மரங்கள் தண்ணீரின் தரத்தை எப்படி உயர்த்துகிறது!

அமெரிக்க வேளாண் துறை கூற்றின்படி, “மரங்கள் மற்றும் தாவரங்களின் கழிவுகள் நிலத்தின் மேல்மட்ட அரிப்பை மட்டுப் படுத்துகிறது. மேலும், இவை மண் படிமம் மற்றும் மண் படிமங்களின் குப்பைகள் ஆகியவை மேற்பரப்பு நீரோட்டத்தில் நுழைவதற்கு முன்பே மண்ணில் படிவதற்கு உதவிகரமாய் உள்ளது. மண்ணில் படியும் குப்பைகள் மட்கி நுண்ணுயிர்களுக்கும் அல்லது தாவரங்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் மாறிவிடும். வேர் மண்டலங்களில் பாயும் நிலத்தடி நீரானது இந்த செயல்முறையாலேயே வடிகட்டப்படுகிறது. கூடுதலாக, மரங்கள்,ஏரிகள் மற்றும் ஓடைகளில் காற்றிலுள்ள மாசுகள் படிவதற்கு முன்னால் அவற்றைத் தடுத்து நிறுத்துகின்றன.”

நியூயார்க்கின் நீர் விநியோக அமைப்பில், மரங்களும் காடுகளும் தண்ணீரை வடிகட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது அமெரிக்காவில் பெரிய வடிகட்டப்படாத தண்ணீர் விநியோக அமைப்பாகும். இது ஒவ்வொரு நாளும் சுமார் 90 லட்சம் மக்களுக்கு 1,20,00,000 கலூன் அளவு தண்ணீரினை வழங்குகிறது. காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மண் ஆகியவை இயற்கையான வடிகால்களாக, தண்ணீரைத் தூய்மைப்படுத்துகிறது.

டேலவேர், கேட்ஸ்கில் மற்றும் க்ரோட்டன் ஆகிய மூன்று ஆறுகளிலிருந்து நியூயார்க்கின் தண்ணீர் தேவைகள் பூர்த்தியாகின்றன. 1997ல் இந்த நகர நிர்வாகம் ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்தது. 8-10 மில்லியன் டாலர்கள் செலவு செய்து தண்ணீர் வடிகட்டும் தொழிற்சாலை அமைப்பதற்கு பதிலாக அங்குள்ள இயற்கை நீர் ஆதாரங்களை பராமரிக்க தீர்மானித்தனர். இதற்கு 1.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானது. இதற்கான பலவித செயற்திட்டங்களில் ஒன்றாக, நீர்ப் படுகைகளில் அமைந்துள்ள வனப்பகுதியின் உரிமையாளர்களுக்கு, அதனை பராமரிக்க, சன்மானம் வழங்கப்பட்டது.

இந்த மூன்று நதிப்பிடிப்பு பகுதிகளில், க்ரோட்டன் நதியின் பகுதிகள் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டு வறண்டுள்ளது. அதிகப்படியான மக்கள் குடியேற்றம் மற்றும் புயல் நீர் வரத்து மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு ஆகிய காரணங்களால் மற்ற இரு நதிகளைக் காட்டிலும் இங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆற்றுப்படுகையில் தண்ணீர் வடிகட்டும் தொழிற்சாலை அமைப்பதற்கான தேவை ஏற்பட்டது. மற்ற இரு நதிகளிலும் அத்தகைய தேவை ஏற்படவில்லை! காடுகள் மற்றும் மரங்கள் அழிப்பு, தண்ணீரின் தரத்தையும், அதற்கான செலவையும் எந்த அளவிற்கு பாதிக்கக் கூடியது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் பெரும்பான்மையான மாகாணங்களின் நதிக்கரைகளிலும் ஓடைகளின் கரைகளிலும் மரங்கள் நடுவது ஊக்குவிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களின் மாசுபாட்டைக் குறைக்க, செசபாகே விரிகூடா சுற்றியுள்ள மாகாணங்களில் உள்ள ஆற்றங்கரைகளில் மரங்கள் நடப்பட்டது. இவ்வாறு 8000 மைல்களுக்கும் அதிகமான ஆற்றோரங்களில் நடப்பட்டுள்ளது. மரங்கள், அருகாமையிலுள்ள விளை நிலங்களிலிருந்து வரும் நீரை வடிகட்டி ஆற்றுக்கு அனுப்புவதால், அதில், உரங்களிலிருந்து வரும் நைட்ரேட்டில் 88%மும் பாஸ்பரஸில் 76%மும் குறைந்துள்ளது. மேலும், சுமார் 15,000 மைல்களுக்கும் அதிகமான நீரோடை ஓரங்களில் மரங்கள் நடுவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது..

நீர் நிலத்திலிருந்து ஓடையில் கலக்கும் முன், வடிகட்டுவதற்கு துணை புரிகின்றன. குறிப்பாக, நதியில் நீர் குறைவாக உள்ளபோது, நதிகளில் மாசுபாடு சேர்வது பெரும்பிரச்சனையாகிறது. நதிகளில் அதிக அளவில் நீர் ஓடும்போது மாசுகளும் குப்பைகளும் ஓரளவிற்கு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, நீரைத் தூய்மைப்படுத்தும் தேவையில் ஒரு ஆறு முழு வீச்சில் ஓடுவது நல்ல பலனை தருவதாக உள்ளது.

மரங்களின் நிழலுக்கடியில் உள்ள பயிர்களில் நீர் ஆவியாகி காய்ந்து போவது குறைவாக உள்ளது. மரங்களுக்கு அருகிலுள்ள பயிர்களில் நீரை பயன்படுத்தும் திறன் அதிகமாகிறது. மரங்கள் பயிர்களுக்கு பாதுகாப்பு அரணாக சுற்றிலும் வளமான சூழலை உருவாக்குகிறது. நீரை பயன்படுத்தும் திறன் என்பது ஒரு யூனிட் தண்ணீரில் பயிர் விளைச்சலின் அளவைக் குறிக்கிறது.