நதிகளின் முக்கியத்துவம்

Sadhguru Jaggi Vasudev
இந்திய பாரம்பரியத்தில், நதிகளை வெறும் பூகோளரீதியான நிகழ்வுகளாக நாம் காணவில்லை. இதை நாம் தேவர்களாகவும் தேவிகளாகவும் பாவித்து வணங்கிவந்தோம். இந்த கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், மனித நல்வாழ்வுக்கு இது எப்படி வழிவகுக்கிறது என்பதையும் சத்குரு விளக்குகிறார்.


சத்குரு: சிவன், ராமன், கிருஷ்ணன், என்று இந்த கலாச்சாரத்தில் நாம் வழிபடும் மனிதர்கள் அனைவரும் ஒரு காலத்தில் இந்த பூமியில் நடமாடியவர்கள். பெரும்பாலான மனிதர்கள் சந்திக்கும் பல சோதனைகளையும் சம்பவங்களையும் அவர்களும் சந்தித்தார்கள். ஆனால், அவர்களைச் சுற்றி எவ்விதமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், வாழ்க்கை அவர்களுக்கு எப்படிப்பட்ட சவால்களைத் தந்தாலும், அவர்களின் உள்தன்மையிலிருந்து அவர்கள் பிறழவில்லை, அவர்கள் எதுவும் தங்களை பாதிக்க அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவர்களை நாம் வழிபடுகிறோம். பலவிதங்களில் ஒரு நதியும் இந்த குணத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. எப்படிப்பட்ட மனிதர்கள் அதைத் தொட்டாலும், நதியின் தன்மை ஓடுவதாக இருப்பதால், அது தூய்மையாகவே இருக்கிறது.

“இந்த கலாச்சாரத்தில், நதிகளை வெறும் நீர்நிலைகளாக நாம் பார்க்கவில்லை. அவற்றை வாழ்க்கை கொடுக்கும் தெய்வமாகவோ, தேவியாகவோ பார்த்தோம்.”

இந்த கலாச்சாரத்தில், நதிகளை வெறும் நீர்நிலைகளாக நாம் பார்க்கவில்லை. அவற்றை வாழ்க்கை கொடுக்கும் தெய்வமாகவோ, தேவியாகவோ பார்த்தோம். தர்க்கத்தின் எல்லைகளுக்குள் சிக்கியிருக்கும் சிந்திக்கும் மனதிற்கு, இது முட்டாள்தனமாகவும் மிக அபத்தமாகவும் தோன்றலாம். “ஒரு நதி வெறும் நதி தானே, அது எப்படி ஒரு தேவியாக இருக்கமுடியும்?” இப்படிச் சொல்லும் ஒரு மனிதரை மூன்று நாட்கள் தண்ணீர் கொடுக்காமல் ஒரு அறைக்குள் பூட்டிவைத்து, அதற்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுத்தால், அதைக் கண்டதும் கைகூப்பி வணங்குவார்கள். நதியைக் கண்டு அல்ல, ஒரு கிளாஸ் தண்ணீரைக் கண்டே வணங்குவார்கள்! எதை நாம் நீர், உணவு, நடமாடும் நிலம் என்று சொல்கிறோமோ, அவை வெறும் ஜடப்பொருட்கள் அல்ல. நம் நதிகளை வெறும் பூகோளரீதியான நிகழ்வுகளாக நாம் என்றும் பார்த்ததில்லை. உயிரை உருவாக்கும் மூலப்பொருளாக பார்த்தோம். ஏனென்றால் நம் உடலில் 70 சதவிகதத்திற்கும் அதிகமாக இருப்பது தண்ணீர்தான். உயிர்வாழ்வதைத் தேடும் போதெல்லாம், நாம் ஒரு துளி நீரையே முதலில் தேடுகிறோம்!

உலகில் இன்று மருத்துவ வசதிகளையும் கட்டமைப்புகளையும் நாம் உருவாக்கி வரும் வேகத்தைப் பார்த்தால், பூமியில் ஒருவர் விடாமல் எல்லோரும் ஒருநாள் மிக மோசமாக நோய்வாய்ப்படுவதை எதிர்பார்ப்பது போலத் தெரிகிறது. ஒரு காலத்தில் ஊர் முழுவதற்கும் ஒரே டாக்டர் இருப்பார், அதுவே போதுமானதாகவும் இருக்கும். இன்று ஒவ்வொரு தெருவிலும் ஐந்து டாக்டர்கள் இருக்கிறார்கள், ஆனால் அதுவும் போதவில்லை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. எப்படி வாழ்வது என்பதை நாம் மறக்கும்போது, நம் உயிரை உருவாக்கும் மூலப்பொருளையே நாம் மதிக்காதபோது – நாம் நடமாடும் பூமி, நாம் சுவாசிக்கும் காற்று, நாம் பருகும் தண்ணீர், நம்மை தாங்கியிருக்கும் ஆகாயம் – இவற்றின்மீது மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகும்போது – அவை நமக்குள் எப்படி நடந்துகொள்கின்றன என்பது முற்றிலும் மாறுபடுகிறது.

நாம் நலமாக வாழ விரும்பினால், நீர் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது, ஏனென்றால் நம் உடலின் 72% நீர்தான். இன்று நீருக்கு அபாரமான ஞாபகசக்தி இருப்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. நீரைப் பார்த்து ஒரேவொரு சிந்தனை உருவாக்கினால் கூட, நீரின் மூலக்கூறமைவு மாற்றமடைகிறது. இதை நம் கலாச்சாரத்தில் எப்போதும் அறிந்திருந்தோம், ஆனால் இன்று நவீன அறிவியல் நிறைய சோதனைகள் செய்தபிறகு இதை கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞானிகள் நீரை திரவநிலை கம்ப்யூட்டர் என்றே அழைக்கிறார்கள்! நீரை எப்படி நடத்துகிறீர்கள் என்ற ஞாபகம் அதில் நீண்டகாலம் பதிந்திருக்கிறது. அதனால், உடலைத் தொடும்முன் நாம் தண்ணீரை எப்படி நடத்துகிறோம் என்பது, நமக்குள் இருக்கும் எல்லாவற்றின் தன்மையிலும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. உடலில் இருக்கும் தண்ணீரை தூய்மையாக நாம் வைத்திருந்தால், நம் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மிக சுலபமாக கவனித்துக் கொள்ளலாம்.

பூதசுத்தி

“உடல்” என்பது, பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் பிரதிபலிப்பு. இந்தப் பஞ்சபூதங்களை உங்களுக்குள் முறையாக ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்தால், இதைவிட உயர்வானது வேறு எதுவுமில்லை.

“பஞ்சபூதங்களை உங்களுக்குள் முறையாக ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்தால், இதைவிட உயர்வானது வேறு எதுவுமில்லை.”

அதைச் செய்துவிட்டால், உங்கள் ஆரோக்கியம், புரிதல், அறிவு, ஞானம் எல்லாமே சரியாக அமைந்துவிடும். யோக வழிமுறையில், எல்லாவற்றிற்கும் அடிப்படையான பயிற்சி, “பூதசுத்தி” என்று அழைக்கப்படுகிறது. “பூத” என்றால் பஞ்சபூதங்கள். “சுத்தி” என்றால் சுத்தப்படுத்துதல். பூதசுத்தி என்றால் பஞ்சபூதங்களைச் சுத்தப்படுத்துதல் என்று பொருள். பஞ்சபூதங்களை சுத்தப்படுத்துவதன் மூலம் “பூதசித்தி” என்ற நிலையை அடைய முடியும். பூதசித்தி என்றால் பஞ்சபூதங்களின் மீது ஆளுமை ஏற்படுத்திக் கொள்ளுதல். அப்படி ஆளுமை வந்துவிட்டால், இந்த உடல், மனம் மீது மட்டுமில்லை, இந்தப் படைப்பின் மீதே உங்களுக்கு ஆளுமை ஏற்பட்டுவிடும்

நம் உடலில் பஞ்சபூதங்கள் ஒருங்கிணைந்து, சிறப்பாக செயல்படுவதுதான் உண்மையான ஆரோக்கியம். இந்த உடல் என்பது ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கு செல்ல தடையாக இருக்காமல், உயர்ந்த சாத்தியத்திற்கு ஓர் அடித்தளமாக அமைய வேண்டுமானால், இந்தக் கட்டமைப்பு ஒருங்கிணைந்திருப்பது மிக அவசியம். பூதசுத்தி எனப்படும் அடிப்படை யோகப் பயிற்சியை முறையாகச் செய்தால், அதன்மூலம் அடிப்படைக் கூறுகள் போதுமான அளவுக்கு சுத்தம் செய்யப்படுமானால், உடலில் ஒருங்கிணைப்பு செயல் நன்றாக இருக்கும்.

x