நிலை நேர்வு ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகள்

காடுகளை அழிப்பது நீரளவைக் குறைக்கும்

இந்திய அறிவியல் நிறுவனத்தால் (IISc) காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காவிரியின் கிளைநதிகளான லட்சுமணதீர்த்தம் மற்றும் ஷராவதியின் வடிநில பகுதிகளில் ஓடும் ஓடைகளில், மரங்களால் சூழப்பட்டிருந்த ஓடைகளில் வருடம் முழுவதும் நீரோட்டம் இருந்தது. ஆனால் மரங்கள் அகற்றப்பட்டிருந்த காட்டுப்பகுதியில் இருந்த ஓடைகளில் 4 – 6 மாதங்களுக்கு மட்டுமே நீரோட்டம் காணப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வராஹி நதியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காட்டுப்பரப்பில் ஏற்படும் சிறு மாறுதலும் கூட – அதாவது 27 வருடங்களில் 9% குறைவும் கூட – நதியோட்டத்தை வெகுவாக பாதிக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தபின் அந்த ஆறு ஓடிய நாட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, அந்நதி வறண்டிருந்த நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

வற்றா நதிகளும் அவ்வப்போது வற்றிப்போகும் நிலை, பிரேசில் நாட்டிலும், ஐரோப்பிய ஆளுமையின் கீழ் இருந்த அதன் தீவுகளிலும் 17-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக கூறப்படுகிறது.

மரம் நட்டு காடுகள் வளர்ப்பது நீரளவை அதிகரிக்கும்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹெசாட்டு கிராமத்து மக்கள் 365 ஏக்கர் தரிசு நிலத்தில் 1,00,000 மரங்களை நட்டனர். இந்த முயற்சியை 2010-ஆம் ஆண்டு தொடங்கினர். 2017-ஆம் ஆண்டில் இதன் மூலம் அவர்கள் ஆண்டுக்கு நாற்பது முதல் ஐம்பது லட்சம் ரூபாய் ஈட்டுகின்றனர். இந்த பகுதிக்கு அருகில் உள்ள டொம்பா நதி வெயிற்காலங்களில் வற்றக்கூடிய சூழ்நிலையில் இருந்து மாறி வருடம் முழுதும் வற்றாமல் ஓடுகிறது.

இதுபோலவே பாரி கார்வாலில் (உத்திரகாண்ட்) உள்ள ஃப்ரென்க்கால் கிராமத்தில் மக்கள் தாங்களாகவே காடுகளை உருவாக்கி காட் கங்கா நதியை மீட்டெடுத்துள்ளனர். இந்த திட்டமானது வடிநிலப்பகுதியைச் சுற்றிலும் மரங்கள் நடுவதை உள்ளடக்கியது. இந்திய தண்ணீர் காப்பகத்தின் கூற்றுப்படி, “வடிநிலங்களில் நடப்படும் மரங்கள் அங்குள்ள நீரால் செழிப்பாக வளர்கிறது. வளர்ந்ததும் அவை அங்குள்ள மண் மற்றும் நீர் வளத்தை மீட்பதில் பெரும் உதவியாய் உள்ளன. ஒட்டுமொத்த சூழலுக்கும் நலம் பயக்கும் வகையில் வடிநிலம் மற்றும் மரங்கள் இரண்டுமே ஒன்றுக்கொன்று பலனடைந்து கொள்கின்றன.

இணையதள அறிக்கைகளின் படி, “முன்பு வறண்டு கிடந்த இந்த பள்ளத்தாக்குப் பகுதி இப்போது வறண்டு போகவில்லை. இப்போது டண்ட்கில் மற்றும் காட் கரக் கிராமங்களின் பகுதிகளுக்கிடையே கரையோரங்களில் ஒருவர் நடந்து செல்கையில், அங்கு இடைவிடாமல் கேட்கும் நீரோடையின் சலசல சப்தத்தை கேட்கமுடியும். ஒரு நிமிடத்திற்கு 3 லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்யும் ஜீவ நதியாக உள்ளது, ஒரு தண்ணீர் குழாயை முழுமையாக திறக்கையில் வெளியாகக் கூடிய தண்ணீர் அளவில் நான்கில் ஒரு பங்காகும் இது! இது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் நதியானது தொடர்ந்து அதன் பாதையெங்கும் ஓடிச் செல்கிறது. இந்த நீரோடை வாய்க்கால்கள் மூலம் விவசாயப் பாசனத்தில் பங்களிப்பதோடு, வறட்சி காலங்களில் தண்ணீர் தேவைக்கும் உதவுகிறது. மண்ணரிப்பைத் தடுத்தல், மழைநீர் ஓடாமல் பாதுகாத்தல் போன்ற எண்ணற்ற நன்மைகள் இந்த செயல் திட்டத்தின் பலனாக விளைந்துள்ளன.

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இந்த செயலே ஒரு சாட்சியாக இருக்கிறது. நதிகள் வறண்டு தொடர்ச்சியாக வறட்சி இருந்த இந்த பகுதியில், இந்த முயற்சியானது அற்புதத்தை நிகழ்த்தி, இதுபோன்ற விஷயங்கள் சாத்தியமே என்பதை காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் ரமண மகரிஷி வாழ்ந்த புண்ணிய பூமியான அருணாச்சல மலையின் காடுகள் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக தனது மரங்களை இழந்துள்ளன. அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஒரு NGO இந்த காட்டின் மறுஉருவாக்கத்தை கையிலெடுத்தது. தற்போது அதிகமான மரங்கள் இருப்பதால், அது மழை நீரால் அடித்துச் செல்லப்படும் மண்ணரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரை தக்க வைக்க உதவுகிறது. மேலும் பருவகால நீரோடைகள் மெதுவாக நின்று ஓடுவதால் மழைக்காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து ஓடும் வகையில் மாறியுள்ளன. இதனால்,மேலும் அதிக மரங்கள் உயிர்ப்புடன் வளர்வதற்கு உதவியாக உள்ளது.

2015ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு செய்தி: மரங்கள் நட்டு வளர்த்தெடுத்து குறிப்பிட்ட பகுதிகள் பாதுகாக்கப்படுவது கங்கையின் நீரோட்டத்தை சிறப்படையச் செய்யும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்த அறிக்கையிலிருந்து: உத்திரகாண்ட், உத்திரபிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிபுணர் குழு காடுகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்தித்து பேசுகையில், 2,525 கி.மீ நீள ஆற்றின் உயிர்ச் சூழலை பராமரிப்பதற்கு காடுகள் வளர்ப்பு அவசியமானது என்பதை முன்வைத்துள்ளனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்கம் மேற்கொண்டுவரும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது.

FRI இயக்குனர் PP போஜ்வாய்டு அவர்களின் அறிக்கையின் படி, “ஆறுகளின் இருபுறமும் உள்ள விவசாய பகுதிகள் நதிகளில் வண்டல் மண்ணை கூட்டுகிறது. ஆனால் கரையோரங்களில் உள்ள மரங்களின் வரிசையே தொடர்ந்து ஆறுகளில் தண்ணீர் ஓடுவதற்கு வழிவகுக்கிறது. மரங்களின் வீழ்படிவு, இந்த நீரோட்டத்தை தூண்டுகிறது.

மேலும் அவர், மரங்கள் ஈரப்பதத்தை உறிஞ்சி வைத்துக் கொல்வதால், சில காலங்களில், காடுகளே ஆறுகளைத் தோற்றுவிக்கும் விதம் ஆகிறது என்று கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக, கோதாவரி நதியை கூற முடியும். இதன் அடிப்படையில், நம் நாட்டில் கேரளா மற்றும் பல நாடுகள், ஆற்றங்கரைகளில் பூங்காக்களையும், நீர்பிடிப்பு பகுதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க முன்னெடுப்புகள்

கங்கை நதியோர மரம் நடவு: நவம்பர் 2016-இல் மத்திய அரசு, கங்கை நதி மற்றும் அதன் கிளைநதிகள் ஓடும் 5 மாநிலங்களில் மரநடவு மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது.

இந்த முன்னெடுப்பின் மூலம், கங்கை நதியின் இருபுறமும் 5 கி.மீ. தூரத்திற்கு மற்றும் அதன் முக்கிய கிளை நதிகளின் இருபுறமும் 2 கி.மீ. தூரத்திற்கு மரம் நட திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரகண்டம், உத்தரபிரதேசம், பீகார். ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் வனத்துறை, 6197 தளங்களை தேர்வு செய்தன. இதன் மூலம் 5 மாநிலங்களில், சுமார் 1,33,751 ஹெக்டேர் நிலப்பரப்பில், 4 கோடி மரங்களை 5 வருடங்களில் நட திட்டம் உருவாகியுள்ளது.

விவசாய நிலங்களில் வணிக பலன் தரக்கூடிய மரங்கள் நடப்படும். நகரங்களில், நீர்வடிகால்களில் நுண்ணியிரேற்றம்/நுண்ணியிர்வடிப்பு, ஆற்றுப்பகுதிகள் மேம்பாடு, பசுமைப் பூங்கா உருவாக்கம், நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களில் மரநடவு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசுக்கு சொந்தமான நிலங்களில், ஒவ்வொரு மாநிலமும் அதன் சூழ்மண்டல தன்மையைப் பொறுத்து தனிப்பட்டதொரு திட்டத்தை செயல்முறைப்படுத்தும்.

பீகார்: கங்கை பகுதியில் மரநடவுக்கு விரிவான திட்டத்தை வகுத்த முதல் மாநிலம் பீகார். அத்திட்டத்தை செயல்படுத்த 1150 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த முன்னெடுப்பின் மூன்று முக்கிய அம்சங்கள்: நதிக்கரைகளில் உள்ள அரசு நிலங்களில் உள்நாட்டு மரநடவு, தனியார் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பு மற்றும் மண்வள பாதுகாப்பு குறித்த செயல்கள். நதிகளை தூர்வாருதல் மற்றும் நகரப்பகுதிகளில் ஆற்றுப்புற வளர்ச்சி ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

நதிக்கரைகளில் உள்ள 3000 ஹெக்டேர் அரசு நிலத்திலும், 200 ஹெக்டேர் தனியார் நிலத்திலும் மரநடவு செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அரசு நிலங்களில் மூன்று வகையான மரநடவு மேற்கொள்ளப்படும்: ஆற்றங்கரை ஓரங்களில் மூலிகைச் செடிகள், அதற்கு அடுத்த அடுக்கில் மூங்கில் நடுதல் மற்றும் வெளிப்புற அடுக்கில் வழக்கமான மரவகைகள். இந்த மரநடவுப் பகுதியின் அகலம், அங்கு கிடைக்கும் நிலப்பரப்பை கொண்டு முடிவு செய்யப்படும்.

தனியார் நிலங்களில் வேளாண் மரப்பண்ணைகள் அமைக்க விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். வனத்துறை இதற்கு மானியமும் வழங்கும்.

கேரளம்: நதிகளை மறுசீரமைக்கவும், நதிக்கரைகளை நிலைப்படுத்தவும், கேரள மாநிலத்தில் மூங்கில்-வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 2014 ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2.57 கோடி செலவில் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. கேரள நதிகளின் தலைபகுதிகள் அனைத்தும் காடுகளாக பராமரிக்கப் பட்டுள்ளன. காடுகளாக இல்லாத பகுதிகளிலும் மரம் வளர்க்க, கேரள வனத்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது. உள்ளூர் சுயாட்சிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடிமக்கள், மற்ற குழுக்கள், தனிமனிதர்கள் என பலரையும் மரம் வளர்க்க அது ஊக்குவித்து வருகிறது. அதற்குத் தேவையான நிதி உதவியையும் அது வழங்குகிறது. இதுதவிர, “மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுத்திரவாத திட்டத்தின்” மூலமும் இதற்கு நிதி பெறமுடியும். மரநடவுக்கு பின் அவற்றை பராமரிப்பத்துப் பாதுகாப்பதும் அந்தந்த நிறுவனத்தின் / தனிநபரின் பொறுப்பு. புரிந்துணர்வு-உடன்படிக்கை (MoU) மூலம் அவர்களுக்கு நிதி உதவி வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம்: இயற்கை சீற்றங்களின் போது கடலோர பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும் வீசும் அதிவேகக் காற்றின் வேகத்தைக் குறைக்கவும், அதனால் உண்டாகும் அழிவைக் கட்டுப்படுத்தவும் அவ்விடங்களில் சவுக்கு-மரம் நடுதல் திட்டமிடப்பட்டுள்ளது. சவுக்கு மரம் வெகு விரைவாக வளரும் மரவகை. அதுமட்டுமல்ல வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை செடிகொடிகள் பயன்படுத்தும் வகையில் அது மாற்றவல்லது. தன்னுடன் மரம் நடும் பணியில் இணைந்து செயல்பட “வன-சம்ரக்ஷண-சமிதி” அமைப்பை வனத்துறை ஊக்குவித்து வருகிறது.

இந்த மரப்பண்ணைகளில் ஊடுபயிராக, கடலை, தர்பூசணி, எள்ளு மற்றும் பருப்பு வகைகளை பயிரிட அனுமதி வழங்கப்படுகிறது. இதற்குத் தேவையான நிதிஉதவியை, NABARD உதவியுடன் வங்கிகள் வழங்குகின்றன. முதல் 4 வருடங்களில் விவசாயிகளுக்கு வருவாய் எதுவும் கிடைக்காது என்பதால், 5 வருடத்தின் முடிவில் இக்கடனை வட்டியோடு திருப்பி அடைக்கும் வசதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சத்திஸ்கர்: 2015-ஆம் ஆண்டு சத்திஸ்கர் மாநிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நட வனத்துறை முடிவு செய்தது. அம்மாநில முதல்வர் ராமன் சிங் அவர்கள் அம்மரக்கன்றுகளை ஆற்றங்கரையில் நடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மகாநதி ஆற்றுப் பகுதியில் நிகழும் பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு வனத்துறை வகுத்திருக்கும் திட்டத்தில், சதுப்பு நிலப்பகுதிகளில் அழிந்துபோன மூங்கில் காடுகளை புத்துருவாக்கம் செய்வது வலியுறுத்தப் பட்டிருக்கிறது. மேலும், மழைக்காலத்தில் அதிவேகமாக ஓடி மண்ணரிப்பை ஏற்படுத்தி வீணாகும் நீரை, ஆங்காங்கே தடுத்து நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர்நிலைப்படுத்தும் (water conservation & harvesting) அமைப்புகள் கட்டுவது, ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளையும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் முறைப்படுத்தி பராமரிப்பது, மண்ணரிப்பை தடுக்க மரம் நடுவது ஆகியவையும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: ஜனவரி 2016ல், “முக்கிய மந்திரி ஜல் ஸ்வலம்பன் அபியான் (MJSA)” திட்டத்தை அறிவித்து, 2020-ஆம் ஆண்டிற்குள் ராஜஸ்தானை வறட்சியற்ற மாநிலமாக மாற்ற ராஜஸ்தான் அரசாங்கம் செயல்திட்டம் உருவாக்கியது. இம்மாநிலத்தில் மொத்தம் 21,000 கிராமங்கள் உள்ளன. இத்திட்டம் ஆரம்பித்த ஆறே மாதத்தில், 3529 கிராமங்களில் 94,941 நீர்நிலைப்படுத்தும் அமைப்புகள் கட்டப்பட்டன.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், பற்பல அரசு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த நீர் சம்பந்தப்பட்ட திட்டங்களை ஒரே குடையின் கீழ் இணைத்து, பயனுள்ள முறையில் அதைச் செயல்படுத்த முனைந்தது. இத்திட்டத்தில் புதிதாக எவ்வித கட்டுமானப் பணியும் மேற்கொள்ளப் படவில்லை. அதற்கு பதிலாக, அந்த அதிகாரிகள் சொல்வது போல், “உச்சிவரப்பில் இருந்து பள்ளத்தாக்கிற்கு” எனும் அணுகுமுறையின் அடிப்படையில் , உச்சியில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து, பள்ளத்தாக்கிற்கு நீர்பாயும் வழியில் நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர்நிலைப்படுத்தல் செயல்படுத்தப் படுகிறது.

நீர்நிலைப்படுத்தும் அமைப்புகளைச் சுற்றி 28 லட்சம் மரங்கள் நடப்பட்டது. இம்முயற்சியை ஒருங்கிணைத்து, அம்மரங்களை 5 ஆண்டுளுக்கு பராமரிக்கும் பொறுப்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மிக அடிப்படையான ஒரு கொள்கை, இத்திட்டத்தின் எல்லா படிநிலைகளிலும், அதாவது திட்டமிடல், செயற்படுத்துதல், பராமரித்தல் என எல்லா நிலைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பது. நீர்நிலைப்படுத்தும் முறைகளில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்றிருந்த கிராம மக்களை, அப்பகுதிக்கு ஏற்றவிதமான நீர்நிலைப்படுத்தும் அமைப்பு எது, அதை எங்கு அமைக்கலாம் என்பதுபோன்ற கருத்தாய்வில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களோடு சேர்ந்து பங்கேற்கச் செய்து, பின் அதைச் சார்ந்து முடிவெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் அவ்விடத்திற்கு மிகப் பொருத்தமான நீர்நிலைப்படுத்தும் அமைப்பு தேர்வு செய்யப்பட்டது.

புவியியல் தகவல் அமைப்பு (GIS) மற்றும் தொலையுணர்வு (remote sensing) தொழில்நுட்பங்கள் மூலம் நிலத்தடி நீர்மட்டம், மண் ஈரம், இட அமைப்பு மற்றும் அவ்விடத்தில் நிகழும் மழைப்பொழிவு ஆகிய தகவல்களை சேகரித்து, இந்த நீர்நிலைப்படுத்தும் அமைப்புகளை எங்கு அமைக்கலாம் என்ற இடத்தேர்வு செய்யப்படுகிறது. மேலும், இத்திட்ட செயல்பாடு பற்றிய தகவல்களை நிலக்குறியீடு (Geo tagging) கொண்டு பிரித்து அமைத்து, அதன் முன்னேற்றத்தை அரசு இணையதளத்தில் வெளியிடப் படுகிறது.

குஜராத்: பயன்படுத்தப்படாத நிலங்களில் கிராமக் காடுகளும், தரிசு நிலங்களில் காடு மறுஉருவாக்க முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. கால்வாய், நதி, குளம் என எல்லா நீர்நிலைகளைச் சுற்றியும் மரங்கள் நடப்பட்டன. தனியார் வசமிருந்த வளமிழந்த விவசாய நிலங்களிலும் மரம் நடப்பட்டன

2011-ஆம் ஆண்டில் குஜராத்தில், ஒரு ஹெக்டருக்கு 400 மரங்கள் வீதம் பண்ணைக்காடுகள் உருவாக்க திட்டமிடப்பட்டது. “மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுத்திரவாத திட்டத்தின்” (MGNREGA) கீழ் இதற்கான நிதிஉதவி வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தவும், இதற்குத் தேவையான விபரங்களை விவசாயிகளுக்கு வழங்கவும் வருடத்திற்கு 750 விவசாய-முகாம்கள் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிரம்: மஹாராஷ்டிர மாநிலத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, மஹாராஷ்டிர அரசு ஈஷா அறக்கட்டளையுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) கையெழுத்திட்டுள்ளது. 2019ம் ஆண்டிற்குள் 50 கோடி மரங்களை நட அந்த அரசு திட்டமிட்டுள்ளது

மத்தியபிரதேசம்: நர்மதா நதியின் தற்சமய கவலைக்கிடமான நிலை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நதிக்கும் மனிதருக்குமான தொடர்பை அவர்கள் இன்னும் ஆழமாக உணரவும், “நர்மதா சேவா யாத்திரை”யை முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்கள் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்ல, ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலோடு நர்மதா நதிக்கு புத்துயிரூட்ட ம.பி. அரசு ஒரு விரிவான திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் உள்ள முக்கிய செயல் திட்டங்கள்: விவசாயிகள் தோட்டப்பயிர் வேளாண்மை கடைபிடித்து பழமரங்கள் போன்று வளர்ப்பது மற்றும் நதிக்கரைகளில் உள்ள அரசு நிலங்களில் காட்டு மரங்கள் வளர்ப்பது

வெளிநாடு

அமெரிக்கா: வெர்ஜினியா மாநிலத்தின் பேர்பாக்ஸ் பகுதியில், ஆற்றங்கரை ஓரமாக காடு மறு-உருவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் மாசு கலப்பதை தவிர்க்கவும், நதிக்கரைகளை நிலைப்படுத்தவும், வனஉயிர்களுக்கு உணவு- இருப்பிடம் வழங்கவும், கோடை காலத்திலும் ஓடைகள் குளிர்ச்சியாக இருக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. ஏற்கெனவே 8000 மைல் அளவிற்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. இன்னும் 15,000 மைல் அளவிற்கு நதி/ஓடைக் கரைகளில் மரம் நடவு திட்டமிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் பெரும்பான்மையான வனத்துறையினர் ,ஓடைக்கரைகளில் மரம் நட்டுப் பராமரிப்பதை ஆதரிக்கின்றனர். “ஆற்றங்கரை / ஓடைக்கரை காடுகள், சுற்றுச்சூழலுக்கும், அருகில் வசிக்கும் மக்கள், நில உரிமையாளர்களுக்கும் பலதரப்பட்ட பலன்களை வழங்கவல்லது. தண்ணீர் தரம் உயர்வு, நீரளவு அதிகரித்தல், உறுதியான நதிக்கரை, வனஉயிர் வாழ்வாதாரம், பொழுதுபோக்க அற்புதமான இடம் என பல பலன்கள் இதனால் கிட்டும். அதுமட்டுமல்ல, வெட்டு மரம் (timber), வனப்பொருட்கள் உற்பத்திக்கு ஆதாரம் என ஒரு நிலையான வருமானமும் இதன் மூலம் கிடைக்க முடியும்” என்கின்றனர் கன்சாஸ் மாநில வனத்துறையினர்.

ஐரோப்பிய ஒன்றியம்: டான்யூப்” நதியை மறுசீரமைக்க ஐரோப்பிய அரசு திட்டப்பணி ஒன்றை அமைத்துள்ளது. இதன் ஒரு முக்கிய அங்கம், மனிதர்களால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள சுற்றுசூழலை மீட்டெடுத்து மீண்டும் அதன் பழைய நிலையை அடையச் செய்வது. இதற்கு அவர்கள் தேர்வு செய்துள்ள வழி, டான்யூப் நதியை ஒட்டி, அதன் நீளம் முழுவதிற்கும் சூழல்சார் பசுமைவழிப் பாதையை அமைப்பது.

இங்கிலாந்து: வட யார்க்ஷயரில் உள்ள பிக்கரிங் ஊர்-நகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் ஏற்படும் வெள்ளத்தைக் குறைப்பதற்கு மரம் நடுவதைப் பயன்படுத்தி உள்ளனர். கன மழையால் ஏற்படும் கடுமையான வெள்ள பாதிப்பிற்கு அவ்வூரின் மற்ற பகுதிகள் உள்ளாக, இவ்விடத்தில் மட்டும் சேதம் மிகக் குறைவாக இருந்தது. அவர்களின் இந்த முயற்சி, “நீரோட்டத்தின் வேகத்தைக் குறைப்பது” (Slowing the flow) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஆய்வறிக்கையில், அவ்விடத்தில் மரம் நட்டு வளர்த்ததன் மூலம், வெள்ளத்தின் உச்சபட்ச நீரோட்டம் 15-20% குறைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வருட காலத்தில் 4 கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபின், 2009ல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2007ல் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பவுண்ட் சேதம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன

இத்திட்டத்தின் கீழ் 40,000 மரங்கள் நடப்பட்டு, புதர்கள் நிரம்பிய கரம்பை நிலங்களின் மறு-உருவாக்கமும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மழைக்காலத்தில் அதிவேகமாக நதியை நோக்கி ஓடும் நீரின் வேகம் குறைந்து, வெள்ள அபாயத்தின் உச்ச-வரம்பும் குறைந்தது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசாங்கத்திற்கு 5 லட்சம் பவுண்ட் செலவானது. இது வெள்ளத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைவிட மிகமிகக் குறைவு. வெள்ள அபாயத்தை தடுப்பதற்கு இதுபோன்ற இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது மிகச் சிறந்த வழி என்பதை இத்திட்டத்தின் ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

இந்த ஆய்வை மேற்கொண்ட அணியின் தலைமை ஆய்வாளரான, பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் சைமன் டிக்சன் அவர்கள், “வெள்ள அபாயத்தை தடுக்க மரங்கள் பெருமளவில் உதவிசெய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். நம் வழக்கமான வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘மரம்-வளர்ப்பதும்’ சேர்க்கப்பட வேண்டும். பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய இடங்களை மழைநீர் சென்றடையாமல் இருக்க அல்லது அவ்விடங்களை சென்றடையும் நீரின் வேகமும் அளவும் குறைவாக இருக்க நாம் மேற்கொள்ளும் தடுப்பு-முயற்சிகளுக்கு பக்கபலமாகவும், மற்றுமொரு தடுப்புசக்தியாகவும் மரங்கள் செயல்படும்” என்கிறார்.

பாகிஸ்தான்: ஏப்ரல் 2016ல் ஏற்பட்ட கனமழையால் பாகிஸ்தானில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 140க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பொருட்சேதமும் மிக அதிகமாக இருந்தது. காடுகளை அழித்ததாலும், மலைச்சரிவுகளில் ஏற்பட்ட மண்ணரிப்பாலும் சேதத்தின் அளவு அதிகமானதாக சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “மழையின் தீவிரம் அதிகரித்ததற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, காடுகளின் அழிவு இச்சேதம் பன்மடங்காக வழிசெய்கிறது”.

இந்த வேதனையான நிகழ்விற்குப் பின் இம்ரான்கான் அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, வடமேற்கு மாநிலமான கைபர்-பக்ஹ்துன்ஹவா (கே.பி.) -வில் “பசுமைப் பரப்பு திட்டத்தை” தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் 60 வருடங்களில் சிறிதுசிறிதாக சிதைவுக்கு உள்ளாகியிருந்த காடுகளை மறு-உருவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மிக முக்கிய அங்கம், பெரிய அளவில் மரங்கள் நட்டு காடுகள் வளர்ப்பது. இதை “தி பில்லியன் ட்ரீ சுனாமி”, அதாவது 100 கோடி மர – சுனாமி என்றழைத்தனர்.

ஜூன் 2015ல் தொடங்கி இதுவரை தனியார் நாற்றுப்பண்ணைகளின் மூலம் 25 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. இத்தனை பெரிய கட்டமைப்பு இருக்க, இன்னுமொரு வருடத்தில் மேலும் 30 கோடி மரக்கன்றுகளை உருவாக்கிவிடலாம் என்றும், மீதம் தேவைப்படும் 45 கோடி மரக்கன்றுகளை காட்டுப்பகுதிகளில் வேலியமைத்து வளர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் காட்டுப்புற பண்ணைகளை உள்ளூர் மக்களே பராமரித்து வளர்க்கின்றனர். இதுபோன்ற நாற்றுப் பண்ணைகள் அப்பகுதியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும். இதில் பல தனியாருக்கு சொந்தமானவை. இதற்கான தேவை அதிகம் இருப்பதால், மேன்மேலும் பல நாற்றுப் பண்ணைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“’இளைஞர் நாற்றுப்பண்ணை’ எனும் திட்டத்தின் கீழ், வேலையற்ற இளைஞர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும், சிறு பண்ணைகள் அமைக்க மாநில அரசாங்கங்கள் உதவுகின்றன. 25,000 மரக்கன்றுகள் கொடுத்து, அவற்றைப் பராமரித்து வளர்க்கத் தேவைப்படும் நிதியின் 25% ஐ முன்பணமாகவும் கொடுத்து, அங்கே வளர்க்கப்படும் செடிகள் அனைத்தையும் வாங்கிக் கொள்வதாகவும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்குகிறது. இந்த நாற்றுப்பண்ணைகள் மூலம் மாதத்திற்கு 12,000-15,000 ரூபாய் (பாகிஸ்தான் நாணயம்) வரை அவர்களுக்கு வருமானம் இருக்கும். அப்பகுதியில் இது நல்ல வருமானம் என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால், அங்கிருக்கும் சிறு நாற்றுப்பண்ணைகள் / வீட்டு நாற்றுப்பண்ணைகள் பலவற்றை கிராமத்துப் பெண்கள்தான் நடத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் வருமானமும் உயர்ந்திருக்கிறது” என்று சொல்கிறது thirdpole நிறுவனம்.

சர்வதேச WWF அமைப்பும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு கைகொடுக்கிறது. அதுமட்டுமல்ல, இம்ரான்கான் அவர்கள் “ஒரு மரம், ஒரு உயிர்” என்ற முன்னெடுப்பையும் துவக்கி வைத்தார். இதன் மூலம் குழந்தைகளும் மரம் வளர்த்து, அதைப் பராமரிக்க உந்தப்படுகிறார்கள்.

பாகிஸ்தானின் மத்திய அரசும் “பசுமை பாகிஸ்தான் திட்டத்தில்” சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐந்து வருடங்களில் 10கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

நதிக்கு நீர் வந்துசேரும் பாதைகள், நதியின் நீரோட்டம் ஆகியவற்றை நிர்வகிக்க, வேளாண்காடுகள் ஒரு சிறந்த தீர்வென உலகின் பல பகுதிகளிலும் நிரூபனம் செய்யப்பட்டிருக்கிறது . இது குறித்த ஆய்வுகள் பல பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவில் 1970ம் ஆண்டு முதல், ஆறுகளுக்கு நீர் வந்து சேரும் பாதைகளை ஒட்டியிருக்கும் பகுதிகளில் மரம்நடும் திட்டம் செயல்முறையில் உள்ளது. இது, குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்கு வகுக்கப்பட்ட திட்டங்களுக்கு மிக அத்தியாவசியமாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பயனளிப்பது மட்டும் அல்ல, விவசாயிகளுக்கும் இது பல நன்மைகளைத் தருகிறது. அதிக மகசூல், அதிக வருமானம், பருவநிலை மாற்றங்களின் பாதிப்பைக் குறைத்தல், இயற்கை காடுகளைச் சார்ந்திருத்தல் குறைவது, திட்டமிட்ட காடுவளர்ப்பு என்பதால் பறவைகளால் ஏற்படும் சேதம் குறைவு, புதுப்பிக்கத்தக்க