மரங்கள் விவசாயிகளின் வருமானத்தை எப்படி பெருக்கும்?

விவசாயிகள் பயிர் உற்பத்தியிலிருந்து மரப்பயிர் உற்பத்திக்கு மாறும்போது அதிகப்படியான வருமானம் கிடைக்கப் பெறுவர் என்பதற்கு பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் சிலர் அரை ஏக்கரில் மட்டுமே பயிர் செய்து 5 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர். மஹாராஷ்டிராவில் சில விவசாயிகளின் வருமானம் சுமாராக 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு வருடத்தில் 1 ஏக்கருக்கு ரூ20,000மாக இருந்தது ரூ 1.5லட்சம் ரூபாய் வரை வருமானம் அதிகரித்துள்ளது.

விவசாயிகள் கார்பன் பரிமாற்று வர்த்தகத்தை சேர்த்தே செய்கிறார்கள்! மஹாராஷ்டிரா அரசாங்கம் சுற்றுச்சூழலுக்கான இந்த வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மக்களை மரங்கள் நடுவதற்கு ஊக்கமளிக்கிறது. 200 சந்தன மரங்களை 1 ஹெக்டேர் நிலத்தில் வைப்பதாக கணக்கிட்டால் அந்த மரங்கள் மூலம் விவசாயிகள் ரூ3500 வரை முதல் ஆண்டில் பெறுவர். இந்த வருமானம் அந்த மரங்கள் வளர வளர, ஒவ்வொரு ஆண்டும் ரூ3500 வீதம் அதிகரித்துக்கொண்டே செல்லும். எனவே 5 வருட நிறைவில், விவசாயிகள் ரூ.17,500 வரை சம்பாதிக்கின்றனர்.

விவசாயிகள் மரங்கள் நடுவதன் மூலம் தரகுத் தொகையாக சம்பாதிக்கும் வகையில் தமிழ்நாட்டில் சில நிறுவனங்கள் ஒரு வியாபார மாதிரியை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் கார்பன் பரிமாற்றும் வர்த்தகத்தை சர்வதேச வியாபாரமாக செய்கின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில், சுமார் 50,000 விவசாயிகளுக்கும் மேல் தரிசாக கிடந்த பொது நிலத்தில் காடுகள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கார்பன் பரிமாற்று வர்த்தகத்தில் ரூ1.93 கோடி வருமானத்தை பெற்றுள்ளனர்.

வேப்ப இலைகள், தேன், கைவினை உற்பத்திகள், ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ரப்பர் போன்ற மரப்பயிர் சார்ந்த பொருட்கள் போன்றவையும் வருமானத்திற்கு அடிப்படையாகின்றன.

சுற்றுலா என்பது இன்னொரு வருமான மூலதனமாக உள்ளது. பண்ணைச் சுற்றுலா அல்லது கிராமப்புற சுற்றுலா என்பது சிறிய அளவில் இருந்தாலும், தற்போது வளர்ந்துவரும் ஒரு விஷயமாக உள்ளது. மரங்களும் சுற்றுச்சூழலும் சிறப்பாக வளர்ச்சியடையும் பட்சத்தில் சுற்றுப்புற இயற்கைச் சூழலுக்கான சுற்றுலா என்பது இன்னொரு வகையான வாய்ப்பாக அமையும். உலக அளவில் 1994ல் இயற்கை சுற்றுலா ஆர்வலர்கள் (வனவிலங்கு சுற்றுலா ஆர்வலர்கள் தவிர்த்து) சுமார் 90 கோடி அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறார்கள். இந்த துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் தெரிவதால் இந்தியாவும் தற்போது ஓரளவிற்கு இயற்கை சுற்றுலா தலங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மரங்கள் & விவசாயிகள் – வெற்றி கதைகள்!

  1. சிவ பிரசாத், திப்பைப்பள்ளி – கர்னூல், ஆந்திரப்பிரதேசம் (மாதுளை)

திரு.சிவ பிரசாத் அவர்கள் பெங்கால் கிராம், மக்காச்சோளம் மற்றும் கடலை போன்ற பயிர் வகைகளை தனது 25 ஏக்கரில் உற்பத்தி செய்துவந்தார். ஆண்டுக்கு சுமார் 2.15 லட்சங்கள் செலவு செய்யப்பட்டது மற்றும் வருமானம் 4.9 லட்சமாக இருந்தது. அரசாங்கத்தின் ஒரு தோட்டக்கலை திட்டத்தில் இணைந்த பிறகு, அவர் தனது நிலங்களில் மாதுளை பயிர் செய்யத் துவங்கினார். நீர்ப்பாசனம், கவாத்து செய்தல், பூச்சிக் கட்டுப்பாடு முறைகள், அறுவடை செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற எந்தவொரு அடிப்படை அனுபவங்களும் தோட்டப் பயிர் உற்பத்தியில் அவருக்கு இல்லாத போதிலும் அரசாங்கத்தின் பயிற்சியால் அறிந்து கொண்டார்.

இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் எண்ணெய் கேக்குகள் உபயோகப்படுத்தப்பட்டன. சொட்டுநீர் பாசனம் மற்றும் செயற்கை பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டன. சொட்டுநீர் பாசனம் மூலம் மாதுளை மரங்களில் விரிசல்களை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகள் உருவாவது தடுக்கப்பட்டது.

தற்போது, அவரது செலவினம் 12.5 லட்சமாகவும் வருமானம் 35 லட்சமாகவும் உள்ளது.

  1. 2. முத்து நாகதசம்பட்டி, தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு (நார்த்தங்காய், மல்லிகை)

திரு. முத்து அவர்கள் தனது அரை ஏக்கர் நிலத்தில் மல்லிகை மற்றும் நார்த்தங்காய்(citrus) பயிர் செய்துள்ளார். இவரது நிலத்தில் அனைத்து பயிர்களும் ஆட்டு கழிவு, பண்ணைக் கழிவு, நிலக்கடலை மற்றும் வேப்பிலை துண்டங்கள் ஆகியவற்றாலேயே வளர்கின்றன. 5 ஆடுகள் மற்று 5 காளைகள் உள்ளன; இடுபொருட்களுக்காக அவர் எந்தவித சிரமத்தையும் எதிர்கொள்வதில்லை!

25 நார்த்தங்காய் மரங்கள் கோடைகாலத்தில் கவாத்து செய்யப்படுகின்றன. இதன் பழங்களுக்கு சந்தையில் நல்ல விலையும் வரவேற்பும் உள்ளது. இதற்கான காரணத்தை அவர் சொல்லும்போது, “இந்த பழங்கள் நன்கு உருண்டு திரண்டு, சாறு நிறைந்ததாக, பெரிதாக, கரும்புள்ளிகள் இன்றி பார்ப்பதற்கு கவரும் வகையில் இருப்பதுதான் காரணம்” என்கிறார். “என்னால் இரு மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 5000 பழங்களை அறுவடை செய்ய இயலும். ஒவ்வொரு பழமும் உள்ளூர் சந்தையில் ரூ1.50 முதல் ரூ2.00 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனக்கு தொடர்ச்சியான வருமானமாக ரூ.1500 முதல் ரூ.2000 வரை கிடைக்கிறது.” என்றார் அந்த விவசாயி. மல்லிகை பருவ காலம் வந்தவுடன் அதன் மதிப்பு உச்சத்தில் இருக்கும். முத்து அவர்களால் ஒரு கிலோவிற்கு ரூ.300 வரை பெறமுடியும். அனைத்து பயிர்களுமே இயற்கை விவசாய முறையில் வளர்கின்றன.

  1. 3. திரு.குழந்தைசாமி, மருங்குளம் கிராமம், தஞ்சாவூர், தமிழ்நாடு (நெல்லிக்காய்)

திரு.குழந்தைசாமி தனது 25 ஹெக்டேர் இயற்கை விவசாயப் பண்ணையில் கூடவே ஒரு உயர் தொழிற்நுட்பத்துடன் கூடிய நாற்றுப்பண்ணையை வைத்துள்ளார். அதோடு 0.4 ஹெக்டேர் அளவுக்கு ஒரு மாதிரி பண்ணை வடிவமாக அதிக விளைச்சல் தரும் வகை ரகத்தில் 400 நெல்லி மரங்களை வைத்துள்ளார். நல்ல இயற்கை உரத்துடன் தென்னை நார் கழிவுகள், வேம்பு துண்டுகள் மற்றும் மண்புழு உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதால் நிலத்தின் தண்ணீர் பிடிப்பு திறன் மேம்படுகிறது. சொட்டுநீர் பாசனம் இங்கு பயன்படுத்தப்படுகிறது. அசடோபாக்டர், போஸ்போபாக்ட்ரீயம் மற்றும் வாஸிகுலார் அர்பஸ்குலர் மைக்கோரிஸா (Azotobacter, phosphobacterium and Vesicular Arbuscular Mycorrhiza (VAM) ) ஆகிய உயிர்பூச்சி கொல்லிகள் பயிர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து இடப்படுகிறது.

பொருளாதார ரீதியாக நல்ல பருத்த பழங்கள் மூன்றாம் ஆண்டுவாக்கில் அறுவடை செய்யப்படுகின்றன. உயரும் நெல்லி மரக்கன்றுகளின் விலை மதிப்பு, அதன் நடவு செலவு ஒரு ஹெக்டேருக்கு ரூ1.25 வரை கொண்டு சென்றாலும் மூன்றாம் ஆண்டில் சராசரியாக ஒரு கிலோவிற்கு ரூ10 என்ற வீதத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ2.5 லட்சம் வரை கிடைக்கிறது. ஒவ்வொரு மரமும் 25 கிலோ வரை ஒரு வருடத்திற்கு தருகின்றன. மரங்கள் 5 வயதை அடைந்ததும் மகசூல் படிப்படியாக உயர்ந்து 50 கிலோ வரை செல்கிறது. எட்டாவது வருடத்திலிருந்து சராசரி அறுவடையானது ஒரு மரத்திற்கு 100கிலோ வரை நடக்கிறது.

  1. வீரபத்ரன், மாம்பாக்கம் கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு (மாம்பழம்)

திரு.வீரபத்ரன் அவர்கள் 0.7 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யும் ஒரு குறு விவசாயி ஆவார். அவர் சொல்லும்போது, “ ஒரு 10 வருடங்கள் முன்பு வரை நான் நெல் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பயிர்செய்து வந்தேன். கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து போதல் போன்ற நிலைமையால் நான் பெரிய இழப்பை சந்தித்தேன். இந்த நிலையிலிருந்து மீள்வதற்காக மாற்றுவகை பயிர்களை பயிரிட தீர்மானித்தேன். நெல் போன்ற அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களாக அல்லாமல், குறைவான தண்ணீர் தேவையுள்ள பயிரான மாமரத்தை பயிரிட்டேன். தற்போது என்னிடத்தில் 250 பங்கனபள்ளி மற்றும் 400 ருமணி வகை மா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.. இரண்டு வகைகளுமே எனக்கான சீரான வருமானத்தை ஈட்டித் தருகின்றன.

மா மரங்கள் வளரும் பருவமான முதல் நான்கு வருடங்களில் அவர் ஊடுபயிராக காய்கறிகள் மற்றும் நிலக்கடலைகள் போன்ற பல்வேறு வகை பயிர்களை பயிரிட்டார். அதனை அறுவடை செய்யும்போது அந்த பயிர்களை அப்படியே நிலத்திற்கு உரமாக பிடுங்கிப் போட்டுவிடுவார். கூடவே அவர் மட்கிய பண்ணைக் கழிவு மற்றும் வேம்பு துண்டுகள் ஆகியவற்றை உரமாக இடுகிறார். பூச்சிகளை தடுக்க பஞ்சகாவ்யா தெளிக்கப்படுகிறது.

அவர் சொல்லும்போது, “மரப்பயிர் பராமரிப்பு, ஊடுபயிர் சாகுபடி, வேலையாட்கள் செலவு என நான் சுமார் ரூ.15,000 வரை ஒரு ஹெக்டேருக்கு செலவழிக்கிறேன். இந்த வருடம் ருமணி இரகத்தில் ஹெக்டேருக்கு 8-10 டன்கள் வரை மகசூல் எதிர்பார்க்கிறேன்.” மாம்பழ சீசன் நிறைவுறும் தருணத்தில்தான் ருமணி பழங்கள் சந்தைக்கு வரும். மற்ற இரகங்களை விட நல்ல விலை இதில் கிடைக்கும்” என்றார்.

  1. 5. பகவான் சிங், பரத்பூர் மாவட்டம், இராஜஸ்தான் (கொய்யா)

திரு.பகவான் சிங் மட்டுமல்லாமல் அவரின் முன்னோர்கள் முதற்கொண்டு சமீபகாலம் வரை கடுகு பயிர்செய்து வந்தனர். ஆனால் வருமான பற்றாக்குறையால் கடுகு பயிர் சாகுபடியில் அவர் நம்பிக்கை இழந்தார். அவர் வெறும் ரூ500 செலவில் சுமார் 300 கொய்யா மரக்கன்றுகளை நடுவதென 2007ல் தீர்மானித்தார். அவர் விதைகளற்ற இனிப்பான ரக கன்றுகளை நட்டார். ஆக்ரா, மதுரா மற்றும் டெல்லியில் தற்போது இந்த கனிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுகிறார்.

  1. மஹபூப்நகர் மாவட்டம் அமர்சிந்தா கிராமம் மற்றும் நல்கொண்டா மாவட்டத்தில் ரேவல்லி கிராமம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோ-இந்தியா பயோலாஜிக்கல் கார்ப்பரேஷன் (BIB) ஒரு ஜப்பான் கம்பெனியுடன் இணைந்து வேப்ப இலைகளிலிருந்து ஒரு உணவு சேர்மானத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இந்த பொருளை தண்ணீர் கலந்து உபயோகிக்கலாம். இது பாக்கெட்டுகளில் அடைத்து ஜப்பானில் விற்கப்படுகிறது; கிரீன் டீ மற்றும் மூலிகை தேநீருக்காக இது பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது.

இதற்கான வேப்ப இலைகள் ஆந்திர பிரதேச அரசின் பல்லுயிர் மேம்பாட்டு குழுவின் ஒத்துழைப்புடன் ஒரு ஒப்பந்தத்தத்தின் அடிப்படையில் கிராம மக்களிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு வேப்ப இலைகளுக்கு 100 ரூபாய் வழங்குகிறது BIB.