இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தான் வாழ்ந்து வளர்ந்த வீடுகளின் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதோடு இன்றைய வீடுகள் தவறவிடும் வீட்டின் பல அம்சங்களை நமக்கு நினைவுபடுத்தி, வீடுபேறு வரை அது வகிக்கும் பங்கினையும் விளக்குகிறார்.

"வீடு" எனும் சொல், வசதி, துணை, மற்றும் அன்பின் நினைவுகளைக் கண்முன் கொணர்கிறது. பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்கள் வாழ்வில் பல வீடுகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் வளர்ந்த வீடே மிக முக்கியமானதாய் இருக்கிறது. குழந்தைப்பருவத்திலிருந்து இளமைப்பருவம் கடந்து பெரியவராகும் வரை உள்ள காலகட்டத்தில், மற்ற காலகட்டங்களை விட அதிவேகமாய் நம் புரிதலும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டமும் மாறுவதாய் இருப்பதாலே இப்படி இருக்கக்கூடும். நம் சுற்றத்தை நாம் விதவிதமாய் அனுபவிக்கும் வழிகளை ஆராய்ந்துணரும் காலகட்டமிது. அதனால் இந்த காலகட்டத்தில் நமக்கு உறுதுணையாகவும் ஊட்டமளிப்பதாகவும் இருக்கும் வீட்டின் சூழல், பிற்காலத்தில் நாம் பார்த்து உணரும் பல்வேறு விஷயங்களைக் காட்டிலும் ஆழமாகப் பதிகிறது.

இளம் வயதிலிருந்தே நான் இருந்துள்ள பல வீடுகள் எனக்கு இன்றும் தெளிவாக நினைவில் இருக்கிறது. என் தாத்தா வீடு ஒரு ஜமீந்தார் வீடு போல சில தலைமுறைகளின் வரலாறு கொண்டது. அது விஸ்தாரமாக, அதிகாரமும் சக்தியும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அப்பகுதியில் நிகழ்ந்த அனைத்துமே இந்த வீட்டினால் தான் என்றே சொல்லலாம். மாறாக, என் தந்தையின் வீடோ, அமைதி, சௌகரியம், துணைமை, மற்றும் அன்பின் தன்மை கொண்டதாக இருந்தது, பெரிய நிகழ்வுகள் ஏதும் இல்லை. பிறகு நான் இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் என் மோட்டார் பைக்கில் பயணம் செய்தேன். கிட்டத்தட்ட எல்லா சமயமும், வெறெங்கோ நான் முகாமிட்ட சில சமயங்கள் தவிர, நான் சென்று யாரோ ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி, "எனக்குப் பசிக்கிறது" என்றேன். அவர்கள் உணவளித்தார்கள், புசித்துவிட்டு விடைபெற்றேன், அல்லது அவர்கள் என்னை குளித்துவிட்டு இளைப்பாரச் சொன்னார்கள். சாதாரணமாக என் பெயரைக் கூட அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை, நானும் அவர்கள் யாரென்று கேட்கவில்லை. இருந்தும் ஒரு அற்புதமான தொடர்பு இருந்தது. சிலமணி நேரம் ஒன்றாக இருந்தோம், நான் அங்கு தூங்கினேன், அடுத்தநாள் காலை சென்றுவிட்டேன். பலவிதங்களில் இந்த அனுபவங்கள் வீடு குறித்த என் புரிதலை பண்படுத்தின.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு வீட்டை கட்டமைப்பது ஒரு அடிப்படையான மனித தேவை. பிறந்ததிலிருந்தே தங்கள் வாழ்க்கையை வாழத் தேவையான அனைத்துடனும் பிறக்கும் மற்ற உயிரினங்களைப் போல இல்லாமல், முழுமையான மனிதர்களாக மாறுவதற்கு நம்மை நிறைய பக்குவப்படுத்த வேண்டியுள்ளது. வீடு என நாம் அழைக்கும் அடைகாக்கும் இடமே நம்மை மனிதராகப் பண்படுத்துகிறது. இந்த அடைகாக்கும் அமைப்பின் மிக முக்கிய அம்சம், இணைத்துக்கொள்வது. வீடு என்பது, அதில் வாழ்ந்து வளரும் சில மனிதர்களுக்கு ஊட்டமளிக்கும் இடம். அதே சமயம், அது வீடாவதற்குக் காரணம், குடும்பத்தினர், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மற்றும் அதில் வசிப்பவர்களுடன் ஏதாவது தொடர்பு இருக்கும் பிறர், என்று அதன் கதவுகள் இன்னும் பலருக்குத் திறந்திருக்கின்றன. அதோடு நிரந்தரமாக வசிப்பதற்கு அங்கு வருவோரும் உண்டு, குறிப்பாக மருமகன்கள் மற்றும் மருமகள்கள். சிலசமயம் என்னைப் போன்ற நாடோடிகள் அரவமின்றி வருவதும் போவதுமாக இருப்பார்கள். நான் பலவிதங்களில் வீடே இல்லாதவன். பெரும்பாலான சமயங்களில் நான் பிறர் வீடுகளில் வாழ்கிறேன், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கட்டியுள்ள இரண்டு வீடுகளில் இருப்பதில்லை. என்னால் அதிகம் பயணம் செய்ய முடியாமல் போகும்போது வேண்டுமானால் நான் வீட்டில் வசிக்க வாய்ப்புள்ளது.

நானூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளில் நான் இருந்திருக்கிறேன். ஒவ்வொருவரின் பெயரையும் அவர்கள் அறியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் யாரென்று தோராயமாகத் தெரிந்திருப்பார்கள். பல தலைமுறையாக மக்கள் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தார்கள். பிறந்து, வளர்ந்து, திருமணம் செய்து, குழந்தை பெற்று, அதே வீட்டில் இறக்கவும் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை - ஒவ்வொரு தலைமுறையும் புதிய வீட்டிற்குப் பெயர்கிறார்கள். பல காரணங்களினால் மக்கள் இன்று அடிக்கடி இடம்பெயர்கிறார்கள். சில தலைமுறைகள் முன்பு வரை, சமுதாயங்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வதாக இருந்து, குறைவாக பயணிப்பதாக இருந்தபோது இப்படியில்லை. நம் வாழ்க்கை முறைகள், வேலை சூழ்நிலைகள், என்று உலகம் முழுவதுமே இன்று மாறுபட்டதாக இருக்கிறது. வெளியில் அதன் கட்டமைப்பும் கலைநயமும் மாறியிருக்கலாம், ஆனால் ஒரு வீட்டை உருவாக்கும் அடிப்படை தர்மம் இன்றும் அப்படியே தான் உள்ளது. வீடு என்பது இணைத்துக்கொள்ளும் தன்மைக்கு சற்று ஆழமாக ஊட்டமளிப்பதாய் இருக்கவேண்டும். உலகம் முழுவதையும் முடியாவிட்டாலும், உங்கள் உலகில் இருக்கும் அந்த சிலரையாவது இணைத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

நம்மோடு வாழ்பவர்கள் நாம் விரும்பும் விதமாக முற்றிலும் இருப்பதில்லை, என்றும் இருக்கப்போவதும் இல்லை. இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், வாழ்க்கையைப் பற்றி நீங்கள் நினைப்பதைவிட அதிகமாக அதனை அறிவீர்கள். வீடு, வாழ்க்கைக்கு உங்களை பண்படுத்த வேண்டும், உலகத்தில் காலடி வைக்கும்போது நீங்கள் இன்னும் அதிகமான இணைத்துக்கொள்ளும் தன்மையுடன் இருக்க வேண்டும். ஒன்றாக வாழ்வது, பல விஷயங்களை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் கல்வி அதிகமாகும்போது, பிறர் உங்கள் எல்லைகளுக்குள் இடறுவதை உங்களால் அனுமதிக்க முடிவதில்லை. உங்களை யாராவது தொட்டாலே, ஒன்று அவர்கள் தீர்ந்தார்கள் அல்லது நீங்கள் தீர்ந்தீர்கள். இப்படிப்பட்ட கலாச்சாரம் நோக்கித்தான் நாம் சென்றுகொண்டு இருக்கிறோம். இந்த தலைமுறையில் இணைத்துக்கொள்ளும் தன்மை நமக்கு சற்றாவது எஞ்சியுள்ளது நம் அதிர்ஷ்டம். இது நம் வீட்டில், நம் உடன்பிறப்புகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கை நம் வாழ்க்கையோடு பலவிதங்களில் கலந்திருந்திருந்து, நமக்கு அது ஒரு பொருட்டாக இல்லாததால் நமக்குள் புகட்டப்பட்டது.

உலகின் பெரும்பாலான வீடுகள் வசதி, துணை, அன்பு, மற்றும் கூடியிருத்தலுக்காகவே கட்டப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இன்னுமொரு சிறப்பம்சம் உண்டு. ஒரு வீடு விடாமல், வீடுகள் அனைத்தும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த காலமுண்டு. நல்வாழ்வு, வளர்ச்சி மற்றும் உள்நிலை மலர்தலுக்குத் தேவையான சூழ்நிலையை வழங்காத இடங்களில் மக்கள் வாழ்வது மிகவும் எதிர்மறையானதாகவும் கேட்பாரற்ற நிலையாகவும் கருதப்பட்டது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமிருந்தது. கடந்த சில தலைமுறைகளில் நிறைய மாறியிருந்தாலும் இன்று அதன் சுவடுகள் இன்னும் மீதமுள்ளது. உதாரணத்திற்கு என் கொள்ளுப்பாட்டியின் பூஜையறை வீட்டிலேயே மிகப்பெரிய அறையாக இருந்தது. அங்கு அவர் ஆடிப்பாடி அழுது சிரித்து எல்லாவிதமான விஷயங்களையும் செய்தார். என் பாட்டி, பூஜையறையை அதில் பாதியாக சுருக்கினார். என் தாய் மறுவீடு புகுந்தபோது, பூஜையறை கழிப்பறையைவிட சற்று சிறியதாக மாறியது. என் மகள் அவள் வீட்டை அமைத்தபோது, பூஜையறை சுவற்றில் ஒரு தட்டாக மாறிவிட்டது.

என் கண் முன்னே தெய்வீகத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த நான்கைந்து தலைமுறைகளில் சுருங்கியது - வீட்டின் மிகப்பெரிய அறையிலிருந்து சுவற்றில் ஒரு தட்டாகிவிட்டது, அதுவும் அடுத்த தலைமுறையில் நிச்சயம் மறைந்துபோகும். இது நிகழ்ந்துள்ளதன் காரணம், பிரதிஷ்டை எனும் விஞ்ஞானத்தினால் ஒரு இடத்தின் சக்தியை சக்திவாய்ந்த முறையில் மாற்றி அதன்மூலம் மனிதர்களுக்குள் தன்னிலை மாற்றும் ஏற்படுத்தி வந்தோம், ஆனால் இப்போது மிகவும் சாதாரண உருவங்களுக்கு நாம் கீழிறங்கி வந்துவிட்டோம், அதன் அர்த்தத்தை நம்மால் அடுத்த தலைமுறைக்கு விளக்க முடிவதில்லை. எது அவர்களுக்கு அர்த்தமில்லாது போனதோ, அதை அவர்கள் இயல்பாகவே நிராகரிக்கத் துவங்கிவிட்டார்கள். சில நூறு வருடங்களுக்கு முன்பு, உங்கள் பூசாரியோ பண்டிதரோ குருவோ உங்கள் மதநூலோ உங்களுக்காக சிந்தித்தது. இன்று நிறைய மக்கள் தங்களுக்காக தாங்களே சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள். அவர்கள் தெளிவாக சிந்திக்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே சிந்திக்கவாவது செய்கிறார்கள்.

உங்களுக்கு நீங்களே சிந்திக்கத் துவங்கிவிட்டால், தர்க்கரீதியாக சரியாக இல்லாதது எதையும் உங்களால் ஜீரணிக்க முடியாது, அதை எப்படிபட்ட அதிகாரப்பூர்வமானவர் சொன்னாலும் சரி. அதிகாரமே உண்மையாக இருக்கும் நிலையிலிருந்து, உண்மையே அதிகாரமாக இருக்கும் நிலைக்கு உலகை நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம். இது ஒரு நல்ல மாற்றம், ஆனால் இடைப்பட்ட காலகட்டம் வெற்றிடமாக இருக்கக்கூடும். இதன் தாக்கம் நம் வீடுகளில் பிரதிபலிக்கிறது. நம் பாரம்பரியம், சரித்திரம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல விஷயங்களும், அனைவராலும் சரியாக அர்த்தம் பெயர்க்க முடியாத கதைகளைச் சொல்லும் பல சின்னச்சின்ன பொருட்களும் அடுத்த தலைமுறையினரால் கழிக்கப்படுகின்றன, ஏனென்றால் அவர்களுக்கு அது விளங்கவில்லை. இதுதான் அறிவின் இயல்பு, எல்லாவற்றையும் இது துண்டுதுண்டாக்கிப் பார்க்கிறது. உங்களை நான் அறிந்துகொள்ள விரும்பினால், உங்களை வெட்டிப்பார்ப்பது நிச்சயம் சிறந்த வழியல்ல, ஆனால் அதைத்தான் உங்கள் அறிவு தொடர்ந்து செய்கிறது. பல விஷயங்கள் தர்க்கரீதியாக அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உயிரைப் பொறுத்தவரை அவை மிகுந்த அர்த்தமுள்ளவை. மனிதர்கள், பொருட்கள், கட்டிடம் என்று உங்கள் வீட்டின் அங்கமாக இருப்பவை தர்க்கரீதியாக அர்த்தமுள்ளதாக இருப்பதில்லை - ஆனாலும் உங்களுக்கு உலகமே அவைதான்.

வீடுகள் அடைகாக்கும் இடங்களாக மாறவேண்டும். மனிதன் உண்மையில் உணரக்கூடிய ஒரே வீடு அவருக்குள் உள்ளது என்ற உணர்தலுக்கு அவை ஊட்டமளிக்க வேண்டும். இறுதியில் அடையும் வீடுபேறு உங்களுக்குள் உள்ளது என்பதை நீங்கள் இந்த வாழ்க்கையில் உணராவிட்டால், நீங்கள் அறிந்துகொள்ளப் போகும் ஒரே வீடு உங்கள் கல்லறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று தர்க்கரீதியாக உங்களுக்கு விளங்கவில்லை என்றால் அது இருக்கவே முடியாது என்று அர்த்தமல்ல. இந்த புரிதலை நோக்கித்தான் வீடு என்பது நம்மைத் தொடர்ந்து பண்படுத்துகிறது. ஒருவருக்குப் பிடித்ததை இன்னொருவர் வெறுக்கிறார், அவருக்குப் பிடித்ததை இவர் வெறுக்கிறார். இருந்தும் நீங்கள் அதே வீட்டில் வாழ்வதால் நீங்கள் அதை ஏற்க கற்றுக்கொண்டாக வேண்டும். அதை உங்களுக்கும் பிடித்ததாக மாற்ற முயற்சிக்கத் தேவையில்லை. உங்களுக்குப் பிடிக்காதவற்றுடன் வாழக் கற்றுக்கொள்வது வாழ்க்கையில் மிகப்பெரிய பாடம். நூறு சதவிகிதம் நீங்கள் விரும்பும்படியே உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் அனைத்தும் இருக்கவேண்டும் என்றால், உங்களை சுற்றி எவருமே இருக்க விரும்பமாட்டார்கள்.

என்னால் இயன்ற அளவு அதிக வீடுகளை பிரதிஷ்டை செய்யும் முயற்சியில், ஒரு குறிப்பிட்ட வீட்டை எடுத்துக்காட்டுவது அதன் சுவர்களல்ல, வீட்டின் அலங்காரங்களல்ல, நறுமணங்களல்ல, ருசிகளல்ல என்பதை உணர்த்தத் தேவையான சக்தியை உருவாக்குகிறோம். அடிப்படையில், வீடு என்பது உங்களை உள்முகமாகத் திருப்புவதாக இருக்கவேண்டும். இருப்பது ஒரே வீடு, அது உங்களுக்குள் உள்ளது என்பதை நீங்கள் உணர, அது வழிவகுக்க வேண்டும். அந்த வீடு உங்களுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல. நீங்கள் உள்முகமாகத் திரும்பினால், நீங்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்பவராக மாறுகிறீர்கள். நம் உடலுடனும் மனதுடனும் அடையாளப் படுத்திக்கொள்வதில் மட்டுமே "நீ", "நான்" என்ற வரையறைகள் உள்ளன. உள்முகமாகத் திரும்பினால், உங்களுக்குள் அனைத்தையும் அரவணைத்து இருக்கும் ஆழமான ஓர் உணர்வு இருக்கும். வீடு என்பது அந்த அரவணைப்பை ஒருவருக்குள் வளர்க்கவேண்டும். ஒரு வீட்டை உருவாக்குவது கட்டிடத்தின் பிரம்மாண்டமல்ல, அதில் வாழ்பவர்களின் அரவணைக்கும் தன்மையே.

Love & Grace