6 மாதங்களில் 6 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன

நதிகளுக்கு புத்துயிரூட்ட மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன

பசுமைப் போர்வையை வேகமாக இழந்துவருவதுடன் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பகுதிகளில் பெருமளவில் மரங்கள் நடுவதற்கான முன்னெடுப்பில், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதன்முதலாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

ஈஷாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நதிகள் மீட்பு இயக்கம் துவங்குவதற்கு முன்பே ஜூலை 2017ல் மஹாராஷ்டிரா மாநிலம் கையெழுத்திட்டது. தில்லி செல்லும் வழியில் நதிகள் மீட்பு இயக்கத்தின் பேரணி பெங்களூருவை அடைந்தபோது, கர்நாடக முதல்வர் திரு.சித்தராமையா சத்குருவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிக்கொண்டார்.

AR - SAdhguru MH CM VAn Mahotsav DPR

மரங்களை வெட்டுவதால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளான வறட்சி, விவசாயத்தில் தோல்வி, மற்றும் பெருமளவில் நிகழும் விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்கான மாபெரும் முயற்சியில், மஹாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பல மாவட்டங்களில், 2019ம் ஆண்டிற்குள் 50 கோடி மரக்கன்றுகளை நதிக்கரைகளில் நடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

AR - Karnataka DPR submition

கர்நாடக மாநிலம், நதிகளைச் சுற்றி குறிப்பிட்ட இடங்களில் 25 கோடி மரக்கன்றுகளை நடவிருக்கிறது. அருகிலுள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தைப் போலவே, கர்நாடகமும் மழை பொய்த்துப்போவது, வெள்ளப்பெருக்கு, வறட்சி, விவசாயத்தில் தோல்வி என பல பிரச்சனைகளை சந்தித்துவருகிறது. இம்மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது. நதிப்படுகையில் இருந்து அதிகப்படியாக மணல் எடுத்தல், மற்றும் கட்டிடங்களுக்காக பெருமளவில் மரங்கள் வெட்டுதல், குன்றிவரும் நீர்வளத்திற்கும், குறையும் மண்வளத்திற்கும் காரணமாக இருக்கின்றன.

பெங்களூருவில் நதிகள் மீட்பு இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “நம் உணவை உற்பத்திசெய்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள். மண்ணும் தண்ணீரும் இருந்தால் மட்டுமே விவசாயிகளால் மகிழ்வாக இருக்கமுடியும். இது நதிகள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நிகழமுடியும்” என்றார்.

ஈஷா அறக்கட்டளையுடன் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன

மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களைப் பின்தொடர்ந்து, குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் பெருமளவில் மரங்கள் நடுவதற்கு ஈஷா அறக்கட்டளையுடன் செப்டம்பர் 2017ல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

நதிகள் மீட்பு இயக்கம் துவங்குவதற்கு முன்பாகவே, ஜூலை 2017ல் ஈஷாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹாராஷ்டிர அரசு கையெழுத்திட்டது. செப்டம்பர் 9ம் தேதி நதிகள் மீட்பு இயக்கத்தின் பேரணி கர்நாடக தலைநகரான பெங்களூருவை அடைந்தபோது, கர்நாடக முதல்வர் திரு.சித்தராமையா, பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்குருவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிக்கொண்டார்.

குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் சமீபத்தில் இணைந்துள்ளன. இத்துடன், ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை நான்கை எட்டியுள்ளது. செப்டம்பர் 20ம் தேதி, சாபர்மதி நதிக்கரையில், குஜராத் அரசுடன் சத்குரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். முதல்வர் திரு. விஜய் ரூபானி, இந்தியாவில் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு தங்கள் மாநிலம் ஆதரவளிக்கும் என்று சத்குருவிடம் உறுதியளித்தார். செப்டம்பர் 29ம் தேதி நதிகள் மீட்புப் பேரணி சண்டிகர் நகரத்தை அடைந்தபோது, பஞ்சாப் ஹரியானா ஆளுநர்கள், மற்றும் ஹரியானா முதல்வர் ஆகியோர் வரவேற்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மாநில அரசு ஈஷாவுடன் இணைந்து செயல்படும்.

பேரணி முழுவதும், நதிக்கரைகளில் வேளாண் தோட்டக்கலையை அடிப்படையாகக் கொண்டு பழமரங்கள் வைத்து விவசாயம் செய்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. இது நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு மட்டுமல்ல, விவசாயிகள் வருமானத்தைப் பெருக்கி தேச மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளின் தரத்தை மேம்படுத்த அவசியமாகிறது.

சாபர்மதி நதிக்கரையில் பேசியபோது, “நம் மக்கள்தொகையில் 4% மட்டுமே பழங்கள் உண்கின்றனர். நாட்டு பழவகைகளை நாம் இப்போது காண்பதேயில்லை. ஏனென்றால், எவரும் அதை விளையவைப்பதில்லை. இந்த இயக்கம் மூலம், நம் உணவில் குறைந்தது 30% பழங்களை மீண்டும் எடுத்துவர விரும்புகிறேன்,” என்று சத்குரு கூறினார்.

ஈஷா அறக்கட்டளையுடன் சத்தீஸ்கர் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

AR - Sadhguru Chatisgarh MOU

நவம்பர் 28, 2018ல் சத்தீஸ்கர் அரசு ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் சத்தீஸ்கரின் முக்கிய ஐந்து நதிகளின் கரைகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடுவதன்மூலம் சுற்றுச்சூழல் சேதத்தை ஈடுகட்டவும், நதிகளின் ஆரோக்கியத்தை மீட்கவும் ஒப்புக்கொண்டது. இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வரும் சத்குருவும் பங்கேற்றனர். இதில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, நதிக்கரைகளில் நாட்டு மரங்களை நடுவதற்கு ஒப்புக்கொண்டது. மரங்களின் வேர்கள், நிலத்தடி நீரை சேமிக்கும் ஆற்றலை அதிகரித்து, வருடம் முழுவதும் நதிகள் ஓட வழிசெய்து மண்ணரிப்பைத் தடுக்கிறது.

“நமக்கு முந்தைய தலைமுறையினர் நமக்கு கொடுத்த நிலையிலாவது அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த நதிகளைக் கொடுப்பது நம் கடமை” என்று, சத்குரு சத்தீஸ்கரில் கூறினார். “சத்தீஸ்கர் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் மாநிலம். அதை நாம் நிலத்தில் இருத்தி வருடம் முழுவதும் ஓடச்செய்வது நம் முக்கிய பொறுப்பு” என்று கூறினார்.

பழமரங்களின் கன்றுகளை வளர்ப்பதற்கு நாற்றுப்பண்ணைகளை உருவாக்கி மனிதவளங்களை வளர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டதுடன், இது குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் வாய்ப்பாக மாறமுடியும் என்று சத்குரு கூறினார். இந்த மரக்கன்றுகளை வளர்ப்பதற்கென ஒரு திறமை வேண்டும். அது பொதுவாக பெண்களுக்கு உண்டு. ஏனென்றால், அவர்களின் கைகள் மென்மையாக இருப்பதுடன் உயிருக்கு ஊட்டம் தந்து வளர்ப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளவை என்றார். “அவர்கள் கைகளின் மென்மையால் பெண்கள் இதை சிறப்பாக செய்யக்கூடியவர்கள் என்பதை எங்களுக்கு அனுபவம் கற்றுக்கொடுத்துள்ளது,” என்று சத்குரு கூறினார்.

சத்தீஸ்கர் அரசு, ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 5வது மாநிலமாகிறது. மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைப் பின்தொடர்ந்து, குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் 6வது மாநிலமாக அசாம்

AR - Assam MOU Sadhguru

மாநிலத்தில் நதிகள் புத்துணர்வுக்கான செயல்பாடுகளைத் துரிதப்படுத்த, ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 6வது மாநிலம் அசாம். டிசம்பர் 18, 2017ல் ஸ்ரீ சங்கரதேவ கலாக்ஷேத்ராவில் நிகழ்ந்த நிகழ்ச்சியில், அசாம் முதல்வர் திரு சர்பானந்த சோனாவால் மற்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் முன்னிலையில், அசாம் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

“அசாம் நாகரீகம், பிரம்மபுத்ரா மற்றும் பாரக் நதிகளிலிருந்து உருவெடுத்தது. இம்மாபெரும் நதிகளை காப்பாற்றுவது மாநில அரசின் ஒரு முக்கிய குறிக்கோள்” என்று கூறியதுடன், மண்ணரிப்பும் மரங்கள் வெட்டப்படுவதும் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது என்றும் அசாம் முதல்வர் கூறினார். நமாமி பிரம்மபுத்ரா மற்றும் நமாமி பாரக் பண்டிகைகளின் ஒரு நோக்கம், அசாமின் இவ்விரு பிரதான நதிகளினூடே பயணம் செய்யும் வாய்ப்புகளை ஆராய்வதே. ஈஷா அறக்கட்டளையுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வுகாண உதவும் என்றும் நம்புவதாக முதல்வர் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொருளாதார நலனும் உள்பொதிந்திருக்க வேண்டும் என்று கூறிய சத்குரு, தேசத்தின் பிற பகுதிகளில் வற்றிவரும் நதிகளுடன் ஒப்பிடும்போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அசாம் நதிகள் மேலானது என்று கூறினார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது நதிகள் மீட்பு இயக்கத்தின் கொள்கைத்திட்ட பரிந்துரைகளின் முக்கிய அம்சமாகும்.

x