பல்லுயிர் பாதுகாப்பிற்கு மரங்கள் எப்படி உதவுகின்றன

ஆறுகளின் கரையோரம் இருக்கும் மரங்கள் மற்றும் தாவர வகைகள், நீர்வாழ் உயிரினங்களுக்கு வாழ்க்கைச் சூழலை வழங்குகிறது. இதனால் பல்லுயிர் பெருக்கம் அதிகரிக்கிறது. மரங்கள், ஆற்று நீரை குளுமையாக வைத்திருப்பதோடு நீர்வாழ் உயிரினங்களுக்கான வசிப்பிட சூழலை சிறப்பாக்குகிறது. விலங்குகளின் தொடர்ச்சியற்ற வசிப்பிடங்களுக்கு மத்தியில் இது ஒரு வனவிலங்கு சரணாலயமாக விளங்குகிறது. மரங்களின் பாகங்கள் ஆற்றில் விழும்போது, அதனால் நீர் வாழ் உயிரினங்களுக்கு புதிய சக்திமூலம் கிடைக்கப் பெறுகிறது.

இந்தியா சுமார் 1000 வகைகளுக்கு மேல் நன்னீர் மீன் வகைகளைக் கொண்டுள்ள ஒரு உலகளாவிய பல்லுயிர் மையமாக விளங்குகிறது. ஆனால், தற்போது இந்திய நதிகளின் பல்லுயிர் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியா நன்னீர் வாழ் மீன் வகைகளின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 75% மீனவர்கள் நன்னீர் வாழ் மீன் பிடிப்பை நம்பியே உள்ளனர். நீரில் மீன்களின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று இயல்பாக கிடைக்க வேண்டிய அளவில் 15% (0.3 டன்/1கி.மீ) மீன்கள் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன.

உதாரணத்திற்கு. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கங்கையின் மீன்பிடிப்பின் சராசரி அளவு 90% அளவிற்கு குறைந்துள்ளது. பெங்காலி உணவில் முக்கிய அங்கமான ஹில்சா மீன் வகை, ஏறத்தாழ கங்கையில் காணாமலே போய்விட்டது.

மேற்கு நர்மதை ஆற்றுப்பகுதிகளிலும் ஹில்சா மீன்வகை வெகுவாக குறைந்துவிட்டது. 1993-2005க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இது மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு குறைந்துள்ளது. ஆறுகளின் நீரோட்டம் பொறுத்தும் மீன்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. மாதாந்திர மீன் பிடிப்பில் பிடிக்கப்படும் அரியவகை மீன் இனமான மசீர் (Mahseer) வகை தற்போது முற்றிலும் அழிந்துவிட்டது.