அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலறிய வேண்டுமா?! வீடியோவைப் பாருங்கள்...! சத்குருவின் உரை பதில் தருகிறது!

திருமணங்களில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் இன்றும் வாழ்ந்து வருகிறது. இது வெறும் சடங்கா அல்லது அதன் பின்னணியில் ஆழமான அறிவியல் ஏதேனும் உள்ளதா? உண்மையை சத்குருவிடமிருந்தே தெரிந்துகொள்வோம்.

Question: சத்குரு, நம் கலாச்சாரத்தில் இளையவர்களை வாழ்த்தும்போதும் சுபநிகழ்ச்சிகளிலும் அட்சதையை பயன்படுத்துகிறோம், இதன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

நீங்கள் ஒரு சோதனை செய்து பாருங்கள். ஒரு கையில் அரிசி வைத்துக் கொள்ளுங்கள், மற்றொரு கையில் கோதுமை மணியை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தானியங்களையும் கைகளில் வைத்து உணர்ந்து பார்த்தால், அரிசி வைத்திருக்கும் கை நடுங்குவதை உணர முடியும். ஆனால் கோதுமையில் அப்படி ஆகாது. அரிசியின் குணம் அப்படி.

இதுபோல் ஆசீர்வதிக்க அரிசியிலும் பச்சரிசியே சிறப்பு வாய்ந்தது. அரிசி உயிரோடு இருக்க வேண்டியது அவசியம். அதனை சக்தியூட்ட அரிசியுடன் கொஞ்சம் மஞ்சளையோ அல்லது குங்குமத்தையோ சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டால், சற்று நேரத்தில் அந்த அரிசி உங்கள் உணர்வையும் சக்தியையும் கிரகித்துக் கொள்ளும். உங்கள் தன்மையை அது உள்வாங்கிக் கொள்ளும்.

மேலும் நம் கலாச்சாரத்தில் அரிசியை கைகளில் வாங்கக் கூடாது, கொடுக்கக் கூடாது என்றும் சொல்லி வைத்துள்ளார்கள் அல்லவா? ஆனால் இன்றோ, திருமணங்களில் ஆசீர்வதிக்க வந்தவர்கள் உட்கார்ந்துள்ள இடத்திற்கே சென்று, அதன் தாத்பரியம் புரியாமல் கைகளில் அள்ளிக் கொடுக்கிறார்கள். சில காலத்திற்கு முன்பு வரைகூட தாம்பூலத் தட்டில் அரிசியை வைத்து, வாழ்த்த வந்தவர்களை எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள், கைகளில் கொடுக்க மாட்டார்கள். இதுபோன்ற ஒரு வழக்கம் உருவாக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம், உங்கள் சக்தியை நீங்கள் இன்னொருவருக்கு கடத்தத் தேவையில்லை என்பதால்தான்.

ஏதோ ஒரு முகூர்த்தத்திலோ அல்லது சுப நிகழ்ச்சியிலோ இருக்கும்போது மட்டும் வாழ்த்துவதற்கு அட்சதை வழங்குவார்கள். உங்கள் உணர்வு நல்ல நிலையில் இருக்கும்போது மட்டும்தான் அரிசி, கோபத்தில் வீட்டில் சண்டையிடும்போது அரிசி அல்ல.

அதிலும் அரிசியை மணமக்கள் மேல் எறியக் கூடாது. அது சரியல்ல! அவர் தலைமேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதை வைக்க வேண்டும். ஆசீர்வாதம் செய்யும்போது, சற்று நேரம் நல்ல உணர்வுடன் கைகளில் வைத்து கொண்டு அவர் தலைமேல் வைக்க வேண்டும், ஆனால் இன்று நமக்கு பொறுமை கைவிட்டு போய்விட்டது, வீசியெறியத் துவங்கிவிட்டோம்.

சரி, தலையில் ஏதோ ஒரு பகுதியில் வைத்துவிட்டால் போதுமா என்றால், அப்படியில்லை. தலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி இருக்கிறது, அந்தப் பகுதியில் அட்சதையை வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது உங்கள் உணர்வுடன், அந்த அரிசி வேறு விதத்தில் வேலை செய்யும். ஆனால் அதை சரியான இடம் தெரிந்து வைக்க வேண்டும். ஒரு காலத்தில், அறிவியலாக உருவாக்கப்பட்ட விஷயம் இன்று வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது துரதிருஷ்டமே!

நம் உயிர் செயல்படும் விதம் புரிந்து, அது எப்படி செயல்படுகிறது என்கிற அறிவியல் தெரிந்து, மனிதனுடைய வளர்ச்சிக்காக பல கருவிகளை இந்தக் கலாச்சாரத்தில் நாம் உருவாக்கினோம். ஆனால் விஞ்ஞானம் சடங்காக மாறிவிட்டது. விஞ்ஞானம் மீண்டும் உயிர் பெற்றால் சிறப்பாக இருக்கும்.