மரம் நடுவது எப்படி உதவும்

இந்திய நதிகள் மழையை நம்பி உள்ளன. மழைநீர், இரண்டு முக்கிய வழிகளில் நதிகளையும் ஓடைகளையும் சென்றடைகிறது. ஒன்று, நிலத்தின் மேல் ஓடும் நீர் அதில் கலப்பது. இரண்டு, நிலத்தடி-நீர்ப்பாய்வு. மழைநீர் மண்ணை ஊடுருவி நிலத்தடி நீராக மாறுகிறது. இது படிப்படியாக நிலத்தின் கீழே சேர்ந்து ஓடத்துவங்கி, கடைசியாக ஓடைகளிலும் நதிகளிலும் கலக்கிறது.

மழைநீர் மண்ணை ஊடுருவி கீழே செல்வதற்கு, மரத்தின் வேர்கள் (மக்கிய வேர்களும்கூட) வழிசெய்கின்றன. இந்த வேர்கள் நிலத்தின் கீழ்பரப்பில் நன்றாக இணைக்கப்பட்ட சிறிய நீர்த்தடங்களை உருவாக்கி, மண்ணை நுண்-துளை கொண்டதாக மாற்றுகிறது. மரமில்லா மண்ணைவிட இதுபோன்ற மண்ணில் மழைநீர் பல நூறு மடங்கு வேகமாக கீழே செல்கிறது.

அதுமட்டுமல்ல, மரத்திலிருந்து உதிர்ந்து மண்ணில் விழும் கழிவுகள், இயற்கையான முறையில் மக்கி மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது. அதே சமயத்தில், அது சிறுசிறு கட்டிகளாக திரள்வதால், மண்ணை நுண்-துளை கொண்டதாகவும் மாற்றுகிறது.

மண்ணால் நீர் உறியப்பட்டுவிட்டால், மழைநீர் மண்ணில் கீழ்நோக்கி கசிவது போலவே, அது கிடைமட்டமாகவும் மண்ணில் கசியும். இவ்வாறு நிலத்தின் அடியில் நிகழும் “நீரோட்டம்,” நதிகளுக்கும் ஓடைகளுக்கும் நீர் ஊற்றாய் இருக்கமுடியும். எங்கெல்லாம் நிலத்தடி நீர்மட்டம் ஓடைப்படுகை/ நதிப்படுகையை சந்திக்கிறதோ, அங்கெல்லாம் இது நதிக்கு நீர் ஊற்றாய் அமையும். இந்த நிலத்தடி நீரின் திசைவேகம், வருடத்திற்கு ஒரு அடி அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு அடி என மிகக் குறைந்த அளவில் இருக்கலாம். அதன் அதிகபட்ச வேகம் என்று பார்த்தால், ஒரு நாளிற்கு ஒரு அடியைவிட அதிகமாக இருக்கமுடியாது. இந்த நிலத்தடி-நீர்-அங்கத்தை “அடிப்படை நீரோட்டம்” (base flow) என்பர்.

நதியில் இருக்கும் நிலத்தடி நீரோட்டத்தின் விகிதம்

இந்த அடிப்படை நீரோட்டத்தின் வழியாக நதிக்குக் கிடைக்கும் நீரளவை துல்லியமாகக் கணக்கிடுவது மிகவும் சிரமம். இது பல மாறுதல்களுக்கு உட்பட்டது. தோராயமாகப் பார்த்தால், இந்திய தீபகற்ப பகுதியிலுள்ள நதிகளில் இதன் விகிதம் 20-40%. நர்மதா நதிக்கு 20-22%. கோதாவரி நதிக்கு கிட்டத்தட்ட 35% ஆக இருக்கும்.

மரங்கள் இருக்கும் மண், மரமில்லா மண்: அவற்றின் நீர் உள்வாங்கும் திறன் – ஒர் ஒப்பீடு

விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் அழிந்து போன வனப்பகுதிகளைக் காட்டிலும், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மழைநீர் சுலபமாக மண்ணை ஊடுருவிச் செல்கிறது என்பதை பல ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியின் கிளைநதியான பெல்கவி நதியில் நடத்தப்பட்ட ஆய்வில், வனப்பகுதிகளில் நிலத்தடி நீர் 42% மண்ணை ஊடுருவி உள்ளே செல்கிறது என்றும், விவசாய நிலங்களில் 32% உள்ளே செல்கிறது என்றும், வளமிழந்த தரிசு நிலத்தில் 15% மட்டுமே உள்செல்கிறது என்றும் கண்டறியப்பட்டது. அதாவது, வனப்பகுதிகள் விளைநிலங்களைவிட 50% அதிகமாகவும், புதர் நிலங்களைவிட மும்மடங்கு அதிகமாகவும் நீரை உள்வாங்குகிறது.

இதேபோல், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள உத்தர கன்னடாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு புயல் முடிந்த சில மணி நேரத்திலேயே, அங்கிருந்த ஓடைகளில் கலந்த நீரின் அளவு, புதர்நிலங்கள் வழியாக 80-90% ஆகவும், பயிரிடப்பட்ட கருவேல மரக்காடுகள் வழியே 50-80% ஆகவும் வனப்பகுதிகள் வழியே ஓடிக் கலந்த நீர், 35-70% ஆகவும் இருந்தது. இந்த விகித-வேறுபாடுகள், மண்வகை, மழையின் வீரியம் மற்றும் நிலத்தின் சரிவு ஆகியவற்றையும் சார்ந்திருக்கிறது.

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மரம் நடப்பட்ட நிலங்கள், மேய்ச்சல் நிலங்களை விட 67 மடங்கு அதிகமாக தண்ணீரை உள்வாங்குகிறது என்று காண்பிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலம் இந்தளவிற்கு மோசமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், மேயும் மிருகங்களின் குளம்புகள் (பாதம்/ hoofs) மண்ணை அழுத்தி இறுக்கப்படுத்துவதால், அம்மண்ணின் நுண்-துளைகள் அடைபட்டு, தண்ணீர் வேகமாக உள்செல்ல வழியில்லாமல் போகிறது.

வனப்பகுதிகளில் காணப்படும் அதிகபட்ச நீர்-உள்வாங்கும் தன்மை, (அப்பகுதியில் மரங்கள் இருக்கும்வரை) அங்கிருக்கும் நதிகள் வற்றாத ஜீவநதிகளாக ஓடும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வேறுசில ஆய்வுகளின் மூலம், “மரப்பண்ணை அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறும்,” என்பதும் நமக்குப் புலப்படுகிறது.

நாட்டு மரங்கள் அயல்நாட்டு ரகங்களை விட சிறந்தது

ஆறுகளைச் சுற்றி வளர்ந்திருக்கும் தாவர வகைகளில் நாட்டு மரங்கள் அதிகமாக இருப்பதை கவனிப்பது முக்கியமானது. ஆய்வாளர்கள் எப்போதுமே நாட்டு மரங்கள் அல்லாத வகைகளை நடுவதை மறுத்து வந்துள்ளனர். ஏனெனில் அவை தண்ணீர் இருப்பை குறைத்துவிடக்கூடியன. அயல்நாட்டு வகை மரங்கள் நீரை அதிகமாக குடிப்பதால் நீர் மட்டத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும், அவற்றை நட்டு காடுகளை உருவாக்குவது நிலத்தடிநீர் அளவை குறைப்பதோடு, அங்குள்ள நீரோடைகளின் நீரோட்டத்தை பாதிக்கும் என்பதையும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாட்டு வகை மரக்கன்றுகளை நடும்போது இத்தகைய நிலை நிச்சயம் உருவாகாது.

ஏனெனில், இந்த ஆய்வுகள் பெரும்பாலும் மிக அண்மையில் நடப்பட்டு, அதிவேகமாக வளரக்கூடிய அந்நிய/ அயற்திணை மரங்களாகிய யூக்கலிப்டஸ் போன்ற மரங்களை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள். நம் உள்நாட்டு மரங்களை மையமாகக் கொண்டு செய்த ஆய்வுகள் அல்ல. இந்த அயற்திணை வகைகள் நாட்டு-வகை மரங்களை விட அதிகளவு நீரை உட்கொள்கிறது. அதுமட்டுமல்ல, இப்படி செய்யப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள், நீண்டகால விளைவுகளை கருத்தில் கொள்ளவில்லை. வளமிழந்த பகுதிகளிலும், நிலத்தடி நீர் குறைவாக இருக்கும் பகுதிகளிலும், மரம் வளரும் முதல் சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதன்பிறகே நதிநீர் ஓட்டம் அதிகரிக்கத் துவங்கும்.

மேலும் இந்த ஆய்வுகள், ஓடையில் ஓடும் நீரளவு கணக்கெடுப்பை, வருடாந்திர நீரோட்டமாகவே அளவிடுகின்றன. வருடாந்தர நீரோட்டம் என்பது, வெள்ளம் மற்றும் அதுபோன்ற அதிதீவிர நிகழ்வுகளால் நடக்கும் நீரோட்டத்தையும் கணக்கில் கொள்கிறது. மரங்கள் இல்லாத இடத்தில் பெய்யும் மழையின் பெரும்பகுதி, மிகக் குறுகிய காலத்திலேயே ஓடைகளிலும் நதிகளிலும் கலந்து “வெள்ள” சூழ்நிலையை உருவாக்குகிறது.

இதுபோன்ற அதிதீவிர நீரோட்டம் மனிதர்களுக்கு பயன்படாமல் கடலில் கலக்கிறது என்பதோடு, ஓடும் வேகத்தில் அது மண்ணரிப்பை ஏற்படுத்தி, மண்வளத்தையும் குறைக்கிறது. இதனால்தான் மரம் இருந்தபோது வளமான விளைநிலமாய் இருந்த கடும்மழை-பெய்யும் இடங்கள், மரங்களை வெட்டிய பிறகு வெகுவிரைவில் பாலைவனங்களாக மாறிவிடுகின்றன.

நகரமயமாக்கும் நோக்கத்தோடு ஒரு இடத்தில் மரங்களை அகற்றுவதால் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்து ரூர்க்கியிலுள்ள ஐஐடி ஆய்வுசெய்தது. மரம் வெட்டுவதற்கு முன்பும் பின்பும் அவ்விடத்தில் இருக்கும் வெள்ள அபாயத்தின் வரம்பை அது கணக்கிட்டுக் காண்பித்தது.

வனப்பகுதியை, குறைந்தளவு மக்கள்தொகை கொண்ட குடியிருப்பாய் மாற்றுவதால் அங்கு நிலத்தடியில் ஊறிச் செல்லும் நீரின் அளவு 11-30% வரை குறைகிறது என்றும், அவ்விடத்தை அதிகளவு மக்கள்தொகை கொண்ட குடியிருப்பாய் மாற்றினால், ஊறிச்செல்லும் நீரின் அளவு 52-100% வரை குறைகிறது என்றும், வணிகத்தலமாய் மாற்றினால் அது 94-100% வரை குறைகிறது என்றும் அவர் காண்பித்தார்.

மரம் நடுவதால் இதுபோன்ற தீவிரமான நீரோட்டம் குறைவதோடு, மழை நின்ற பின்னும் ஓடை/ நதிகளில் நிலையான நீரோட்டம் இருக்க இது வழிசெய்கிறது. இதனால் மண்ணரிப்பும் குறைகிறது.

“நேச்சர்” (nature) எனும் பத்திரிக்கையில், மரம் வளரத் தேவையான நீரளவு, மற்றும் மரம் இருப்பதால் மண்ணுக்குள் ஊறிச்செல்லும் நீரின் அளவு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மரங்களின் அடர்த்தி மிகக் குறைவாகவும் இல்லாமல், மிக அதிகமாகவும் இல்லாமல், உகந்த அளவில் இருந்தால், மழைநீர் அதிகமான அளவு மண்ணுக்குள் ஊடுருவிச் செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மிகக் குறைவான மரங்கள் இருந்தால், மழைநீர் அவ்வளவாக நிலத்தடியில் ஊறிச் செல்வதில்லை. அதுவே மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், மண்ணுக்குள் செல்லும் நீரைவிட, அம்மரங்கள் வளரத் தேவையான நீரளவு அதிகமாக இருக்கும். எனினும், “மரங்கள் இல்லாத சூழ்நிலையைவிட, மர அடர்த்தி அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் நிலத்தடியில் ஊறும் நீர் அதிகமாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை” என்று அந்த ஆய்வு சொல்கிறது.

இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) உள்ள நிபுணர்கள், உள்நாட்டு மரவகைகளை நடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். மரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்ட பல சான்றுகளைக் குறிப்பிட்டு (அவர்களின் வளாகமும் அதில் ஒன்று) இதை விளக்குகிறார்கள். பெங்களூரூவில் உள்ள கே.ஆர்.புரம், வைட்-ஃபீல்ட் மற்றும் ஐடிபிஎல் (ITPL) ஆகிய இடங்களில் அளவுக்கதிகமாக மரங்கள் வெட்டப்பட்டதால், அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதிகளவில் மரங்களை வளர்ப்பதுதான், குறைகின்ற நிலத்தடிநீர் மட்டத்தை சீர்செய்ய சரியான வழி என்று அவர்கள் சொல்கிறார்கள். அதிலும் உள்நாட்டு மரவகைகளை வளர்ப்பது சிறந்த பலன்களை வழங்கும். ஏனெனில், உள்நாட்டு மரவகைகளின் வேர்-அமைப்பு, (அந்நிய மரவகைகளை விட) நிலத்தடிநீர் மண்ணை ஊடுருவிச் செல்ல பெருமளவு வழிசெய்கிறது.

References