எனது கூர்மையான கவனம்
மலைகள், நதிகள், காற்று, காடு,
சமுத்திரங்கள் இவற்றை நோக்கியே செல்கிறது.
ஏனெனில் அவை ஒருபோதும்
என்னிடம் பொய் சொன்னதில்லை.
மனிதர்கள், புனித நூல்கள், தத்துவங்கள்,
சித்தாந்தங்கள், சமூக வலைத்தளங்கள்
என பலவற்றையும் கேட்டிருக்கிறேன்,
ஆனால் அங்கே நான் காண்பதெல்லாம்
சுயலாபம் சார்ந்த புனைவுகளைத்தான்.
நானா, நீயா என்று அடுக்கடுக்காகக்
கட்டமைக்கப்பட்ட கதைகள்
தேசங்களுக்கு எதிராகவும்,
இனம், மதம் சார்ந்தும்,
சாதி, கோட்பாடு, நிறம் சார்ந்தும்
- எல்லாமே புனைவுகள்.
முற்போக்குச் சிந்தனை என்ற பெயரில்
வெளிவரும் பொய்கள்
சொர்க்கத்திற்கான வழி என்று
உலா வரும் பொய்கள்
எல்லோருக்கும் நலம் தரும்
என்ற போர்வையில் வலம் வரும் பொய்கள்
பொய்கள்... வெறும் பொய்கள்.
மலையோ, நதியோ,
காற்றோ, காடோ, சமுத்திரமோ
என்றாவது உங்களிடம்
பொய் சொன்னதுண்டா...