வெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நியூயார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவின் நடுவே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் தான் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து கூறுவதோடு, இதில் நதிகள் மீட்பு இயக்கம் ஆற்றியுள்ள முக்கிய பங்கினை விளக்கி, நதிகளுக்கான நோக்கத்தில் தொடர்ந்து உறுதிமாறாமல் இருக்கும்படி சத்குரு கேட்டுக்கொள்கிறார்.
 
 
 
 

நமஸ்காரம். நியூயார்க் நகரத்தில் இருக்கிறேன், இங்கு கடுமையாக பனி பொழிகிறது. இன்று 1 அடி முதல் 3 அடி வரை பனி பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 -4 மணி நேரமாக இடைவிடாமல் பனி பொழிந்தபடி இருக்கிறது. இப்போதுதான் ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி ஒன்று முடிந்தது. இங்குள்ள இந்திய தூதரகத்தின் நிரந்தர மிஷன், ஐக்கிய நாடுகள் சபையில் நடத்திய நிகழ்ச்சியிது. இந்த நிகழ்ச்சி, "நீர், சுகாதாரம் & பெண்கள்" பற்றியதாக இருந்தது. இம்மூன்றையும் அவர்கள் தொடர்புபடுத்த விரும்புகிறார்கள், ஏனென்றால் நாளை உலக தண்ணீர் தினம். அதை முன்னிட்டு, தண்ணீர் பாதுகாப்பிற்கு, அடுத்த பத்து வருடங்களுக்கான திட்டமொன்றை அவர்கள் துவக்கவிருக்கிறார்கள். நிலையான வளர்ச்சி இலக்குகளின் முக்கியமான அங்கமாக தண்ணீர் பாதுகாப்பு கருதப்படுகிறது.

நதிகள் மீட்பு இயக்கம், நமது தண்ணீர் தேவைகளுக்கு திறம்பட வேலைசெய்யக்கூடிய தீர்வு என்பதை மிகச் சிறப்பாக அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

நான் இதன் முக்கிய குழுவின் அங்கமாக இருக்கிறேன், இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் இதன் அங்கமாக இருக்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாம் என்ன செய்யவேண்டும், மக்களை எப்படி இதில் ஈடுபடுத்துவது என்ற நோக்கத்தில் இது நிகழவிருக்கிறது. நதிகள் மீட்பு இயக்கத்தின் விளைவாக நாம் உலகில் இந்த விழிப்புணர்வை உருவாக்கியுள்ளோம் - மாபெரும் மக்கள் இயக்கம் இல்லாவிட்டால், உண்மையில் தீர்வு என்பது இல்லை. அரசாங்கம் செயல் செய்யலாம், தனியார் நிறுவனங்கள் செயல் செய்யலாம், தனிமனிதர்களும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்யலாம். எல்லாம் பயனுள்ளதுதான். ஆனால் மக்களை பெரிய அளவில் ஈடுபடுத்தாமல், உண்மையான தீர்வு எதுவும் இருக்காது. நதிகள் மீட்பு இயக்கத்தின் மூலம் இது மிக அழுத்தமாக உணர்த்தப்பட்டுள்ளது. அதனால்தான் நாம் இங்கு இருக்கிறோம்.
நாளை ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கவிருக்கும் கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. நாளைய இந்த நிகழ்ச்சி, நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடக்கவிருக்கிறது, இது இந்திய மிஷனுடையது அல்ல. இப்போது வெளியே இருக்கும் பனிப்பொழிவின் சில காட்சிகளை உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை. அதிக போக்குவரத்து இல்லை. பெரும்பாலான டேக்ஸி சேவைகள் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன, ஊபர் டேக்ஸி இன்று இயங்கவில்லை. அதையும் மீறி இன்றைய நிகழ்ச்சிக்கு ஹால் நிரம்பியிருந்தது. இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட பலதரப்பட்ட மக்களிடமிருந்து மிக உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.

நதிகள் மீட்பு இயக்கம், நமது தண்ணீர் தேவைகளுக்கு திறம்பட வேலைசெய்யக்கூடிய தீர்வு என்பதை மிகச் சிறப்பாக அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. அதாவது, இன்றைய சந்திப்பின் முடிவிலும் அவர்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்: தண்ணீர் தேவைகளுக்கு தீர்வு வேண்டுமென்றால், அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கவேண்டும் என்றால், நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், "போதிய காடுகள் இருக்கவேண்டும்". காடுகள் சாத்தியமில்லை என்றால், மரங்களின் போர்வையேனும் இருக்கவேண்டும். அடர்ந்த மரங்களில்லாமல், பூமியின் வெப்பமண்டலப் பகுதிகளில் தேவையான தண்ணீர் இருக்க வழியேயில்லை.

மிதவெப்பமண்டலப் பகுதிகளில், பனிப்பொழிவு இருக்கும். இப்போது நியூயார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதேபோல, உலகின் மிதவெப்பமான பகுதிகள் அல்லது பிரதேசங்கள் அனைத்திலும், பனி 2 - 3 மாதங்களுக்கு மண்ணில் நின்று, மெதுவாக மண்ணுக்குள் கசிந்திறங்கி, நிலத்தடி அக்விஃபயர்கள் (நிலத்தடி நீர்த்தேக்கப் பகுதி) அனைத்தையும் நிரப்புகிறது. ஆனால் இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதியில், வருடத்தில் 45 - 50 நாட்கள் மட்டுமே மழை பொழிகிறது. 45 நாட்களாக பொழியும் மழைநீரை பாதுகாத்து வைத்து, 365 நாட்களுக்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவையான மரங்களும், மண்ணில் செழிப்பாக உயிர்ம-வளமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

கர்நாடக மாநிலம் 25 கோடி மரங்கள் நடப்போகிறது, மஹாராஷ்டிர மாநிலம் 50 கோடி மரங்கள், தெலுங்கானா 90 கோடி மரங்கள், ஆந்திர மாநிலம் - தனது மாநிலத்திலுள்ள விவசாய நிலத்தில் 50% சதவிகிதத்தை மரப்பயிர் செய்யும் நிலங்களாக மாற்றவிருக்கிறது.
இந்த விஷயம் நன்றாக அவர்களுக்குப் புரிந்துள்ளது. இதை பெரிய விதத்தில் அவர்கள் குறித்துக்கொண்டுள்ளார்கள். இப்போது இந்தியாவில் நதிகள் மீட்பு இயக்கத்திற்குப் பிறகு மிகத்தீவிரமான முயற்சிகள் நடந்து வருகின்றன, பல மாநிலங்கள் இதில் துரிதமாக செயல்படவுள்ளன. கர்நாடக மாநிலம் 25 கோடி மரங்கள் நடப்போகிறது, மஹாராஷ்டிர மாநிலம் 50 கோடி மரங்கள், தெலுங்கானா 90 கோடி மரங்கள், ஆந்திர மாநிலம் - தனது மாநிலத்திலுள்ள விவசாய நிலத்தில் 50% சதவிகிதத்தை மரப்பயிர் செய்யும் நிலங்களாக மாற்றவிருக்கிறது. உத்திரப் பிரதேசம் - கங்கை நதிக்கரையில் பெரிய அளவில் மரங்கள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது, அதில் நாமும் ஒரு அங்கம் வகிப்போம்.

இவை அனைத்தும் நடக்கிறது. இதற்கு மக்கள் அனைவருக்கும் நன்றி - நதிகள் மீட்பு இயக்கத்தில் கலந்துகொண்ட கோடான கோடி மக்கள், குறிப்பாக சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கு நன்றி, மிக உற்சாகமாக இவ்வியக்கத்தில் அவர்கள் பங்கேற்றார்கள். ஒவ்வொரு தன்னார்வத் தொண்டருக்கும் நன்றி. இதில் ஏதோவொரு விதத்தில் கலந்துகொண்டு இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடக்கச்செய்த மற்ற அனைவருக்கும் நன்றி. இன்று உலகில் இதை நோக்கி ஒரு மக்கள் இயக்கம் உருவெடுத்துள்ளது. அனைவருக்கும் இது புரிகிறது - அதாவது 33 டிகிரி அட்சரேகை வரையுள்ள வெப்பமண்டலப் பகுதியில் நிகழவேண்டிய அதிமுக்கியமான விஷயம், மரப்போர்வை.

நம் காலம் முடிவதற்குள், பசுமையான, செழிப்பான, நீர்வளம் நிறைந்த பூமியை வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்வதை நாம் உறுதிசெய்வோம். இது நாம் ஏற்கவேண்டிய உறுதி.
இதுகுறித்து சற்று தவறான புரிதலும், சில விமர்சனங்களும் உலவி வந்தன. ஆனால் இன்று இது மிகத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது, இந்திய அரசிலும், பல மாநில அரசுகளிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச குழுக்களிலும் இப்போது இது தெளிவாகியுள்ளது. நாளைய கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளை முழு நாளும் இந்நிகழ்ச்சியில் நான் இருப்பேன். நதிகள் மீட்பு இயக்கத்தில் கலந்துகொண்டுள்ள நீங்கள் ஒவ்வொருவரும், பலவிதங்களில் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளவர்கள், நேரடியாக வந்து கலந்துகொண்டவர்கள், உங்கள் இதயங்களில் இந்த நோக்கத்துடன் இருந்தவர்கள் - நீங்கள் பலவிதங்களில் கொடுத்துள்ள ஆதரவுக்கு, ஏதோவொரு விதத்தில் இது ஒரு தீர்வை நோக்கி நகர்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

தீர்வு அருகாமையில் இல்லை, இன்று சரியான திசையில் வேலை செய்ய ஆரம்பித்தால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு மெதுவாக தீர்வு கிடைக்கும். அதனால் நீங்கள் அனைவரும் இந்த நோக்கத்தில் உறுதியாகவும், ஒருநோக்கத்துடனும் இருக்கவேண்டும். ஏனென்றால் நம் நோக்கம், ஏதோவொரு விதத்தில் உலகம் போகும் திசையை மாற்றவேண்டும் என்பதாக இருக்கிறது. இது வருங்கால சந்ததியினருக்கு நாம் கடமைப்பட்டிருக்கும் ஒரு விஷயம். இது ஒரு வார இறுதியிலேயே நடக்கும் விஷயமில்லை, ஓரிரு ஆண்டுகளில் நடக்கும் விஷயமில்லை, குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாம் கண்கூடாகக் காண்பதற்கு சில பத்தாண்டுகளாவது தேவைப்படுகிறது. அதனால் நோக்கம் மாறாமல் இருங்கள்.

நம் காலம் முடிவதற்குள், பசுமையான, செழிப்பான, நீர்வளம் நிறைந்த பூமியை வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்வதை நாம் உறுதிசெய்வோம். இது நாம் ஏற்கவேண்டிய உறுதி. வருங்கால சந்ததியினருக்கு நிறைவேற்ற வேண்டிய நம் கடமையிது. நமக்கு அடுத்து வரவிருக்கும் உயிர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கும் விஷயமிது. நமது காலம் இங்கு மிகக் குறைவானதே. இந்த பூமியிலிருந்து எல்லாவற்றையும் அழித்துச்செல்லும் உரிமை நமக்கு இல்லை. ஆனால் நமது வாழ்க்கை முறை, நாம் இருக்கும் விதம், நம் தொழில்நுட்பங்கள், நம் தேவைகள், நம் மார்க்கெட் தேவைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் பெருகிவிட்டன. நாம் எல்லாவற்றையும் உடனே மாற்றமுடியாது, ஆனால் நாம் என்ன அபத்தங்கள் செய்தாலும் அதை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு உலகில் போதுமான பசுமைப்போர்வை இருக்கும்படி நாம் செய்யமுடியும்.

மற்ற உயிரினங்கள் அனைத்தும் உயிர்வாழ்ந்தால் - மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிப்பவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் காலடித்தடம் எந்த அளவுக்கு இருக்கிறதென்றால், மற்ற உயிரினங்கள் அனைத்தும், புழுக்கள் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் என அனைத்தும் பெரிய அளவில் பின்வாங்கத் துவங்கியுள்ளன. ஒரு சோகமான புகைப்படம் இப்போது பகிரப்பட்டு வருகிறது (வடக்கின் வெள்ளை காண்டாமிருக இனத்தின் கடைசி ஆண் காண்டாமிருகம் உயிரிழந்ததோடு, அந்த இனம் அழிந்துவிட்டது). ஆயிரம் வருடங்களாக வாழ்ந்துவந்துள்ள ஒரு உயிரினம் அழிந்துள்ளது, அதுவும் நம்மால் - உங்களையும் என்னையும் போன்ற மனிதர்களால்!

அதனால் மற்ற உயிரினங்கள் அனைத்தும் வாழத் தேவையான இடம் உருவாக்குவது முக்கியமாகிறது. ஏனென்றால் அவைதான் உண்மையாகவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சுற்றுச்சூழல் வீரர்கள். நீங்கள் பார்க்கும் புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் மற்றும் மரங்கள் - இவையே உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்! அவை தழைத்தோங்க நாம் இடம் உருவாக்கிக் கொடுத்தால் போதும். இதைத்தான் நாம் அனைவருக்கும் தெளிவாக உணர்த்த விரும்புகிறோம் - அவற்றுக்கு போதுமான வசிப்பிடங்கள் உருவாக்கவேண்டும் - மரப்போர்வை உருவாக்குவது மூலமாகவும், நம் விவசாயத்தின் குறிப்பிடத்தக்க விகிதத்தை வழக்கமான பயிர்களிலிருந்து மரப்பயிர்களுக்கு மாற்றுவது மூலமாகவும் நாம் இதைச் செய்தால், இதில்தான் தீர்வுகள் உள்ளன.

முதலில் இந்த தவறான கருத்து மாறவேண்டும் - சுற்றுச்சூழல் என்றால் அது நம் பொருளாதாரத்திற்கு எதிரானது என்ற கருத்து போகவேண்டும். நதிகள் மீட்பு இயக்கத்தின் அடிப்படையான நோக்கம் இதுதான். சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒன்றொடொன்று கைகோர்த்தபடி வளரமுடியும். அதற்கு நம் பொருளாதாரத்தை சற்று மென்மையாகவும், பூமியிலுள்ள உயிர்களனைத்தையும் அரவணைக்கும் விதமாகவும் நடத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும். என்னுடன் இருங்கள், நதிகள் மீட்பு இயக்கத்திற்கு நாளை ஒரு முக்கியமான நாள். ஏனென்றால் ஐக்கிய நாடுகள் சபையில் பல விஷயங்களை கவனித்து குறித்துக்கொள்ளவிருக்கிறார்கள். இந்த விதத்தில், நதிகள் மீட்பு இயக்கத்தின் பரிந்துரைகள், பூமியிலுள்ள வெப்பமண்டலப் பிரதேசங்களிலுள்ள அனைத்து தேசங்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை இதைக் கூர்ந்து கவனித்து வருகிறது, இது எங்கு செல்கிறது என்று காத்திருந்து பார்ப்போம். அனைவருக்கும் நன்றி.

நமஸ்காரம். இன்று நியூயார்க் நகரத்தில் நிகழும் இந்த அழகான பனிப்பொழிவை பார்க்கத் தவறிவிட்டீர்களே!

உலக தண்ணீர் தினத்தன்று ஐநா பொதுச்சபையில் சத்குரு பேசவிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாளான மார்ச் 21ஆம் தேதியன்று சத்குரு பேசி வெளியிட்ட ஒலிப்பதிவு, அழகிய காட்சித்தொகுப்புகளுடன்..

 

Love & Grace

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1