வெள்ளத்தையும் வறட்சியையும் மரங்கள் எவ்வாறு தடுக்கின்றன

மழை நீரானது மண்ணிற்குள் கசிந்து உட்செல்லும் வகையில், மரங்களின் உயிருள்ள மற்றும் அழுகும் வேர்கள் மண்ணில் சிறுசிறு துளைகளை உருவாக்குவதன் மூலம் நுண்ணிய நீர்த்தடங்களை மண்ணில் உருவாக்குகிறது. அந்த நீர்த்தடங்களின் வழியே மழைத் தண்ணீர் கசிந்து நிலத்தடியில் சென்று சேர்கிறது. இந்த நீர்த்தடங்கள் இல்லாமல் நீர் நிலத்தடிக்கு செல்லும் வேகம் பலநூறு மடங்கு குறையும்.

மேலும், மரங்களின் கழிவுகளான இலைகள் போன்றவை மண்ணில் விழும்போது, அது மக்கி, மண்வளம் மேம்படச் செய்வதோடு, சிறு சிறு மண் குவியல்கள் உருவாகின்றன. இந்த மண் குவியல்கள், மண்ணில் துளைகள் ஏற்பட ஏதுவாக இருக்கிறது.

இவ்வாறு, மரங்களின் போர்வையில் உள்ள நிலங்கள் மழைநீரை தக்கவைக்க பெரிதும் உதவுகிறது. இதன்மூலம் மழை பெய்த பின், மண்ணின் மேற்புரத்திலிருந்து மழைநீர் அடித்துச் செல்லப்படுவது குறைகிறது. இதனால் அதிகப்படியான நீர் ஆறுகளிலும் ஓடைகளிலும் சென்று சேர்வது குறைகிறது. வரையறுக்கப்பட்ட மாதிரிகள் சொல்வது என்னவென்றால், 20-35% காடுகள் உருவாக்கம் நதிக்கரைகளில் நிகழுமேயானால், 25 வருடகால காடு வளர்ப்பிற்குப் பிறகு, அங்கு வெள்ள அபாயம் 10-15% அளவிற்கு குறையும்.

மரங்கள் வெட்டப்பட்டால் வெள்ள அளவு வெகுவாக அதிகரிக்கும். ஏனென்றால் பெரும்பாலான மழைநீர், நீரோடைகள் மற்றும் ஆறுகளில், மிக குறுகிய காலத்திற்குள் சென்று சேர்ந்து விடுகிறது. இந்த அதிகப்படியான நீரானது மனித குலத்திற்கு எந்தவகையிலும் பயனளிக்காமல், வீணாக கடலில் கலந்துவிடுகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு மண் வளம் அழியும். இதனால்தான், அதிக அளவு மழை பெற்று, செழிப்பாக இருந்த பல நிலப்பரப்புகள், மரங்கள் வெட்டப்பட்டதும் பாழ் நிலங்களாக மாறிவிட்டன.

IIT ரூர்க்கியின் ஒரு ஆய்வறிக்கையில் நகரமயமாக்கலின் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டதற்கு முன்னும் பின்னும் உள்ள வெள்ள உச்ச அளவுகளை ஒப்பிட்டுள்ளது. குறைந்த அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளில் 11-30% அளவிற்கு நிலத்தடி நீர் ஊறும் அளவு குறைந்துள்ளது. மிதமான அடர்த்தியுள்ள குடியிருப்பு பகுதிகளில் 52-100% வரை நிலத்தடி நீர் ஊறும் அளவு குறைந்துள்ளது. மிக அதிகப்படியான குடியிருப்பு பகுதிகளில்94-100% அளவிற்கு நிலத்தடி நீர் ஊறும் அளவு குறைந்துள்ளது.இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை மரம் நடுதல் கட்டுப்படுத்துகிறது. மேலும், மழை முடிந்தபின்னும் நிலையான நீரோட்டத்தை இது வழங்குகிறது. மண்ணரிப்பையும் இது கட்டுக்குள் வைக்கிறது.

வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் மரம் நடுதலை கையாண்டுள்ள அரசாங்கங்களுக்கு சான்றாக ஏராளமான நாடுகள் உள்ளன. இங்கிலாந்தில், வடக்கு யோர்க்ஷீரில் நகராட்சி நிர்வாகத்தினர் மரங்கள் நட்டு வெள்ளத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.. அவர்கள் இதனை “வெள்ளத்தை குறைத்தல்” (Slowing the Flow) என்கின்றனர். இத்திட்டத்தின் ஆய்வறிக்கையின்படி ஆற்றின் உச்சபட்ச வெள்ள அளவு 15-20% அளவிற்கு குறைந்துள்ளது. முந்தைய 10 வருடங்களில் நகரம் எதிர்கொண்ட நான்கு வெள்ள சேதத்திற்குப் பின் 2009ல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2007ல் ஏற்பட்ட வெள்ள சேதமானது சுமார் 7 மில்லியன் டாலர் அளவிற்கு கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் 40,000 மரங்கள் நடுவதோடு, ஹித்தர் புல்வெளி பகுதியை சீர்செய்வதும் அடங்கும். இவையனைத்திற்கும் ஆற்றின் வெள்ள ஓட்டத்தை கட்டுப்படுத்துவதும், வெள்ள உச்ச அளவை குறைப்பதுமே நோக்கமாகும். இத்திட்டத்திற்காக அரசாங்கத்திற்கு சுமார் 5 லட்சம் டாலர்கள் செலவானது. இது போன்று இயற்கை வழியில், வெள்ளத் தடுப்புப் பணிகள் நடக்க வேண்டும் என்று இந்த திட்டத்தின் ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

ப்ரிமிங்கம் பல்கலைக்கழகத்தின் (University of Birmingham) தலைமை ஆய்வாளரான சைமன் டிக்ஸன் அவர்கள் கூறும்போது, “வெள்ள அபாயத்தை குறைப்பதில் மரம் நடுதல் பெரும் பங்காற்ற முடியும் என்பதை நாங்கள் உணர்கிறோம். விரிவான வெள்ள தடுப்பு நடவடிக்கையில், நடைமுறையில் இருக்கும் வெள்ளத் தடுப்பு முறைகளுடன், மரங்கள் நடுவதும் முக்கிய பங்காற்றும் விதமாக உள்ளது. மேலும் மரங்கள் நடுவது, மழை நீர் தாழ்வான பகுதிக்கு செல்லும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது!”

பாகிஸ்தானில், கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 2016 ஏப்ரலில் 140 மக்களுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு பெருமளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டது. காடுகள் அழிப்பு மற்றும் மலைச்சரிவுகளில் மண்ணரிப்பு ஆகியவையே இந்த அளவிற்கு அழிவு ஏற்படுவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “சீதோஷ்ண நிலை மாற்றம் மழையளவின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. காடுகள் அழிப்பு, இந்நிலையை மேலும் மோசப்படுத்தி பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது.”

இந்த அனுபவங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் த்ஹ்ரீக் இ இன்சஃப் (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் மேற்கு கைபர் பக்துங்க்வா(KP) மாகாணத்தில் “பசுமை வளர்ச்சி இயக்கம்” என்ற இயக்கத்தை துவங்கியுள்ளார். இந்த இயக்கத்தின் படி, சுமார் 60 வருட கால காடுகள் அழிப்பை மீட்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது “தி பில்லியன் ட்ரீ சுனாமி” என்ற பெயரில் மாபெரும் அளவிலான காடுகள் உருவாக்கும் திட்டம் என அழைக்கப்படுகிறது.

2015 ஜூனில் துவங்கி, இதுவரை சுமார் 250 மில்லியன் மரக்கன்றுகளுக்கும் மேலாக தனியார் நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 450 மில்லியன் மரக்கன்றுகள் வனப்பகுதியிலேயே உள்ளூர் சமூக மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நாற்றுப்பண்ணைகள் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ளன. பெரும்பான்மையானவை தனியாருக்கு சொந்தமானது; இதன் தேவையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

தர்ட் போல் என்கிற வலைதளத்தின் படி, “இளைஞர் நாற்றுப்பண்ணைகள்” திட்டத்தின்கீழ் மாகாண அரசாங்கம் ஒரு பாதுகாப்பான வர்த்தக ஒப்பந்தத்தை வேலையில்லா இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு வழங்கியுள்ளது. அதாவது 25,000 மரக்கன்றுகளை தாங்களாக உருவாக்க வேண்டும், அதற்கு 25% செலவுத் தொகை முன்பணமாக வழங்கப்படும். இந்த நர்சரிகளின் மூலம் பாகிஸ்தான் பணமதிப்பில் 12000 முதல் 15000 வரை மாதந்தோறும் சம்பாதிக்க முடியும். இது அந்த பகுதியில் ஒரு பெரிய சம்பாத்தியமாகும். குறிப்பாக பெரும்பாலான சிறிய நாற்றுப்பண்ணைகள் கிராமப்புற பெண்களாலேயே நடத்தப்பட்டு வருவதால் இதன்மூலம் அவர்களின் பொருளாதாரம் பெருகியுள்ளது.

ஐநாவின் WWF நிறுவனம் இந்த திட்டத்தில் அரசாங்கத்திற்கு துணை நிற்கிறது. இம்ரான்-கான் அவர்கள் கூடுதலாக “ஒரு மரம், ஒரு உயிர்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் குழந்தைகள் மரக்கன்றுகள் நடுவதிலும் பேணி வளர்ப்பதிலும் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் மத்திய அரசும் கூட “பசுமை பாகிஸ்தான் திட்டம்” என்ற 5 வருடங்களில் 10 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் இணைந்து செயல்படுகிறது.

புயல் வெள்ள நீரை கையாளும் நடவடிக்கைகளில் அதிகப்படியான நீரினை படித்து வைக்கும் செயல்பாட்டில், அந்த நீரிலுள்ள மாசுகளை அகற்றுவது இன்றுவரை வெற்றிகரமாக செயலாற்றப்படவில்லை. ஆனால், தற்போது அது மாறியுள்ளது. உதாரணத்திற்கு அமெரிக்காவில், நகராட்சி நிர்வாகத்தினர் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவதில் செயலாற்றி வருவதோடு, புயல் வெள்ள நீரை மீண்டும் நிலத்திற்குள் அனுப்பும் செயலினை மேற்கொள்கின்றனர். புயல் வெள்ள நீரை கையாள்வதில் புதிய நிர்வாக திட்டத்தின் பத்து கோட்பாடுகளில் இயற்கை சூழலையும் பேணி வளர்த்தல்” (மண், தாவரம் மற்றும் பிற) ஆகும்.

புயல்வெள்ள நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரத்தை பாதுகாத்தல் போன்றவற்றில் மரங்கள் மற்றும் காடுகளின் பங்களிப்பு குறித்து சில ஆய்வாளர்களும், திட்டவியலாளர்களும் மற்றும் சமூக தலைவர்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. 2016ல் Chesapeake Bay Executive Council குழுவின் ஆய்வுகளின்படி:

‘காடுகள் தண்ணீரை பிடித்து வைத்தல், வடிகட்டுதல் மற்றும் தக்கவைத்தல் போன்றவற்றின் காரணமாக தண்ணீரின் தரத்தை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது. அதுபோலவே காற்றிலுள்ள மாசினை கட்டுப்படுத்துகிறது. மேலும் நீர் வழித்தடங்களிலுள்ள சுமார் 1 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதிலும், மேம்பட்ட சுற்றுச்சூழலை வழங்குவதிலும் மற்றும் பொருளாதார நலன்களை வழங்குவதிலும் காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் கார்பன் கால் தடத்தை குறைத்தல், வெள்ள அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றில் காடுகளின் பங்கு அத்தியாவசியமாகிறது.’

நதிநீர் மேலாண்மையில் வேளாண்காடுகள் மிகவும் சிறப்பான பலன்களை உலகம் முழுவதிலும் வழங்கி வருவதைப் பார்க்கிறோம். இதுகுறித்த ஆய்வுகள் பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவில் 1970 முதற்கொண்டு நீர் வழித்தடங்களில் பசுமையை மீட்க ஒரு திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இது குடிநீர், விவசாய பாசனம் என பலவிதங்களில் மற்றும் பிற செயல்பாடுகளிலும் நாட்டின் அடித்தட்டு சமூகத்திற்கு உதவிகரமாய் உள்ளது. இந்த இயற்கையான பலன்களை தவிர்த்து, விவசாயிகள் அதிகப்படியான மகசூல் பெறுதல் மற்றும் வருமானம் ஈட்டுதல், பருவநிலை மாறுபாட்டினை சமாளித்தல், இயற்கை காடுகளை சார்ந்திருப்பதை குறைத்தல், பறவைகள் மரங்களில் கூடுகட்டி பெருகுவதால் பூச்சிகளின் தாக்கம் குறைதல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் போன்ற பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

மரங்கள், எப்படி வறட்சியை தடுக்கிறதோ, அதே முறையில் வெள்ளத்தையும் தடுக்கிறது. மரங்கள் நடும்போது, மழைநீர் நிலத்தடிக்கு நுண்துளைகளின் வழியாக செல்வதைப் போல, மண்ணானது நீரினை கிடைமட்டமாக உறிஞ்சுகிறது. இத்தகைய நிலத்தடி நீரோட்டமானது நீரோடைகள் மற்றும் ஆறுகளுக்கு, சிறிது சிறிதாக, சில காலங்களில், நீரினை கொண்டு சேர்க்கிறது; இதனால் வெள்ளத்தைத் தடுக்கிறது.

இந்த நிலத்தடியின் ஆதார நீரோட்டமானது இந்திய நதிகளை தொடர்ந்து வறட்சிகாலத்திலும் ஓடவைக்கிறது. தற்போது இத்தகைய நீரோட்டத்தின் படி எவ்வளவு நீரை ஒரு ஆறு பெறுகிறது என்பதை நம்மால் அரிதியிட்டு சொல்ல இயலாது, ஏனென்றால் பெரும்பாலான ஆறுகள் அணைகளால் தடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கணக்கீடானது பலவிதங்களில் மாறுபடக்கூடும். தென்னிந்திய நதிகளின் நீரளவில் 20-40% இருக்கும் என கணக்கிடப்படுகிறது. நர்மதையில் 20-20% மற்றும் கோதாவரியில் 35%மாக கணக்கிடப்படுகிறது.