இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வெயில் அதிகமாகிக் கொண்டு இருப்பதோடு, உலகின் பல பகுதிகளில் சண்டை சச்சரவுகளும் பெருகிக் கொண்டிருப்பது குறித்து பேசும் சத்குரு, பலவிதங்களில் எல்லாம் கைமீறிப் போகத் துவங்கும் இவ்வேளையில் சமநிலையாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.

இந்தியாவில் வெயிற்காலம் துவங்கிவிட்டது. உலகம் அதிக வெப்பமாகப் போகிறது என்பதற்குப் போதுமான சான்று இருக்கிறது. இந்த சூடு வெப்பநிலையில் மட்டுமல்லாமல் வேறு பல நிலைகளிலும் அதிகரிக்கும்போது, நாம் சமநிலையுடன் இருப்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியம். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சரி, நாம் நிலத்தில் நிலையாகக் காலூன்றி, நடுநிலையுடன், 'கூல்' ஆக, சமநிலையாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, நாம் ஆக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவர்களாக மாறிவிட்டோம். இந்த ஆற்றல் ஆக்கப்பூர்வமான சாத்தியமாக மாறவேண்டும் என்றால், எந்தவிதமான மனிதர்களை நாம் உருவாக்குகிறோம் என்பது மிக முக்கியம். இதுவரை நம்மைச் சுற்றி பல விஷயங்களை உருவாக்குவதில் நாம் மும்முரமாக இருந்துவிட்டோம். முந்தைய தலைமுறையினர் 10,000 வருடங்களில் கட்டமைக்காதவற்றை, கடந்த நூறு வருடங்களில் மனிதர்கள் உருவாக்கியுள்ளார்கள். அதில் எல்லாவிதமும் அடங்கும் - பயனுள்ளதும் பயனற்றதும் கூட.

இப்படிப்பட்ட ஆற்றல் நம்மிடம் இருக்கையில், நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிரையும் அழிக்கக்கூடிய விஷயங்களை நாம் உருவாக்காமல், உயிரை ஊட்டிவளர்த்து மேம்படுத்தக் கூடியவற்றை உருவாக்குவது அவசியம். இன்று மனிதர்களுக்கு இருக்கும் சக்தியையும் ஆற்றலையும் வைத்துப் பார்த்தால், சமநிலையாக இருப்பது மலைபோல் முக்கியமானதாகிறது. இல்லாவிட்டால் பேரழிவை நீங்கள் உண்டாக்கிவிடுவீர்கள், அதற்கு சொந்தமாக அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், அதுவும் தொலைதூரம் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போது உலகம் போகும் போக்கைப் பார்த்தால், எதிர்காலத்தில் அணுகுண்டு உருவாக்குவது எப்படி என்று இணையத்தில் வந்துவிடலாம். அதற்கு தேவையான மூலப்பொருள் சுலபமாகக் கிடைக்காமல் இருப்பதுதான் தற்போது இருக்கும் ஒரே தடை, ஆனால் அதுவும் மாறலாம். பக்கத்து வீட்டுக்காரரின் நாய் உங்கள் வீட்டில் அசிங்கம் செய்தால், அவர் வீட்டில் குண்டுவீச நினைப்பீர்கள். ஆனால், நகரம் முழுவதும் அழிந்துபோகும். ஏனென்றால், உங்கள் கைவசம் இருப்பது அப்படிப்பட்ட வலுவான ஆயுதங்கள் அல்லவா? அதுதான் இன்று உலகில் நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு மனிதருக்காக ஒரு தேசத்தின் மீது வெடிகுண்டு வீசுகிறார்கள்.

சமநிலையாகவும் 'கூல்' ஆகவும் இருப்பதென்றால் 'சீரியஸ்' ஆக இருப்பதல்ல. நல்ல எண்ணங்கள் கொண்ட 'சீரியஸ்' ஆன மனிதர்கள் மிகவும் அபாயகரமான மனிதர்களாக மாறிவிடுவார்கள். கடவுளின் கட்டளைப்படி இயங்குவதாக நம்புபவர்கள், மிக உயர்ந்த சேவையைச் செய்வதாக நினைத்து, மிக பயங்கரமான செயல்களைச் செய்துள்ளார்கள். ஆன்மீகப் பாதையில் நீங்கள் மிகவும் 'சீரியஸ்' ஆக இல்லாமல் இருப்பது அதிமுக்கியமானது.

தீவிரமாக இருப்பது வேறு, இறுக்கமாக இருப்பது வேறு. தீவிரம் என்பது கவனத்தை ஒருமுகமாக்குகிறது. இறுக்கமாக இருப்பது கவனத்தை சிதறவைக்கிறது. நீங்கள் தீவிரமாக இருந்து, உங்களுக்குள் எல்லாம் குளிர்ந்த ஓடையைப்போல் இலகுவாக, வழுவழுப்பாக நடந்தேறினால், இந்த உயிர் உங்களுக்கும் அனைவருக்கும் சிறந்தமுறையில் பயனளிக்கும்படி செய்திட முடியும். அதுதான் வாழ்க்கையில் உண்மையாகவே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

இன்று நமக்கு சாதாரணமாக இருக்கும் பல விஷயங்களை வேறு எந்தத் தலைமுறையாலும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. உதாரணமாக, இங்கு இல்லாத ஒருவரிடம் பேசுவது என்பது முற்காலத்தில் அதிசயமாகக் கருதப்பட்டிருக்கும். நூறு வருடங்களுக்கு முன்பு, நூறு மைல் தூரத்திலுள்ள ஒருவரிடம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே ஒரு செய்தியை தெரிவித்திருந்தால் நீங்கள் கடவுளின் தூதராகவோ, மகனாகவோ, கடவுளாகவோ கருதப்பட்டிருப்பீர்கள். ஆனால், இன்று நாம் எதை வேண்டுமானாலும் உலகம் முழுவதற்கும் தெரியப்படுத்த முடியும்.

இந்த ஆற்றலில் அபாரமான சக்தி அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பிறருக்கு என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம், என்ன செய்கிறோம், என்ன செய்யாமல் இருக்கிறோம், நம் வாழ்வை எப்படி நடத்திக் கொள்கிறோம், எப்படி சுவாசிக்கிறோம், எப்படி உட்காருகிறோம், எப்படி நம்மை நிர்வகித்துக் கொள்கிறோம், எல்லாவற்றிற்கும் மேலாக நமக்குள் எப்படி இருக்கிறோம் என்பது மிக மிக முக்கியமாகிறது.
நீங்கள் சிறிய எறும்பாக இருந்து மனிதர்கள் மீது நடந்துசென்றால், பாதிப்பில்லை. அதுவே, நீங்கள் யானையாக இருந்தால் எங்கு கால் வைக்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை. இல்லாவிட்டால் அழிவு நிச்சயம். இன்று மனிதர்களாகிய நமது காலடித்தடங்கள் டைனாசருடைய காலடித் தடத்தை விடப் பெரிதாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது நம் காலடியை எங்கு, எப்படி பதிக்கிறோம் என்பது அனைத்திலும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்த நோக்கத்தில் பார்க்கும்போது, கடந்த வருடம் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது மிகவும் முக்கியமான படி. அடிப்படையில் இதன் அர்த்தம், உலகிற்கு சமநிலையாக 'கூல்' ஆக இருப்பதை கற்றுக்கொடுக்கப் போகிறோம். நீங்கள் சினம்கொள்ளாமல், எரிச்சலடையாமல், கோபப்படாமல், ஆத்திரப்படாமல் இருந்தால், உங்கள் கைகளில் எதைக் கொடுத்தாலும் அனைவருக்கும் சிறந்தமுறையில் நன்மை பயக்கும் விதத்தில் அதைப் பயன்படுத்துவீர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

பிறர் உங்களை எரிச்சலடையச் செய்தாலோ, பதறும்படி செய்தாலோ, கிளரினாலோ, ஆத்திரப்படுத்தினாலோ, நீங்களும் எரிச்சலாகி, பதறி, கோபமாகி ஆத்திரப்படுகிறீர்கள் என்பது தற்போது நிலவும் பிரச்சனை. நீங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது, பாதிப்பு ஏற்படுத்தவும் அழிக்கவும் உங்களுக்கு நல்ல சாக்கு கிடைத்துவிடுமே. உறுதியான நம்பிக்கையோடு, தெளிவான மனசாட்சியோடு, மிகவும் பயங்கரமான செயல்களை உங்களால் செய்திட முடியும். கடவுளின் பெயரில் மிகக் கொடூரமான செயல்களை செய்பவர்கள் தெளிந்த மனசாட்சியுடன்தான் செயல்களில் ஈடுகிறார்கள். ஏனென்றால், தெய்வீகத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

எதிர்மறையான உணர்ச்சிகள் உங்கள் உடலமைப்பின் அங்கமாக மாறிவிட்டால், எதிர்மறை உணர்வை வெளிப்படுத்த காரணம் கண்டுபிடிப்பீர்கள். எந்த அளவு பாதிப்பு விளைவிக்கிறீர்கள் என்பது உங்கள் திறமையை ஒத்து இருக்குமே தவிர, பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. எரிச்சல் ஏற்பட்டால், பதற்றமாவதும், கோபம்கொள்வதும், வெறுப்படைவதும், வெடித்தெழும் ஆத்திரம் கொள்வதும் அடுத்தடுத்து படிகள் மட்டும்தான். ஏதோவொன்று அல்லது யாரோ ஒருவர் குறித்து துளியளவு உறுத்தல் இருந்தால், அதனை களைவதற்கான முயற்சிகளை நீங்கள் எடுப்பது அவசியம். ஆத்திரப்படும் நிலைக்குச் சென்று வெடிக்கும்வரை காத்திருக்காதீர்கள். பிறரை உங்களுக்குள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளாமல் தனித்து வைப்பதாலேயே ஆத்திரம் எழுகிறது. அனைவரையும் உங்களுக்குள் அரவணைத்திருக்கும்போது ஆத்திரம் கொள்ள வாய்ப்பில்லை.

ஆத்திரத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் இருக்கும்போது நீங்கள் என்னுடைய அங்கமாக இருக்கிறீர்கள். ஆத்திரத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும்போது நீங்கள் 'கூல்' ஆன உயிராக இருக்கிறீர்கள். 'கூல்' ஆன உயிராக இருந்தால், உங்கள் தன்மையாலேயே நீங்கள் இனிமையாக இருப்பீர்கள், வேறு எதையும் சார்ந்திருக்க மாட்டீர்கள். என்ன தேவையோ அதைச் செய்வீர்கள், ஏனென்றால் நீங்களாகவே நீங்கள் நன்றாக இருப்பீகள், பிறரிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுப்பதற்கான தேவை உங்களிடம் இருக்காது. மனித சமூகங்கள் இன்று தன்பால் வைத்திருக்கும் அபாரமான ஆற்றலை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் ஆத்திரத்திற்கு அப்பாற்பட்டு இருந்தால் அற்புதமான சாத்தியமாக இருப்பீர்கள், நீங்கள் அனைவரும் அப்படிப்பட்ட சாத்தியங்களாக மாறவேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும்.

Love & Grace