வருகின்றனர். வெகுவிரைவில் அவர்கள் மஹாராஷ்டிராவில் முழுமையாக செயலில் இறங்குவர், அதற்குப்பின் உடனே கர்நாடகத்தில் செயலில் இறங்குவர்.
நீங்கள்! ஆம், நீங்களும் இதற்கு உந்துசக்தியாக விளங்கமுடியும்…
நம் நதிகளுக்கு ஆதரவான அரசியல் சார்புகள் தாண்டிய ஒற்றுமை இது. கடந்த 11 மாதங்களில் நதிகள் புத்துணர்வு குறித்த புரிதலில், குறிப்பாக கொள்கையளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது போதாது.
நம் முன் சவால்கள் இருக்கின்றன – சட்டரீதியான, நிர்வாகரீதியான, செயல்படுத்துவது ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன – இவற்றுக்கு தீர்வுகாண ஒவ்வொரு மாநிலத்திலும் நமக்கு அர்ப்பணிப்பான ஒரு குழு தேவை. மாதிரி தோட்டங்களும் காடுகளும் வளர்ப்பது சிறு காரியமல்ல – அதற்கு நிறைய கைகள் தேவை!
நதிகள் மீட்பு இயக்கம் மக்கள் ஆதரவில் இருந்தே பிறந்தது, அதன் இறுதிவரை மக்கள் ஆதரவாலேயே நடத்திச் செல்லப்படும். இந்த அர்ப்பணிப்பான குழுவின் அங்கமாக விளங்க உங்களை அழைக்கிறோம். உங்களைத் தாண்டிய ஒரு மாபெரும் நன்மை நிகழ்வதை நீங்கள் பார்க்க விரும்பினால், உண்மையில் உங்களால் அதனை நிகழச்செய்ய முடியும்!
மேலும் தெரிந்துகொள்ளவும், நதிகள் மீட்பு இயக்கத்தில் பங்காற்றவும் நதிகள் மீட்பு இயக்கத்தின் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களைப் பாருங்கள், அல்லது contact@rallyforrivers.org என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.
அடுத்து நிகழவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்: [ஆகஸ்ட் 8, 2018ல், யவ்வத்மால் மாவட்டத்திலுள்ள வகாரி நதி புத்துணர்வுக்கான விரிவான திட்ட வரைவறிக்கைக்கு, மஹாராஷ்டிர அரசு கொள்கை ஒப்புதல் வழங்கியது. அனைவரின் நல்வாழ்வுக்கும் தேசம் முழுவதும் செயல்படுத்தக்கூடிய ஒரு மாதிரித்திட்டம் உருவாக்குவதற்கான எங்கள் திட்டம் குறித்து தெரிந்துகொள்ள தொடர்பில் இருங்கள்.]