இந்நிகழ்ச்சிகளின் சுருக்கமான தொகுப்பு இந்த வீடியோவில்:

பாபா ராம்தேவ் அவர்களும், ஆச்சாரிய பாலகிருஷ்ணா அவர்களும், ஆகஸ்ட் 7ம் தேதி ஈஷா யோகா மையம் வந்தபோது

சத்குரு: இங்கு நம்முடன் பாபா அவர்களும் ஆச்சாரியா அவர்களும் இருப்பது நமது பெருமை. பாபா ராம்தேவ் பற்றி நம் தேசத்தில் தெரியாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன், அதனால் அவரை விட்டுவிடுவோம். ஆனால் ஆச்சாரியா அவர்கள், இந்த தேசத்தில் பதஞ்சலி பிராண்ட் மூலமாக கடந்த 12 முதல் 13 வருடங்களில் உருவாக்கியிருப்பது, இதை தேசத்தின் மிகப்பெரிய பிராண்டுகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. இது இந்தியாவின் தொழில் முறைக்கு முற்றிலும் மாறுபட்டதொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது. 2 பில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர், ஆனால் எப்படி எளிமையாக இருக்கிறார் பாருங்கள்!

பாபா ராம்தேவ்: சம்பளமில்லாத CEO!

சத்குரு: சம்பளமில்லாத தொழில் தலைவர், அதோடு கோட்-சூட்-டை இல்லாத தலைவர். உள்நாட்டு கம்பெனிக்கு இது அற்புதமான முன்னுதாரணம், வெற்றிகரமான ஒரு இந்திய கம்பெனிக்கு முன்னுதாரணமிது. உலகத்தின் வர்த்தக சமுதாயத்தினர், குறிப்பாக இந்திய தொழில் துறையினர் இதைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். மிக எளிமையாக இருந்தும், தான் செய்யும் செயல்மீது அதீத பக்தியுடன் இருந்தால், அதிசயங்களை உருவாக்க முடியும். வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் FMCG தொழில்துறையில், எனக்குத் தெரிந்த அளவில், 10 - 12 வருடங்களில் 2 பில்லியன் டாலர் கம்பெனியாக இவர்களைப் போல வேறெந்த கம்பெனியும் வளர்ந்ததில்லை. அதோடு உலகிலேயே மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வைத்திருக்கிறார்கள்.

அனைவருக்கும் இந்த விஷயங்கள் தெரியும். ஆனால் மக்களுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய ஆராய்ச்சிக் கூடத்தை பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அவர்கள் அங்கு 72,000 மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஒருவிதத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்கள். இப்படி இதற்கு முன் எவரும் செய்ததில்லை, மிகவும் அறிவியல்பூர்வமாக இதை செய்துள்ளார்கள். இவ்வளவு செய்துவிட்டு, இருவரும் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் பாருங்கள்! ஒருவர் சட்டையில்லாமல் இருக்கிறார், இன்னொருவர் இப்படி பணிவாக அமர்ந்திருக்கிறார். இவர் (ஆச்சாரியர்) உற்பத்தியும் இயக்கமும் கவனிப்பவர். இவர் (பாபா) மார்க்கெட்டிங் செய்பவர். இது இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. நான் இது குறித்து பேசியிருக்கிறேன், ஆனால் இவர்கள் அதற்கான சிறந்த முன்னுதாரணங்கள். அதாவது பெரிய தொழில் நிறுவனங்களை நடத்துவதற்கு, நீங்கள் டை அணிந்து உங்கள் கழுத்தை நெரித்துக்கொள்ளத் தேவையில்லை.

நீங்கள் இங்கு பார்ப்பதுதான் இந்திய தொழில்முறையின் எதிர்காலம் என்று நான் கருதுகிறேன். நான் இந்த தருணத்தில், ஆச்சாரிய பாலகிருஷ்ணாஜியை, அடுத்த வருடம், அதாவது 2019ல் நடக்கவிருக்கும் தொழில் மாநாடான இன்சைட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறேன். இம்மாநாட்டில் இதற்குமுன் ரத்தன் டாடா, நாராயண மூர்த்தி, கே.வி.காமத், மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். தேசத்தின் தலைசிறந்த கார்ப்பரேட் தலைவர்களில் பெரும்பாலானோர் இதில் பங்கேற்றுள்ளார்கள். இந்த மாநாட்டின் ஒரு கார்ப்பரேட் தலைவராக இவர் அடுத்த வருடம் இங்கு வருகிறார்.


ஆகஸ்ட் 8ம் தேதி, மும்பையில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்துடன் உரையாடியபோது

கங்கனா: நான் முதன்முதலில் உங்களைப் பற்றி சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டபோது, நான் சந்தேகத்துடன் கண்களை உருட்டியபடி, "ஓ, இன்னொரு குருவா!" என முனுமுனுத்தேன். சில மாதங்களுக்கு முன் என் சகோதரி, அமெரிக்காவில் அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ள உங்கள் "இன்னர் எஞ்ஜினியரிங்" புத்தகத்தை எனக்குக் கொடுத்தார், அதை படித்தபிறகு எனது கண்ணோட்டம் மாறியது. உண்மையைச் சொன்னால், அமெரிக்காவில் வெற்றிகரமான புத்தமாக அது இல்லாது போயிருந்தால், அதை நான் படித்திருக்க மாட்டேன். மேற்கத்திய நாடுகள் மேல் இந்த மோகம் ஏன்? எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் இதை ஏற்கவில்லை என்றால் அதை நாம் மதிப்பதில்லை. ஏன் இப்படி?

சத்குரு: நாம் இன்னும் வெள்ளைத் தோல் கொண்ட வெள்ளையர்களை போற்றும் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வரவில்லை. நமக்கு இது மேற்கிலிருந்துதான் வரவேண்டும் என்றாகிவிட்டது. இன்று இவ்வளவு பேர் யோகா பற்றி ஏன் பேசுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று பிரபலமாகி இந்தியாவிற்குத் திரும்பிய யோகா பற்றிதான் இங்கு பேசுகிறார்கள். இங்கு உருவெடுத்த யோகா பற்றி அவர்கள் பேசவில்லை, இதுதான் யோகாவின் பிறப்பிடம்.

கங்கனா: இது இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. நம் வேர்கள் யோகாவிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்திருந்தாலும், அது நம்மை எங்கு கொண்டு சென்றுள்ளது? இந்த தேசத்தை, இந்த கண்டத்தை இது எங்கே எடுத்துச் சென்றுள்ளது?

சத்குரு: இதை நாம் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எப்போதும் தனிமனித முன்னேற்றம் மீது கவனம் செலுத்தினோம். ஏனென்றால் மகத்தான மனிதர்களை உருவாக்காமல் மகத்தான தேசமில்லை, மகத்தான கலாச்சாரமில்லை, மகத்தான உலகமுமில்லை. உலகம், தேசம், சமுதாயம், இவையனைத்தும் வெறும் வார்த்தைகள். இதில் இருப்பது நீங்களும் நானும்தான். எப்படிப்பட்ட மனிதர்களாக நாம் இருக்கிறோமோ, அப்படிப்பட்ட சமுதாயத்திலும் தேசத்திலும் உலகத்திலும்தான் நாம் வாழ்கிறோம். அதனால் நாம் எப்போதும் தனிமனித முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினோம். இதில் நாம் நட்சத்திரங்கள் போல பிரகாசமான மனிதர்களை உருவாக்கினோம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதிசயமான மனிதர்களை உருவாக்கினோம். அவர்கள் அற்புதமான ஒரு கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்.

கங்கனா: இந்நாட்களில் பொதுவாக அகதிகள் பற்றி அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அவர்கள் கோடிக்கணக்கில் உள்ளே வந்துகொண்டு இருக்கிறார்கள். நம் தேசத்து மக்களே பசி பட்டினியால் வாடும்போது அவர்களை என்ன செய்வது?

சத்குரு: சூழ்நிலையை திறமைகரமாக கையாள முடியாத நம் குறையை நாம் கருணையாகவும் கரிசனமாகவும் காட்டிக்கொள்ளப் பார்க்கிறோம். அது எனக்குப் பிடிக்கவில்லை. நம் எல்லைக் கோடுகளை எப்படி பாதுகாப்பது என்று நமக்குத் தெரியவில்லை, ஆனால் கருணை பற்றி பேசுகிறோம். இது நிதர்சனமான சூழ்நிலையல்ல. எங்கோ மிகக் கொடூரமாக தாக்கிக் கொல்லப்படுவதால் யாரோ தேசத்தின் கதவுகளைத் தட்டி அடைக்கலம் தேடி வந்து நிற்கிறார்கள் என்றால், அதை நாம் வேறுவிதமாக நடத்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களும் மனிதர்கள்தான். ஆனால் பொருளாதார நல்வாழ்வுக்காக மக்கள் தினமும் வந்துபோகும் விதமாக எல்லைகள் ஓட்டைகள் நிறைந்ததாக இருக்கிறது என்றால், அதற்கு நாம் ஏதோவொன்று செய்தாக வேண்டும்.

முறையே இல்லாமல் மக்களை அனுமதித்து அவர்களுக்கு ரேஷன் கார்டும் அடையாள அட்டையும் கணக்கெடுக்காமல் கொடுத்தால், இது பேரழிவான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும். இது எதிர்காலத்தில் எல்லாவித பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். தேசத்தில் யார்யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் ஒரு தேசத்தை நடத்தமுடியாது. நீங்கள் உண்மையாகவே அவர்களையும் உங்களின் பாகமாக இணைத்துக்கொள்ள விரும்பினால் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்கிவிடலாம். ஆம், வங்கதேசத்தை நாம் ஒரு யூனியன் பிரதேசமாக்கி, அதை இந்த தேசத்தின் அங்கமாக்கலாம். அதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இணைத்துக்கொள்வது பற்றி பேசினால், அதுதானே வழி? பின்கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்துவிட்டு என்னை இணைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதா வழி? அது வேலைசெய்யாது!

கங்கனா: இப்போது உங்களுக்குப் பிரியமான ஒரு விஷயத்திற்குச் செல்வோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: அது என்ன? அதையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

கங்கனா: இப்போது ஷிவா பற்றி பேசுவோம். இதைப் பற்றி வாசித்ததில், யோகப் பயிற்சிகள் செய்ததில், உங்களுடன் நேரம் செலவிட்டதில் நான் அறிந்தது, ஷிவா என்றால் மேலே அமர்ந்தபடி நம் அனைவரையும் பார்க்கும் ஒருவரல்ல.

ஷிவா என்பது ஒரு பரிமாணம், அறிவியலில் பிளாக் ஹோல் என்பார்கள், அதாவது ஒன்றுமற்ற தன்மை பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கிறது. ஆனால் இதை எனக்குத் தெளிவுபடுத்துங்கள். ஆதியோகி, முதலாவது யோகி, அந்த பரிமாணத்தை தன்னகப்படுத்தியவராக இருந்தால், ஆதியோகி மேல் உங்களுக்கு ஏன் இந்த தீராத ஆர்வம்? இது, பாத்திரத்தில் இருக்கும் கருப்பொருளை விடுத்து பாத்திரத்தை முக்கியமாக்குவதாக இல்லையா சத்குரு?

சத்குரு: இதுவரை இந்த உரையாடலில் நான் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நீங்கள்தான் அவரைப் பற்றி இப்போது பேசுகிறீர்கள்.

கங்கனா: ஆனால் நீங்கள் ஆதியோகி சிலையை வடித்துள்ளீர்களே.

சத்குரு: ஆம், ஆனால் அதை உருவாக்கி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. 36 வருடங்களாக நான் என்ன செய்தேன் என்று நீங்கள் பார்க்கவில்லையே. அது பரவாயில்லை, இதை நாம் பார்ப்போம். ஆதியோகி மேல் எனக்கு இருப்பது தீராத ஆர்வமல்ல, ஆதியோகி ஒரு திட்டம். நீங்கள் ஒன்றுமற்றது பற்றி பேசினீர்கள். ஒன்றுமற்றதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆங்கிலத்தில் 'nothing' என்பதில் ' no 'விற்கும் ' thing 'ற்கும் இடையே, ' no - thing'' என்று ஒரு சிறு கோடு போடவேண்டும். அதாவது அது பொருளல்லாதது. அப்படியானால் அது இல்லை என்று அர்த்தமில்லை. இப்போது அறிவியல் இந்த 'பொருளற்றவை' பற்றி பேசுகிறது. அதாவது பிரபஞ்சத்தின் பொருளற்ற பரிமாணங்கள் பற்றி பேசுகிறது. அவை பொருளல்ல, ஆனாலும் சக்திவாய்ந்த விசையாக இருக்கின்றன. பொருள்நிலையில் இங்கு இருப்பவை எல்லாவற்றிற்கும் மூலம், அடிப்படையில் பொருளற்ற தன்மை, ஒன்றுமில்லாதது, அல்லது ஷிவா.

கங்கனா: சத்குரு, என்னுடைய கடைசி கேள்வி நமது இளைஞர்கள் பற்றியது. புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்றால், ஒவ்வொரு மணிநேரத்திற்கும், 25 வயதிற்குக் குறைவான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஏன் இப்படி?

சத்குரு: தற்கொலை என்பது இனிமையான விஷயமில்லை. அப்படியொரு முடிவுக்கு வர, அவர் மனோரீதியாக என்ன எதிர்கொள்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒருவர் வாழ்க்கையின் மிகக் கொடூரமான கட்டம், எங்கோ அவர்கள் எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டு, ஒரு பொறிக்குள் சிக்கிவிட்டது போல உணர்கிறார்கள். பொருள்நிலையில் இருக்கும் சூழ்நிலைகளாலோ, பொருளாதார சூழ்நிலைகளாலோ, உணர்வு சூழ்நிலைகளாலோ, பாழுங்குழிக்குள் தள்ளப்பட்டவராய், வேறு வழியே இல்லாதவராய் உணர்கிறார். இந்தவொரு நிலையில்தான், வன்முறையான முறையில் உடலைவிட்டு வெளியேறுகிறார், அதைத்தான் நாம் தற்கொலை என்கிறோம்.

இது எதனால் நடக்கிறது? நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், இந்த தேசத்தில், 2017ல், 15 வயதுக்குக் குறைவான 7,600 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டார்கள். பதினைந்து வயதுக்குக் குறைவாக இருக்கையில், துடிப்பாக துள்ளித்திரிந்து உயிர்வாழ ஆர்வத்துடன் இருக்கும் வயதில், அவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். பதினைந்து வயதுக்குக் குறைவாக இருக்கையில் தற்கொலை செய்ய விரும்புகிறார்கள் என்றால் என்ன காரணம்? நம்மை நாமே இப்படியொரு தப்பிக்கமுடியாத அவலநிலைக்குத் தள்ளிச் சென்றிருக்கிறோம். இவை அனைத்திற்கும் ஒரு பெரிய காரணம், நமது கல்வி முறை.

இளமை என்றால் உற்சாகமான சக்தி. ஆனால் பெரும்பாலான சமயம், இளைஞர்களிடம் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்களிடம் தேவையான தெளிவும் இருப்பதில்லை, சமநிலையும் இருப்பதில்லை. செப்டம்பர் மாதத்தில் 'இளமையும் உண்மையும்' என்ற ஒரு இயக்கத்தைத் துவங்குகிறோம். தேசம் முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தவிருக்கிறோம். நீங்களும் உங்கள் துறையில் இருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவரும், ஊடகவியலாளர்களும் இதில் அங்கமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் இருக்கும் இந்த ஜனத்தொகையில், தெளிவு இல்லாவிட்டால், திறமை இல்லாவிட்டால், சமநிலை இல்லாவிட்டால், அவர்கள் பூமியிலேயே பேரழிவாக மாறக்கூடும். ஆனால் நாம் சரியாக வழிநடத்தி அவர்களை ஒருங்கிணைத்தால், நாம் உலகிலேயே மிகப்பெரிய அதிசயமாக இருக்கமுடியும்.

கங்கனா: இதில் கலந்துகொள்ளவிருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் சத்குருவிடம் எல்லாவித கேள்விகளும் கேட்கலாம். மாதவிலக்கு, உடலுறவு, போதைப் பொருள், என்று சாதாரணமாக மக்கள் பேசத் தயங்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் நீங்கள் கேள்விகள் கேட்கலாம்.

சத்குரு: இதனை நாம் எப்படி சொல்கிறோம் என்றால், "இளமையும் உண்மையும் - சத்குருவுடன் தடைகளைத் தளர்த்துங்கள், என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்!"

கங்கனா: என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்!

சத்குரு: எது குறித்துக் கேட்கவும் தடையில்லை!

இந்நிகழ்ச்சிகளின் சுருக்கமான தொகுப்பு இந்த வீடியோவில்:


மஹாராஷ்டிர ஆளுநர் C.வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முகந்திவர், மற்றும் சந்திரகாந்த் பட்டீல் ஆகியோரை சத்குரு சந்தித்தார்.

மஹாராஷ்டிர முதல்வர் அலுவலகம் பதிவிட்ட டுவீட்:

தண்ணீரை சேமிக்கவும் நதிகளுக்கு புத்துயிரூட்டவும் செயல்படும் நதிகள் மீட்பு இயக்கத்தின் அங்கமாக, ஈஷா அறக்கட்டளை பரிந்துரைக்கும் திட்ட வரைவு குறித்து ஆலோசிக்க, மாண்புமிகு ஆளுநர் திரு.சி.வித்யாசாகர் ராவ் அவர்களும் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்களும் சந்தித்தனர். சத்குரு அவர்களும், அமைச்சர் சுதிர் முகந்திவர் அவர்களும் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

சத்குரு பதிவிட்டுள்ள டுவீட்'கள்:

நதிகள் மீட்பு இயக்கத்தின் விழிப்புணர்வு வளர்க்கும் கட்டம் முடிவடைந்த ஒருவருட காலத்திற்குள்ளாக, மஹாராஷ்டிர அரசு, நதிக்கரைகளில் மரங்கள் வளர்த்து தனது மாநில நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டியுள்ளது. - சத்குரு

இந்தியாவின் வேதனைக்குரிய விவசாயி தற்கொலை சம்பவங்களின் மையப்புள்ளியான யவத்மால் பகுதியின் வாகாரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்ட வரைவறிக்கைக்கு, மஹாராஷ்டிர முதல்வரும் முகந்திவர் அவர்களும் உறுதியாக, அதிவிரைவாக ஒப்புதல் வழங்கியுள்ளது மகிழ்ச்சி. - சத்குரு

இத்திட்டம், நதிகளையும் அதன் சூழலியலின் பல்லுயிர்களையும் பாதுகாப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்காக பெருக்கி கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். - சத்குரு

வலுவான பொருளாதார முன்னேற்றத்திற்கும் நதிகள் புத்துயிர் பெறவும் வழிவகுக்கும் நிலையான விவசாய முறைக்கு, மஹாராஷ்டிராவை ஒரு மாதிரியாக நாம் நிறுவிட விரும்புகிறோம். - சத்குரு

தேசம் முழுவதும் பெரிய அளவில் அமல்படுத்தி அனைவர் நல்வாழ்வுக்கும் வழிசெய்யும் ஒரு மாதிரி திட்டமிது. மஹாராஷ்டிர முதல்வர், வனத்துறை அமைச்சர், மற்றும் அதிகாரிகள் குழுவிற்கு பாராட்டுக்கள். - சத்குரு


குருவாசகம்

"என்ன செயல் செய்யத் தேவையிருந்தாலும், என்ன வாய்ப்பு உங்கள் வழி வந்தாலும், நீங்கள் எதைப் பகிர விழைந்தாலும் - இதுவே நேரம், நாளை அல்ல."

அன்பும் அருளும்,