யவத்மாலின் வகாரி நதிக்கு புத்துயிரூட்ட மஹாராஷ்டிரா அரசு நதிகள் மீட்பு இயக்கத்துடன் கைகோர்த்தது

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நிதித்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் சுதீர் மகந்திவர் ஆகியோர், யவத்மாலில் உள்ள வகாரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்கான நதிகள் மீட்பு இயக்கத்தின் விரிவான திட்ட வரைவறிக்கையை பார்வையிடவும், கொள்கையை ஒப்புக்கொள்ளவும், ஆகஸ்ட் 8, 2018ல் சத்குருவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மும்பை ராஜ் பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

கூட்டு நுண்ணீர் பாசனம், மரத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சந்தை மேம்படுத்துதல், பயிர்வகைகள் பெருக்குதல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உதவுவதில் இத்திட்டம் கவனம் செலுத்தும். விவசாயிகளின் சந்தைப்படுத்தும் ஆற்றலையும் விளைச்சல் வருமானத்தையும் அதிகரித்து, விவசாய செலவை குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், விவசாயிகள், நிலமில்லா வேலையாட்கள், மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் சமுதாயங்களுக்கு பொருளாதார நிலைத்தன்மையை வழங்குவதோடு, தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளின் நீர்நிலைகளில் தண்ணீர் சேர வழிவகுக்கும்.

கோதாவரியின் கிளைநதியான வகாரி நதி யவத்மால் பகுதி வழியாக ஓடுகிறது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை, மண்வளம் குன்றுதல், பயிர் பொய்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளால் பல விவசாயிகள் இப்பகுதியில் தற்கொலை செய்துள்ளனர். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, மஹாராஷ்டிரா மற்றும் இந்தியா முழுவதிலும் விவசாய முறைகளில் ஒரு மாபெரும் புரட்சியின் முதல்படியாக அமையக்கூடும்.

x