மரங்களால் மண்ணின் தரம் உயர்வது எப்படி

இந்தியாவில் வேளாண் துறையில், மண்ணரிப்பை தவிர்த்து மண்ணின் தரம் என்பது இன்னொரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. உதாரணத்திற்கு, சர்வதேச மண் அறிவியல் கூட்டமைப்பின் தலைவர் திரு. ரத்தன் லால் அவர்களின் கூற்றுப்படி, நம் நாட்டின் வளமிக்க தானிய களஞ்சியங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் மண்ணிலுள்ள கார்பன் அளவு 0.05% மட்டுமே உள்ளது. வளமான மண்ணில் 2% அளவிற்கு கார்பன் இருக்கவேண்டும்.

மண் உருவாவதில் காடுகள் பொருள்நிலையிலும், உயிர்நிலையிலும் மற்றும் வேதியியல் நிலையிலும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. மண் உருவாவதற்கான தாய் பாறைகளின் பாகங்கள் மற்றும் தாவர கழிவுகள் போன்றவற்றால் மண் உருவாகிறது. ஆய்வுகளின் படி, பயிறு வகை பயிர்கள் மட்டும் விளைவிக்கப்படும் நிலங்களை விட மரங்களும் சேர்ந்து பயிர்செய்யப்படும் நிலங்களின் விளைச்சல் 200%அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மண்ணின் உயிரியல் தன்மை அதிகரித்து தண்ணீரை பிடித்து வைக்கும் திறனும் மேம்படுகிறது. மண்ணின் உயிரியல் தன்மையானது 1% அதிகரிக்கும்போது ஏக்கருக்கு 60,000 லிட்டர்கள் கூடுதலாக தண்ணீர் பிடித்துவைக்கப்படுகிறது!

அறிவியல் மிகச் சிறிய அளவிலேயே மண்ணை அறிந்துள்ளது. பல நூற்றாண்டுகள் முன்பாக, லியோனடோ டாவின்சி அவர்கள் இப்படிச் சொன்னார்: “நம் காலுக்கடியில் இருக்கும் மண்ணைப் பற்றிய விஷயங்களை விட வேற்றுகிரக உயிர்களைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியும்” இது இப்போதும் கூட உண்மைதான்! தி அட்லாண்ட்டிக் கூறுவது: “ஒரு தேக்கரண்டி மண்ணில் 10,000 முதல் 50,000 உயிர் இனங்கள் வரை இருக்கக் கூடும். அதே தேக்கரண்டி மண்ணில் பூமியில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் அதிகமான பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு கைநிறைய வளமான மண்ணில், அமேசான் காடுகளில் வசிக்கும் விலங்குகளைக் காட்டிலும் அதிகமான வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன.”

மண்ணைப் பற்றியும் மரங்களோடு மண் கொண்டுள்ள தொடர்பு பற்றியும் மற்ற உயிரியல் மண்டலம் பற்றியும் நாம் அறிந்திருப்பது மிக சிறியதாகும். சில மரங்களின் வேர் அமைப்புகளில் பாக்டீரியங்களும் பூஞ்சைகளும் வாழ்ந்து வருவதை நாம் அறிந்துள்ளோம். இது மண்ணின் உயிர்த்தன்மைக்கு அவசியமான நைட்ரஜனை வழங்குகின்றன.

மரங்கள், நிலத்தின் அடிப்பாகத்திலிருந்து சத்துகளை உறிஞ்சி எடுத்து நிலப்பரப்பின் மேலே கொண்டுவந்து அதனை மறுசுழற்சி செய்கிறது. இலைகள் மட்குதல் மற்றும் தாவர கழிவுகள் ஆகியவை மண்ணின் கரிம வளங்களை உருவாக்குகிறது. மரங்களின் உச்சியில் இருக்கும் கிளைகள், வளிமண்டத்திலிருந்து சத்துகளை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்கிறது. அவை மழைபெய்யும் போது, இலைகளிலிருந்து மண்ணில் சேர்க்கிறது.

நிலத்தை உழாமல் விவசாயம்: மண்ணை உழாமல் நேரடியாக விதைகளை விதைக்கும் வேளாண்முறை மண்ணின் பல்லுயிர் தன்மைக்கு உதவியாய் இருக்கிறது. இதனால் மண்ணின் அதிகப்படியான உயிர்த்தன்மை மற்றும் குறைவான மண்ணரிப்பு ஏற்படுவதால், அதிகமான உரங்கள் தேவைப்படாமலே, மண் வளமாக இருக்கிறது.

உழுவதால் நிலத்தின் மேற்பரப்பிற்கு, வளமான கரிம கூறுகள் வருவதால், விவசாய நிலங்களில் நீண்டகால உற்பத்தி குறைகிறது. இதன் விளைவாக மண்ணின் ஈரப்பதத்திலும் வெப்பநிலையிலும் சமனற்ற தன்மை உருவாகிறது. இதனை மண்ணில் வாழும் பல உயிரிகள் தாக்குப் பிடிக்க முடியாது. உழுவது, மண்ணிலுள்ள நுண்துளைகளை குறைத்து, அதன்மூலம் மண்ணிற்கு நீரை வடிகட்டி அனுப்பும் செயல்முறையை குறைப்பதோடு, நிலத்தடிநீர் உற்பத்தியை பாதிக்கிறது.

உதாரணத்திற்கு, ஒரு விவசாய நிலத்தில் 1 சதுர மீட்டரில் உள்ள மண்புழுக்களின் எண்ணிக்கையை பார்த்தோமானால், உழுதுள்ள நிலத்தில் 119ம் உழாத நிலத்தில் 160ம் உள்ளன. மேல்மண்ணின் அடிமட்டத்தில் உள்ள உயிரியல் மண்டலத்தின் வளத்தில் மண்புழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உழும்போது மண்ணிலுள்ள பலவித பூஞ்சை இனங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து சர்க்கரையை எடுத்துக்கொண்டு, பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் ஆகிய ஊட்டச்சத்துக்களை தாவரங்களிற்கு வழங்கக்கூடிய ஒரு ஊடகமாக உள்ளன.